அக்னிப்பிரவேசம்-12

This entry is part 18 of 31 in the series 2 டிசம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

சாஹிதி ரொம்பக் கஷ்டப்பட்டு படித்துக் கொண்டிருந்தாள். வீட்டுச் சூழ்நிலையில் கூட நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. பரமஹம்சா அடிக்கடி வந்து கொண்டிருந்தான். நிர்மலாவிடம் வியாபார விவரங்களைச் சொல்லுவான். சாஹிதிக்கு வேண்டியதைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். ஆலோசனை வழங்குவான்.

சாஹிதிக்கு அவன் வருகை எப்பொழுதும் சந்தோஷத்தைத் தந்து கொண்டிருந்தது. அவன் இருந்தால் எல்லோருமாய்ச் சேர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். தந்தை உயிரோடு இருந்த வரையில் அப்படிப்பட்ட அனுபவமே அவளுக்கு ஏற்பட்டதில்லை. அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தான் இழந்து விட்டது என்னவென்று தெரியத் தொடங்கியது. எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமானது தாயின் முகத்தில் புன்னகையும், உற்சாகமும்தான். அவற்றின் அர்த்தத்தை முற்றிலுமாய் தெரிந்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு அவள் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

இன்டர் முதலாம் ஆண்டு முடிவடைந்தது. காலம் ரொம்ப வேகமாக கழிந்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது சாஹிதிக்கு. அந்த விடுமுறையில் முதல் முறையாய் மாமாவின் ஊருக்குப் போனாள் சாஹிதி. கிராமத்துச் சூழ்நிலை நன்றாக இருக்கும் என்றும், இந்த இயந்திர வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுதல் அவசியம் என்றும் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தான் பரமஹாம்சா.

உண்மையிலேயே சாஹிதிக்கு அந்தச் சூழ்நிலை ரொம்பவும் பிடித்து விட்டது. பச்சைப் பசேலென்ற வயல்கள், கொத்துக் கொத்தாய்க் காய்த்துத் தொங்கிய மாந்தோப்புகள், மரத்தில் கட்டிய ஊஞ்சல்கள், புது விதமான விளையாட்டுகள்…எல்லாமாய்ச் சேர்ந்து புத்தம்புது உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தாற்போல் இருந்தது. எல்லாவற்றையும் விட தான் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை அவரவர்களின் பெயரைக் கூப்பிட்டுக் கொடுத்த போது அவர்கள் முகத்தில் தென்பட்ட திருப்தியும், நன்றியும் அவள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. அந்த யோசனைகூட பரமஹம்சனுடையதுதான். ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரவர்களுக்கு  ஏற்ற பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்கித் தந்தான் அவன்.

விடுமுறை முடிந்து விட்டது. சாஹிதி புதிய உற்சாகத்துடன் திரும்பி வந்தாள். வீட்டில் கூட சில மாற்றங்கள் தென்பட்டன. முக்கியமாக நிர்மாலாவிடம் உற்சாகம் இருமடங்காகி இருந்தது. பரமஹம்சாவும் அவளுடன் சேர்ந்து பூஜைகளில் பங்கெடுத்துக் கொண்டு அவளுக்குத் துணையாய் இருந்து வந்தான்.

சாஹிதி கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். முதல் ஆண்டு மதிப்பெண்கள் வெளிவந்தன.  சாஹிதி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். சயின்ஸ் சப்ஜெக்டில் அவள்தான் முதல் இடம். பரமஹம்சா மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். போனில் கூப்பிட்டு பேசினான்.

“இன்றைக்குத் திரும்பவும் உனக்குப் பார்ட்டி தரணும். கூடவே ஒரு பரிசும் தரப் போகிறேன். அது உனக்கு பிடிக்குமா இல்லையா என்று கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகுதான் தருவேன்’ என்றான்.

“உங்களுக்கு என் விருப்பு வெறுப்பு எல்லாம் நன்றாகத் தெரியும். என்னையும் விட உங்களுக்குத்தான் தெரியும். நீங்க தரப்போவது எதுவாக இருந்தாலும் எனக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் அங்கிள்” என்றாள் சாஹிதி.

“பிடிக்கவில்லை என்றால் மட்டும் தயக்கம் இல்லாமல் வெளிப்படையாய் சொல்லவேண்டும், சரிதானே?”

“கண்டிப்பாய். மம்மியிடம் சொல்லட்டுமா மாலை பார்ட்டியைப் பற்றி?”

“வேண்டாம். இன்றைக்கு மம்மி ஒருபொழுது. நாமிருவரும் மட்டுமே போவோம்.”

“சரி அங்கிள்.” போனை வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தாள் சாஹிதி. அந்த பரிசு என்னவாக இருக்கும்? மணமகனைத் தேர்ந்தெடுத்து விட்டேன் என்று சொல்லுவாரா? ஊஹும், தன்னை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு. அதுவாக இருக்காது. சாஹிதி உள்ளூர சிரித்துக் கொண்டாள். ஒருக்கால் ஏதாவது டைமன்ட் செட் ஆக இருக்கலாம்.

பரமஹம்சா வருவதற்குள் தயாராக இருந்தாள். நிர்மலாவிடம் சொல்லிவிட்டு அவளை அழைத்துச் சென்றான். அவனுடன் தனியாய் வெளியே செல்வது இதுதான் முதல் தடவை. உள்ளூர கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அவனே டிபன் வகைகளுக்கு ஆர்டர் கொடுத்தான். தன்னிடம் பேசுவதற்கு ஏனோ தயங்குவது போல் அவளுக்குத் தோன்றியது.

சாப்பிட்டு முடித்தார்கள். அவளுக்குப் பிடித்தமான கஸாட்டா ஐஸ்க்ரீம் வரவழைத்தான்.

“நான் சொன்ன பரிசைப் பற்றி கேட்கவில்லையே ஏன்?”

“நீங்களே சொல்லுவீங்க என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“சாஹிதி!” அவன் குரல் கம்பீரமாக இருந்தது. “இது நான் உனக்குத் தரும் பரிசா அல்லது உன்னிடம் கேட்கும் வரமா என்று எனக்கே புரியவில்லை. உனக்குப் பிடிக்கவில்லை என்றால் உன் மனதை நோகடித்துவிட்டேனே என்ற வேதனை என்னை விட்டு நீங்கவே நீங்காது. ஆனால் கேட்காமலும் இருக்க முடியவில்லை என்னால். அதனால்தான் இன்னொருமுறை கேட்டுக் கொள்கிறேன். உனக்குப் பிடிக்கவில்லை என்றால் தயவு தாட்சிண்யம் இன்றி சொல்லிவிடு. நான் ஒன்றும் வருத்தப்பட மாட்டேன். அந்த விஷயத்தை இருவருமே மறந்து விடுவோம். எப்போதும் போல் நண்பர்களாக இருப்போம்.”

“சொல்லுங்க அங்கிள். தயங்காதீங்க.” அது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாகிவிட்டது அவளுக்கு.

“ஒன்றும் இல்லை.” அவள் கண்களையே உற்றுப் பார்த்தபடி சொல்லத் தொடங்கினான் அவன். “உங்க அம்மாவைப் பற்றித்தான். அவளுக்கு அப்படி ஒன்றும் ரொம்ப வயதாகவில்லை. வாழ்க்கையில் எந்தச் சுகத்தையும் அனுபவிக்கவில்லை. மனதளவில் மிகவும் தளர்ந்து விட்டிருக்கிறாள். நீண்ட வாழ்க்கை இன்னும் முன்னால் இருக்கிறது. இப்பொழுதாவது அவள் இழந்து விட்டதைத் திருப்பித் தரணும் என்று தோன்றுகிறது. இது என்னுடைய கோரிக்கை இல்லை. கடவுளின் சங்கல்பம் என்று நினைக்கிறேன். அவளை..”

“ஊம்.. சொல்லுங்கள்.”

“அவளை நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள நினைக்கிறேன், உங்கள் இருவருக்கும் ஆட்சேபணை இல்லாவிட்டால்தான்” என்றான் பரமஹம்சா.

சாஹிதிக்கு ஐஸ்க்ரீமை விட இனிமையான உணர்வு மனதில் நிரம்பி வழிந்தது. இமயம் போன்ற உயர்ந்த பண்புடைய அவனுக்கு, நன்றியை எப்படிச் சொல்லுவது என்று புரியாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா? உனக்குப் பிடிக்கவில்லையா?”

“பிடிக்காமல் என்ன அங்கிள்? என்ன சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. உங்கள் காரணமாய் அம்மாவிடம் சமீபத்தில் வந்த மாற்றங்களுக்கே சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். இனி இது போலவும் நடந்துவிட்டால், அம்மா மனப்பூர்வமாக சிரித்தபடி வீட்டில் வளைய வந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? அம்மாவிடம் நீங்க பேசினீங்களா அங்கிள்?”

“இல்லைம்மா. இது எங்கள் இருவருக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வயது வந்த, விவரம் தெரிந்த பெண் நீ. உன் அபிப்ராயத்தை முதலில் தெரிந்துகொண்டு அதற்குப் பிறகுதான் மம்மியிடம் இந்தப் பேச்சை எடுப்பதாக இருக்கிறேன்.”

“எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கு. மம்மியைச் சம்மதிக்க வைப்பதற்கு என்னை என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன்.”

‘தற்சமயம் நீ எதுவும் செய்யாதே. நான் முதலில் பேசுகிறேன். அவள் மறுத்தால் அப்பொழுது யோசிப்போம். பேரர்!” கூப்பிட்டான் பரமஹம்சா. “இந்த ஐஸ்க்ரீம் உருகிவிட்டது. எடுத்துக்கிட்டுப் போய் வேறு கொண்டுவா.”

அவ்வளவு சீரியசான உரையாடலுக்கு நடுவில் கூட அத்தனை சின்ன விஷயத்தை அவன் கவனித்தது பொறுப்பு மிகுந்த அவன் குணத்தை காட்டியது.

“இன்னொரு விஷயத்தையும் உனக்குத் தெளிவுப் படுத்தணும்.ச எனக்குக் கல்யாணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கும் விஷயம் உனக்கும் தெரியும். அவர்கள் ரொம்ப நாளாய் என்னுடன் வசிப்பதில்லை. உங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முன்னால் அவர்களிடமிருந்து எந்த விதமான ஆட்சேபணையோ, தடங்கலோ, விரும்பத் தகாத சம்பவமோ எதிர்ப்பட்டு விடக் கூடாது. அந்த விஷயத்தில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்குக் கொஞ்ச நாள் பிடிக்கலாம். என் மகன்களில் ஒருவன் டாக்டர், இன்னொருத்தன் இன்ஜனியர். இருவருமே செட்டில் ஆகி விட்டார்கள்.”

“உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அப்படியே செய்யுங்கள் அங்கிள். என்னால் செய்யக் கூடியது ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். செய்கிறேன்.” மனப்பூர்வமாகச் சொன்னாள் சாஹிதி. பிறகு தன்னுள் எண்ணிக்கொண்டாள். ‘இப்படிப்பட்ட நபர்கள் எல்லோர் வாழ்க்கையிலும் எதிர்பட்டுவிட மாட்டார்கள். பரமஹம்சாவைப் பற்றி கோமளா டீச்சருக்கு விவரமாய் எழுத வேண்டும். ஆண்கள் எல்லோருமே கயவர்கள் இல்லை என்றும் தெரிவிக்க வேண்டும்.’

பார்ட்டியிலிருந்து இருவரும் திரும்பி வரும்போது நிர்மலா வெளியே எதிர்பார்த்தபடி நின்றிருந்தாள்.

நன்றாய இருட்டி விட்டது. வெளியே மழை வரும் அறிகுறிகள் தென்பட்டன. வீடு திரும்பியதுமே நிர்மலா கடிதத்தை நீட்டினாள். கோமளா டீச்சர் எழுதிய கடைசிக் கடிதம் அது. அவள் இறந்துவிட்டதாய் மறுநாள் தந்தி வந்தது.

****

“சாஹிதி!” பரமஹம்சா இரக்கம் ததும்பும் குரலில் விசாரிப்பது போல் அருகில் வந்தான். “ஏனம்மா? எப்படியோ இருக்கிறாய்?”

“மனம் சரியாய் இல்லை அங்கிள்.”

அவன் தலையில் கையைப் பதித்துத் தடவிக் கொடுத்தான். “இளம் வயதில் இருப்பவள் மனம் சரியாய் இல்லை என்று சொன்னால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கணும். நீ யாரிடமாவது மனதைப் பறிக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது யாராவது உன்னைக் காதலிப்பதாய் சொல்லி இருக்க வேண்டும்” என்று சிரித்தான்.

உண்மையில் சாஹிதிக்கு தான் இளம்பெண் என்ற விஷயமே அதுவரையில் நினைவுக்கு வந்தது இல்லை. படிப்பைத் தவிர வேறு எந்த உலகமுமே தெரியாது அவளுக்கு. முதல் முறையாய் அவன் வாயிலிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்ட பொழுது வெட்கமும், சங்கோஜமும் ஏற்பட்டன. தடுமாற்றத்தோடு தலை குனிந்தாள்.

“தந்தையைப் போன்றவன் நான். என்னிடம் சொல்வதற்குக் கூட பயப்படுகிறாயா?”

அப்பொழுதுதான் அவளுக்கு துக்கம் வந்தது. இண்ட்ராவர்ட் சுபாவம் கொண்டவர்களின் இதயத்தில் துக்கம் வெள்ளமாய் பொங்கி வெளிப்படுத்துவதற்கு அந்த அளவுக்கு இரக்கம் போதும். பதினாலு முதல் இருபதுக்கு இடைப்பட்ட வயதில் ஆண்களிலும் சரி பெண்களிலும் சரி இவ்விதமாய் ஆதாரப்படும் குணம் உண்டு.

எப்பொழுதும் தமக்குள் தாமே பார்த்துக் கொண்டும், தம்மைப் பற்றியே யோசித்துக் கொண்டும்  உலகம் முழுவதும் தம்மையே கண்காணித்து வருவதாய்  ஊகித்துக் கொண்டும் இருப்பார்கள். இரக்கம் ஒரு குளிர்ந்த காற்று போல் அந்த துன்பத்தைத் தாக்கும் போது ஆடி மாதத்து கார்மேகம் போல் கண்ணீர் மழை போழிவதுதான் இவர்களின் சுபாவம்.

இந்த இரக்கத்தை இவர்கள் யாரிடமிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்வார்கள். அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் உடன்பிறவாத அண்ணன்கள், தந்தையைப் போன்ற நிலையில் இருக்கும் வாத்தியார்கள்.. இப்படி யாரிடமிருந்து வேண்டுமானாலும். இந்த உடன் பிறவா சகோதரர்கள் சாதரணமாக லேடீஸ் ஹாஸ்டலுக்கு முன்னால் நின்று கொண்டு நாலைந்து பெண்கள் புடை சூழ தென்படுவார்கள். இவர்களுக்கு அய்யாகுண்டு முதல் ஐன்ஸ்டீன் வரையில் தெரியாத ஆசாமிகளே இருக்க மாட்டார்கள். தம்முடைய எண்ணங்களை, கருத்துகளை அடுத்தவர் மீது திணித்தபடி அவர்களை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வார்கள். எதிராளியை மீட்பதற்காகவே கடவுள் தம்மை  படைத்திருப்பதாய் எண்ணிக்கொள்வார்கள்.

“சொல்லும்மா, என்ன நடந்தது?”

“எங்க கோமளா டீச்சர் செத்துப் போய் விட்டாள் அங்கிள்” என்றாள். “தற்கொலை பண்ணிகொள்ளப் போவதாய் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டாளாம். ஆனால் கணவன்தான் கொலை செய்திருக்க வேண்டும். டீச்சர் ரொம்ப நல்லவள் அங்கிள். பொறுமை என்றால் என்னெவென்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தாள் அங்கிள். அவளுடைய பொறுமை நசித்துப் போகும்படி துன்புறுத்திய அந்தக் கணவனைக் கொன்றுப் போட்டு விடணும் போல் இருக்கு. எவ்வளவு வேதனை அனுபவித்து இருந்தால் இந்த முடிவுக்கு வந்திருப்பாள்?”

“யாருடைய விதி எப்படி எழுதி வைத்திருக்கிறதோ அப்படித்தான் நடக்கும். யாராலும் அதை மாற்ற முடியாதும்மா.”

“விதி இல்லை அங்கிள், அவள் கணவன்.”

“இல்லை அம்மா. நீ தவறாக புரிந்து கொண்டு இருக்கிறாய். அங்கே நடந்தது என்ன என்று உனக்குத் தெரியாது. பொறுமையும், நற்பண்பும் பெண்களுக்கே இயல்பான ஆபரணங்கள். அவற்றி இழந்துவிட்ட பெண்ணைத் துரதிர்ஷ்டம் துரத்தத் தொடங்கி விடுகிறது. கணவனைத் திருத்தி நல்ல வழிக்குக் கொண்டு வருவது பெண்ணின் கடமை. சீதை, அனசூயாக்கள் பிறந்த புண்ணிய பூமி இது. பத்தினித்தன்மை நம் கொள்கை. கர்ம சித்தாந்தத்தை நம்பியவர்கள் யாருமே வேதனைப்பட மாட்டார்கள். கர்மாதான் என்னை உங்களிடம் இழுத்து வந்தது. கர்மாதான் என்னை உனக்கு இந்த விதமாய் போதிக்கச் செய்கிறது.”

இந்த இறுதி வார்த்தைகள் மட்டும் உண்மை.

“கோமளாவின் மரணத்தை விதி எழுதி வைத்திருப்பதால், என்னை கடவுள் அவளிடம் அனுப்பவில்லை. இல்லாவிட்டால் என் மனோபலத்தின் மூலமாக உன் தாயை மாற்றியது போல் அவளையும் கஷ்டத்திலிருந்து மீட்டிருப்பேன். எதிராளியின் மனதில் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் சக்தியை கடவுள் எனக்கு அருளியிருக்கிறார். இந்த உலகத்தில் இவ்வளவு பேர் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது எனக்கு வேதனையைத் தருகிறது. என்னால் முடிந்த வரையில் அவர்களுக்கு உதவி செய்வது என் கடமை. அதற்காக என் சுகத்தைக் கூட தியாகம் செய்கிறேன். இப்பொழுது நான் அங்கே எல்லோரையும் விட்டுவிட்டு இங்கே அடிக்கடி வருகிறேன் என்றால் அதற்குக் காரணம் உங்க குடும்பத்தைத் துக்கத்திலிருந்து மீட்பதற்காகத்தான் என்று கடவுள் எனக்கு சொல்லியிருக்கிறார். கூடிய சீக்கிரம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்து விடும். உங்க டீச்சரின் விஷயம் என்கிறாயா? அதான் சொன்னேனே, அதை மறந்துவிடு. படிப்பில் கவனத்தைச் செலுத்து.”

மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போல் சாஹிதி தலையை அசைத்தாள்.

அந்த விதமாய் ‘தர்க்கம்’ இருந்த இடத்தில் ‘கர்ம சித்தாந்தம்’ அவள் மனதில் நன்றாய் படிந்து போய்விட்டது.

*******

“சிம்மாசலம்” கூப்பிட்டாள் சாஹிதி. கடைத் தெருவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சிம்மாசலம் திரும்பிப் பார்த்தான்.

“என்ன சின்னம்மா? காரை கொண்டு வரச் சொல்லட்டுமா?”

“வேண்டாம். இந்தக் கடிதத்தை தபாலில் போட்டு விடு. மறந்துவிடாதே.”

“யாருக்கும்மா கடிதம்?” அங்கேயே உட்கார்ந்திருந்த நிர்மலா கேட்டாள்.

“மாமாவுக்குதான் அம்மா.”

‘என்ன எழுதினாய்?” சந்தேகத்துடன் கேட்டாள் நிர்மலா.

சாஹிதி அவளை வியப்புடன் நோக்கினாள். நிர்மலா ஒருநாளும் இப்படி கேட்டது இல்லை. “ஒன்றும் இல்லை அம்மா. கோமளா டீச்சர் பற்றியும், பரமஹம்சா அங்கிளைப் பற்றியும்.”

“அங்கிளிடம் கேட்டாயா?”

“அங்கிளை எதுக்கும்மா கேட்கணும்?”

“என்ன இருந்தாலும் இனி அங்கிளைக் கேட்காமல் எந்த காரியத்தையும் பண்ணக் கூடாதும்மா. அவர் என்ன சொல்லுவாரோ தெரியாது.”

“என்னது? என்னைப் பற்றியா பேசிக் கொண்டு இருக்கீங்க?” பரமஹம்சா வாசல் அருகில் நின்றபடி கேட்டான்.

சாஹிதிக்கு அந்த விஷயம் மட்டும் எப்போதும் வியப்பாகவே இருக்கும். பரமஹம்சா எப்பொழுதும் வர வேண்டிய நேரத்தில் பிரத்யட்சமாகி விடுவான்.

நிர்மலா கடிதத்தைப் பற்றிச் சொன்னாள். பிரமஹம்சாவின் முகம் கம்பீரமாக மாறியது.

‘இப்படி உட்காரு சாஹிதி. சிம்மாசலம்! அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு நீ போய்க்கொள்.”

சிம்மாசலம் போகும் வரையில் அவன் ஒன்றுமே பேசவில்லை. நிர்மலா எழுந்து உள்ளே போய்விட்டாள். பரமஹம்சாவின் முகம் பிரசன்னமாயிற்று.

“பார்த்தாயா சாஹிதி! உங்க மம்மிக்கு என்மீது எவ்வளவு நம்பிக்கை என்று? நான் எந்த முடிவை எடுத்தாலும் மறுக்க மாட்டாள். ஆனால் நீயும் விவரம் தெரிந்தவள். உன் அபிப்பிராயத்தைக் கூட தெரிந்துகொள்ள வேண்டிய தேவை எனக்கு இருக்கு. நான் சொல்வதைக் கேட்டுவிட்டு யோசித்துப் பார்த்துவிட்டு உன் தீர்மானத்தைச் சொல்லணும், சரிதானே?”

‘சொல்லுங்கள் அங்கிள்” என்றாள் சாஹிதி. தான் தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் அப்பொழுதுதான் அவளுக்கு ஏற்பட்டது.

“உன் மனதில் உள்ள உணர்வுகளை, முக்கியமாய் சந்தோஷமான செய்திகளை உன் சிநேகிதிகளுடனோ, உறவினர்களுடனோ பகிர்ந்து கொள்வதில் தவறு இல்லை. அந்த விஷயத்தில் உன்னை கட்டுபடுத்த முயன்றால் அது என் சுயநலம் ஆகி விடும். ஆனால் நான் முதலிலேயே உன்னிடம் சொல்லி விட்டேன். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் தீர்மானத்தை செயல் படுத்துவதற்கு  கொஞ்ச நாள் ஆகும். அது வரையில் இந்த விஷயம் யாருக்கும் தெரிவிக்காமல் இருப்பது தான் நல்லது என்பது என் உத்தேசம். காரணங்கள் இரண்டு. ஒன்று நான் வாங்கிக் கொள்ளப் போகும் விவாகரத்துக்கும் இந்தக் கல்யாணத்திற்கும் சம்பந்தம் இருப்பதாய் யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது. இரண்டாவதும், மிக முக்கியமானதும் என்னவென்றால் உங்க மாமா முதலியவர்கள் கிராமத்து ஆசாமிகள். மனதளவில் நாம் வளர்ந்தது போல் அவர்கள் வளரவில்லை. அவர்கள் இந்த விஷயத்தில் குறிக்கிட்டாலும் குறிக்கிடலாம். அதனால் இந்த விஷயத்தைத் தற்போதைக்கு ரகசியமாகவே வைத்துக் கொண்டு, திருமணம் ஆனதும் எல்லோருக்கும் சொல்லுவது நல்லது என்பது என் உத்தேசம். அதற்குப் பிறகு அவர்கள் என்ன சொன்னாலும் நாம் பொருட்படுத்த வேண்டியது இல்லை. இது என் ஒருத்தனின் அபிப்பிராயம்தான் . நீயும் யோசித்துப் பார்.”

ஒவ்வொரு விஷயத்தையும் தன் சட்டத்திற்குள் அடக்கி தர்க்க ரீதியாக சொல்லுவது பரமஹம்சாவுக்குக் கடவுள் தந்த வரம். அவன் வாதத்தில் உண்மை இருப்பது புரிந்தது. மறுபேச்சு பேசாமல் கடிதத்தை வாங்கிச் சுக்கு நூறாக கிழித்தாள்.

“சாரி அங்கிள். நான் செய்தது தவறுதான். யோசித்துப் பார்க்காமல் எழுதிவிட்டேன். நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான். எனக்கு அந்த யோசனையே வரவில்லை” என்றாள் மன்னிப்பு கேட்பது போல்.

‘வெரிகுட்! உன்னிடம் இந்த மாதிரியான எண்ணம்தான் எனக்கு வேண்டியது. போய் படிம்மா. பரீட்சை நெருங்கி விட்டது. நன்றாகப் படிக்கணும்.”

‘சரி அங்கிள்.” எழுந்து உள்ளே போய்விட்டாள். பரமஹம்சா நிர்மலாவின் அறைக்குள் போனான். கதவுகள் சாத்திக் கொண்டன. அந்த விஷயத்தைக் கவனித்தாலும் சாஹிதி வருத்தப்படவில்லை.

சாஹிதிக்குத் தெரியாத விஷயம் ஒன்றுதான். முதல்நாள் இரவு அவள் கடிதம் எழுதியதை கவனித்த தாய், உடனே அந்த விஷயத்தை பரமஹம்சாவுக்குப் போன் பண்ணி தெரிவித்து விட்டாள் என்றும், அதனால்தான் உடனே அவன் புறப்பட்டு வந்தான் என்றும், அவன் திடீர் விஜயம் ஆச்சரியப்பட வேண்டிய சமாசாரம் இல்லை என்றும்.

(தொடரும்)

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -5கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *