மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18

This entry is part 28 of 42 in the series 25 மார்ச் 2012

20. சாளரத்தின் வழியே பகற்பொழுதின் ஒரு துண்டு பிமெண்ட்டா அறையிலும் கிடந்தது. குளிர்ந்த காற்று சலசலவென்று காதருகே சலங்கைபோல ஒலித்துக் கடந்தது. அக்காற்றுடன் மைனாக்களின் கீச்சு கீச்சும், ஒன்றிரண்டு காகங்களின் கரைதலும், இரட்டை வால் குருவியின் கிக் -கிக்கும், குயிலொன்றின் குக்கூ அக்கோவும் கலந்திருந்தன. மீட்பரின் குரல்போல அவை பேசின. அறையில் தளும்பிக்கொண்டிருந்த குளிர்காற்றில் சிறிது நேரம் அசையாமற் கிடந்தார். எத்தனை சுகமான அனுபவம். எட்டுமணி நேரத்திற்கு முன்பு எரிமலைக்கருகில் கிடத்தியதுப்போலவிருந்தது. இப்போதோ நேற்றைய மனநிலை இல்லை. நெஞ்சில் இனிமை ஊற்றுநீர்போல சுரந்து பரவியது. அறை வெப்பமும் உடல் வேர்வையையும் கூடாத எரிச்சலையூட்டியதால் அற்ப மானுடர்களைபோல நேற்றிரவு நடந்துகொண்டார். இறைப்பணிக்கு அற்பணித்துக்கொண்ட ஒருவனுக்கு சகிப்புணர்வுதேவை, அதை நேற்றிரவு இழந்திருப்போமோ என நினைத்ததும் கடவுளிடம் மன்னிப்பு கோரினார். புதிய இடம் என்று பாராமல் இறங்கி அருகிலிருந்த தோப்பினைநோக்கி நடந்ததும் அங்கே எதிராமாபாரமல் கேட்க நேர்ந்த மனிதர் குரல்களும் நினைவுக்கு வந்தன.

எல்லாம் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. கடலில் எறிந்த போத்தலை அலைகள் தங்கள் மடியில் கட்டிக்கொண்டு பத்திரமாய் கரைசேர்த்ததுபோல கீழை தேசத்துப் பயணம் நிகழ்ந்தது. “இவைகளுக்கெல்லாம் என்னை சாட்சியாக இருக்கும் படி விதித்த இயேசுவே உமக்கு நன்றி”, என்றார். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இன்றைக்கு கிருஷ்ணபுரத்தில் இருக்கவேண்டுமென்று விதிக்கபட்டிருக்கிறது. லிஸ்பன் நகரத்து பிற இளைஞர்களைப்போலவே வாலிப பருவத்தில் பெண் சினேகிதம், கேளிக்கைகள் என அலைந்தவர். ஒரு நள்ளிரவில் அந்த ஓட்டம் முடிவுக்கு வந்தது, மூச்சுவாங்கியது. உயிற்காற்று தேவையாக இருந்தது. அவருக்கு வேறு தேவைகளிருந்தன. கடுமையான பனிக்காலம். நள்ளிரவை கடந்திருந்த நேரம், இரவுவிடுதிக்கு உடையவன் கதவை மூடவேண்டுமென்றான். தோழர்களுடன் வெளியில் வந்தார். லிஸ்பன் நகரில் அவ்வளவு பனிப்பொழுவை இதற்முன் கண்டதில்லை. நண்பர்களெல்லாம் சொல்லிக்கொண்டுபோன பிறகு ஒற்றை ஆளாக இரவையும் குளிரையும் எதிர்கொண்டபோது ஏதோவொன்று அவருக்குள் நிகழ்ந்தது. பனியினாற் மூடப்பட்டிருந்த சாலையின் போக்கை ஒரு நிதானமாக தமக்குள் வரித்துக்கொண்டு, இளமை அளித்த தைரியத்தில் நடக்க ஆரம்பித்தார். அவ்வபோது காற்றுடன் கலந்து கூர்தீட்டபட்ட வாளின் வீச்சுபோல விசுக் விசுக்கென்று முகத்தில் இறங்கிய பனிச்சாரலைத் தடுக்க தொப்பியின் விளிம்பை விரல்களால் தொட்டு முன்பக்கம் இழுத்தார். உடலை மூடியிருந்த கம்பளி ஆடையயின் கழுத்துப்பட்டை மடிப்பைப் பிரித்து உயர்த்தி, மேலங்கியிலிருந்த கையுறைகளை எடுத்து அணிகிற நேரம், யாரோ முனகும் குரல். காலிக்குப்பியொன்றை உருட்டிவிட்டதுபோல அநாதையாய் ஒலித்து எழுந்த வேகத்தில் அடங்கியும்போனது. குவிந்துக்கிடந்த பனிப்பொழிவுக்கிடையில் பளிச்சென்று அழுக்குப்பொதிபோல ஏதோவொன்று அசைந்து கொடுத்தது. தொடர்ந்து நடப்பதற்குத் தயங்கினார். அழுக்குபொதியை நெருங்கிப்பார்த்தபோதுதான் அவன் கிழவன் என்பதும், பார்வையற்றவன் என்பதும், வாட்டும் குளிரை எதிர்கொள்ளதெரியாது நடுங்கிக்கொண்டிருக்கிறானென்பதும் புரிந்தது. மளமளவென்று தான் அணிந்திருந்த மேலங்கி, கையுறைகள், காலணிகள், தொப்பியென அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு நிமிர்ந்தபோது மனதில் இதுவரைச் சுரந்திராத களிப்பு. வீடு திரும்பியதும் ஒரு கிழமைக்கு மேலாக கட்டிலில் சுரத்தில் கிடந்தார். வைத்தியம் பார்க்கவந்த பங்குத் தந்தை “உனக்கு அவசியம் தேவையென” புத்தகமொன்றை அன்பளிப்பாகத் தந்திருந்தார். அது இஞ்ஞாஸ் லயோலா என்பவர் எழுதியிருந்த ‘Regimini Militantis Ellesiaie’ என்ற நூல். பிமெண்ட்டா, அவரிடம்:

– இதுவென்ன? எனக்கேட்டார்.

– உன்னைப்போல வாழ்க்கையை அதன்போக்கில் செல்லவிட்டுத் தொடர்ந்து சென்றவர்தான் லயோலா.

ஒரு நாள் ஆண்டவரிடமிருந்து ” ஆத்மாக்களுக்கு உதவி செய்” “சேசுவின் சேவைக்கு அற்பணித்துக்கொள்” என்று கட்டளைகள் கிடைத்தன. அவர் எழுதிய நூலைத்தான் உன்னிடம் தந்திருக்கிறேன். கட்டாயம் நீஇதனைப்படிக்கவேண்டும்- என்றார் பங்குத்தந்தை.

பங்குத்தந்தை அளித்தவிளக்கமும், ஒரே மூச்சில் படித்து முடித்த இஞ்ஞாஸ் லயொலாவின் நூலும் இரண்டு ஆண்டுகள் சேசுசபை மாணாக்கராக இருக்க பிமெண்ட்டாவைத் தூண்டியது. பிமெண்ட்டா பாதெரெ பிமெண்ட்டாவாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு சிலமாதங்கள் ஆகியிருந்தன. ஒருநாள் வழக்கம்போல காலை பூசைமுடித்து தமது அன்றாடபணிகளில் இருந்தபோது சேசுசபையின் தலைமைகுரு குளோடியஸ் அக்வாவிவா விடமிருந்து அழைப்பு. அழைப்புவந்தபோதே புரிந்துகொண்டார். எக்ஸ்பொனினோபிஸ் என்கிற திருமடத்து ஆணையைக் அவர்கையில் கொடுத்த குளோடியஸ்:

– பாதரெ பிமெண்ட்டா (மிளகு) – உங்கள் பெயருக்கேற்ப இந்தியாவுக்கு இறைபணி ஆற்ற உங்களை நியமித்திருப்பது எத்தனை பொருத்தம் பாருங்கள். கிறிஸ்துவின் வார்த்தையை இந்தியபூமி அங்கீகரிக்கச்செய்யவேண்டியது இனி உம்முடைய வேலை.

– உண்மைதான், அதற்காகத்தானே வந்திருக்கிறேன். – என வாய்விட்டு கூறிய பாதரெ பிமெண்ட்டா கட்டிலைவிட்டு வெளியில் வந்தார்.

தாழ்வாரத்தின் நின்று அங்கிருந்த வளைவொன்றில் குனிந்து தலையை நீட்டி இடப்புறம் அதிகாலையில் மலையும், கோட்டையும், அடர்ந்த மரங்களுக்கிடையில் தெரிந்த கட்டிடங்களும் ஒரு பிரமிப்பு சித்திரத்தை எழுதின. ராஜகிரிக்கு முடிசூட்ட வெண்ணிறமேகங்கள் போராடிக்கொண்டிருந்தன. காலைசூரியன் கருத்திருந்த மலைக்கு பொற்தகடு வேய்வதில் கவனமாக இருந்தது. அத்திமரங்களுக்கிடையில் தெரிந்த கோபுரக்கலசத்தை சுற்றிவரும் சாம்பல் நிற புறாக்கூட்டத்திலிருந்து ஏதேனும் ஒன்றிரண்டு தப்புமா? என நோட்டமிட்டுக்கொண்டு கழுகொன்று வட்டமிடுவதையும் கவனித்தார்.

– ஐயா!

– குரல் கேட்டுத் திரும்பினார் கறுப்பு மனிதனொருவன் மார்புக்கு நேரே கைகளை கூப்பி வணங்கிக்கொண்டு நின்றான்

– என்ன? என்பதுபோல பார்த்தார்.

– மண்டல ராயரின் பிரதானி, ஓரிரு மணித்துளிகளில் தங்களைச் சமூகம் காணவருவதாக இருக்கிறார். அதைச் சொல்லும்படி உத்தரவு.

– அதற்கென்ன வரட்டுமே.

சொன்னபோலவே நாயக்க மன்னரின் பிரதானி நந்தகோபாலபிள்ளை காலகிரமத்தில் வந்துவிட்டார்.

– வணக்கம் பாதரெ

– வணக்கம், வாருங்கள்.. வாருங்கள்.

– முக்கியமான விருந்தினர் என்பதால், என்னையே அருகிலிருந்து தங்களை சிறப்பாக கவனிக்கவேண்டுமென்பது மன்னர் கட்டளை.

– மிக்க மகிழ்ச்சி, இந்துஸ்தானிகளுக்கு உபசரிப்பு பற்றி சொல்லவா வேண்டும்.

– உண்மைதான் விருந்தினர்களின் முகம் வாடாமல் நடந்துகொள்ளவேண்டுமென்பது எங்கள் முன்னோர்கள் வாக்கு, காலை உணவு எப்படி? பிடித்திருந்ததா?

– எனக்குக் காலை உணவு அத்தனை முக்கியமல்ல.

– மன்னர் குடும்பத்திற்கென சமைப்பக்கப்படும் உணவுகளில் காரம் தூக்கலாக இருக்கும். உங்களுக்கு விருப்பமெனில் தமிழர் உணவும் ஏற்பாடு செய்யலாம். கிளம்பலாமா?

– அப்படியா இங்கே வந்த பிறகு உங்கள் உணவு எனக்குப் பழகிவிட்டது. சிதம்பரத்தில் எனக்கு தெலுங்கர் உணவிற்கும் தமிழர் உணவிற்கும் அதிக பேதங்கள் தெரியவைல்லை.

இருவரும் பேசிக்கொண்டே படிகளைப்பிடித்து கீழே இறங்கினர். கீழே கல்யாணமகாலையொட்டி வடக்கிலும் மேற்கிலும் சிறு சிறு அறைகள் மாடப்பிறைகள் போல தொடர்ச்சியாக இருந்தன.

– அவைகள் குதிரை லாயங்கள் – என்றார் பிரதானி

– அதனைக்கடந்து சிறிது தூரம் இருவரும் நடந்தார்கள். அங்கேயொரு குளமிருக்க இருவருமாக நின்றார்கள். நீரை மூடியதுபோல தாமரைக்கொடிகள். ஊதாவண்ணத்தில் தாமரைப்பூக்கள். இதழ்விரித்த மலர்களில் வண்டுகள்

– Vitis vinifera என பாதரெ தம்மை அறியாமல் கூறிக்கொண்டார்.

– அதென்ன?

– ஒருவகை கருப்புத் திராட்சைகள். எங்கள் பக்கம் அதிகம். வண்டுகளைப்பார்க்க அவற்றின் ஞாபகம் வந்தது. மன்னிக்கவேண்டும். இதைப்பற்றி உங்களிடம் அளவலாமா எனத் தெரியவில்லை? பிரதானியாரே, இரவு அறையில் காற்றில்லையென்று கீழே இறங்கவேண்டியிருந்தது. அப்போது எதிர்பாராமல் இருவர் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது.

– என்ன காதில் விழுந்தது?

பாதரெ பிமெண்ட்டா சொல்லலாமா சொல்லக்கூடாதா என்பதுபோல யோசித்து, பின்னர் தயக்கத்துடன் கூறினார்.

– அப்படியா? விசாரிக்கிறேன். வேறு எவரிடமும் இதைப்பற்றி மூச்சுவிடவேண்டாம். எங்களுக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன.

– என்னது?

– அது எங்கள் அரச குடும்பம் பற்றியது. ஆனாலும் உங்களிடம் சொல்வதால் தவறில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. மன்னரின் தந்தை இறந்ததும் அவருடைய சித்தப்பா இவரை சிறையிலடைத்துவிட்டார். பிறகு அரசகுடும்ப விசுவாசிகளும் நண்பர்களும் உதவிசெய்ய சிறையிலிருந்து தப்ப முடிந்தது. அவருடைய சித்தப்பாவின் இருகண்களும் பறிக்கப்பட்டு உயிர்பிச்சை அளிக்கபட்டது, அவரோடு

சேர்ந்து மன்னருக்கு எதிராக இயங்கிய ஒரு சிலருக்கு மன்னிப்பும் அளிக்கப்பட்டது. உயிர்பிச்சை அளித்ததை மன்னரின் அபிமானிகளாகிய நாங்கள் கூடாதென்றோம். அவர்கள்தான் அநேகமாக இப்பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கலாம்.

– ஆனால் நேற்று பேசியவர்களின் உரையாடலில் பெண், உயிர்ப்பலிகளென்ற வார்த்தைகளைக் கேட்டேன்?

– இந்தக் குளத்தின் பெயரை சொல்ல மறந்துவிட்டேனே; இதற்கு ஆனைக்குளம் என்று பெயர்.

பிரதானியின் பேச்சு திசை திருப்பும் நோக்கில் இருந்ததை பிமெண்ட்டா உணரத் தவறினார். அவரது கவனம் குளத்திற்கு மறுபக்கத்தில் உடற்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்மீது சென்றது.

(தொடரும்)

Series Navigationஉஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரைநீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *