அக்னிப்பிரவேசம்-31

This entry is part 33 of 0 in the series 21 ஏப்ரல் 2013

gaurikirubanandan

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

செக்ரடேரியட்டில் முதலமைச்சருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள் பாரதிதேவி. சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களாக அவர்களுடைய சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது.

“மாநில அரசு எல்லைக்கு உட்பட்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பரிகாரம் காண்ப்தற்கு அது உதவியாய் இருக்கும். அதன் அதிகாரிக்கு ஜட்ஜ் ஹோதா இருக்கும். இதெல்லாம் நான் வரப் போகும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு செய்யவில்லை. எத்தனையோ அனாதைகளையும், துரதிர்ஷ்டசாலிகளையும் மனதில் வைத்துக்கொண்டு அரசாங்கம் இந்தக் காரியத்தைத் தொடங்கி இருக்கிறது” என்றார் முதலமைச்சர்.

அதில் போய் எதுவும் இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு கொஞ்சத்தில் கொஞ்சமாவது பண்ணவேண்டும் என்று நோக்கமுடைய முதலமைச்சர் அவர்.

அவருக்குப் பக்கத்திலேயே கவர்னரும் இருந்தார். இருவரையும் பார்த்துவிட்டு பாரதிதேவி சொன்னாள். “ரொம்ப நல்ல உத்தேசம் சார். பெண்கள் காவல் நிலையத்திற்குப் போவதற்கும், புகார் கொடுப்பதற்கும் பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிறுவனம் ஏதாவது இருந்தால் உண்மையிலேயே நன்றாக இருக்கும்.”

“அந்த நிறுவனத்திற்கு உங்களைச் சேர்மனாய் போடலாம் என்று இருக்கிறேன் மிசெஸ் பாரதிதேவி.”

அவள் தடுமாறினாள். “நானா?” என்றாள்.

“ஆமாம். நீங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.”

“ஜீவனியின் வேலைகளே எனக்கு அதிகமாய் இருக்கு. நீங்கள் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் ஜீவனிக்கு அநியாயம் பண்ணுவது போல் ஆகிவிடும் என்று பயமாய் இருக்கு. திடீரென்று அரசாங்க வேலை என்றால் அதற்குப் பிறகு பைல்களைப் புரட்டிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்க வேண்டியதுதான். நான் இப்படிச் சொல்கிறேன் என்று தவறாக நினைக்காதீங்க.”

“என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்தப் பதவிக்கு பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தொர்நுகிறது.”

“என்னிடம் பாவனா ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒருவிதமான துணிச்சலும், கண்ணுக்குத்தெரியாத புத்திசாலித்தனமும் இருக்கு. ரொம்ப கஷ்டன்களில் இருந்து தைரியமாக வெளியே வந்திருக்கிறவள். இந்தப் பதவிக்கு அந்தப் பெண்ணைப் போட்டால் நன்றாக இருக்கும் என்பது என் உத்தேசம்.”

“என்ன வயது இருக்கும்?”

“இருபத்தைந்து.”

முதலமைச்சர் புரியாமல் “இந்தப் பதவிக்கு அத்தனைச் சின்னப் பெண்ணா?’ என்றார்.

“புதிய பிரதமர் வந்ததும் நாடாளுமன்றத்தில் கூட அமைச்சர்களின் சராசரி வயது குறைந்துவிட்டது” என்றார் கவர்னர்.

“அந்தப் பெண் எழுதிய கட்டுரைகள் கூட ப்ரசுரமாய் இருக்கின்றன. இந்த ஆண்டு சாகித்ய அகாடமி பரிசுக்குக்கு அந்தப் புத்தகம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.”

“என்ன படித்திருக்கிறாள்? அவளுடைய பின்னணி என்ன?”

“பின்னணி என்று எதுவுமே இல்லை. வீட்டை விட்டு வெளியேறிய போது பத்தாம் வகுப்புதான் படித்திருந்தாள். இப்பொழுது பி.ஏ. பைனல் எழுதியிருக்கிறாள்.”

முதலமைச்சர் உடனே பதில் சொல்லவில்லை. அவருக்கு பாரதிதேவியின் பதில் ருசிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து “இதில் நிறைய பிரச்சனைகள் இருக்கு. எந்த அனுபவமும் இல்லாத நபரை இந்த போஸ்டில் போட்டால் நாளைக்கு அசெம்பிளியில் பிரச்சனை எழும்பலாம். உண்மையில் எனக்கு அந்தப் பெண் யார் என்றே தெரியாவிட்டாலும்,, நான் உறவினர்களிடம் அபிமானம் கொண்டு இந்த காரியத்தைப் பண்ணினேன் என்று எதிர்கட்சிக்காரர்கள் பிரசாரம் பண்ணுவார்கள்.”

கட்சியின் காரியதரிசி சிரித்தார். “எதிர்கட்சிக்கு எந்தச் சின்ன விஷயம் கிடைத்தாலும் பெரிசு பண்ணி வெளியே கொண்டு வந்து விடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.”

“ஏன்?”

‘இதைத் தவிர பிரச்சனையைக் கிளப்புவதற்கு அவர்களுக்கு வேறு பெரிய விஷயம் எதுவும் இல்லை என்பதால்.”

அந்த நகைச்சுவைக்கு எல்லோரும் சிரித்தார்கள், முதலமைச்சரைத் தவிர. வரப்போகும் தேர்தலைப் பற்றி அவருக்கு டென்ஷனாகவே இருந்தது. எதிர்க்கட்சித்தலைவர் சிதம்பர சுவாமி கூட லேசுபட்ட ஆள் இல்லை. ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்தவர். ஐந்தாண்டுகளுக்கு முன்னால் தம் கட்சி பெருத்த மேஜாரிட்டியுடன் வெற்றிபெற்ற விஷயம் உண்மைதான். ஆனால் இந்த முறை அவ்வளவு வராமல் போகலாம். எதிர்க்கட்சித் தலைவருக்கு அவகாசம் கிடைத்துவிட்டால், சும்மாயிருக்க மாட்டார். இதுபோன்ற சமயத்தில் அந்தப் பெண்ணை அத்தனை பெரிய போஸ்டில் போடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை.

“சரி, யோசித்து செய்வோம்” என்றார் சுருக்கமாக. அவருடைய எண்ணம் பாரதிதேவிக்குப் புரிந்துவிட்டது. எழுந்து கைகளைக் கூப்பி “போய் வருகிறேன்” என்றாள்.

“இந்தப் பதவியை நீங்க ஏற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நீங்க சொன்னதும் உண்மைதான். இந்த அரசாங்க கும்பலில் மாட்டிக்கொண்டால், இப்போ செய்துக்கொண்டிருக்கிற தொண்டு கூட உங்களால் பண்ண முடியாது.”

அவர் சிரித்துவிட்டு வெளியே வந்துவிட்டாள்.

பாரதிதேவி ஜீவனி காரியாலயத்திற்கு திரும்பிய பொது பிற்பகல் ஒருமணியாகி விட்டிருந்தது. அவள் வந்த போது பாவனா அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் ஒரே எட்டில் அருகில் வந்தாள். பாவனியின் கையில் நாளேடு இருந்தது.

“நான்…. நான்..” உணர்ச்சிப் பெருக்கால் பாவனாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வரவில்லை.

‘என்னவாச்சு பாவனா?”

“நம் பாவனா யூனிவேர்சிட்டியிலேயே முதலாவதாக பாஸ் பண்ணியிருக்கிறாள்.” பக்கத்தில் இருந்த லட்சுமி சொன்னாள்.

“நிஜமாகவா?’ வியந்துபோய் கேட்டாள் பாரதிதேவி. கண்ணீருடன் தலையாட்டிக்கொண்டே, சந்தோஷம் தாங்காமல் கைகளில் முகம் புதைத்துக்கொண்டு அழுதுவிட்டாள் பாவனா.

*******

“உன்ன வளையலைக் கொடு” என்றான் ராமநாதன்.

“எதுக்கு?” வியப்புடன் கேட்டாள் சாஹித்தி.

“ஒருநாள் உன் ஞாபகமாய் வளையலை என்னிடம் வைத்துக்கொள்கிறேன்” என்று உரிமையுடன் அவள் கையிலிருந்த வளையலை உருவி எடுத்து ஜெபியில் வைத்துக்கொண்டான்.

அவளுக்கு இதெல்லாம் ஆச்சரியமாகவும், உத்வேகமாகவும் இருந்தது.

அவனே மேலும் சொன்னான் .”நான் ராத்திரி இப்படியே தூங்குகிறேன். இந்த வளையல்களின் ஓசை என் இதயத்திற்கு அருகில் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். என் வாழ்க்கைக்கு இந்த ஒரு இரவே போதும்.” அவன் கண்களில் ஈரம் பளபளத்தது. ஜெயிலிருந்து பேனாவை எடுத்துத் தந்து “என் கையில் எழுத மாட்டாயா?” என்றான்.

“என்ன எழுதுவது?” கேட்டாள் புரியாமல்.

“அதைக்கூட நான்தான் சொல்ல வேண்டுமா? உன் வயதில் பசங்க எப்படி இருக்கணும் தெரியுமா? சின்ன ஹின்ட் கொடுத்தால் போதும், அடுத்தடுத்து பின்னிக்கொண்டு போக வேண்டும்.”

அவளுக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. அவன் உள்ளங்கையில் ராமநாதன் என்று எழுதினாள்.

“இவ்வளவுதானா?” என்றான். “உன் பெயரையும் எழுது.”

அவள் எழுதினாள். ‘ராமநாதன் – சாஹிதி’

“ஜோடியாய் நம் இருவரின் பெயர்களும் நன்றாக இருக்கு இல்லையா? கடவுள் நம்மைப் போன்ற தனியர்களை இந்த விதமாய்த்தான் ஒன்று செர்த்துவைப்பார் போலும். நீ மட்டும் அறிமுகம் ஆகாமல் இருந்திருந்தால் படிப்பும் பண்பும் இல்லாத என் மனைவியுடன் சமாளிக்க முடியாமல் இந்நேரம் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.”

சாஹிதிக்கு ஏனோ துக்கம் பொங்கி வந்தது. தந்தை இறந்து போன பிறகு இந்த அளவுக்கு ஆதரவு கூட அவள் யாரிடமிருந்து பெற்றது இல்லை. இவ்வளவு அன்பாய் அவளுடன் பேசியவர்கள் யாருமில்லை. அவள் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு ஆறுதல் சொன்னவர்கள் எவரும் இல்லை.

அவன் அவள் கையைத் தன கையில் எடுத்துக் கொண்டு ‘அப்போ நான் எழுத வேண்டாமா?” என்றான்.

“என்ன எழுதுவீங்க?”

அவன் ஒரு வினாடி யோசித்துவிட்டு “கையில் இடம் போதாது” என்று காகிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எழுதினான்.

“நாம் முதல் தடவை சந்தித்துக்கொண்ட போது இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டோம். இரண்டாவது தடவை மூன்று மணிநேரம் பேசிக்கொண்டோம். நம் இருபத்தி இரண்டாவது சந்திப்பிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“நன்றாக இருக்கு” என்றால் சாஹிதி. ராமநாதன் பெருமையுடன் சிரித்தான். உண்மையில் அது அவன் சொந்தமாக எழுதவில்லை. ஏதோ புத்தகத்தில் படித்தது. அந்த புத்தகத்தை எழுதியது பரத்வாஜ் ஆக இருப்பது யதேச்சையாக நிகழ்ந்தது.

அவள் கைகடியாரத்தைப் பார்த்துகொண்டு “அப்போ நான் கிளம்புகிறேன். அம்மா கொபித்துகொள்வாள்.” என்றாள்.

அவன் அவள் கேசங்களை விரல்களால் அளைந்தான். கூந்தலைக் கலைப்பது, இரு கன்னங்களிலும் தட்டிக் கொடுப்பது, திரும்பத்திரும்ப கைகளைப் பிடித்துக் கொள்வது, இதெல்லாம் அவனுடைய பழக்கங்கள்.

அவள் எழுந்துகொண்டாள். அவன் சிறிய பாக்கெட் ஒன்றை அவளிடம் கொடுத்து “உன்னோடு ஒப்பிட்டால் நான் ரொம்ப ஏழைதான். ஏதோ என்னால் முடிந்தது” என்றான்.

“என்ன இது?’ சங்கடத்துடன் கேட்டாள். இதெல்லாம் ஏதோ போல் இருந்தாலும் மனதில் சந்தோஷம். ஆனால் அது பரிசு கிடைப்பதால் வந்த சந்தோஷம் இல்லை. தன்னையும் ஒருவன் பொருட்படுத்துகிறான் என்ற உணர்வால் வந்த ஆனந்தம் அது.

அவள் கிளம்ப முற்பட்ட போது “நான் இன்னொரு வாக்கியம் எழுதட்டுமா?’ என்று கேட்டான்.

“எழுதுங்கள்.”

“கையில் இடம் போதாது., முதுகுப் பக்கம் எழுதுகிறேன். வீட்டுக்குப் போனதும் கண்ணாடியில் பார்த்துக்கொள்.”

“மைகாட்!” என்று கத்திவிட்டாள். ஐந்து நிமிடங்கள் கெஞ்சிய பிறகு ஒப்புக்கொண்டாள். அவள் திரும்பி நின்று கொண்டாள். ப்ளவுசுக்கு கீழே முதுகுப்புறம் எழுதத் தொடங்கினான்.

அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டுவது போல் இருந்தது. “இன்னும் எத்தனை நேரம் ஆகும்?”

“முடிந்துவிட்டது.”

இருவரும் கதவிற்கு அருகில் வந்து கொண்டிருந்த போது அவன் அவளைச் சட்டென்று தடுத்து நிறுத்தினான்.

“ஏன்?’ என்றாள் அவள்.

“ஒரு நிமிஷம் இரு. அவன் போகட்டும்.” தெருவில் போய்க் கொண்டிருந்த ஆளைச் சுட்டிக் காட்டினான்.

“யார் அது?”

“ஒரு காலத்தில் எங்க வீட்டுக்கு எதிரே இருந்தான். பாஸ்கர் ராமமூர்த்தி என்று பெயர். பாவம் அவன்! மனைவி யாருடனோ ஓடிவிட்டாள். அவள் குணம் நல்லது இல்லை. அவளைப் பார்த்தால் அந்த மாதிரி என்று நினைக்கவே முடியாது. அவ்வளவு பதிவிசாக இருப்பாள். சரி, நீ போகலாம்.”

சாஹிதி வீட்டுக்கு வந்தாள். இன்னும் முதுகில் பேனா அசைந்து கொண்டிருப்பது போலவே இருந்தது. கதவையெல்லாம் சாத்திவிட்டு, கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். பின்பக்கம் எழுத்துக்கள் வலம் இடமாக தென்பட்டதால் கூட்டிப் படிக்க வேண்டியிருந்தது.

“நம் முதல் சாந்திப்பில் கால்கட்டை விரலைப் பார்த்தேன். இரண்டாவது சந்திப்பில் கணுக்காலைப் பார்த்தேன். நம் ஐந்தாவது சந்திப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

அவளுக்கு ஏனோ முன்பு இருந்த சந்தோஷம் இப்பொழுது இல்லை.

*******

ராமநாதன் வீட்டு வழியாகப் போன பாஸ்கர் ராமமூர்த்தி அந்த நேரத்தில் கெஸ்ட் ஹவுசுக்குப் போய்க் கொண்டிருந்தான். அன்றைக்கு சாரங்கபாணி பார்ட்டி கொடுக்கப் போகிறான். ராமமூர்த்தி பக்கத்திலேயே இருந்து ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருந்தான்.

தந்தையில் தேர்தல் சம்பந்தப்பட்ட வேலைகளில் மூழிகியிருந்த போதிலும் இரவு வந்துவிட்டால் போதும், ரிலாக்ஸ் செய்து கொள்வது சாரங்கபாணியின் பழக்கம். மிக நெருக்கமான நண்பர்கள் என்று மூன்றுபேர் இருந்தார்கள் அவனுக்கு.

நாலுபேரும் சேர்ந்து பார்ட்டியைத் தொடங்கிய போது மணி ஏழாகிவிட்டது . “இவ்வளவு சீக்கிரமாகவா?” என்றார்கள் யாரோ.

“ஆமாம். மறுபடியும் நாளை காலையில் வேலைகள் இருக்கு. தேர்தல் நெருங்கிவிட்டது இல்லையா?”

‘எங்களுக்குக் கூட பார்ட்டி டிக்கெட் வாங்கித் தரக்கூடாதா? எம்.எல்.ஏ. ஆகிவிடுவோம்.” சிரித்துக் கொண்டே கேட்டான் ஒரு நண்பன்.

‘முதலில் எங்க அப்பா ஜெயிக்கட்டும்.”

“கண்டிப்பாய் ஜெயிப்பார். வேண்டுமானால் லட்ச ரூபாய் பந்தயம்.”

“மாஜி முதலமைச்சர் சிதம்பர சுவாமி ஜெயிக்காவிட்டால் வேறு யார் ஜெயிக்கப் போகிறார்கள்?”

‘விட்டுத் தள்ளுங்கப்பா. காலையில் கண்ணைத் திறந்தது முதல் அதே பேச்சு. இப்பவும் அதே டாபிக் எதுக்கு?” என்றான் சாரங்கபாணி.

‘வேறு பேச்சு பேசுவதற்கு இங்கே இன்னொரு ஜாதி இல்லையே? எல்லாமே ஆண்கள்தான்.”

“ஆமாம். ரொம்ப நாளாகிவிட்டது. இன்னிக்கி செலபரேட் பண்ணியாகணும்.”

“ராணி கம்பெனிக்கு ஆள் அனுப்புவோமா? ஜெயலக்ஷ்மி கம்பெனி நல்லா இருக்குமா?”

“அதெல்லாம் பழைய சரக்குடா. யாராவது பிரெஷ் இருந்தால் தவிர பிரயோஜனம் இல்லை.”

“இன்னிக்கு மட்டும் புது சரக்கு கிடைத்துவிட்டால் உங்க அப்பா தேர்தலில் ஜெயித்துவிட்டாற் போல்தான். அதையே நல்ல சகுனம் என்று வைத்துக்கொள்.”

சாரங்கபாணி யோசனையில் ஆழ்ந்தான். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு “ஒரு பெண் இருக்கிறாள். ஆனால் பயந்துவிடுவாளோ என்றுதான்…” என்றான்.

எல்லோரிடமும் ஆர்வம் பெருகியது. “யாரது?” என்று சூழ்ந்துகொண்டார்கள்.

“ஆறு மாதங்களுக்கு முன்னால் அறிமுகம் ஆனாள். அம்மா அப்பா இல்லை. ஆசிரமத்தில் தங்கியிருக்கிறாள்” என்று பாஸ்கர் ராமமூர்த்தியை நோக்கித் திரும்பி “உனக்கு ஜீவனி பெண்கள் ஹாஸ்டலைத் தெரியுமா?’ என்று கேட்டான்.

ராமமூர்த்தி தெரியும் என்பதுபோல் தலையை அசைத்தான்.

“அந்த ஹாஸ்டலில் ஹரிணி என்று ஒரு பெண் இருக்கிறாள். எட்டுமணி வரைக்கும் விசிட்டர்ஸ் போகலாம். நான் இந்த மாதிரி இங்கே இருக்கிறேன் என்று சொல்லு. வருவாள். இவ்வளவு பேர் இருப்பதைச் சொல்லிவிடாதே. பயந்துவிடுவாள். ‘ஏதோ வேலை இருக்கு. ராத்த்ரி வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு வரச் சொல்லு. அவளுக்குப் பழக்கம்தான்.”

பாஸ்கர் ராமமூர்த்தி கிளம்பினான்.

“அவ்வளவு லூஸ் கேரக்டரா?” கேட்டான் ஒருவன்.

“இல்லை. கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நச்சரிக்கிறாள்.”

******

பாஸ்கர் ராமமூர்த்தி தயங்கியபடியே ஜீவனி ஹாஸ்டலுக்கு வந்தான். பாவனா தென்பட்டால் என்ன சொல்லுவது என்பது அவள் சங்கடம்.

வாட்ச்மேனிடம் ஹரிணி வேண்டும் என்றான். இரண்டு நிமிடங்களில் அந்தப் பெண் வந்தாள்.

“உங்களை சாரங்கபாணி அழைத்து வரச் சொன்னார்” என்றான்.

“இந்த நேரத்திலா?” என்றாள். ஓரிரு முறை பாஸ்கர் ராமமூர்த்தியைப் பார்த்திருக்கிறாள் அவள்.

“ஆமாம். ஹாஸ்டலில் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு வரச் சொன்னார். கல்யாண விஷயமாய் பேசணுமாம்.”

அந்தப் பெண் உள்ளே போய் தயாராகி திரும்பி வந்தாள். இருவரும் கேட்டைத் தாண்டிக் கொண்டிருந்த போது பாவனா ரிக்ஷாவில் வந்து இறங்கினாள். இருவரையும் வியப்புடன் பார்த்தாள். ‘எங்கே போகிறாய்?’ என்று ஹரிணியிடம் கேட்போமா என்று நினைத்தவள் நன்றாக இருக்காது என்று விட்டுவிட்டாள். ராமமூர்த்தி முகத்தை மறைத்துக்கொண்டான்.

அவர்கள் இருவரும் போய்விட்டார்கள். இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு பாவனா தோட்டத்தில் உட்கார்ந்து, எதிரே காட்சியளித்த சிவப்பு ரோஜா மொட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மூன்று மாதங்களாய் அந்தச் செடியைப் பார்த்துக்கொண்டே வந்திருக்கிறாள் அவள். அந்தச் சின்ன பதியனைக் கொண்டு வந்து நட்டிருந்தாள் அவள். அது ஒவ்வொரு இலையாய்த் துளிர்த்து, மொட்டுவிடுவதற்கு மூன்று மாதங்கள் ஆயிற்று. பதினைந்து நாட்களுக்கு முன்னால் துளிர் இலைகளுக்கு இடையே மொட்டு விட்டிருந்தது. இன்றைக்கு இதழ்கள் விரியத் தயாராக இருந்தது. ஒரே ஒரு நாள் போதும், முழுவதுமாய் மலருவதற்கு.

இந்த மொட்டுக்கும், தன்னுடைய வாழ்க்கைக்கும் ஒற்றுமை இருக்கிறதோ. திருமணம் ஆகும் வரையில் நாட்கள் எவ்வளவு சலனம் இன்றி கழிந்துக் கொண்டிருந்தன? திருமணம் மற்றும் பிரிவு எல்லாமே ஒரு புயல் வந்து ஓய்ந்தாற்போல் எஞ்சி நின்றுவிட்டது. பி.ஏ. படிப்பு முடிந்துவிட்டது. எம்.ஏ.க்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். இருபது ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை தராத திருப்தியை, இரண்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் பெற முடியாத திருப்தியை இந்த இரண்டு ஆண்டுகளில் பெற்றுவிட்டாள்.

ஒருபக்கம் வேலை, படிப்பு, இன்னொரு பக்கம் ஜீவனிக்காக பாடுபடுவது. ஓய்வுக்கு நேரம் கிடைக்காமல் போனாலும் ஆத்ம திருப்தியைத் தந்து கொண்டிருந்தன. அவள் யோசனையில் மூழ்கியிருந்த போதே…..

“பாவனா!’ என்று கலவரத்துடன் வந்தாள் பாரதிதேவி.

‘என்ன மேடம்?”

“ஹாஸ்டலிலிருந்து செய்தி வந்தது. ஹரிணி தூக்கமாத்திரையை சாப்பிட்டு விட்டாளாம். ஆபத்தான நிலையில் இருக்கிறாளாம். என்ன செய்வது?” கலங்கிப் போனவளாய் கேட்டாள்.

“நீங்க ஹாஸ்டலுக்குப் போங்க. நான் டாக்டருக்குப் போன் பண்ணி என்ன செய்யச் சொல்கிறார் என்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வருகிறேன்.”

பாரதிதேவிக்கு இதனால்தான் பாவனா மீது பிரியம் அதிகம். பதற்றப்பட மாட்டாள். எந்த நிலையிலும் என்ன பண்ண வேண்டும் என்பதை நிதானமாக யோசித்து செயல்படுவாள்.

“சரி, சீக்கிரமாய் வா.” அவள் போய்விட்டாள்.

பாவனா டாக்டரைச் சந்தித்து வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொண்டு ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தாள்.

அந்தப் பெண்ணின் வயிற்றை சுத்தம் செய்துவிட்டு, ஆபத்து நீங்கிவிட்டதாய் டாக்டர் சொல்லும் வரையில் யாருக்குமே மனம் ஒரு நிலையில் இல்லை. இரவு முழுவது பாவனா அவள் அருகிலேயே உட்கார்ந்து இருந்தாள்.

ஒரு வாரமாகவே ஹரிணியிடம் ஏதோ மாறுதலைக் கவனித்து வந்தாள் அவள். எதுவுமே சொல்ல மாட்டாள். அழுதுகொண்டே இருந்தாள். கொஞ்சம் சமாதானம் அடைந்த பிறகு கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்று நினைத்திருந்தாள். அதற்குள் இந்தக் காரியத்தைச் செய்து விட்டாள் அவள்.

தற்கொலை செய்து கொள்வதற்கு எத்தனை துணிச்சல் வேண்டும்? அவ்வளவு துணிச்சல் வர வேண்டும் என்றால் எப்படிப் பட்ட நிலைமை எதிர்பட்டிருக்க வேண்டும்? அந்தப் பெண்ணின் முகத்தில் புனிதம் இருந்தது. அப்பாவித்தனம் நிரம்பியிருந்தது.

காலையில் ஹரிணிக்கு நினைவு திரும்பியதுமே எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகுதான் பாவனா வெளியே வந்தாள். முதலில் ஹரிணி எதுவுமே சொல்ல மறுத்தாள். எத்தனையோ விதமாக தேற்றிய பிறகு வாயைத் திறந்தாள்.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு பாவனா சிலையாகி விட்டாள். இப்படிப்பட்டவை கூட நிகழும் என்று அவள் கனவிலும் ஊகித்திருக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் ஹரிணிக்கு தைரியம் சொன்னாள். மறுபடியும் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யக் கூடாது என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டாள். பாவனா பல விதமாக எடுத்துச் சொன்ன பிறகு ஹரிணி பழைய மனுஷி ஆனாள்.

“நாம் இதை எதிர்த்து நிற்க வேண்டும் ஹரிணி! இந்த போராட்டத்தில் நாம் தோற்றுப் போனாலும் நஷ்டம் இல்லை. உயிரை எடுத்துக் கொள்வதை விட இது ஒன்றும் பெரிய தோல்வி இல்லை. கடைசி மூச்சு இருக்கும் வரையில் போராடு. குறைந்த பட்சம் ஆத்ம திருப்தியாவது எஞ்சியிருக்கும்.”

ஹரிணி தலையை அசைத்தாள். அவளுக்கு இப்பொழுது புதிய தைரியம் வந்துவிட்டது.

(தொடரும்)

author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *