அக்னிப்பிரவேசம் – 4

This entry is part 19 of 23 in the series 7 அக்டோபர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

வகுப்பைச் சேர்ந்தவர்கள் எல்லோறும் பிகினிக் சென்றார்கள். ஏறக்குறைய இருபத்தைந்து மாணவிகளுடன் கம்பார்ட்மென்ட் கலகலப்பாய் இருந்தது. வயதானவர்கள் முதல் நேற்று மீசை முளைத்த விடலைகள் வரையில் அந்தப் பெட்டிதான் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது.

மாணவிகளும் சுதந்திரமாய் குறும்பு சேட்டைகள் செய்துகொண்டும், வம்பு பேசிக்கொண்டும், கண்ணில் பட்ட ஆண்பிள்ளைகளுக்கு பட்டப்பெயரை சூட்டிக் கொண்டும் ரகளை செய்து கொண்டிருந்தார்கள்.

பாவனாவின் பார்வை இரண்டு வரிசைகளைத் தாண்டி ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்திருந்த இளைஞன் மீது பட்டது. அவனுக்கு பதினேழு வயது இருக்கலாம். நிறம் கொஞ்சம் கம்மியாய் இருந்தாலும் பார்க்க லட்சணமாகவே இருந்தான். எவ்வளவு நேரமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தானோ தெரியாது. அவள் தன்னைப் பார்த்ததுமே பார்வையைத் திருப்பிக்கொண்டு ஜன்னல் வழியாய் பார்க்கத் தொடங்கினான். வெளியே மரங்களும், வயல்களும், டெலிபோன் கம்பங்களும் வேகமாய் பின்னுக்குப் போய்க் கொண்டிருந்தன.

பாவனாவும் கொஞ்ச நேரம் வெளியே பார்த்துவிட்டுத் திரும்பவும் அவன் இருக்கையை நோக்கித் திரும்பினாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் இந்த தடவை பார்வையைத் திருப்பிக் கொள்ளாமல் அவளையே பார்க்கத் தொடங்கினான். பெண்களுக்கே உரிய பதற்றத்துடன் அவள் சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

சைலஜாவுடன் பெசிகொண்டிருந்தாள் என்ற பெயரே ஒழிய அவள் பார்வை இடையிடையே அவ்விளைஞனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

ஏறக்குறைய அரைமணி நேரம் இதே விதமாய்க் கழிந்தது. ரயில் ஒரு பெரிய ஸ்டேஷனில் நின்றதால் நிறைய பெண்கள் டிபனுக்காக இறங்கினார்கள். பாவனா தன் இருக்கையிலேயே இருந்துவிட்டாள். பத்திரிகையை கையில் எடுத்துப் புரட்டிக்கொண்டே இடையே அந்தப் பக்கமாய் பார்த்தாள். கடந்த அரைமணி நேரமாய் பரஸ்பரம் பார்த்துக் கொண்ட அறிமுகத்தால் வந்த தைரியத்தால் அவ்விளைஞன் மெல்லச் சிரித்தான்.

அவள் உடனே புத்தகத்திற்குள் தலையைப் புதைத்துக் கொண்டுவிட்டாள். அவள் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. எழுத்துக்கள் மங்கலாய் தென்பட்டன. அவள் தேறிகொள்ள ரொம்ப நேரமாயிற்று.

அவள் அழகு இதழ் விரித்த மல்லிகைப் பூப்போன்றது. பதினாறு வயது இளம் பருவம் அந்த அழகிற்கு கன்னித்தன்மையைச் சேர்த்தது. அவள் கல்லூரிக்குப் போகும் போதோ, லைப்ரரிக்குப் போகும் போதோ பசங்கள் கமெண்ட் அடிப்பது புதிது அல்ல. ஆனால் இந்த மாதிரி ஒரு இளைஞன் அவளை நோக்கி ஆர்வம் போங்க நேசத்துடன், நெருக்கத்துடன் பார்ப்பது இதுதான் முதல் தடவை. ரசனைகள் மிகுந்த தன்னுடைய உலகத்தை மற்றவர்கள் புரிந்துகொள்ள வில்லையே என்ற வருத்தம் அவன் கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவள் அந்த இளைஞனின் பக்கம் பார்க்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டாள். அவன் சிரித்தபோது தலை குனிந்தபடி சிரித்தாள். அதை அவன் கவனித்து விட்டான் என்பதையும் புரிந்து கொண்டாள். காதலில் இன்னும் அனுபவப்படவில்லை என்பதால் அவன் இன்னும் சைகை காட்டும் நிலைக்கோ, காற்றில் முத்தம் கொடுக்கும் நிலைக்கோ வளர்ச்சியடையவில்லை.

ரயில் திரும்பவும் புறப்பட்டது.

அவள் பக்கத்தில் இருந்த சைலஜாவுடன் பேசத் தொடங்கினாள். பேச்சு வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது. ஏனோ காரணம் புரியவில்லை. பேசிக்கொண்டே இடையிடையே அவனைப் பார்ப்பாள். அவனும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் சட்டென்று சைலஜாவின் பக்கம் திரும்பி பேச்சைத் தோடருவாள். இரவு வரையிலும் இதே நிலை தொடர்ந்தது.

பத்துமணியானதும் எல்லோரும் உறங்கி விட்டார்கள். த்ரீ டயர் கம்பார்ட்மெண்ட் அது. அவளுடையது கீழ் பெர்த். விளக்கை அணைத்த அரைமணி நேரத்திற்குள் அவள் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். ஒரு மணியளவில் விழிப்பு வந்த போது அவள் எழுந்து பாத்ரூமை நோக்கிப் போனாள்.

கதவைத் திறந்துகொண்டு திரும்பி வரும்போது அந்த இளைஞன் தென்பட்டான். அவள் இதயத்துடிப்பு நின்று விடும் போல் இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. அவன் நிலைமையும் அது போலவே இருந்தது. பயத்தால் தடுமாறியபடி சிரித்தான். அவளுக்கு அங்கிருந்து போய்விட வேண்டும் போல் இருந்தது. அதிர்ஷ்டவசமாய் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

“உ… உங்க பெயர்?” என்றான்.

அவள் பதில் சொல்லவில்லை. அவனைத் தாண்டிக்கொண்டு தன் இருக்கைக்கு வந்து படுத்துக் கொண்டாள். வெகுநேரம் வரை அவள் இதயம் படபடத்துக் கொண்டே இருந்தது. நள்ளிரவில் மெதுவாய்த் திரும்பி அவன் சீட்டை நோக்கிப் பார்த்தாள். இருட்டில் அவன் விழித்துக்கொண்டு இருக்கிறானா அல்லது தூங்குகிறானா என்று தெரியவில்லை. மேலும் கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு ஒன்றும் புரியாமல் கண்களை மூடிக்கொண்டாள். உறக்கம் அவள் காதலை வெற்றிக் கொண்டு விட்டது.

வீட்டுக்குத் திரும்பி வந்தபிறகுகூட இரண்டு மூன்று முறை அந்த இளைஞன் நினைவுக்கு வந்தான். பிறகு அவனைப் பற்றி முற்றிலும் மறந்து போகவில்லை என்றாலும் அந்த எண்ணம் அவ்வளவாகத் துன்புறுத்தவில்லை.

சுமார் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் ஒரு வாரப்பத்திரிகையைப் படித்தபோது நின்று போயிருந்த அந்த சம்பவத்திற்கு மற்றொரு திருப்பம் வந்தது.

******

“பேனா நட்பு” என்ற தலைப்பில் அந்த வாரப்பத்திரிகை ஒரு பகுதியை நடத்திக் கொண்டிருந்தது. இளைஞர்களும், இளம் பெண்களும் தம் மனப்போராட்டங்களை, முதலில் ஏற்பட்ட காதலை, அந்தரங்க உணர்வுகளை அந்தப் பகுதியில் எழுதி வந்தார்கள்.

லீவு நாட்களில் கண்ணில் தென்பட்ட எல்லா புத்தகங்களையும் அவள் படித்து வந்தாள்.

‘பேனா நட்பு’ பகுதியில் அந்தக் கடிதம் அவள் கவனத்தைக் கவர்ந்தது. அது..

‘என் கனவின் ஒளியான ரயில் சுந்தரிக்கு,

ஏப்ரல் இருபதாம் தேதி என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள். அன்றைக்கு சென்ட்ரல் வரைக்கும் ரயிலில் பயணம் செய்த பெண்களுக்குள் ஒருத்தி  என் மனதில் நின்றுவிட்டாள். நீலப் பாவாடையின் மீது வெண்ணிற தாவணி அணிந்திருந்த அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தேன். அவள் இல்லாவிட்டால் என் வாழ்க்கையே வியர்த்தம் என்று தோன்றுகிறது.

என் அன்பே! என்மேல் இரக்கம் காட்ட மாட்டாயா? உன் முகவரி தெரியாது. எந்த ஊர் என்றும் தெரியாது. கண்களை மூடினாலும் திறந்தாலும் நீ தான் நினைவுக்கு வருகிறாய். என்னை நீ பார்த்த பார்வை என் இதயத்தை ஊடுருவிக்கொண்டு போய்விட்டது. திருமணம் என்று பண்ணிக்கொண்டால் உன்னைத்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அந்த நிமிஷமே முடிவு செய்துவிட்டேன். ரயிலில் எல்லோரும் இறங்கிப் போன பிறகு நீ உட்கார்ந்து இருந்த இருக்கைக்குப் போய் அந்த இடத்தை கையால் ஸ்பர்சித்தேன். அந்த இருக்கைக்கு அடியில் வாடிய முல்லை தென்பட்டது. அது இன்றுவரை என்னிடம் பத்திரமாய் இருக்கிறது. என் காதலியின் தலையிலிருந்து உதிர்ந்த மல்லிகையைக் காட்டிலும் விலை மதிப்பானது இந்த உலகத்தில் வேறு கிடையாது. எங்கெங்கோ இருக்கும் காதலர்களை எல்லாம் ஒன்று சேர்த்து வைக்கும் இந்தப் பத்திரிகைக்கு என் நன்றி. இதனை என் சிநேகிதி படிக்க வேண்டும் என்றும், எனக்கு தன் காதலை தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

என் இதயவீணையில் காதல் தந்திகளை மீட்டிவிட்டு, என்னை தேவதாஸ் ஆக்கிவிட்டு போன சுந்தரியே! உனக்காக வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டே வாழ்நாளைக் கழித்துவிட விரும்பும்

உன் காதலன்,

சுதர்சன், வற்றல்குண்டு,

அவள் வழிகளில் நீர் நிறைந்தது. பல முறை படித்தாள். இரண்டு நாட்கள் வரை அவள் மனதில் அதுவே சுழன்று சுழன்று வந்து கொண்டிருந்தது. அன்றைக்கு சைலஜாவிடமிருந்து கடிதம் வந்தது. அதற்கு பதில் எழுதினாள், வழக்கம் போல் யோகக்ஷேமத்தை தெரிவித்து.

பக்கத்திலேயே பத்திரிக்கை கிடந்தது. இன்னொருமுறை அப்பகுதியைப் படித்தாள். இதயத்தில் காதல் பொங்கி ததும்பத் தொடங்கவே அதற்கு மேல் தாங்க முடியாதவளாய் பேப்பரை எடுத்து நான்கு வரிகளை எழுதினாள்.

சுதர்சன் அவர்களுக்கு,

நீங்கள் என்னை எந்த அளவிற்குக் காதலிக்கிறீர்களோ அதையும் விட அதிகமாய் நான் உங்களைக் காதலிக்கிறேன். ஆனால் எனக்கு தைரியம் இல்லை. என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் நினைவாகவே இருக்கிறேன். தயவுசெய்து என்னை மறந்து விடுங்கள். சுதர்சன்! எனக்காக உங்கள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்ளாதீர்கள். எப்போதாவது விதி கூட்டி வைத்தால் திரும்பவும் சந்திப்போம். திருமணம் பண்ணிக்கொள்ளாமல் இருக்காதீர்கள். என் மீது ஆணை!

அவள் தன் முகவரியை எழுதுவதற்குப் பயந்தாள். கவரின் மீது சுதர்சனின் முகவரியை எழுதினாள்.

அவள் மனதிற்குத் திருப்தியாக இருந்தது. தன்னால் ஒருத்தரின் வாழ்க்கை வீணாகிவிடக் கூடாது. அதுதான் அவள் எண்ணம். ஆனால் அவள் எண்ணம் அந்த விதமாய் நிறைவேறவில்லை. காரணம்…

சிநேகிதிக்கு எழுதிய கவரில் சுதர்சனுக்கு எழுதிய கடிதத்தையும், சுதர்சனின் முகவரி இருந்த கவரில் சைலஜாவுக்கு எழுதிய கடிதத்தையும் தவறுதலாக வைத்துவிட்டு போஸ்ட் பண்ணிவிட்டாள்.

அதற்குப் பிறகு சில நாட்கள் அவளை சுதர்சன் நினைவுகள் துரத்திக் கொண்டிருந்தன. தான் ரயிலில் ஏறியது முதல் இறங்கியது வரைக்கும் நடந்தவற்றை நினைவுப் படுத்திப் பார்த்துக் கொள்வாள். அவள் கதவுக்கு அருகில் நின்ற போது அவன் பெயரைக் கேட்டது, அவள் பயந்து ஓடியது, அவன் தன்னைப் பார்த்துச் சிரித்தபோது தான் வெட்கத்தால் தலை குனிந்து கொண்டது எல்லாவற்றையும் வரிசையாய் நினைவுப் படுத்திக் கொள்வாள்.

இரவு நேரத்தில் கனவுகளும் வரும். அவளும் சுதர்சனும் சேர்ந்து போருட்காட்சிக்குப் போனது போலவும், அங்கே ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே நிறைய கதைகளை பேசியது போலவும் கனவு வந்தது. பத்திரிகையில் வெளிவந்த அவன் கடிதத்தைப் பலமுறை படித்திருப்பாள். ‘Love is nothing but recognition’ என்றார் ஒரு எழுத்தாளர். சாதாரணமான ஒரு பெண்ணை அவன் அடையாளம் கண்டு கொண்டதும், அவ்வளவு தூரத்திற்கு யோசிக்கத் தொடங்கியதும் அபூர்வமான உணர்வு.

அவன் தன் வீட்டிற்கு வந்து தந்தையிடம் தன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதாக கேட்பது போலவும் ஊகித்துக் கொண்டாள். ஆனால் அது நடக்காத காரியம். அவள் தந்தை எவ்வளவு பழமைவாதியோ அவளுக்குத் தெரியும். அதனால்தான் அவள் தன் முகவரியை எழுதவில்லை. பல ஆண்டுகள் கழித்து அதே ரயிலில் மனைவி, குழந்தைகளுடன் அவன் தென்பட்டாற்போலவும், “இதெல்லாம் உன்னால்தான். நீ சொன்னது போல் வேறு வழியில்லாமல் இந்தத் திருமணம் பண்ணிக்கொண்டேன் பாவனா” என்று அவன் சொன்னது போலவும் ஊகித்துக் கொண்டாள்.

ஆனால் இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

இன்னொரு நான்கு நாட்களில் தேர்வின் முடிவுகள் வரும் என்ற போது சைலஜா ஊரிலிருந்து திரும்பி வந்தாள். “இதோ உன்னுடைய கடிதம்” என்று பாவனாவிடம் ஒரு கவரை நீட்டினாள்.

“என்ன கடிதம்?” வியப்புடன் கேட்டாள் பாவனா கையில் வாங்கிக்கொண்டே.

“தவறுதலாய் எனக்கு வந்துவிட்ட, சுதர்சனுக்கு நீ எழுதிய கடிதம்” என்று நடந்ததை எல்லாம் சொன்னாள். பாவனா திகைத்துப் போனவளாய் கேட்டுக்கொண்டாள். இந்த விஷயமெல்லாம் மூன்றாவது நபருக்குத் தெரிந்துவிட்டதில் அவள் மனதில் குற்ற உணர்வு ஏற்பட்டது. ரயிலில் என்ன நடந்தது என்று சொன்னாள். இதுபோன்ற விஷயத்தில் எதிராளிக்கு தன்னுடைய ரகசியம் கொஞ்சம் தெரிந்துவிட்டது என்று சந்தேகம் வந்தாலும் முழுவதுமாக சொல்லிவிடுவது சாதாரணமாக நடப்பதுதான்.

முழுவதுமாக கேட்டுவிட்டு சைலஜா சொன்னாள். “அந்தப் பத்திரிகையில் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் வந்த கடிதத்தை நானும் பார்த்தேன். நீ எந்த நிறத்தில் பாவாடை தாவணி அணிந்து இருந்தாய் என்று எனக்கு நினைவு இல்லை. நம்முள் யாராவது இருக்கலாம் என்று நினைத்தேன். உன் கடிதம் வந்ததும் அது நீ தான் என்று தெரிந்துவிட்டது. பாவனா இவ்வளவு பெரிய மனுஷி ஆகிவிட்டாளா என்று எண்ணிக் கொண்டேன்”

பாவனா பதில் பேசவில்லை. கொஞ்ச நேர நிசப்ததிற்குப் பிறகு “நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன்” என்றாள் சைலஜா.

பாவானா அதிர்ந்து போய் “என்னது?” என்றாள் கலவரத்துடன்.

“ஆமாம். உன் கடிதம் எப்படியும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் முகவரி பத்திரிகையில் இருந்தது. உண்மையில் உன் கடித்தத்தையே இன்னொரு கவருக்குள் வைத்து, தவறுதல் நடந்துவிட்டது என்று தெரிவித்து அனுப்பி இருக்கலாம்.  ஆனால் என் பெயரில் என் முகவரியைத் தந்து எழுதினேன். உடனே அவன் பதிலும் எழுதி விட்டான். இதோ அந்த பதில்” என்று கொடுத்தாள்.

நடுங்கும் விரல்களுடன் பாவனா அதைப் பிரித்துப் பார்த்தாள்.

“அன்புள்ள சைலஜா!

பாலைவனத்தில் திரிந்துக் கொண்டிருக்கும் பயணிக்கு ஊற்று தென்பட்டாற்போல் இருந்தது உங்கள் கடிதம். நாம் இருவரும் ஒன்று சேரவேண்டும் என்று அந்தக் கடவுளே எழுதி வைத்து விட்டாற்போலும். சைலஜா! எவ்வளவு அழகான் பெயர்! உங்கள் கடிதம் வந்த அன்றைக்கே  அந்தப் பெயரை என் நோட்டுப் புத்தகத்தில் ஆயிரம் தடவை எழுதிவிட்டேன். உங்கள் பெயரில் முதல் எழுத்து எஸ். என்னுடைய பெயரும் எஸ் என்ற எழுத்தில்தான் தொடங்குகிறது.  நம்முடையது அபூர்வ தொடர்பு என்பதை இது காட்டுகிறது. உண்மையில் அன்றைக்கு ரயிலில் முதல் பார்வையிலேயே உங்களைக் காதலித்துவிட்டேன் சைலஜா!

சைலூ! என் காதல்ராணி! நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்துகொண்டு இருட்டை வெறித்துப் பார்ப்பது எனக்குப் பிடித்தமானது. எனக்கு நான்கு அக்காக்கள் இருக்கிறார்கள். பெரியவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இரு அண்ணன்கள் இன்னும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனக்குக் கையெழுத்தைக் கொண்டு மனிதர்களின் சுபாவத்தை எடைபோடத் தெரியும். உன்னுடைய சுபாவம் நிர்மலமானது என்று சொல்ல முடியும். எந்த முடிவாய் இருந்தாலும் யோசித்து நிதானமாக செயல்படுவாய். உன் கையெழுத்து போல் எழுதுபவர்கள் நட்புக்கு உரியவர்கள். அப்படிப்பட்ட பெண்ணை காதலிப்பவனுக்கு அதிர்ஷ்டம் கைகூடி வரும்.. உன் கடிதத்தை பிரேம் போட்டு மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. வீட்டில் இருப்பவர்கள் பார்த்து விடுவார்களே என்று பயந்து சும்மா இருக்கிறேன். பதில் எழுதுவாய் இல்லையா?

சுதர்சன்

பாவனா அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு திகைத்துப் போனாள்.

சைலஜா சிரித்துவிட்டு “சாரி” என்றாள்.

“பரவாயில்லை.” அதற்குமேல் என்ன சொல்வதென்று அவளுக்குப் புரியவில்லை.

‘நான் சாரி சொன்னது அதற்கு இல்லை. அவன் கடிதத்தில் நீ என்று எண்ணிக்கொண்டு என் பெயரைப் புகழ்ந்து இருக்கிறான். அந்த இரண்டுமே எனக்கு சம்பந்தப்பட்டவை. அந்த ஆர்வத்தில் அவனுக்குத் திரும்பவும் கடிதம் எழுதினேன்.”

பாவனா மின்சாரம் தாக்கியது போல் அப்படியே நின்றுவிட்டாள். சைலஜா மேலும் தொடர்ந்தாள்.

“அதற்கு அவன் பதில் எழுதினான். எங்கள் இருவருக்கும் இடையே கடிதப் போக்குவரத்து அந்த விதமாய் இந்த இரண்டு மாதங்களாய் தொடர்ந்து கொண்டிருந்தது.”

“பாவம்! அவன் உன்னை நான் என்று நினைத்து விட்டிருப்பான். நீ ரொம்ப தவறு செய்துவிட்டாய் சைலூ! அவனுக்கு அனாவசியமாக ஆசையைக் கற்பித்து விட்டாய். கடிதத்தைக் கொண்டு பார்த்தால் அவன் மிகவும் மென்மையான சுபாவம் படைத்தவன் என்று தெரியவில்லையா? அவ்வளவு நேர்மையான காதலனை அழ வைப்பது நல்லது இல்லை.”

“ஆமாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அதனால்தான் நேரில் சந்தித்தேன், நடந்த தவறைச் சொல்லுவதற்காக.”

“சந்திதாயா?”

“ஆமாம்.”

“என்ன சொன்னான்?” டென்ஷன் தாங்க முடியாமல் கேட்டுவிட்டாள்.

சைலஜா ரொம்ப நிதானமாய் சாதாரணமான குரலில் சொன்னாள். “ரொம்ப மாறிப் போய் விட்டீர்களே என்றான்.”

பாவனாவின் முகத்தில் இரத்தம் வற்றிவிட்டாற்போல் இருந்தது. “நிஜமாகவா?” என்றாள்.

“ஆமாம். எப்பவோ மூன்று மாதகளுக்கு முன்னால் உன்னை ரயிலில் பார்த்துக் காதல் வயபட்டுவிட்டான். திடீரென்று அந்தப் பெயருடன் நான் போய் நின்றதுமே குழம்பிப் போய்விட்டான். ஆனால் உடனே நடந்ததை எல்லாம் சொன்னேன். உனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று சிறிய பொய்யையும் சொன்னேன். கொஞ்சம் வருத்தப்பட்டான். அதற்காக ரொம்பவும் ஏமாற்றமடையவில்லை என்று வைத்துக்கொள். என் கையெழுத்தை பாராட்டியதற்கு தாங்க்ஸ் சொன்னேன். இருவரும் சேர்ந்து ஹோட்டலுக்குப் போய் காபி குடித்தோம். நன்றாகப் பேசினான். இருபது வயது இருக்கக் கூடும் இல்லையா. கபில்தேவ் பற்றியும், அனில்கபூர் பற்றியும் நிறைய பேசினான். அவ்விருவரும் அவனுக்கு ரொம்ப பிரியமானவர்கள். வேடிக்கை என்னவென்றால் எங்களுக்கு இடையே உன்னைப்பற்றிய பேச்சே வரவில்லை. எத்தனையோ விஷயங்களைப் பேசிக்கொண்டோம். திரும்பி வரும் சமயத்தில் அதைத்தான் சொன்னேன்.

“உன்னுடன் பேசிக் கொண்டிருந்த இரண்டு மணி நேரமும் இரண்டு வினாடிகள் போல் பறந்தோடி விட்டது சுத்தூ!’ என்று. நான் அவனை செல்லமாய் சுத்தூ என்று கூப்பிடத் தொடங்கியிருந்தேன். அவனுக்கும் அதுதான் விருப்பமாம். உடனே கடிதம் எழுதச் சொன்னான். காத்திருக்க முடியாமல் ரயிலில் திரும்பி வரும்போதே கடிதம் எழுதிவிட்டேன். அதற்குப் பதிலும் வந்துவிட்டது. இதைப் படித்துப் பார்.”

நடுங்கும் விரல்களுடன் பாவனா அதை வாங்கிப் படிக்கத் தொடங்கினாள்.

“சைலூ!

நீ கிளம்பிப் போன பிறகு எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. நாம் பேசிக்கொண்ட வார்த்தைகளே திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. ஒருக்கால் உன்னுடன் சிநேகம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றுதான் கடவுள் உன்னை இதுபோல் கடிதம் எழுத வைத்திருப்பார். இல்லாவிட்டால் அந்தப் பெண் எனக்கு எழுதிய கவரில் உன் கடிதத்தை வைப்பானேன்? நடந்ததை எல்லாம் நீ சொன்னது உன் தூய்மையான மனதைக் காட்டுகிறது. நீ போன பிறகும்கூட இன்னும் என்னோடு உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டே ‘சுத்தூ! என்று கூப்பிடுவது போலவே இருக்கிறது. அந்த இரண்டு மணி நேர உரையாடலில் நம் இருவரின் ரசனைகளும் ஒரே மாதிரி இருப்பதைக் கவனித்தேன். உன்னைப் போன்ற சிநேகிதி கிடைத்தது என் அதிர்ஷ்டம். போகும் போது வழியில் ரயிலிலேயே எனக்குக் கடிதம் எழுதினாய் என்றாள் என் சிநேகம் கூட உனக்குப் பிடித்துதான் இருக்கிறது என்று புரிகிறது. உடனே பதில் எழுது.

இப்படிக்கு சுதர்சன்

பாவனா படித்து முடித்துவிட்டு மெதுவாய் நிமிர்ந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த சைலஜா சொன்னாள்.

“ரயில் சுந்தரி என்றும், நான் வழிபடும் தேவதை நீதான் என்றும் சொன்ன உன் நண்பன் இப்பொழுது என் சிநேகிதன். ரயிலில் உன்னைப் பார்த்ததை அதிர்ஷ்டமாய் பாவித்தவன், கவரில் என் கடிதம் வருவதை தற்போது அதிர்ஷ்டமாய் நினைக்கிறான். நான் அவனை குறை சொல்லவில்லை பாவானா! பெண்ணை ஏமாற்றுவது, வலையில் போட்டுக்கொள்வது போன்ற திட்டங்கள் கொண்ட இளைஞனாகவும் நான் அவனை கருதவில்லை. அவனுக்கு அவ்வளவு வயதுகூட இல்லை. காதலிக்க வேண்டும், காதலிக்கப்பட வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே உள்ள வயது அது. அவன் உன்னைக் காதலிக்கவில்லை. ‘காதலிப்பது’ என்ற உணர்வை மட்டுமே காதலித்திருக்கிறான். உன் ஸ்தானத்தில் நான் காதலிக்கத் தொடங்கியதுமே என்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டான். அவன் காதலுக்கு வடிகாலாய் அந்த வாரப் பத்திரிகை கண்ணில் பட்டுவிட்டது, அவ்வளவுதான்.

உன் விருப்பு வெறுப்பு என்னவென்றோ, உன் பழக்க வழக்கங்கள் என்னவென்றோ, உன் படிப்பு என்னவென்றோ கூடத் தெரியாமல் ஒரே ஒரு முறை ரயிலில் பார்த்துவிட்டு நீதான் என் தேவதை என்று எழுதிய அந்த பையனின் ‘capasity to love’ என்னவென்று பார்க்கலாம் என்று இவ்வாறு நாடகம் நடத்தினேன்.. பாவனா! என்னை மன்னித்துவிடு.

அவன் காதல் வெள்ளம் உன்னிடமிருந்து என் பக்கம் திரும்பும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் அவனை “சுத்தூ” என்று அன்பு ததும்ப விளித்தேன். அவன் மீது ஆர்வம் இருப்பது போல் பேசினேன். திரும்பவும் இன்னொரு தடவை சொல்கிறேன். அவன் வயது அப்படிப்பட்டது. நீ கேட்கலாம், நம் வயதுகூட அப்படிப்பட்டதுதானே என்று. ஆனால் பெண் எப்போதுமே தற்காப்பு நிலையில் இருக்க வேண்டும். வயதையும் விட சீக்கிரமாய் வளர்ந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டமடைந்து விடுவோம். ஒன்று மட்டும் உண்மை. இதெல்லாம் உனக்காகத்தான் பண்ணினேன் பாவனா!

உன் கடிதத்தைப் பார்த்ததுமே நான் பயந்துவிட்டேன். ஒருத்தன் நம்மைக் காதலிப்பதாய் சொன்னதுமே அவ்வளவு தூரம் நெகிழ்ந்து போக வேண்டியது இல்லை. ‘காதல் தியாகத்தை விரும்பும்’ என்பதெல்லாம் அந்தக் காலத்துப் பேச்சு. காதல் உறுதியைக் காட்ட வேண்டும். முதலில் தன்மீது தனக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இரண்டாவது அடுத்தவர் மீது நம்பிக்கை வேண்டும். அப்படிப்பட்ட உறுதி இருந்துவிட்டால் இனி வேதனைக்கு வழியில்லை. உன்னை இந்த வேதனையிலிருந்து தப்பிக்கச் செய்வதற்காகத்தான் நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன்.”

கண்ணீர் மல்க பாவனா சிநேகிதியைப் பார்த்தாள். ஆனால் அது துக்கத்தினால் வந்த கண்ணீர் அல்ல. அன்பால் வெளிவந்த கண்ணீர்! “இதை.. இதையெல்லாம் எங்கிருந்து கற்றுக் கொண்டாய் சைலூ?”

“புத்தகங்களிலிருந்து. நம் பெற்றோர்கள் நம்மைப் புத்தகங்களைப் படிக்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தேடித் பார்க்கும் பொறுமை இருந்தால் சஸ்பென்ஸ், த்ரில்லர் நாவல்களில் கூட வாழ்க்கைக்கு வேண்டிய நெறிமுறைகள் இருக்கும். புத்தகம்தான் உண்மையான நண்பன் என்று சும்மா சொல்லவில்லை.”

“நான் அவனை பார்த்ததும், சிரித்தும் தவறு என்கிறாயா? எனக்கு ஏனோ அவனைப் பார்ப்பது பிடித்து இருந்தது.”

“இளமையில் ஈர்ப்பு இருப்பது தவறு இல்லை. அந்த அளவுக்குக் குறும்பு சேட்டைகள் பண்ணவில்லை என்றால் அது பதினாறு வயது பருவம் எப்படி ஆகும்? ஒரு நிமிஷம் இரு” என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் இருந்த தன் வீட்டிலிருந்து ஒரு புத்தகத்துடன் திரும்பி வந்தாள்.

‘என்ன புத்தகம் அது?”

“முந்தா நாள் எழுத்தாளர்களின் கூட்டத்திற்குப் போயிருந்த போது ஒரு எழுத்தாளர் இந்த கொடேஷனை எழுதிக் கொடுத்தார். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது” என்றாள். பாவனா அதை வாங்கிப் படித்தாள்.

“For the man, an attraactive girl, and for the woman an attraactive man, are the prizes they are after! ‘Attractive usually mans a nice package of quality which are Popular and sought after on the personality market. But as two persons become well acquainted, their intimacy loses more and more its miraculous intial excitement.”

அவளுக்கு இரண்டு மூன்று தடவைப் படித்தப் பிறகுதான் புரியத் தொடங்கியது. பிறகு அவள் சிநேகிதியை நோக்கித் திரும்பினாள். மனதில் இருந்த கவலையெல்லாம் திடீரென்று மாயமாகி விட்டாற் போலிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து மனம்விட்டு சிரித்துக் கொண்டார்கள்.

“உண்மையில் நான் எவ்வளவு முட்டாளாய் நடந்துகொண்டு இருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தால் எனக்கே  சிரிப்பு வருகிறது.”

“திரும்பவும் அதையே சொல்லாதே. அந்த அளவுக்காவது சேட்டை பண்ணனும். ஆனால் அதையே சீரியஸாக எடுத்துக் கொள்வது…” என்று மேலும் ஏதோ சொல்லப் போனாள் சைலஜா.

“போகட்டும் விடு. ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இனிமேல் அதைப்பற்றி என்ன?” என்றாள் பாவனா.

அவ்வளவு எளிதில் முடிந்து விடவில்லை அது.

Series Navigationவிற்பனைக்கு வர இன்னும் சில தினங்களே! திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *