அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்

?????????????????????

உலகம் தோன்றிய நாள் தொட்டே அதிகாரம் என்ற ஒரு போதை ஒரு சிலரை ஆட்டிப் படைக்கிறது. அந்த அதிகாரம் என்பது இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செலுத்தப்படும்போது ஒரு

அரசியலில் புகுந்து தகுதி இல்லாதவர் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து  அவர்களால் கையாளப்படும் நிலையில் பொது மக்கள் எல்லாருமே அந்த அதிகாரம் எனும் பூதத்தின் வாயில் வீழ்கிறார்கள். அதிலும் பதவி என்ற பேய் பிடித்து அதிகாரச் சவுக்கு கையில் எடுத்து சுழற்றப் படுகையில் மிகச் சாதாரணமான இன்னும் சொல்லப் போனால் தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருப்பவர்களும் அடிபட்டுத் துடிக்கிறார்கள்.

அந்தச் சவுக்கடியிலிருந்து தங்களைக் காப்பாற்ற ஒரு மீட்பர் வருவார் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருக்கிறார்கள். சக்கரம் சுற்றித்தானாக வேண்டும். யாரேனும் ஒரு மகாத்மா வரலாம். அதிகாரம் தன்னுடைய வேர் மண்ணோடு வெட்டி வீழ்த்தப்படலாம். ஆனால் அதுவரையில் என்ன செய்வது என்பதுதான் கேள்வி.

ஒன்று பதவி வெறி பிடித்து ஆட்டம் போடுபவர்களுக்கு எதிராகப் போரிடலாம். இரண்டாவது அவர்களுக்கு எதிராகக் கூக்குரலிட்டு எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். மூன்றாவது மௌனமாக எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். இது மேல்நாட்டு அறிஞர் ஒருவர் சொன்னது. இதைச் சொன்ன அவர் மேலும் ஒன்று சொன்னார். அந்த மூன்றாவதைச் செய்வதைவிட நீங்கள் செய்யாமலே இருக்கலாம். ஏனெனில் அது யாருக்கும் தெரியப் போவதில்லை.

ஒன்றும் செய்ய முடியாத சிலர் கொக்கைப் போலக் காத்திருந்துத் தக்க சமயம் வந்தபோது தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது. அண்மையில் ‘கபரியேல் கார்சியா மார்க்கேஸ்’ எழுதிய ’இந்த நாள்களில் ஒருநாள்’ எனும் சிறுகதையைப் படித்த போது தோன்றிய எண்ணங்கள் இவை.

கதையில் மொத்தம் மூன்றே பாத்திரங்கள்தாம் வருகின்றன. ஒரு பல் மருத்துவர். அவர் மகன் மற்றும் அந்த நகரத்து மேயர் இவர்கள்தாம்.

கதை இதுதான். பட்டப் படிப்பு படிக்காமலேயே பல் மருத்துவம் பார்க்கும் தந்தையிடம் அவர் மகன் வந்து ”மேயர் தன் பல்லைப் பிடுங்குவீர்களா” என்று கேட்பதாகக் கூறுகிறான். மருத்துவரோ தான் வீட்டில் இல்லை என்று கூறச் சொல்கிறார். ஆனால் அவர் மகனோ “அவரோட பல்லைப் பிடுங்கலைன்னா அவர் ஒங்களைச் சுட்டுடுவாரு” என்கிறான்.

மருத்துவரோ “இங்க வந்து அவரை என்ன சுடச் சொல்லு” என்கிறார். ஐந்து நாள்கள் பல்வலியால் முகமெல்லாம் வீங்கிய மேயர் வருகிறார். மருத்துவர் வலி மரத்துப் போக ஊசி போடாமலேயே பல்லைப் பிடுங்குகிறார். மேயர் மூச்சயர்ந்து, வியர்த்துபோய் கண்ணீர் வர கடுமையான வலியால் அவஸ்தைப் படுகிறார். வேலை முடிகிறது.

“பல் பிடுங்கியதற்கான பில்லை அனுப்புங்கள்” என்கிறார் மேயர்.

”ஒங்களுக்கா அல்லது ஊருக்கா” என்றுகேட்கிறார் மருத்துவர். மேயர் அவரைப் பார்க்கவில்லை. கதவை மூடிவிட்டு, திரைச்சீலை வழியாகச் சொன்னார். “இது நிந்திக்கப்படவேண்டிய ஒரு செயல்”

கதை இத்துடன் முடிகிறது. அந்தக் கடைசி வாக்கியம் யார் சொன்னது என்ற ஐயம் ஏற்படுவது இயற்கை. மோசமான ஒரு சர்வாதிகாரிக்கு மனம் ஒப்பாமல் சிகிச்சை செய்ததால் மருத்துவர் கூறுவதாகக் கொள்ளலாம். ஊர்ப் பணத்தை நான் எனது சொந்த செலவுக்குப் பயன்படுத்துகிறேன் என்று மருத்துவர் எண்ணுவதாகக் கருதி மேயர் சொன்னதாகவும் கொள்ளலாம்.

பட்டம் பெறாத மருத்துவர் மருத்துவமனை வைத்திருப்பதிலிருந்தே மேயரின் மோசமான ஆட்சி தெரிவிக்கப்படுகிறது. பல்லைப் பிடுங்கும்போது மருத்துவர் “ எங்களில் இறந்துபோன இருபது பேருக்கு நீங்கள் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறுகிறார். அது மேயரின் ஆட்சிக்கு எதிரான குரலாக ஒலிக்கிறது. மேயருக்கு சிகிச்சை அளிக்காவிட்டல் அவர் சுட்டுவிடுவார் என்று மகன் கூறுவது மேயரின் கொடூரத்தை எடுத்துக்காட்டுகிறது.எனவே ஊசிபோடாமல் பல்பிடுங்கி மேயருக்கு வலியை உணர்த்துகிறர் மருத்துவர்.

பல் பிடுங்கிய பிறகு மேயர் சுற்றிலும் பார்க்கிறார். மேலே இடிந்து விழும் நிலையில் இருக்கும் காரையையும், ஒட்டடையையும் சிலந்தியையும், அதில் மாட்டி இறந்த பூச்சிகளையும் நோட்டமிடுவதாக கதையில் எழுதப்பட்டுள்ளது. அது குறியீடாக மேயரையும், அவரது அதிகாரத்துக்கு உட்பட்ட மக்களையையும் காட்டுகிறது.

கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் எழுதியுள்ள மற்றுமொரு ஒருகதை ”தூக்கத்தில் நடப்பவர்கள்’. இந்தச் சிறுகதை முன் சொன்ன கதைக்கு முற்றிலும் மாறுபட்டது. இக்கதையின் தலைப்பு மொழிபெயர்ப்பாளர் தந்ததா அல்லது மூல ஆசிரியரே வைத்ததா தெரியவில்லை. ஆனால் கதை மனச்சிதைவு நோய்க்கு ஆளானவரைப்பற்றியது.

கதையில் மொத்தம் நான்குபேர். மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கதைசொல்லியைச் சேர்த்து மூன்று பேர். கதையில் உரையாடலே இல்லை. அவள் மட்டும் மூன்று இடங்களில் பேசுகிறாள். இவர்கள் பார்க்கப் போன மாலை நேரத்தில் “ நான் இனி மீண்டும் ஒருபோதும் சிரிக்க மாட்டேன்” என்கிறாள். அவள் அப்போது குழந்தைப் பருவத்தைக் கடந்திருந்தாள். பின்னல் வேலையில் ஈடுபட்டிருந்தாள். அது ஒன்றுதான் அவளை விலங்காக மாற்றாமல் இருந்தது. எப்போதும் ஒரு உப்புச் சப்பற்ற தனிமையிலேயே இருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது.

”அவளுக்கு மணமாகி இருந்தாலோ, அல்லது யாரேனும் ஒருவனுக்கு காமக்கிழத்தியாகவோ இருந்தால் கூட அவளுக்கு மரியாதை இருந்திருக்கும்” என்று கதை சொல்லி கூறுவதிலிருந்து அவள் நிலை புரிகிறது. இப்போது அவள் முதியவள் போலாகி விட்டாள். அவள் உறுப்புகள் தளர்ந்து உயிரற்ற அரைகுறைப் பிணம் போலாகி அண்டவெளியை நோக்கி இருக்கிறாள். ”எங்களுக்குத் துணிச்சல் மட்டும் இருந்திருக்குமானால், அவளது இறப்பையாவது வேண்டியிருப்போம்” என்று மூவரும் சிந்திக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் ‘நான் இந்த இடத்திலேயே கீழே அமர்ந்திருக்கப் போகிறேன்” என்கிறாள். ஆனால் அப்போதே அவள் இறந்தது போன்றே காணப்படுகிறாள்.

இக்கதையில் மாயா யதார்த்தவாதத்தைக் காட்டுகிறார் ஆசிரியர். ஏனெனில் ”அவள் காட்சியளிப்பதற்கான செயல்நிலையை இழந்திருந்தாள்; ஆனால் அவள் காட்சிப் பொருளாகக் காணப்பட்டாள்” என்கிறார் ஆசிரியர்.  ”கதையின் முதலில் அவளைக் குழந்தைப்பருவம் கடந்தவள் எனச்சொல்லி, நடுவில் அவள் முதியவளாகி விட்டள் என்று காட்டிக் கடைசியில் அவள் குழந்தையாகப் பிறந்தாள்” என்று கூறுகிறார். இறுதியில் அவள் இருக்கிறாளா இறந்தாளா என்பதை வாசகனின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறார்.

“இனி உங்களை மறுபடி பார்க்க மாட்டேன்; அல்லது மறுபடி கேட்கமாட்டேன்” என்று கதை முடியும்போது அவள் கூறுவதைக் குறீயீடாகக் கொள்ளலாம். இச்சிறுகதை படித்து முடியும்போது நம் மனம் கனக்கிறதே அதுதான் கதையின் வெற்றி.

கண்ணாடி இக்கதையில் முக்கிய இடம் வகிக்கிறது. தொடக்கத்தில் ”அவள் கத்துவது கண்ணாடி நொறுங்கி உடைவது போல இருந்தது”. என்ற உவமை கூறப்படுகிறது.

பிறகு “கண்ணாடித் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து ஒட்ட வைப்பது போன்ற சத்தத்தில் கையொலி எழுப்பினோம்” என்று சொல்லப்படுகிறது. கடைசியில் “கண்ணடி உடைந்த சத்தத்தை நினைவூட்டுவது போன்ற அழுகையைக் கேட்க விரும்பினோம்” என்று கூறும் போது எல்லாமே முடிந்தது போலவும் முடியாதது போலவும் புரிகிறது. மொத்தத்தில் கதை வாசகனை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்துகிறது எனலாம்.

கேப்ரியேல் சென்ற நூற்றாண்டின் ஒரு முக்கியமான எழுத்தாளர். கொலம்பியாவைச் சேர்ந்த இவர் 1982- ஆம் ஆண்டில் தன் ‘ஒரு நூற்றாண்டின் தனிமை’ எனும் நாவலுக்காக நோபல் பரிசு பெற்றவர். இவரின் 11 கதைகள் முனைவர் இராம. குருநாதன் அவர்களின் மொழிபெயர்ப்பில் சென்னை ‘ஓசோன் புக்ஸ்’ வெளியீடாக வந்துள்ளது.

—————————————————————————————————————————————

 

Series Navigationயேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்புதொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சுஅழகுக்கு அழகு (ஒப்பனை)அப்பாஇந்த நிலை மாறுமோ ?தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகைஉஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசுசூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.அமர காவியம்!ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6பாவண்ணன் கவிதைகள்பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டதுநிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22எக்ஸ்ட்ராக்களின் கதைஈரத்தில் ஒரு நடைபயணம்வாழ்க்கை ஒரு வானவில் – 21ஒரு புதிய மனிதனின் கதைபாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி