அதிகாரப்பரவல்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அதிகாரபூர்வமான அதிகாரமுள்ளவர்களின் அதிகாரக்குரலை
எதிர்த்தெழும்
அதிகாரபூர்வமான அதிகாரமற்றவர்களின் அதிகாரக்குரலும்
அதேயளவு அதிகாரமாய்
அதி காரமாய் அதி (வி)காரமா யொலித்து
விதிர்த்துப்போகச் செய்கிறது.

கருத்துச்சுதந்திரத்திற்குக் குரல்கொடுத்துக்கொண்டே
குரல்வளை நெரிக்கக் கையுயர்த்தும் குரல்களின்
நிலவறைகளில் நிரம்பிவழிகின்றன
கூராயுதங்களாய்
வன்மம் நிறைந்த வக்கிரம் பிடித்த வார்த்தைகள்.
என்றும் விநியோகமும் விற்பனையும் ஏறுமுகமாகவே.

நியாயத்தராசுகளின் மொத்த விற்பனையாளர்களாய்
தம்மை நியமித்துக்கொண்டிருப்பவர்களும்
மறவாமல்
எடைக்கற்களின் அடியில் ஒட்டிவைக்கிறார்கள்
சிறியதும் பெரியதுமான புளிமொந்தைகளை.
துலாக்கோலைப் பிறரறியாமல்
ஒரு பக்கமாய் சாய்ப்பதையும்
ஒத்திகை பார்க்கத் தவறுவதில்லை.

காசில்லாததால் பேருந்தில் ஏற வழியின்றி
நதியோரம் காலாற நடந்துகொண்டிருந்தேன்.
காலடியில் ஊறும் குளிர்ச்சியின் கொடுப்பினையில்
குபேர சம்பத்துக் கிடைத்ததாய்
கிறங்கிக்கொண்டிருக்கும் நேரம்
கையில் தீப்பந்தங்களோடு ஓடிவந்த சிலர்
’தவழாமல் நடந்தா வருகிறாய்-
தலைநிமிர்ந்து எங்களைப் பார்க்கவும் செய்கிறாய்.
பைநிறைய பணமுள்ள திமிர்’ என்றவாறு
கைப்பையைப் பிடுங்கினார்கள்.
’நாலணா அல்ல காலணா கூட கிடையாது’ என்றேன்.
’இருபத்தியைந்து காசு என்று சொல்லாமல்
நாலணா என்றா சொல்கிறாய்
இந்தா பிடி’என்று
ஆளுக்கு இரண்டு தர்ம அடி கொடுத்து
ஆற்றில் தள்ளிவிட்டு அப்பால் சென்றார்கள்.

’மட்ராஸ் நல்ல மட்ராஸ்’ என்று முணுமுணுப்பாய் பாடியபடி
போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.
மேலே செல்லவொட்டாமல் அவளை வழிமறித்தவர்கள்
’சென்னையென்று சொல்’ என்றார்கள்.
’என்ன பெயரில் அழைத்தாலும் என் அன்னையாயிற்றே சென்னை’
என்று நெகிழ்ந்துரைத்தவளை
’வசனம் பேசாதே கிழவி, சென்னை யென்று சொல்
இல்லையோ விவகாரமாகிவிடும்’, என்று எச்சரித்தார்கள்.
’ஊர் என்பது இடவாகுபெயர் என்பதை மறந்தோ மறவாமலோ
வண்டை வண்டையாய் சென்னையைத் தூற்றுவதையே அன்றுமின்றும் செய்துவரும் உன்னைத் தெரியாதா என்ன’
என்று பொக்கைவாயைத் திறந்து சிரித்தவள்
’என் காலத்து மட்ராஸைச் சென்னையென்றால்
மதனி என்று நான் விளிக்கும் அம்மாவை அம்மா என்றழைத்தால்
யாரோ போல் தோன்றுவதைப் போல் தோன்றுகிறது
நுண்ணுணர்வுக்காரர்கள் நீங்கள்
நிச்சயம் புரிந்துகொள்வீர்கள்’, என்றாள்.
’தரித்திரம் பிடிச்ச கிழவி’
என்று நறநறவென்று பல்லைக் கடித்தவாறு
கரித்துக்கொட்டியபடியே
தங்கள் அடுத்த இலக்கைத் தேடி அவர்கள் அப்பாலேகினார்கள்.

தங்களுடைய குரல்களை உள்ளிறக்கத் தகுதிவாய்ந்த தொண்டைகளை
அடையாளங்கண்டுவிட்டதாய் அவர்கள் சொல்லக் கேட்டுப்
புல்லரித்து விரியும் மனதில்
ஒரு மூட்டைப் புளுகையும் வெறுப்பையும் திணித்துவிடுகிறார்கள்.
எதிரொலித்து எதிரொலித்து கதி கெட்டுக் காய்ந்துபோய்
கரகரப்பாகிக்கொண்டேவரும் தொண்டைகள்
மிக வரண்டுபோய் ஒலிப்பதை நிறுத்தினாலோ
நீர் தராமல், நன்றிகெட்ட நாய் என்றும்
துரோகப் பேய் என்றும்
வசைபாடத்தொடங்கிவிடுகிறார்கள்.

’மன்னிப்புக் கேள்’ என்றார்கள்
’என்ன தவறு செய்தேன்’ என்றேன்.
’நாட்டுப்பண் பாடினாயே, நட்டுக்கழண்டவளே
மன்னிப்புக் கேள்’ என்றார்கள்.
’பாடுவதற்குத் தானே பண்’ என்றேன்.
’அதிகப்பிரசங்கி – எதுவுன் நாடு?’ என்று
அதட்டிக் கேட்டவர்களிடம்
’இந்தியா’ என்றேன்.
’இந்தியா? இந்தியா?’ என்று
இடிமுழக்கமிட்டு இன்னுமின்னும்
அடிக்கத் தொடங்கினார்கள்.

********

Series Navigationதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.பாகிஸ்தானின் க்வாதர் துறைமுகமும் ஈரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகமும்