தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 ஜனவரி 2020

கருப்புக்கொடி

சாமக்கோடாங்கி ரவி

Spread the love

-சாமக்கோடாங்கி ரவி

 

காலை 10.30 மணி. நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வழக்கறிஞர்கள் இறக்கை ஒடிந்த காக்கையைப் போல ஒவ்வொரு நீதிமன்றமாக கைகளில் கட்டுடன் தாவிக்கொண்டிருந்தனர். சில காக்கைகளின் இறக்கைகள் அங்கே தாறுமாறாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் சிக்கியதில் கெட்ட வார்த்தைகளால் மொனமொனத்தபடி ஓடிக் கொண்டிருந்தனர்.

 

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் போல அவசர அவசரமாக காலை சிற்றுண்டி முடித்து சீருடை அணிந்து காலணியின் கையிற்றை இழுத்துக் கட்டி அலுவலகம் வந்து, இருந்தவர்களை கலைத்து அனுப்பி விட்டு நீதிமன்றம் வர வேண்டும். இதில் பாழாய் போன கைப்பேசி வேறு அடிக்கடி சிணுங்கிக் கொண்டிருந்தது.

 

ஹலோ சார், என்ன இவ்வளவு வேகம். எங்க போறீங்க?

சார்பு நீதி மன்றம்.!

அவர் லீவு.

அப்பாடா ஒரு வில்லங்கத்திலிருந்து இன்று விடுதலை.

 

முன்சிப் கோர்ட் சிறிது கால தாமதமாக சென்றாலும் பரவாயில்லை. அதற்குள் தேநீர் அருந்தலாம் என்று கடையை பார்த்தால் ஏற்கனவே அங்கு இரண்டு பேர் தேநீர் அருந்திக்கொண்டு இருந்தனர்.

 

இன்னொரு வழக்கறிஞர் நடுவர் நீதிமன்றத்திலிருந்து களைத்துப் போய் வந்தார். நடுவர் நீதிமன்றத்தில் என்ன போய்க்கொண்டு இருக்கிறது என்று வினவ, காவல்துறை வழக்கு இன்னும் அரை மணி நேரம் செல்லும் என்று கூறினார்.

 

நிதானமாக தேநீர் அருந்திவிட்டு நடுவர் நீதிமன்றம் சென்று காசோலை வழக்குகளை கவனிக்க வேண்டி இருந்தது.

 

தேநீர் கடைக்கும் நடுவர் நீதிமன்றத்திற்கும் இடையில் ஒரு கோயில் அதை பார்த்து திருட்டுத்தனமாக இன்றைய நாள் நல்லபடியாக செல்ல வேண்டும் என்று வேண்டிவிட்டு எதிர்பட்டவர்களுக்கு வணக்கம் சொல்லி நடுவர் நீதிமன்றம் சென்றடைந்தேன்.

 

நடுவர் மன்றம் சென்று சரியான இடம் பார்த்து அமர்ந்தேன். இரண்டு மூன்று வழக்குகள் முடிந்த பிறகு நீதிமன்ற சிப்பந்திகள் குறைந்த கல்வி அறிவு பெற்றவர்களே டவாலி பதவியில் இருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் சிக்கலான பெயர்கள் சொன்னால் எளிதில் சரிவர உச்சரிக்க இயலாது.  இது அவர்கள் தவறல்ல, இது வழக்கமாக நடைபெறும் நடைமுறை சிக்கல்.

 

கருப்பு கொடி! கருப்பு கொடி! கருப்பு கொடி!

 

நான் மெல்ல டவாலியை அழைத்து கற்புக்கொடி என்று அழைக்கவும், யாராவது கருப்பு கொடி என்று வைப்பார்களா? என்று சொல்ல நடுவர் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்க, நடுவரும் அவரது உதவியாளரை முறைக்க, உதவியாளர் இப்படித்தான் ஆவணத்தில் இருக்கிறது என்று கூற, சரி அந்தப் பெண்ணையே அழைத்து கேட்டு விடுவோம் என்று முடிவாயிற்று.

 

அந்த பெண்ணை அழைத்து உன் பெயர் என்று கேட்க, அவர் கருப்புக்கொடி என்று கூற. நடுவர் உனக்கு ஏன் அந்தப் பெயர் என்று கேட்க.

 

நான் பிறந்த அன்று அகில இந்திய தலைவருக்கு கருப்புக்கொடி காண்பித்தார்கள். அதன் நினைவாக என் பெயர் கருப்புக்கொடி என்று சொன்னாள்.

அவளை ஆச்சரியத்துடன் பார்த்தேன். அன்றைய ஆச்சரியம் அவளிலிருந்து ஆரம்பித்தது.

 

Series Navigationஆனியன் தோசைதண்டனை !

Archives