ஜோதிர்லதா கிரிஜா
(1.2.1981 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மனசு” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.)
சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்றுகொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று இருந்தாள். மகிழ்ச்சியான வாழ்க்கையால் உடம்பு முழுவதும் பூரித்துக் கிடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நிறைமாதமாக இருந்தாள். சாவித்திரிக்கு மனசு பொங்கிற்று. ‘அடிப் பாவிப்பெண்ணே! எவனையோ கல்யாணம் பண்ணிண்டு – கல்யாணமா அது முதல்லே? ஓடின்னா போனே? – ஒரு வளைகாப்பு நடந்திருக்குமா? சீமந்தம் நடந்திருக்குமா? ஒன்பது மாசத்துக்கு மேலே ஆயிடுத்து போலேருக்கே? இன்னும் வயித்தைத் தூக்கிண்டு ஆஃபீசுக்குப் போறே! உன் தலையிலே இப்படிக் கஷ்டப்படணும்னு எழுதியிருக்கிறச்சே யாரால என்ன பண்ண முடியும்? என்ன பிடிவாதம் உனக்குத்தான்! எம்புட்டு அழிச்சாட்டியம்! இப்ப கிடந்து அவதிப்படு. வயித்தைச் சாச்சுண்டு இந்த நிலைமையிலேயும் ஆஃபீசுக்குப் போய்ச் சம்பாதிச்சு வயிறு வளர்க்கணும்னு பகவான் உன் தலையிலே எழுதியிருக்கிறச்சே, கேவலம் மனுஷாளால எப்படி அதை மாத்தி எழுத முடியும்? அடி, கடங்காரி! … உனக்கும் புத்தி இப்படிப் போகுமா! உன்ன வளர்த்ததுல என்ன குறச்சல்? உங்க பாட்டி இருக்கணும். இருந்தா தூக்குப் போட்டுண்டுன்னா பிராணனை விட்றுப்ப …?’
சாவித்திரி அவசரமாய்த் திருவல்லிக்கேணிக்குப் போகவேண்டியிருந்தது. தன் அடுத்த மகளின் திருமணம் பற்றி ஓர் அம்மாளிடம் பேசிவிட்டு வருவதற்காக. அதற்கென்று கிளம்பிப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து நின்ற நேரத்தில் மங்களாவைப் பார்க்க நேர்ந்தது ஒரு கெட்ட சகுனம் மாதிரி அவள் நெஞ்சில் கசப்பாக இறங்கியது. மங்களாவைப் பார்த்ததுமே அவள் சற்றுத் தள்ளியே நின்றுகொண்டாள். அவள் தன்னைப் பார்த்துவிடக் கூடாது என்பது போல் மிகவும் ஒதுக்கமாகவும் கூடியவரை யாருக்குப் பின்னாலோ தன்னை மறைத்துக்கொண்டும் நின்றாள். வாய் நிறைய வெற்றிலையுடன் உதடுகள் சிவக்க மூசுமூசென்று பெருமூச்சு வாங்க நின்ற மகளைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு வயிறு எரிந்தது. வீட்டை விட்டு அவள் ஒரேயடியாய்ப் போய்விட்ட பிறகு, இன்றுதான் அவளைப் பார்க்கிறாள். அவளுடைய கணவன்தான் இரண்டொரு தரம் அவர்கள் வீட்டுக்கு வந்து தங்களை மன்னிக்குமாறு வேண்டினான். ஆனால் சாவித்திரியின் மனசு துளியும் இளகவே இல்லை. ‘அவன் மூஞ்சியும் முகரைக்கட்டையும்! மனசைப் பறி குடுத்துட்டு அம்மா வேண்டாம், அப்பா வேண்டாம், வேற யாருமே வேண்டாம்னு ஓட்டம் பிடிக்கிற அளவுக்கு அந்த மூஞ்சியில என்னதான் இருந்ததோ! கருகருன்னு மூஞ்சியில பாதியை மறைக்கிற மீசையும் அந்தப் பெரிய செவப்புக் கண்ணும் …’
அவளுக்கு அருவருப்பாக இருந்தது. பெண்களை வெளியே அனுப்புவதால்தானே இது மாதிரியான அக்கப்போரெல்லாம் என்று பெருமூச்சுவிடத் தோன்றியது. சட்டென்று தன் கணவன் மீது ஆத்திரம் பொங்கிற்று. ‘பத்தாவது வகுப்போட நிறுத்துங்கோன்னு தலை தலையா அடிச்சுண்டேன். கேட்டாரா? … காலேஜ்ல சேர்த்துப் படிக்க வெச்சார். காலேஜ்ல படிச்சா கெட்டுத்தான் போகணும்னு அர்த்தமா என்ன? ஆனா இவ மாதிரிப் பொண்ணுகள்ளாம் கெட்டுப் போறதுக்குக் காரணமா வேணும்? காலேஜ்ல படிக்கிற எல்லாப் பொண்ணுகளுமேவா ஓடிப்போயிண்டிருக்கு – அம்மா வேண்டாம், அப்பா வேண்டாம்னு? … இது துக்கிரி புத்தி … அதுதான் …’
யாரோ ஒரு பெண் மங்களாவுக்குப் பக்கத்தில் வந்து நின்று அவளைப் பார்த்துச் சிரித்ததைக் கண்டு, ‘அவளுடைய சிநேகிதி போலிருக்கு’ என்று நினைத்துக்கொண்டாள். ‘மங்களா திரும்பிப் பார்க்காமல் இருக்க வேண்டுமே’ என்று சாவித்திரிக்குக் கவலையாக இருந்தது நாலு பேருக்கு எதிரில் அவள் அம்மா என்று அழைத்தபடி தன்னிடம் நெருங்கக்கூடும் என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். அப்படி அழைத்தபடி அவள் தனக்குப் பக்கத்தில் வந்து நின்றால் எப்படி எதிரொலிப்பது என்கிற கேள்வி அவளைக் குடையத் தொடங்கியது. ‘எப்படி இருக்கேன்னு கேக்கறதா, இல்லே, இது எத்தனாவது மாசம்டின்னு கேக்கறதா? ஒரு அம்மாவும் பொண்ணும் பேசிக்கிற பேச்சா இது? வயிறு இத்தனை பெரிசாய் இருக்கிற பொண்ணைப் பார்த்து, இது எத்தனாவது மாசம்னு கேக்கற கேள்வி ஒரு பெத்த தாயார் கேக்கற கேள்வியா என்ன! மகளே தப்புப் பண்ணக்கூடிய மாசக்கணக்கை அம்மான்னா சரியாச் சொல்லணும்? அப்படி இருக்க வேண்டிய ஒரு நிலைமை இப்படியா ஆகணும் – யாரோ மூணாம் மனுஷாளாத்துப் பொண்ணைக் கேக்கற மாதிரி ஒரு கேள்வியை அவளைப் பெத்த தாயார்க்காரி கேக்கறதுங்கிறதைக் கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடியல்லையே …?’ – சாவித்திரியின் வெறுப்பையும் ஆத்திரத்தையும் மீறிக்கொண்டு அவள் கண்களில் நீர் துளித்தது.
‘எவ்வளவு சொன்னேன்? துளியாவது சட்டை பண்ணினாளா? பெத்த தாயர் தகப்பனாரைவிட எவனோ ஒருத்தன் – ஆறு மாசத்துப் பழக்கத்துல – ஒசத்தியாப் போய்ட்டான். அவளுக்கு அம்மா வேண்டாம், அப்பா வேண்டாம், கூடப் பொறந்தவா வேண்டாம், வேற எதுவும் வேண்டாம்னு தோணிப் போயிடுத்து …அவளுக்கும் திருவல்லிக்கேணியிலதானே ஆஃபீஸ்? ஒரு வேளை ரெண்டு பேரும் ஒரே பஸ்ல ஏறிக்கும்படி ஆயிடுமோ? … அவ முதல்ல ஏறிப் போகட்டும். எனக்கென்ன அவசரம்? பத்து மணிக்கு டாண்ணு அங்கே இருக்கணுமா என்ன? அவ போனதுக்கு அப்புறம் அடுத்த வண்டியைப் பிடிச்சு நான் போய்க்கிறேன். … இவ என்னைப் பார்க்க வேண்டாம். நாங்க ஒருத்தர் மொகத்துல ஒருத்தர் முழிக்க வேண்டாம்… அவளோட ஆம்படையானுக்கு வேலை போயிடுத்துன்னு சொன்னாளே அவ சிநேகிதி ரமா? ஒரு வேளை ரொம்பக் கஷ்டப்படறாளோ? பார்த்தா அது மாதிரி தெரியல்லே. செழுமையாத்தான் இருக்கா. … அவதான் சம்பாதிக்கிறாளே? இப்போதைக்கு ரெண்டே பேருதானே? இவ ஒருத்தி சம்பாத்தியம் போறும்தான் … குழந்தை வந்துட்டாத்தான் கஷ்டம். இவளுக்கும் நிறைய லீவ் எடுக்கும்படி இருக்கும் …’
சென்ற மாதம் தற்செயலாய்ச் சந்தித்த அவளுடைய தோழி ரமாவிடமிருந்து அவள் கணவன் வேலை செய்துகொண்டிருந்த தொழிற்சலையைத் தொழிலாளர் தகராறு காரணமாகத் தற்காலிகமாக இழுத்து மூடிவிட்டதாக அவள் தெரிந்துகொள்ள நேர்ந்தது. அந்தச் செய்தி சாவித்திரியைப் பாதிக்கவில்லை. ‘வேணும் நன்னா. சோத்துக்குத் திண்டாடட்டும் அப்பதான் புத்தி வரும்’ என்று அவள் சொன்ன போது, ‘அவன் நம்ம ஜாதிப் பையனா இருந்திருந்தா மட்டும் கம்பெனியை மூடியிருக்க மாட்டாளாடி முட்டாளே!’ என்று அவள் கணவர் கேலி செய்தார். அந்தச் சொற்களின் நியாயத்தை ஒப்புக்காகக் கூட ஏற்க அவள் தயாராக இல்லை. பெற்றோரின் பேச்சை மீறிக்கொண்டு வேற்று சாதிக்காரனான அவனை மணந்துகொண்டதற்குக் கடவுள் அவளுக்குக் கொடுத்த தண்டனை அது என்றுதான் அவளுக்குத் தோன்றியது. பெற்ற தாய்தகப்பனுக்கு மனத்துன்பம் அளிக்கின்ற பெண்களின் நிலை அப்படித்தான் ஆகும் என்றுகூட அவளுக்குப் பட்டது.
ஆசார அனுஷ்டானங்களிலும் பண்டைப் பழக்கவழக்கங்களிலும் ஊறித் திளைத்த அவளுக்கு வேறு எப்படியும் எண்ண முடியாதுதான். அவளைப் பொறுத்த வரையில் சாதிகளும் அவற்றுக்குரிய பழக்கவழக்கங்களும் இருந்தே தீர வேண்டியவை. அதிலும் வேற்று மதத்தவர்கள் திருமணச் சம்பந்தம் செய்து கொள்ளுவதைப் பற்றி அவளால் கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாது. அப்படிப்பட்டவளின் பெண் வேற்று மதத்தவனையே கல்யாணம் பண்ணிக்கொண்டுவிட்டாள். அப்பா அம்மாவின் முகங்களில் அழுத்தமாகக் கரியைப் பூசிவிட்டாள். ‘எம்புட்டுக் கெஞ்சினேன்! கால்ல கூட விழறேண்டியம்மான்னு கதறினேனே? பாவி, கேட்டாளா? காதலா, கட்டையா, அதுதான் பெரிசுன்னு போயிட்டாளே! அம்மாவையும் அப்பாவையும் துடிக்க விட்றவா நன்னாருப்பாளா?’ – தான் பெற்ற மகளைத் தானே சபிக்கிற உறுத்தல் துளியும் இல்லாமல் சாவித்த்ரி பல்லைக் கடித்தாள்.
22 ஆம் இலக்கமிட்ட நேருந்து வந்தது. கூட்டமாக இருந்தது. மங்களாவும் அவள் தோழியும் வண்டி பிதுங்கி வழிந்ததைக் கவனித்துத் தாங்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமலே நின்றுவிட்டதைக் கண்ட சாவித்திரி, ஆண்களின் கும்பல், அவர்களில் சிலர் தொற்றி ஏறிக்கொண்டுவிட்டதன் விளைவாகக் குறைந்து போனதில் பேருந்து நிறுத்தத்துக் கூட்டமும் சற்றுக் குறைந்து போன நிலையில் இன்னும் சற்று நகர்ந்து போய் அவளுக்குப் பின்புறமாக நின்றுகொண்டாள். அங்கே இருந்த ஒரு சின்ன மரம் அதற்கு வாய்ப்பாக இருந்தது. மங்களாவின் பார்வையிலிருந்து தன்னை முழுவதுமாக மறைத்துக்கொள்ள முடிந்த அதே நேரத்தில் அவளுக்குப் பின்னால் மிக அருகில் இருக்கும்படியாயிற்று.
“ஏன் இன்னும் ஆஃபீசுக்கு வறேடி, மங்களா?” என்று அந்தப் பெண் கேட்டது காதில் விழுந்தது.
“அவருக்குத்தான் வேலை இல்லியேடி, ஜானகி? என் ஒருத்தி சம்பளத்துலதானே காலம் கழிச்சாகணும்? மெடர்னிடி லீவ் வேற எடுத்தாகணும். பிரசவத்துக்கு ரொம்பவும் முன்கூட்டி மெடர்னிடி லீவ் எடுத்துட்டா அப்புறம் மேல வேற இன்னும் கொஞ்சம் லீவ் எடுக்கும்படி ஆச்சுன்னா சம்பளம் இல்லாத லீவ்தான் கிடைக்கும். அப்புறம் குழந்தைக்குப் பால் வாங்கக்கூடக் கையில காசு இருக்காது. அதுக் குத்தான் பிரசவத்துக்கு முதல் நாள் வரைக்கும் கூட ஆஃபீசுக்குப் போறதுன்னு தீர்மானிச்சுட்டேன்!”
‘நன்னா அவதிப்படு. என் பேச்சைக் கேட்டு ஒழுங்கா நடந்திருந்தா இப்ப ஹாய்யா ரெஸ்ட் எடுத்துண்டு என்கூட இருக்கலாமோல்லியோ?’
“அது சரி, டேட் சொல்லியிருக்காளா டாக்டர்?” “ஆச்சு. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எப்படியும் ஆயிரடும்னு சொல்லியிருக்கா.” “ப்ரைவேட் டாக்டர்தானே?” “ப்ரைவேட் டாக்டருக்கெல்லாம் குடுக்கிறதுக்கு நான் பணத்துக்கு எங்கேடி போறது? கவர்ன்மென்ட் மெடர்னிடி ஹாஸ்பிடல்தான்! அங்க அட்மிட் ஆனாத்தானேடி மெடிக்கல் ரீயிம்பர்ஸ்மென்ட் கிடைக்கும்?” – இப்படிச் சொல்லிவிட்டு மங்களா சிரித்தது கூடத் தெளிவாகக் காதில் விழுந்தது.
‘மருந்துச் செலவெல்லாம் திரும்பி வரணும்கிறதுக்காக தர்மாஸ்பத்திரிக்கா போறே? ஒழுங்கா முறையா என் சொல் பேச்சைக்கேட்டு நடந்திருந்தா, இப்படிப் பிச்சைக்காரி மாதிரி அலைய வேண்டாமோல்லியோ? அவாவா திமிருக்கு ஏத்தபடிதானே பகவான் படியளப்பான்? அன்னிக்கு என்னைத் துடிக்கவிட்டியோன்னோ? இன்னிக்கு அவதிப்படு!’
“மிஸ்டர் ஜேம்ஸ் ஏதானும் வேலைக்கு முயற்சி பண்ணிண்டிருக்காரா?”
“டெம்பரரி ஜாப்தான் செய்யலாம். ஏன்னா இன்னும் அஞ்சாறு மாசத்துல அவரோட கம்பெனியையே திறந்துடுவாங்கன்னு பேசிக்கிறா. ஆனா அது வரைக்கும் ஏதானும் பார்ட் டைம் ஜாப் கிடைச்சாலும் பார்க்கலாம்னா, வேலை கிடைக்கிறது அத்தனை ஈஸியாவா இருக்கு இந்தக் காலத்துல?”
“உங்க அம்மாப்பா உன்னை மன்னிக்கவே இல்லையா இன்னும்?”
மங்களா வாய்விட்டுச் சிரித்தாள்: “அவா ரெண்டு பேருக்கும் ஈரமே இல்லாத மனசுடி. அப்பா கல்லாயிருந்தா அம்மா இளக்கமாய் இருப்பா. அம்மா கல்லாயிருந்தா அப்பா இளக்கமாய் இருப்பா. அப்படித்தான் நாம பொதுவாப் பார்க்கறோம். ஆனா எங்க வீட்டிலெ ரெண்டு பேருமே சரியான பாறாங்கல்லுன்னா, பாறாங்கல்லுடி…”
‘ஓகோ! நாங்க ரெண்டு பேரும் பாறாங்கல்லா? நீ தங்கக்கட்டியாக்கும்! எம்புட்டுக் கெஞ்சினோம்? உன் மனசு துளியாவது எறங்கித்தோ? எங்களையா பாறாங்கல்லுன்னு பழிக்கிறே?’
ஓடிப்போவதற்கு முதல் நாள், அவள் மறு நாளே வீட்டைவிட்டுப் போய்விடுவதாக இருந்த சதியைப் பற்றி ஏதும் அறியாமலே, ‘அடியே! அப்பாம்மாவுக்குத் தெரியாம அவனைக் கல்யாணம் கில்யாணம் பண்ணிண்டே, நீ உருப்படமாட்டே. அது மாதிரி ஏதானும் காரியம் பண்ணிட்டு அப்புறம் இங்க வந்து எங்க கால்ல விழுந்து அழுது ஆகாத்தியம் பண்ணினா எல்லாம் சரியாப் போயிடும்னோ, இல்லே, ஏதோ நடந்தது நடந்து போச்சு, என்ன இருந்தாலும் நம்ம பொண்ணுன்னு நாங்க உன்னை மன்னிச்சிடுவோம்னோ கனவுலயும் எதிர்பார்க்காதே. உங்கப்பா உன்னை மன்னிச்சாலும் நான் உன்னை மன்னிக்க மாட்டேன். இப்ப நான் பேசற பேச்செல்லாம் வெறும் வீம்புப் பேச்சு இல்லே. அது மட்டுமா? நீ கிறிஸ்தவனைக் கல்யாணம் பண்ணிண்டு வந்து நாங்களும் அதை ஏத்துண்டோம்னா, நாளைக்கு உன் தங்கைகள் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகாது. அப்படியே ஆகறதுன்னு வெச்சுண்டாலும், நீ பண்ணின அநியாயத்துக்கு நாங்க நிறையப் பணம் குடுத்து அவா வாய்களை அடைக்க வேண்டியிருக்கும். அதனால, நீ அப்படிப் பண்ணினா அதுக்கு அப்புறம் உனக்கும் எங்களுக்கும் ஸ்நானப் பிராப்தி கூட இருக்காது. இப்பவே சொல்லிட்டேன்!’என்று திட்டவட்டமாக அறிவித்தாள்.
மங்களா என்ன திமிராகச் சிரித்தாள்! ‘ஏம்மா, நான் அவனைக் கல்யாணம் பண்ணிண்டு போனா இந்தாத்துல மத்தவாளுக்குக் கலயாணம் பண்ண நிறையப் பணம் செலவழிக்க வேண்டி வரும்கறியே, என் கல்யாணத்துக்கு நீ ஒரு பைசா கூடச் செலவழிக்கப் போறதில்லையே. அதை என் தங்கைகளுக்குப் பங்கு போட்டுச் செலவழிச்சுக்கோ’ என்று அவள் கேலியாகச் சொன்னது இப்போது சாவித்திரியின் காதுகளில் ஒலித்தது.
அந்தச் சொற்களும் அவற்றின் கிண்டலும் நினைவுக்கு வந்ததும், அவளுக்கு மகளின் மீது இருந்த ஆத்திரம் மிகுதியாயிற்று: ‘ஆனா நான் மட்டும் பேசல்லையா? ‘அடியே! அவனைக் கல்யாணம் பண்ணிண்டே, நீ அழிஞ்சு போவே’ ன்னு சாபம் குடுத்தேனே? ‘நீ உருப்பட மாட்டே! என் வயித்தை எரிய விட்டியானா, ஏழேழு ஜென்மத்துக்கும் நீ அவதிப்படுவே’ ன்னு கையை நெறிச்சேனே? … அந்தக் கோவத்துலதான் அவ ஆத்தைவிட்டுப் போனதுக்கு அப்புறம் என்னை வந்து பார்க்கவே இல்லே. அவ புருஷன் தான் வந்து மன்னிப்புக் கேட்டான். ‘ஆத்துக்கு வந்தா எண்ணெயைக் காய்ச்சி மூஞ்சியிலே கொட்டுவேன்’னுன்னா சொல்லியிருந்தேன்? … ஆனா அவ பண்ணின காரியத்துக்கு வேற எப்படிப் பேசறது? …’
திடீரென்று மங்களா நின்ற இடத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டு அவள் சிந்தனை கலைந்தது. கீழே விழுந்துவிட்ட யாரைச் சுற்றியோ கும்பல் கூடியது தெரிந்தது. ஒரு திடீர் உந்துதலில் அவள் எட்டிப் பார்த்து மங்களாதான் அரை மயக்கமாகத் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்ததையும் அவளோடு பேசிக்கொண்டிருந்த அந்தப் பெண் கலவரமடைந்து அவள் தோளில் கை பதித்துக் குனிந்து கொண்டிருந்ததையும் பார்த்தாள்.
அரைக் கண் மூடிய நிலையில் இருந்த மங்களா, “என்னை மெடர்னிடி ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போய் அட்மிட் பண்ணிடு. அப்படியே எங்க ஹஸ்பண்டுக்கு எப்படியாவது தகவல் அனுப்பிடுடி, ஜானகி,” என்று சொன்னது சாவித்திரியின் காதுகளில் விழுந்தது. அடுத்த கணம் மங்களாவின் இரு கண்களும் முழுசாகவே மூடிக்கொண்டதையும் அவள் சாயத் தொடங்கியதையும் கவனித்து, சாவித்திரி விரைந்து ஓடிப்போய் அவளைத் தாங்கிக்கொண்டாள்.
…….
- பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது.
- இலக்கியமும் காசநோயும்! – (மார்ச் 24, உலக டி. பி. தினம்)
- சரித்தான்
- ஒரு கதை ஒரு கருத்து – சுப்ரமண்யராஜுவின் நாளை வரும் கதை
- வடக்கிருந்த காதல் – நான்காம் பாகம்
- ம ன சு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ்