இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்

This entry is part 33 of 42 in the series 25 மார்ச் 2012

இறையன்பு அவர்களின் பேச்சை நேரிலோ டிவியிலோ பார்த்திருக்கிறீர்களா? அருவி போல் தங்கு தடையின்றி அழகிய தமிழில் பேசுவார். அதே போல் தான் உள்ளது அவர் எழுத்தும். நல்ல பேச்சாளர் நல்ல எழுத்தாளர் ஆகவும் உள்ளதை காணும் போது ஆச்சரியமாக உள்ளது.

இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை” கட்டுரை தொகுப்பை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. துவக்கத்திலேயே இவ்வாறு சொல்கிறார் எழுத்தாளர்:

“சுய முன்னேற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஜடா முனிவரை போல் அமர்ந்து அறிவுரை கூறவும் எனக்கு ஆசை இல்லை. நான் பகிர்ந்து கொள்ள விரும்புபவை என் அனுபவங்களை”

ஆயினும் புத்தகம் நிச்சயம் நம்மை குறித்து நிறையவே சிந்திக்க வைக்கிறது.

சின்ன சின்ன விஷயங்களை உடனுக்குடன் செய்து முடித்தால் நம் முன்னேற்றம் இன்னும் துரிதமாகும் என்பதை தன் அனுபவம் கொண்டே சொல்கிறார்.

நடைபயிற்சி குறித்த பகுதியில் ஜே. கிருஷ்ணமூர்த்தி யாருடனும் சேர்ந்து நடப்பதை விரும்பவே மாட்டாராம். உடன் வருபவர் இயற்கையை உற்று நோக்குவதை, ரசிப்பதை தடை செய்து விடுவார் என்பதே காரணமாம் என்று சுவாரஸ்ய தகவல் கூறுகிறார்.

எதிர்காலம் பற்றி சொல்லும் போது ” கணினி எல்லாம் நிறைந்திருக்கும்…. காற்று மட்டும் குறைந்திருக்கும்” என அவர் சொல்லும் போது நம்மால் பெருமூச்சு விடாமல் இருக்க முடிய வில்லை.

படிப்பு மட்டுமே வாழ்வல்ல என்பதற்கு இவர் கூறும் நண்பரின் வாழ்க்கை மாணவர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். எப்போதும் பாடத்தில் முதல் வகுப்பெடுக்கும், சினிமா கூட பார்க்காத, கதை புத்தகம் வாசிக்காத நண்பன் பின்னாளில் வாழ்க்கையில் சற்று குழம்பி, யாருடனும் படிப்பு தவிர வேறு எந்த விஷயமும் பேச முடியாமல் நின்ற நிலையை பகிரும் போது சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது.

ஒவ்வொரு மனிதனும் அங்கீகாரம் தேடவே செய்கிறான். அது கிடைக்கா விடில், என்னை யாரும் அங்கீகரிக்க வில்லை என மனதுக்குள்ளோ, வெளியிலோ புலம்புகிறான். இது பற்றி விரிவாய் பேசும் இறை அன்பு, “நாம் யாரை அங்கீகரித்துள்ளோம் ..பிறர் நம்மை அங்கீகரிக்க?” என கேள்வி எழுப்புகிறார். பின் இவ்வாறு நெத்தியடியாக சொல்கிறார். ” உண்மையான அங்கீகாரம் என்பது நமக்கு நாமே கொடுத்து கொள்கின்ற அங்கீகாரம் மட்டும் தான்”

“நிகழ் காலத்தில் வாழுங்கள்” என்பது குறித்த அத்தியாயத்தில் அவர் மேற்கோள் காட்டும் “நொடிக்கு நொடி வாழுங்கள்” என்கிற ஜென் தத்துவ வரிகள் அருமை !

எந்த வித மனச்சிக்கலும் இல்லாத நபரை சந்தித்தால் என்ன செய்வீர்கள் என ஒரு மன நல மருத்துவரை கேட்டார்கள். ” அப்படி யாரேனும் ஒரு நபர் இருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் குணப்படுத்திவிடுவோம்” என்கிற வரிகளை வாசித்தவுடன் சிரிப்பு வந்தாலும், அது நமக்கு பெரும் ஆறுதல் தரும் வரிகளாக இருப்பது நிஜம்! இந்த வரிகளில் உள்ள உண்மை புரிந்தால், நமக்கு அன்றாடம் வரும் மன குழப்பங்களுக்கு இனி பெரிதாக வருந்த மாட்டோம் !

உழைப்பு, முயற்சி, பொறுமை குறித்த கீழ் காணும் வரிகள் அற்புதம் !

ஒரு விதை ஜெயிப்பதற்கு மரம் எவ்வளவு முறை பூக்க வேண்டியிருக்கிறது? எத்தனை முறை காய்களை சுமக்க வேண்டியிருக்கிறது?

திருப்பதியில் சுவாமியை தரிசிக்கும் நேரம் சில நொடி. ஆனால் அதற்கு சென்று வருகிற கால அளவு எவ்வளவு மணி நேரம்?

தேர்வு எழுதுவது மூன்று மணி நேரம்.ஆனால் அதற்கு படிப்பு எத்தனை மாதங்கள்? சில தேர்வுக்கு எத்தனை வருடங்கள் !

நாம் வெகு சாதாரணமாக ஒரு சில நொடிகளில் கடக்கிற பாலம் எத்தனை வருடங்கள் எத்தனை பேரின் உழைப்பில் உருவாகிறது?

உலகத்தில் மிக சிறந்த கண்டுபிடிப்புகளை தந்தவர்கள் எல்லாரும் ஞாபக திறனில் அதிக கவனம் செலுத்தாதவர்களாக இருந்தார்கள். ஐன்ஸ்டீனில்இருந்து எடிசன் வரை, ஆர்க்கிமிடசில் இருந்து ராமானுஜர் வரை ஞாபக சக்திக்கு முக்கிய துவம் தரவில்லை. தந்திருந்தால் அவர்களும் சராசரி மனிதர்களாக இருந்திருப்பார்கள் சரித்திர புருஷர்கள் ஆகியிருக்க மாட்டார்கள் என சொல்லி “அட!” போட வைக்கிறார்.

இறுதியாக புத்தகத்தில் சொன்ன ஒரு வரிகள் சொல்லியே இந்த விமர்சனத்தை நிறைவு செய்கிறேன். ” நாம் ரசித்து செய்யா விட்டால் ரொட்டி கூட புளித்து போகும் -கலீல் கிப்ரான்” !

இறை அன்பு அவர்கள் ரசித்து செய்த இந்த புத்தகம் அவசியம் நாம் , ஜப்பானியர்கள் தேநீர் அருந்துவது போல் நிதானமாய் ரசித்து வாசிக்க வேண்டிய புத்தகம் !

நூலின் பெயர்: : ” ஓடும் நதியின் ஓசை”
வெளியீடு : நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ், சென்னை
ஆசிரியர்: இறை அன்பு
விலை: ரூ. 60

Series Navigationரஸ்கோல்நிக்கோவ்பேனா பேசிடும்…
author

மோகன் குமார்

Similar Posts

2 Comments

  1. Avatar
    சோமா says:

    Mr.Iraianbu has got popularisation from his first book “ULLOLI PAYANAM” then “How to get IAS”& so…on…After getting popularisation only, he has started to give speech…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *