கவிதைகள்

மரணம் பின்பு

சிலர் வருகைப் பதிவேட்டில்
கையெழுத்திட்டு வந்துவிடுவர்
வருமானம்
வீடு தேடி வரும்
சமணத்தில் முக்தி
பெண்களுக்கு கிடையாதாம்
பிரமாண்ட நந்தி
கூடவே பிரஹன்நாயகி
இவ்வளவுக்கும் தகுதியுடையவனா
பிரகதீஸ்வரன்
கல்வி நிறுவனங்கள்
அம்பானிக்கும்,டாடாகளுக்கும்
தொழிலாளர்களை
உற்பத்தி செய்யும் பணியை
செவ்வனே செய்கின்றன
பெண்களால் வீழ்ந்தன
எத்தனையோ சாம்ராஜ்யங்கள்
சாவுக்கு பின்னும்
மதச் செயல்பாடு
இருக்குமானால்
மனிதனுக்கு இன்னல் தான்
அரசர்கள் காலத்தில்
அரண்யத்தில் வசித்த
காபாலிகக் கூட்டம்
கொலை செய்யத் தயங்காது
அஹிம்சையால் சுதந்திரம் வாங்கிய
இந்தியா தான்
அணு ஆயுதத்தை
தயாரித்துக் கொண்டு இருக்கிறது.

மனக்காரகன்

படுக்கையறையில்
மின்விசிறி ஓடிக்கொண்டிருந்த போதும்
உடல் வியர்த்திருந்தது
அனிச்சையாக
நெஞ்சுப் பகுதியை நோக்கி
கை சென்றது
வெளியே சுவர்க்கோழி
க்ரீச் க்ரீச் என
கத்திக் கொண்டிருந்தது
மாத்திரை மேஜையில் இருந்தது
கண்ணாடி இல்லாமல்
தேட முடியாது
அகஸ்மாத்தாக
கடந்த சில தினங்களாக
கண்ணில்படும்
கறுப்புப் பூனையின்
கண்கள் நினைவுக்கு வந்தன
மரண பயத்தை வெல்லுவதற்கு
தனிமையில் இருந்து பழக
மருத்துவர் சொல்லி இருக்கிறார்
இதயமும் ஒரு உறுப்பு தானே
எத்தனை இடியைத் தான் தாங்கும்
கண் மூடினால்
ஏதேதோ ஞாபகங்கள்
நில் என்றால்
நிற்கவா செய்கிறது
இந்த மனம்
கூலி மாதிரி
வேலை வாங்கிக் கொண்டு தான்
எனக்கு விடை கொடுக்கிறது
வலையில் மாட்டிக் கொண்டால்
சிலந்திக்கு இரையாகாமல்
இருக்க முடியுமா?

பேதலி்ப்பு

சுவாதீனமாகத்தான் இருக்கின்றேனா
இல்லையா எனத் தெரியவில்லை
பைத்தியக்கார விடுதியில்
உள்ளவர்கள் மட்டும் தான்
சித்தம் தெளிந்தவர்கள் போல்
தோன்றுகிறது
இந்தச் சமூகம்
வலுக்கட்டாயமாக திணிப்பதை
எல்லாம் நான் ஏன்
ஏற்றுக் கொள்ள வேண்டும்
மரணத்திற்குப் பிறகு
வாழ்வு இல்லையென்றால்
வாழ்க்கை அர்த்தமிழந்து
போய்விடுமல்லவா
வாழும் போது
தூற்றியவர்களை எல்லாம்
இவ்வுலகம்
இன்று ஏன் போற்றித் தொழுகிறது
ஆராய்ச்சிக் கூடமான
இவ்வுலகில்
கருணை,தயை எல்லாம்
ஏட்டில் தான் இருக்கிறது
தூக்க மாத்திரைகள்
நரம்புகளைச் சாகடிக்கின்றன
அதனாலென்ன என்றோ ஒருநாள்
சாம்பலாகப் போகும்
உடல் தானே.
————–

Series Navigationகவிதைகள்ஈழத்து கவிதைப் புலத்தில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் !“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” !)