அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”

     “கம்பர் போற்றிய கவிஞர்” என்னும் நூலை அண்மையில் கோவையில் நாஞ்சில் நாடனைச் சந்திக்கும்போது அவர் கொடுத்தார். முனைவர் தெ. ஞான சுந்தரம் எழுதிய அருமையான நூல் அது. ஞானசுந்தரம் அவர்களை நான் முன்பே நன்கு அறிவேன். வளவனூர் திருக்குறட் கழகத்திலும், கடலூர் இலக்கியச் சோலையிலும், கிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியிலும் அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். நான் எழுதிய “வைணவ விருந்து” எனும் நூலுக்கு அவர்தான் அணிந்துரை எழுதிக் கொடுத்தார்.

    இந்த நூல் அவர் காரைக்குடியில் மீனாட்சி—பழனியப்பா அறக்கட்டளையினர் நிகழ்த்தச் சொன்ன சொற்பொழிவின் எழுத்து வடிவமாகும்.இந்நூலில் அவர் திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஒப்பிட்டு எழுதி உள்ளார்.

    வள்ளுவரின் பெயர்க்காரணத்தை முதலில் அவர் ஆய்ந்து நிறுவுகிறார்.அப்பெயர் குலப்பெயரோ இயற்பெயரோ அன்று என்கிறார். அரசனின் ஆணயை முரசறைந்து அறிவிக்கும் ஊழியரின் பெயர் அது என்பதற்குப் பல சான்றுகள் காட்டப்படுகின்றன.

     “வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு

       உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்”

என்று பிங்கலந்தை நிகண்டு கூறுவது எடுத்துக் காட்டப்படுகிறது.

    மேலும் தசரதன் தனக்குப் பிள்ளைகள் பிறந்ததை நகர மக்களுக்கு அறிவித்துக் கொண்டாடும்படி ஆணையிட அதை வள்ளுவர் முரசறைந்து தெரிவிப்பதாகக் கம்பர் பாடி  உள்ளார்.

    ”வள்ளுவர் யானை மீமிசை,

     நன்பறை அறைந்தனர்” எனும் அடிகளால் இதை அறியலாம்.மேலும் மிதிலையில் இராமனின் திருமணத்திற்காகப் புறப்படும் செய்தியை ”வள்ளுவன்——————திரிந்து சாற்றினான்” என்பதாலும்,இராமன் முடிசூடும் செய்தியை ”வள்ளுவர் —————–திரிந்து சாற்றினர்” என்பதாலும் வள்ளுவர் என்பார் முரசறையும் செயலை மேற்கொண்டதை நூலாசிரியர் கூறுகிறார்.

    இலங்கையில் அசோக வனத்தை அழித்த அனுமனைப் பிடிக்கப் பெரும்படை புறப்பட்டதை வள்ளுவர் அறிவித்ததைக் கம்பர்,

    ”ஆனை மேல்முர சறைந்தனர்

            வள்ளுவர் அமைந்தார்;

    போன வேலையின் புடைபரந்

    ததுபெருஞ் சேனை” என்ற பாடல் அடிகளால் அறிய முடிகிறது.

    இலங்கைப் போரில் இராவணனது பெரும் படையை எதிர்கொள்ள இராமன் புறப்பட்டதை வள்ளுவர் முரசறைந்து தெரிவிக்கிறார். இதைக் கம்பர்,

    எழுக சேனைஎன்று யானைமேல்

           மணிமுரசு ஏற்றி

                வழுஇல் வள்ளுவர் துறைதொறும்

              விளித்தலும்”

என்று பாடுகிறார்.முனைவர் தெ.ஞா அவர்கள்  கம்பராமாயணப் பாடல்களை வைத்து வள்ளுவர் என்பது முரசறைவிக்கும் குலத்தில் வரும் ஓர் ஊழியரின் பெயரே, குறள் எழுதிய வள்ளுவரின் புலமையை மதித்து ‘திரு’ என்னும் அடைமொழி சேர்த்துள்ளார்கள் என்று நிறுவுகிறார்.

    ‘செய்தவம்’ என்ற சொல்லை நூலாசிரியராய்வது சிறப்பாய் உள்ளது. கம்பர் தம் பாடல்களில் வான்மீகியை ‘மாக்கதை செய்த செய்தவன்’ என்றும், வசிட்டனை ‘ பிழைப்பில் செய்தவம் வருந்தினான்’ என்றும் குறிப்பிடுகிறார். மேலும் திருமால் தவம் செய்த இடத்தைக் குறிப்பிடுகையில்

    ”செங்கண்மால் இருந்து மேல்நாள்

            செய்தவம் செய்த்து அன்றே.

என்று கம்பர் பாடுவார். எல்லா இடங்களிலும் ’ தவம்’ என்ற சொல்லுக்கு அடைமொழியாக செய் என்பது குறிக்கப் படுகிறது. வள்ளுவரும் குறளில்

      ‘வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

       ஈண்டு முயலப் படும்’                                               என்று எழுதி உள்ளார். செய்தவம் என்பதற்குப் பரிமேலழகர் செய்யப்படுவதாய தவம் என்றும், வை.மு.கோ அவர்கள் செய்தவம் என்பது செயப்பாட்டு வினைப் பொருளில் வந்த வினைத்தொகை என்றும் உரை கூறுவதாக  தெ.ஞா காட்டுகிறார்.

    மேலும் தவம் என்பதில் இரு வகை உண்டென்றும், அவை

செய்தற்குரிய தவம்,மற்றும் செய்தற்குரியது அல்லாத தவம் என்று கூறி உலக நன்மை வேண்டி முனிவர்கள் செய்வது முதல்வகைச் செய்தவம் என்றும் உலகத்தை அழிக்க அரக்கர்கள் செய்வது செய்வதற்கல்லாத தவம் என்றும் நூலாசிரியர் நிறுவுவது அவரின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகிறது.

    ”வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க்

    சொல்லேர் உழவர் பகை”

என்பது குறள். வள்ளுவர் இக்குறட்பாவில் போர்க்களத்தில் போரிடும் வீர்ரகளை வில்லேர் உழவராகவும், புலவர்களைச் சொல்லேர் உழவராகவும் உருவகித்துள்ளார்.

    அதைப் படித்த கம்பர் அதே போன்ற புது சொல்லாக்கங்களை உருவாக்கி உள்ளார். சரபங்க முனிவரைச் சந்தித்து இராமன் பேசுகிறான்.

    ”வரிசிலை உழவனும் மறைஉழ வனைநீ

    புரிதொழில் எனை?அது புகலுதி எனலும்

    திருமகள் தலைவ;செய் திருவினை உறயான்

    எரிபுக நினைகுவென் அருளென இறைவன்”

என்பது கம்பரின் பாட்டு. இதில் இராமபிரானைச் “சிலை உழவன்” என்றும் சரபங்கனை, “மறை உழவன்” என்றும் கம்பர் காட்டி உள்ளார். மேலும் தம் வில்லைச் சிவபெருமான் தேவராதன் என்கின்ற மன்னனிடம் தந்தான் என்பதிப் பாடும் போது கம்பர்

”கோளுடை விடைஅனான் குலத்துள் தோன்றிய

    வாளுடை உழவன்ஓர் மன்னன்பால் வைத்தான்

என்று பாடுகிறார். இப்பாட்டில் மன்ன்னை ”வாளுடை உழவன்” என்கிறார். மேலும் அகத்திய முனிவர் இராமனை “ஆழி உழவன்” புதல்வன் என்கிறார். அரக்க வீர்ர்களைக் கம்பர் “நாந்தக உழவர்” என்கிறார். இச்சான்றுகளைக் காட்டி வள்ளுவர் கூறிய இருவகை உழவர்கள்தான் கம்பனின் புதுச் சொல்லாக்கங்களுக்கு அடிப்படை என்கிறார் நூலாசிரியர்.

    தசரதன் இறந்தபோது கோசலை அலறித் துடிக்கிறாள். அப்போது கோடைக் காலத்தில் வெயிலில் பட்ட புழு எப்படித் துடிக்குமோ அதுபோல் வருந்தினாள் என்று கம்பர் உவமை கூறுகிறார்.

                ”வெயில்சுடு கோடை தன்னில்

    என்புஇலா உயிரின் வேவாள்” என்பது கம்பரின் பாட்டு. இதைப் படிக்கும்போது வள்ளுவரின்,

    ”என்பு இலதனை வெயில்போலக் காயுமே

     அன்பு இலதனை அறம்”

என்ற குறள் நமக்குத் தானாக நினைவுக்கு வருகிறது. இதே உவமை வேறு இலத்திலும் வருகிறது. அனுமன் அசோக வனத்தில் போரிடும்போது வீர்ர்களை அழிக்கிறான். அனுமனைச் சூரியனாகவும் அழிபடும் அரக்கர்கள் என்பு இல்லாத புழுக்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள்.

    ”எரியின்போய்க் கதிரோன் ஊழி

           இறுதியின் என்னல் ஆனான்;

     உரவுத்தோள் அரக்கர் எல்லாம்

            என்புஇலா உயிர்கள் ஒத்தார்”                     என்பது கம்பர் வாக்கு. குறள் கூறும் கருத்துகளைக் கொண்டு கம்பர் அமைக்கும்                 காட்சிகளை இவ்வாறு தெ.ஞா காட்டுவது சிறப்பாக உள்ளது.

    இலங்கையை அடைய வானரப்படைகள் மலைகளைக் கொண்டுவந்து போட்டு பாலம் கட்டுகின்றன. அம்மலைகள் கடலில் விழுந்தபோது அம்மலையில் வாழ்ந்த சிங்கங்களும் கடலில் விழுகின்றன. கடலில் உள்ள சுறா மீன்கள் அச்சிங்கங்களைக் கொன்று தீர்க்கின்றன. இந்நிகழ்ச்சி வான்மீகத்தில் இல்லை என்று நூலாசிரியர் கூறும்போது அவரின் ஒப்புநோக்கும் திறன் பளிச்சிடுகிறது.

    ”நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின்

     நீங்கின் அதனைப் பிற”

என்பது குறள். வள்ளுவர் நீரில் வாழும் வலிமையான விலங்கு நீரைவிட்டுப் பெயர்ந்தால் அழியும் என்கிறார். கம்பரோ நிலத்தில் வாழும் விலங்கு நீரில் விழுந்தால் மாளும் என்கிறார். இதுவே வேறுபாடு என்று கூறும் நூலாசிரியர் கம்பர் அமைத்துள்ள காட்சி குறளின் தாக்கத்தால் எழுந்தது என்று அறுதியிடுகிறார்.

    இதுபோன்ற முத்துகள் பல “கம்பர் போற்றிய கவிஞர்” எனும் நூற்கடலின் ஆழத்தில் அமிழ்ந்துள்ளன. அவை படிக்கப் படிக்க இன்பம் தருகின்றன. இந்த நூலைத் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அளித்துல்ள முனவைர் தெ.ஞானசுந்தரம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

[ கம்பர் போற்றிய கவிஞர்; முனைவர் தெ.ஞானசுந்தரம்—வெளியீடு: உமா பதிப்பகம், 171, பவளக்கரத் தெரு, மண்ணடி, சென்னை—600 001 ]

Series Navigationஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்அத்தம்மா