அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு

Spread the love

பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்

அது இது எது என்ற பிரபலமான நிகழ்ச்சி ஒன்று ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தொலைக்காட்சி இரசிகர்களுக்குத் தெரியும். அந்நிகழ்ச்சியை இலங்கையில் நடத்துவோமாக இருந்தால் அது, இது, உது –எது? என நடத்த வேண்டும். ஏனெனில் பழந்தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள உகரச்சுட்டு இலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியிலும் வவுனியா திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தவர் பரந்து வாழும் பிரதேசங்களிலும் இன்றும் வழக்கிலுள்ளது.

அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு என்பது தொல்காப்பியம் பின் வந்த நன்னூலும் இதை மறுக்கவில்லை.

ஆனால் இந்த உகரச்சுட்டெழுத்தின் உபயோகம் தமிழ்நாட்டு வழக்கில் முற்றாக அழிந்தொழிந்து விட்டது போலும். (ஒருமுறை ஆனந்த விகடனில் சுட்டெழுத்தாக தமிழ்நாட்டுத் தமிழில் உகரம் இல்லாமற் போனது பற்றி ஒரு நகைச்சுவைத் துணுக்கிiனைப் படித்த ஞாபகம். இதைக்கொடு அதைக்கொடு எனலாம் ஆனால் உதை கொடு என்று சொல்ல முடியாது அதனால் தான் அது மறைந்து விட்டதாக அந்தத் துணுக்கு கூறியது.

தமிழ்நாட்டில் எங்காவது ஆங்கிலம் புகாத கிராமங்களில் உகரச்சுட்டின் உபயோகம் இருக்குமா எனத் தெரியவில்லை.

சுட்டெழுத்துகளின் பயன்பாடு

இவ்வாறு பார்க்கும் போது யாழ்ப்பாண வழக்கில்

அது இது உது

அங்கே இங்கே உங்கே

அப்படி இப்படி உப்படி

அவை இவை உவை

அவர்கள் இவர்கள் உவர்கள்

அவன் இவன் உவன்

அவள் இவள் உவள்

அவர் இவர் உவர் என மூன்று சுட்டெழுத்துகளும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

அகரச்சுட்டின் பயன்பாடு படர்க்கையிலும் உகரச்சுட்டின் பயன்பாடு பெரும்பாலும் முன்னிலையில் ஒருவரோடு உரையாடும் போதும் இகரச்சுட்டு பெரும்பாலும் பேசுபவருக்கு நெருக்கமானதாகவும் வரும்.

அகரச்சுட்டு-

அது- சொல்பவனுக்குப் படர்க்கையில் (அதாவது தூரத்தில் அல்லது தள்ளி இருப்பது )

உதாரணம்

அது கிழிந்து போய் விட்டது ( எழுத்து வழக்கு)

அது கிழிஞ்சு போய்ச்சு (பேச்சுவழக்கு)

அது வருகிறது ( எ.வ)

அது வருது (பே.வ)

அதை ஏன் எடுக்கிறாய்? (பேச்சு வழக்கில் பெரும்பாலும் மாற்றமில்லை)

அவன் அங்கே போனான்

அவன் அங்கை போனவன் (பே.வ)

அவன் அப்படி ஏன் செய்தான்? ( எ.வ)

அவன் அப்பிடி ஏன் செய்தவன்

அவள் போய்விட்டாளா? ( எ.வ)

அவள் போவிட்டாளா?

அவை வடிவான (அழகான) ப+க்கள் ( எ.வ)

அதுகள் வடிவான ப+க்கள். (சிலசமயங்களில் ப+க்கள் என்பது பூகள் ப+வள் என்றோ ப+அள் என்றோ வழங்கும்)

மேலும் உயர்திணைக்குரிய அவர்கள் என்பதற்குப் பதிலாக அவை என்பது பேச்சு வழக்கில் வழங்கும்

உதாரணமாக அவர்கள் வருகிறார்கள் என்பது பேச்சு வழக்கில் அவை வருகினம் என்றோ அவையள் வருகினம் (வருகிறார்கள்) என்றோ வழங்கும்.

கணவன்மாரைப்பற்றி இன்னொருவரிடம் பேசும்போது மனைவிமாரும் கணவரிடம் உள்ள மரியாதை குறித்து யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் அவையள் வருவினம் அல்லது அவையள் வேலைக்குப் போய்விட்டினம் அவையள் பேசுவினம் என்றோ கூறுவதை அவதானிக்கலாம்.

அவர்கள் வருகிறார்களா?

அவையள் வருகினமா?

அவங்கள் வாறாங்களோ? (அவன் + கள் என்பதன் மருஉ எனக்கொள்ளலாம். அவங்கள் என்பது மரியாதைக் குறைவான நிலையில் யாழ்ப்பாண வழக்கில் பயன்படுத்தப்படும். இலங்கை மட்டக்களப்ப வழக்கில் இது மரியாதைக்குரியதாகவே கொள்ளப்படும் அதாவது அவங்க வாறாங்க எனவரும் அல்லது அவனுகள் வாறாங்கள் என வரும்.

இகரச்சுட்டு

இது – சொல்பவனுக்குப் பக்கத்தில் மிக அருகில் அல்லது அவனிடம் இருப்பது

உதாரணம்

இது கிழிந்து போய் விட்டது ( எ.வ)

இது கிழிஞ்சு போய்ச்சு (பே.வ)

இது வருகிறது ( எ.வ)

இது வருது (பே.வ)

இதை ஏன் எடுக்கிறாய்? (பேச்சு வழக்கில் பெரும்பாலும் மாற்றமில்லை)

இவை பழையவை

இதுகள் பழசுகள் (அல்லது பழசு எனவும் வழங்கும்

நீ இங்கே வருகிறாயா( எ.வ)

நீ இங்கை வாறியா (சில சந்தர்ப்பங்களில் நீ தோன்றாமல் நிற்கும்) அல்லது நீ இஞ்சை வாறியா அல்லது நீ இங்கினை வாறியா என வழங்கும்.

இவர்கள் வேலை செய்யவில்லை( எ.வ)

இவையள் வேலை செய்யவில்லை

சொல்பவர் கோபமாகஅல்லது வெறுப்பாக இருந்தால் இதுகள் வேலை செய்யவில்லை எனவும் வரும்.

உகரச்சுட்டு

இலங்கையில் உகரச்சுட்டு பின்வருமாறு வழங்கப்படுகிறது.

உது: சொல்பவனுக்கு முன்னால் அதாவது முன்னிலையில் உள்ளது (ஓரளவு கிட்ட அல்லது நெருக்கமாக) முன்னிலையில் உள்ளவரிடம் பேசும்போது தான் உகரச்சுட்டு பயன்படுத்தப்படும்.

உது கிழிந்து போய் விட்டது ( எ.வ)

உது கிழிஞ்சு போய்ச்சு (பே.வ)

உதை ஏன் எடுக்கிறாய் (பேச்சு வழக்கில் பெரும்பாலும் மாற்றமில்லை)

உவர்கள் எங்கே போய்விட்டார்கள்( எ.வ)

உவையள் எங்கை போய்விட்டினம் அல்லது போவிட்டினம் (பே.வ)

உவங்கள் எங்கே போவிட்டாங்கள் (கோபம் வெறுப்பு)( பே.வ)

புத்தகம் உங்கே இருக்கிறது ( நீநிற்கும் இடத்தில் , உனக்குப்பக்கத்தில் அல்லது உனது வீட்டில்)

புத்தகம் உங்கை கிடக்கு

புத்தகம் உங்கினை தான் கிடக்கும்

சில சந்தர்ப்பங்களில் ஒருவர் செய்யும் விருப்பமில்லாத செயல்களைக் குறிப்பிடும் போது உகரச்சுட்டு பயன் படும்

உது ஏன் உனக்கு இப்ப?

உங்கை எங்கை போறாய்?

உவன் எங்கை போட்டான்? (போய்விட்டான்)

உவையளுக்கு உது தான் வேலை.

உவங்கள் செய்யாங்கள். (செய்யமாட்டார்கள்)

உவங்களோட என்ன கதை உனக்கு?

உப்பிடிச் செய்யாதை.

உலகம் உப்பிடித்தான்.

உவங்களால எப்பவும் பிரச்சினைதான்

உகரச்சுட்டின் பாவனை பெரும்பாலும் இருவருக்கிடையிலான உரையாடலின் போது வரும் நேரடிப் பேச்சுவழக்கிலேயே அதாவது முன்னிலையில் மட்டும் பயன் படுவதால் ஆய்வு நூல்கள் மற்றும் கட்டுரைகளில் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை. ஆனால் நாவல் சிறுகதை கவிதைகளில் பேச்சு வழக்கின் பாவனை இருப்பதால் அதிகம் பயன்படு;கிறது.

உன்னை உம்மை உங்களை போன்றவற்றில் வரும் உகரம் முன்னிலையிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அவ்வாறு வரும்போது வரும் உகரம் சுட்டெழுத்தாகக் கொள்ளப்படுவதில்லை

உகரச்சுட்டின் உபயோகம் தமிழ் நாட்டில் எப்போது மறைந்தது என்பது ஆராய்ச்சிக்குரியதொன்றாகும். நன்னூலின்காலம் வரை இது பயன்பட்டிருக்கிறது என்பதற்கு அவ்விலக்கணநூல்சான்றாகும்இ

இலங்கைத் தமிழ்மொழியில் இந்த உகரச்சுட்டின் நிலைத்திருப்பு இலங்கைத்தமிழின் பழமையை எடுத்துக்கூறும் சான்றாகவும் விளங்குகிறது.

Series Navigationநான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்சுனாமி யில் – கடைசி காட்சி.