அக்னிப்பிரவேசம்-28

This entry is part 29 of 31 in the series 31 மார்ச் 2013

 

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

 yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

gaurikirubanandan“ஜீவனி” காரியாலயம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எந்த வழியும் இல்லாத அனாதைப் பெண்களுக்கு, துன்புறுத்தல் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்ட பெண்களுக்கு அங்கே புகலிடம் கிடைத்து வந்தது. படிப்பறிவு இல்லாத அப்பாவிப் பெண்களுக்குக் கூட அங்கு இடம் உண்டு. அவர்களுக்கு ஏதாவது தொழிலில் பயிற்சி அளித்து, தம் கால்களில் தாம் நிற்கும் வரையிலும் அவர்களைப் போஷித்து வந்தது “ஜீவனி.”

ஜீவனியின் காரியதரிசி பாரதிதேவி. அவளுடைய பிடிவாதம், எடுத்துக்கொள்ளும் சிரமம்.. எதுவாய் இருந்தால் என்ன அந்த நிறுவனம் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டு இருந்தது.

பாரதிதேவிக்கு வயது அறுபது எழுபதுக்கு இடையில் இருக்கும்.. நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் வேலை செய்து வந்தாள். ஒரு நிமிடம் கூட வீணாக்க மாட்டாள். அந்த வயதில் அவளுடைய உற்சாகத்தையும், பொறுமையையும் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். அவள் யோசிக்கும் முறை, தரும் ஊக்கத்தைப் பார்க்கும்போது எந்தப் பெண்ணுக்குமே தன் மீதே தனக்கு நம்பிக்கை ஏற்படும்.

பாவனாவை ஜீவனியில் சேர்த்துவிட்டுப் போய்விட்டான் பரத்வாஜ். இந்தக் கதையில் பரத்வாஜ் ஒரு கருவி மட்டும்தான். பாரதிதேவி நடந்ததை எல்லாம், விவரமாய் பாவனாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாள். அதற்குள் தன் எதிர்காலத்தைப் பற்றி திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்த பாவனாவுக்கு, பரத்வாஜ் சொன்னபோது இருந்த தைரியம் நசிந்து போய், அதைரியம் ஏற்படத் தொடங்கியது. ஒரு பெண்ணாக பாரதிதேவி சமாதானப்படுத்தி, பரிவுடன் கேட்ட போது துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது.

“அம்மா! என்னைப் போன்ற வாழ்க்கை பகையாளிக்கும் வேண்டாம். கணவன், தந்தை, தம்பி, தங்கைகள் எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத அனாதையாகிவிட்டேன் இப்போது. என் கதி என்ன?” விசும்பி விசும்பி அழுதாள்.

பாவனா முற்றிலும் தேறிக்கொள்ளும் வரையில் பாரதிதீவி எதுவுமே பேசவில்லை. அப்படிப்பட்ட கதைகளைக் கேட்டுக் கேட்டு மனம் மரத்துப் போய்விட்டது என்பதால் அல்ல. அழுகைதான் அவர்களைச் சமாதானப் படுத்தும் என்பதை அவள் அனுபவத்திலிருந்து புரிந்து கொண்டு இருக்கிறாள்.

“இதோ பார் பாவனா! நீ ரொம்பக் கஷ்டத்தில் இருக்கிறாய் என்பது உண்மைதான்.  ஆனால் ஒரு முறை வெளியே ஹாலில் இருக்கும் பெண்களைப் போய்ப் பார். அவர்களின் கதையைக் கேட்டுத் தெரிந்துகொள். உன்னைவிட துர்பாக்கியசாலிகள் நிறையப்பேர் இருப்பார்கள். உன் கணவனின் பணத்தாசையும், ஆண்மைக்குறைவும் உன்னை எந்த அளவுக்கு துன்புறுத்தியது என்று சொன்னாய். தாம்பத்திய உறவு என்ற பெயரில சிகரெட் நுனியால் சுட்டு, குண்டூசியால் குத்தி சந்தோஷம் அடையும் சாடிஸ்ட் கணவனிடமிருந்து தப்பித்துக்கொண்டு வந்த மனைவியர் இங்கே   இருக்கிறார்கள். தாலி கட்டிய கணவனே பணத்திற்காக மனைவியை வேற்று ஆணிடம் ஒப்படைக்கப் போன பொழுது அருவருத்துக்கொண்டு தப்பித்து வந்த இளம் பெண்களும் இருக்கிறார்கள். சாப்பிடும் போது உன் கணவன் வாய் கூசும் வார்த்தைகளால் உன்னைத் திட்டுவதால் ஒரு கவளம் சோறு கூட உள்ளே இறங்க மாட்டேன் என்கிறது என்றாய். நாள் முழுவதும் வேலை வாங்கிக்கொண்டு ஒரு பிடி சாப்பாடு கூட போடாமல் பட்டினி போட்டு கொலை செய்ய நினைத்த கணவன், மாமனார், மாமியாரிடமிருந்து தப்பித்து வந்த பெண்கள் இருக்கிறார்கள். பணத்திற்காக உன் கணவன் உன்னைக் கொடுமைப் படுத்தினான். உண்மைதான்.

லட்சக்கணக்கில் வரதட்சணை வாங்கிக்கொண்டு, மனைவி மாதந்தோறும் சம்பாதித்துக்கொண்டு வந்தாலும், பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வந்தது போதவில்லை என்று உடல் முழுவதும் சூடுபோட்ட போது, தப்பித்துக்கொண்டு இந்த நிறுவனத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் இருக்கிறார்கள்.

உன் கணவன் ஒரு பெண்ணை ‘தங்கச்சி’ என்று அழைத்துக்கொண்டே நெருக்கமாக பழகுவதாய் சொன்னாய். மனைவியின் கண்ணுக்கு எதிரிலேயே வெற்றுப் பெண்ணைப் படுக்கை அறைக்கு அழைத்துப் போகும் கணவன்மார்கள் இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னால் உன்னுடையது உனக்கே ரொம்ப சின்னதாய்த் தோன்றக்கூடும்.  இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கப் போகும் புனித இந்தியச் சமுதாயத்தில் தற்போதைய பெண்களின் நிலைமை இதுதான். இதற்குக் காரணங்கள் என்னெவென்று ஆராய முயற்சி செய்யாதே. ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். பெண்ணாக இருந்தாலும் சரி. ஆணாக இருந்தாலும் சரி, தன் உரிமைகளையும், சுதந்திரத்தையும் தானே சாதித்துக்கொள்ள வேண்டும்.

தன் கஷ்டங்களையே நினைத்துக்கொண்டு, கவலைப்பட்டுக்கொண்டு, எதிராளியின் இரக்கத்தை மட்டுமே எதிர்பார்த்துக்கொண்டு கழிப்பதால், ஏற்படப்போகும் லாபம் எதுவும் இல்லை என்று தெரிந்து கொள்ளணும். இராமர் பிறந்த இந்தத் திருநாட்டில் பெரும்பாலான பெண்களுக்குத் திருமணமே ஒரு அக்னிப் பிரவேசம்தான் அம்மா!”

*******

பதினைந்து நாட்கள் கடந்தன. பாவனா அந்த இல்லத்தில் இருந்த பெண்கள் எல்லோரைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொண்டாள். பல விதமான பிரச்சனைகள். கண்ணால் கண்டும் காதால் கேட்டும் இராத கஷ்டங்கள். அவளுக்கு இருந்த சொற்பமான படிப்பு அறிவு கூட அவர்களுக்கு இருக்கவில்லை. கூடைப் பின்னுதல், தையல் கற்றுக் கொள்வது, பூ வேலை செய்வது போன்ற வேலைகளை கற்றுக் கொண்டு வருகிறார்கள். தம் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்ற துணிச்சலை மேற்கொண்டு, கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

பாவனாவுக்கு எந்தத் தொழிலைக் கற்றுக் கொள்வது என்று முதலில் புரியவில்லை. பள்ளிக்கூடத்தில் தையல், பூவேலை முதலியவற்றைக் கற்றுக் கொண்டிருந்ததாள். ஆனால் அதையே வாழ்க்கைக்கு ஆதாரமாக ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் இல்லை. அவள் பிரச்சனையை பாரதிதேவி தீர்த்து வைத்தாள்.

ஜீவனி போன்ற நிறுவனங்களில் பெண்களால் தயாரிக்கப் பட்ட பொருட்களை விற்பதற்கு பெண்கள் முன்னேற்ற நிறுவனம் ஒன்று நடத்தி வந்த ஷோரூம் ஒன்றில் பாவனாவுக்கு வேலை கிடைத்தது. அவள் படித்திருந்ததால் கணக்குகளை எழுதும் வேலையைக் கூட அவளிடமே ஒப்படைத்தார்கள்.

முதல் நாள் வேலைக்குப் புறப்படும்போது பாவனை மிகவும் பயந்தாள். வேலைக்குப் போக வேண்டியிருக்கும் என்று கனவிலும் எதிர்பார்த்து இராதது ஒரு காரணம். நான்கு பேருடன் எப்படிப் பேசுவது? எப்படி நடந்து கொள்வது என்று தெரியாதது இன்னொரு காரணம். முதல் நாள் வாடிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்கள் சொல்லக்கூடத் தயங்கினாள்.

அவளுடன் மேலும் இரண்டு சேல்ஸ் பெண்களும், கேஷ் கௌண்டர் கிளார்க்கும் வேலை செய்து வந்தார்கள். மாலையில் கணக்கைக் கூட்டிப் பார்த்துவிட்டு, கேஷை ஒப்படைத்துவிட்டு திருப்தியோடு வெளியே வந்தாள் பாவனா. கொஞ்சம் பழகிவிட்டால் இந்த வேலை செய்வது அவ்வளவு கஷ்டம் இல்லை. அந்தத் தன்னம்பிக்கையுடன் அவள் காற்றில் மிதப்பது போல் உற்சாகத்துடன் ஜீவனிக்குத் திரும்பி வந்தாள். கேட்டிற்கு அருகிலேயே சக சேல்ஸ் பெண் கமலா தென்பட்டாள்.

“உங்க அப்பாவாம். வந்து ரொம்ப நேரமாகிறது. உனக்காக விசிட்டர்ஸ் ரூமில் காத்துக்கொண்டு இருக்கிறார்” என்றாள்.

பாவனாவின் உற்சாகம் முழுவதும் வற்றிவிட்டது. தைரியத்தைக் கூட்டிக்கொண்டு விசிட்டர்களின் அறையை நோக்கி நடந்தாள். விஸ்வத்தின் முகம் கம்பீரமாய் இருந்தது. பாவனா மெதுவாக எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். விஸ்வம் அவளைக் கூர்ந்து நோக்கினான். பாவனா தலையக் குனிந்து கொள்ளவில்லை. “எப்போ வந்தீங்க அப்பா?” என்று கேட்டாள்.

“இன்று காலையில்தான். ஒரு வாரத்திற்கு முன்னாடியே வந்திருக்கணும். மாப்பிள்ளைக்குப் போன் பண்ணினால், “ஊருக்குப் போகிறோம், வராதீங்க” என்று சொன்னான். விஷயம் இது என்று எனக்குத் தெரியவே தெரியாது. ஏன் இந்தக் காரியம் செய்தாய் பாவனா?” அவன் குரலில் வருத்தமும், கோபமும் தோய்ந்திருந்தன.

பாவனாவுக்குச் சிரிப்பும் வந்தது. துக்கமும் வந்தது. ‘ஏன் இந்தக் காரியம் செய்தாய்?’ என்று கேட்டதிலேயே தவறு செய்துவிட்டாய் என்ற குற்றச்சாட்டும் தெரிகிறது.

“என்ன செய்துவிட்டேன் அப்பா? நடந்தது என்ன என்று அந்த பாஸ்கர் ராமமூர்த்தி உங்களிடம் எதைச் சொன்னான்?” என்று கேட்டாள். பாஸ்கர் ராமமூர்த்தி என்று குறிப்பிட்டதில் தொனித்த ஏளனம் விஸ்வத்தின் கவனத்திலிருந்து தப்பவில்லை.

“என்ன நடந்தது என்று நீ இங்கே இருப்பதைப் பார்த்தாலே புரிந்துப் போகிறதே. பிரச்சனைகள் எல்லோர் வீட்டிலும் இருக்கத்தான் செய்யும்.  அனுசரித்துக் கொண்டுதான் போகணும். நீ என்னிடம் வந்திருக்க வேண்டும். இந்த மாதிரி நடக்கிறது என்று எனக்கு ஒரு கடிதம் கூட போடவில்லை.”

“எழுதி இருந்தால் என்ன செய்து இருப்பீங்க அப்பா?”

“மாப்பிள்ளையைக் கூப்பிட்டு சுமுகமாய் பேசியிருப்பேன். தவறு அவன் பேரில் இருந்தால் கண்டித்து இருப்பேன்.”

“அப்படி என்றால், அடுத்த முறை கிரோசினை ஊற்றினால் முழுவதுமாய் எரிந்து போகும்படிப் பார்த்துக்கொள். பாதியில் அந்த மாதிரி தெருவில் ஒடும்படியாக பண்ணாதே என்று சொல்வீங்களா? பெட்ரோலாக இருந்தால் இன்னும் சுலபம் என்று யோசனை வழங்கி இருப்பீங்களா?”

“பாவனா!” விஸ்வம் கத்தினான். “அந்த நிலைமையில் எந்த ஆணாக இருந்தாலும் அப்படித்தான் ஆவேசப்படுவான். அவன் பண்ணியது தவறுதான். ஆனால் அவனுக்கு அவ்வளவு ஆவேசம்….”

விஸ்வத்தின் வார்த்தைகள் இன்னும் முடியக்கூட இல்லை. ”அப்படி என்றால் அவன் சொன்னதை நீங்ககூட நம்பறீங்களா அப்பா? அவனுக்கு என்னை இரண்டு வருடங்களாகத்தான் தெரியும். ஆனால் உங்களுக்கு? என்னை இருபது வருடங்களாகத் தெரியும். ஆனாலும் நீங்க என்னை நம்பவில்லை.” வேதனையுடன் சிரித்தாள்.

“தவறாகப் புரிந்து கொண்டு விட்டாய். அவனும் நமப்வில்லை. ஆனால் நாலுபேருக்கு முன்னால் ராமநாதன் அப்படிச் சொன்னதைப் பார்த்தால் எந்த ஆணுக்குத்தான் ரத்தம் கொதிக்காது? ஆனாலும் மருமகன் நடந்ததற்கு ரொம்ப வருத்தப்படுகிறான்.”

‘மன்னித்துக் கொள்ளுங்கள் அப்பா. என்னால் வர முடியாது“ என்றாள் பணிவு நிரம்பிய குரலில்.

“பாவனா!” கோபமாய்க் கத்தினான் விஸ்வம். “முதலில் உன்னைப் பார்த்தால் நான் வளர்த்த மகள்  பாவனாதானா என்று சந்தேகமாய் இருக்கு. சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கே எல்லோரும் இதுபோல் குடும்பத்தைக் கலைத்துவிட்டு வீட்டை விட்டுப் போய் விடுவார்களா? ஒரு ஒழுங்குமுறை, கட்டுப்பாடு கிடையாதா? முதலில் உன்னிடம் என்ன இருக்கிறது? படிப்பா? சொத்தா? என்ன நினைத்துக்கொண்டு வெளியே வந்தாய்?”

“மனத்துணிச்சல் அப்பா” மெதுவாய்ச் சொன்னாள் பாவனா.”சில நாட்களுக்கு முன்னால் ஒரு நள்ளிரவில் ஒரு பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஒரு பெண்ணைப் பார்த்தேன். கேள்விப்பட்ட பெண்ணின் பெயர் சாஹிதி. பார்த்த பெண்ணின் பெயர் ரஜனி. நீங்க கேட்டீங்களே, உனக்கு என்ன இருக்கு சொத்தா, படிப்பா என்று? அந்த இரண்டும் இருந்தும் கூட பிரச்சினையிலிருந்து வெளியே வரமுடியவில்லை சாஹிதியால். விதி எழுதி வைத்திருக்கும் துரதிர்ஷ்ட ரேகையுடன், பிரெயின் ட்யூமரால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ரஜனி என்ற பெண் கடவுளுக்கே சவால் விடுகிறாள். ‘கடவுளே! நீ என் வாழ்க்கையை வேண்டுமானால் குறுக்கிவிடலாம். ஆனால் என் உதட்டில் புன்னகையை உன்னால் சிதறடித்து விட முடியுமா?’ என்று. இரண்டு பேருமே இரண்டு வெவ்வேறு வழிகளில் எனக்கு வாழ்க்கையைக் காட்டினார்கள் அப்பா.”

விஸ்வம் திக்பிரமை அடைந்தவனாய் மகளைப் பார்த்தான். பாவனா தலை குனிந்தபடியே தொடர்ந்தாள். ‘நீங்க சொன்னது கூட உண்மைதான். எல்லோருமே குடும்பத்தை விட்டுவிட்டு இப்படித்தான் தெருவுக்கு வந்து விடுவார்களா என்று? இல்லை.. வராமல் போகலாம். குடும்பத்தில் அவர்களுக்கு எந்த விதத்திலேயாவது சுகம் இருந்திருக்கலாம். அல்லது குழந்தைகளின் நல்வாழ்வை எண்ணி, பயந்து கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். நான் இன்றைக்குத்தான் வேலையில் சேர்ந்திருக்கிறேன். சம்பளம் ரொம்ப குறைவு. இரண்டு வேளை சாப்பாட்டுக்கு கூட போதும் போதாமலும் இருக்கலாம். ஆனால் எதற்குமே ஏதோ ஒரு இடத்தில்  ‘தொடக்கம்’ என்று இருந்து ஆகணும் இல்லையா?”

‘சரி, போகட்டும். கொஞ்ச நாளைக்கு வந்து நம் வீட்டில் இரும்மா. உன் மனம் தேறிய பிறகு போகலாம்.”

“மனம் தேறாது அப்பா. ஆவேசம் தணிந்துவிடும். நீங்கள் எல்லோரும் என்னைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் அதைரியத்தை நம் பண்பாட்டுடன் கலந்து எனக்குப் புகட்டுவீங்க. திரும்பவும் சாதாரணப் பெண்ணாய் மாறும் வரைக்கும் விடமாட்டீங்க. வேண்டாம் அப்பா. என்னை இப்படியே விட்டு விடுங்கள்.”

“என்னால் ஏனோ உன் வாதத்தை ஏற்றுகொள்ள முடியவில்லை பாவனா. அவனுக்கென்ன வந்தது? இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்வான். நிம்மதியாய் குடும்பம் நடத்துவான். உன் விஷயம் அப்படி இல்லையே? உலகத்தில் தனியாய் வாழ்கிற பெண்ணின் வாழ்க்கை எவ்வளவு துர்லபம் என்று எனக்குத் தெரியும். அதோடு நாளைக்கு உன் தங்கைகளின் கல்யாணத்தைப் பற்றியும் யோசித்துப் பார்க்கணும் நீ. இப்படி ஓடிப் போகிற குணம் அவர்கள் ரத்தத்திலேயே இருக்கு என்று யாரும் நினைத்து விடக் கூடாது.”

பாவனாவின் முகம் களையிழந்தது பெரும் முயற்சி செய்து ஆவேசத்தை அடக்கிகொண்டாள். “அப்பா! நீங்க எனக்குப் படிப்பு சொல்லித் தரவில்லை. அப்பாவிப் பெண்ணாய் வளர்தீங்க. பெண்பார்க்க வந்தவர்கள் ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி பரிசோதிதாலும் புன்னகை மாறாமல் பொறுத்துக் கொள்கிற பொறுமையைப் பழக்கினீங்க. கல்யாணம் பண்ணுவதற்கு முன்னால் உங்க மாப்பிள்ளை ஆண்மகன் தானா என்று ஏன் பரிசோதிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அதை விட்டுத் தள்ளுங்கள். தங்கைகளின் கல்யாணம் பிரச்சனையாகிவிடும் என்று சொல்றீங்க. நிலத்தை விற்றுவிடுங்கள். எனக்காக அடமானம் வைத்தீங்க இல்லையா? இரண்டாவது மகளுக்காக் அதை விற்று விடுங்கள். தம்பிக்கு வரதட்சணை வாங்கிக் கொள்ளுங்கள். பணம் குணத்தைக் காப்பாற்றும். நம் குடும்பத்தைப் பற்றி அப்போ யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். நம் பண்பாடு கூட குறுக்கே நிற்காது.”

“நீ பாவனாதானா?” சந்தேகத்துடன் கேட்டான் விஸ்வம்.

அவள் வேதனையுடன் சிரித்தாள். “இல்லை அப்பா! வாழக் காற்றுக்கொண்ட பெண். உங்கள் கண்ணோட்டத்தில் ஓடுகாலி!”

விஸ்வம் எழுந்துகொண்டான். “போய் வருகிறேன்” என்றான். வாசல் வரைக்கும் போனவன் நின்று “என் மகள் இப்படிப் பண்ணுவாள் என்றும், என்னோடு கூட இப்படிப் பேசுவாள் என்றும் கனவில் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. இனிமேல் எனக்கு மூத்த மகள் இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்.”

அவள் கைகளைக் கூப்பி “நல்லது அப்பா” என்றாள், கண்களின்  ஈரம் தந்தை கண்ணில் படாமல் இருக்க முகத்தைத் திருப்பிக்கொண்டே.

(தொடரும்)

 

 

 

 

 

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4விஸ்வரூபம் – பறவைகளை நஞ்சு தாங்கிகளாக்கும் மனித அவலங்கள்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *