கவிதைகள்

ஓம் ஸாந்தி ஸாந்தி

நதிப் பிரவாகம்
பேதம் பார்ப்பதில்லை
மதுக் குப்பிகளை
திறக்கும் போதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
இரவின் நாயகி நீயெனவும்
பகலின் நாயகன் நானெனவும்
விந்தை மனிதர்கள்
விரைவில் புரிந்து கொள்வர்
இரவுக்கு ஆகாரமாகவும்
பகலுக்கு ஆதாரமாகவும்
நீ இருக்கிறாய்
சக்தி ஆட்டுவிக்கிறாள்
சிவன் நடனமாடி களிக்கிறான்
விழிகள் போடும் கோலங்களை
வியந்து போய் பார்க்கிறேன்
நகத் தீண்டலிலே
என்னுள் மிருகம் விழித்துக் கொள்கிறது
ஆதி நாட்களில்
பாம்பாக அலைந்து கொண்டிருந்த
நடராஜரும் சிவகாமியும்
முயங்கிக் கிடக்கிறோம்
மோகத்தீயில்
என்னுள் புதைந்துள்ள பெண்மையைப்
புணர்ந்து விட்டு
ரௌத்திரமாகச் சிரிக்கிறாள்.

மனக்குகை

இருட்டு
எல்லோரையும் பயப்படுத்துகிறது
கனவில் புலியைக் கண்டால்
நிஜத்தில் உடல் வியர்க்கிறது
இருளில் நிழல் கூட
நம் துணைக்கு வராது
கடவுளை சிருஷ்டித்த மனம்
சாத்தானைக் கண்டு அலறுகிறது
புதையலை வைத்துக் கொண்டு
பிசாசு நரபலி கேட்கிறது
பிறக்கும் போதே
எல்லோருடைய கண்களுக்கும்
சாவின் நிழல் தெரிகிறது
இருளில் நடமாடும் அருவம்
கன்னிமைப் பெண்களின்
மனதைப் புணர்கிறது
இறந்தவர்களின் ஆவி
மற்றொரு உடலைத் தேடி
அலைகிறது
அமானுஷ்யங்கள் நிறைந்த உலகில்
ஆன்மா பல பிறவிகள் எடுக்கிறது
மயானத்தின் மேலேதான்
மனிதர்கள் வாழ்வது.

பேதலி்ப்பு

சுவாதீனமாகத்தான் இருக்கின்றேனா
இல்லையா எனத் தெரியவில்லை
பைத்தியக்கார விடுதியில்
உள்ளவர்கள் மட்டும் தான்
சித்தம் தெளிந்தவர்கள் போல்
தோன்றுகிறது
இந்தச் சமூகம்
வலுக்கட்டாயமாக திணிப்பதை
எல்லாம் நான் ஏன்
ஏற்றுக் கொள்ள வேண்டும்
மரணத்திற்குப் பிறகு
வாழ்வு இல்லையென்றால்
வாழ்க்கை அர்த்தமிழந்து
போய்விடுமல்லவா
வாழும் போது
தூற்றியவர்களை எல்லாம்
இவ்வுலகம்
இன்று ஏன் போற்றித் தொழுகிறது
ஆராய்ச்சிக் கூடமான
இவ்வுலகில்
கருணை,தயை எல்லாம்
ஏட்டில் தான் இருக்கிறது
தூக்க மாத்திரைகள்
நரம்புகளைச் சாகடிக்கின்றன
அதனாலென்ன என்றோ ஒருநாள்
சாம்பலாகப் போகும்
உடல் தானே.

நிலம் பார்த்து பெய்யும் மழை

கற்றுக் கொண்ட தமிழ்
கருவேப்பிலைக்குக் கூட உதவாது
என்கிறாள்
ஈசனிடமே இடப்பாகத்தைக் கேட்டவள்
என்னிடம் என்ன எதிர்பார்ப்பாளோ
தொண்டு செய்தோனுக்கு ஏதாவது
செய்யக்கூடாதா சுவாமிநாதன்
என் மீதிருக்கும் கோபத்தை
புஸ்தகத்தின் மீது காட்டுவாள்
எழுத்தாள நண்பர்களை
வீட்டுக்கு அழைத்து வரக்கூடாதாம்
என்னுடைய பாட்டனார் வரையில்
நன்றாகத்தான் வாழ்ந்தது குடும்பம்
என் அப்பா தான் சிவனைக்
காட்டிவிட்டார்
சைவம் தமிழ் வளர்த்த கதையை
படித்திருக்கக் கூடாதுதான்
சிவனுக்கு ஸ்ரீதேவி
விஷ்ணுவுக்கு பூதேவி
தரித்திரனுக்கு மூதேவி
காளி போலத்தான் அவள்
இல்லாவிட்டால் குடும்பத்தை
காக்க முடியுமா
நிலம் பார்த்து பெய்யும் மழைக்கு
நிச்சயமாக அவள் தான் காரணம்.

—————
mathi2134@gmail.com

Series Navigationஅறைக்குள்ளேயே வெகுதொலைவு (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்) -1கவிதைகள்