அந்தி

author
0 minutes, 11 seconds Read
This entry is part 10 of 16 in the series 6 மே 2018

சு. இராமகோபால் 

காட்சி –1
இடம்: தெரு
காலம்: மாலை

(ஆனந்தன் அலுவலகத்திலிருந்து தெருவழியே வருகிறான். அவன் நண்பன் முத்து சில புத்தகங்களைக் கையில் தாங்கியவாறு அங்கே வந்துகொண்டிருக்கிறான். இருவரும் சந்திக்கின்றனர்.)

முத்து: யார்? ஆனந்தாவா? ஏன் இவ்வளவு நாட்களாக வீட்டிற்கு வருவதில்லை?

ஆனந்தன்: (நகைத்துக் கொண்டு) அப்படி என்ன முத்து? நான் நாள்தோறும் உங்கள் வீட்டிற்கு வருகிறேனே? நீதான் எங்கேயோ சங்கம் கூட்டம் கச்சேரியென்று போய்விடுகிறாயாம்!

முத்: (பரபரப்படைந்து) அப்படி ஒன்றுமில்லையே! ஒரு மாதமா நான் எங்கேயும் போவதில்லை!

ஆன: என்னமோ… ஒரு மாதமாய் எனக்கு அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம்! தீபாவளி நெருங்கிவிட்டதல்லவா? ‘அன்பு’ க்கு அதிக வரவேற்பு கிட்டப் பல நவீனங்களைப் புனைய வேண்டுமல்லவா?

முத்: அது சரி… நீதானே அன்பு பத்திரிகைக்கு ஆசிரியர்? வெகு நாட்களாகக் கேட்கவேண்டுமென்றிருந்தேன்! நீதான் வீட்டிற்கு வருவதில்லையே…

ஆன: ஆசிரியனா? அப்படி இருந்தால் பரவாயில்லையே… அதில் நான் ஒரு உதவி ஆசிரியனுங்கூட அல்லவே! அந்தப் பத்திரிகை அலுவலகத்தில் நான் ஒரு சாதாரண அங்கத்தினன்… அவ்வளவுதான்!

முத்: ஓ, அப்படியா? (கையிலிருந்த ஒரு புத்தகத்தை ஆனந்தனிடம் கொடுத்து) இதை எழுதியவர் யார்? புது எழுத்தாளாராகத் தெரிகிறதே!

ஆன: (புத்தகத்தைப் புரட்டியபடி) இதுவா? தெரியவில்லை? உன்னுடன் படித்த ஒரு நண்பன் எழுதியதுதான் இது! கண்டுபிடி பார்க்கலாம்!

(முத்து புத்தகத்தை வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு ஒன்றும் விளங்காமல் இருக்கும்போது, அவன் நண்பன் அழகிரி வந்து அவர்களுடன் சேர்கிறான்.)

அழகிரி: (புத்தகத்தை முத்துவிடமிருந்து பறித்துக் கொண்டு) ஏண்டா முத்து, எதற்கடா இதை அப்படிப் புரட்டிப் பார்க்கிறாய்? உள்ளே என்ன புதையல் இருக்கிறதோ!

முத்: ஒன்றுமில்லைடா, அழகிரி! இந்தப் புத்தகத்தை எழுதியவர் நம்முடன் படித்தவராம்! யாரென்று பார்த்துக் கொண்டிருந்தேன்… என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை! நீதான் இதிலெல்லாம் பெரிய ஆராய்வாளனென்று சரடு விடுகிறாயே, எங்கே நீ கண்டுபிடி பார்க்கலாம்?

அழ: (சிரித்துக்கொண்டு) டேய் முத்து, என்னிடமா சவால் விடுகிறாய்? இதோ பார்… ஒரு நிமிடத்தில் சொல்கிறேன்! (புத்தகத்தின் பல பக்கங்களை வேக வேகமாகப் புரட்டிப் பார்த்துப் படித்துவிட்டு, முகத்தில் அசடு வழிய) ஏண்டா, உண்மையாக இந்த எழுத்தாளச் சிங்கம் நம்முடன் படித்தவனா? இல்லை நீயும் சரடு திரிக்க ஆரம்பித்து விட்டாயா என்ன?

முத்: டேய், நான் சொல்லவில்லை அப்படி… ஆனந்தா தானே அப்படிச் சொன்னார்! என்ன அவருமா சரடு திரிக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறாய்?

அழ: (ஆனந்தனை நோக்கிச் சிமிட்டிக்கொண்டு) அவர் இப்போது பெரிய ஆசிரியராகிவிட்டார்!
சரடு திரித்தால்தானே அவர் வாழ்க்கை வண்டியோடும்?

ஆன: என்ன அழகிரி? இப்படிப் பேச ஆரம்பித்துவிட்டாயே! கதையாசிரியர்களையே ஒரே மட்டம் தட்ட ஆரம்பித்துவிட்டாய்?

அழ: அப்படியொன்றும் இல்லை, ஆனந்தா! கோபப்படாதே! நான் ஒரு கேள்வி கேட்கிறேன்… நீ சரியாகப் பதில் சொல்ல வேண்டும்! ஆனால் அந்தக் கேள்வி நீயே தீர்த்து வைக்கவேண்டிய வாழ்க்கைப் புதிர்!

ஆன: என்ன அழகிரி, இவ்வளவு புதிர் போடுகிறாயே! கொஞ்சம் புரியும்படிச் சொல்லேன்?

(இப்போது வேலையாள் ஒருவன் வந்து முத்துவை அழைத்துப் போகிறான். ஆனந்தனும் அழகிரியும் பேசிக்கொண்டு அழகிரியின் வீடு வந்து சேர்கின்றனர். அங்கே சிறிது நேரம் இருந்துவிட்டு ஆனந்தன் தன்னிடத்திற்கு வெல்கிறான்.)

காட்சி –2
இடம்: ஒரு மடம்
காலம்: நடு இரவு

(மடத்தில் பலர் பேசிக்கொண்டிருக்கின்றனர். முத்துவும் இன்னொரு முகமூடியணிந்த உருவமும் மடம் நோக்கி வருகின்றனர். மடம் அடைய இன்னும் ஒரு கல் தொலைவு இருக்கிறது. முத்துவைப் பின் தொடர்ந்து, பத்தடி பின்னால், இருவர் ஓடி வருகின்றனர். முத்து  திரும்பிப் பார்க்கிறான். முகமூடிக்கு எதோ கையாடல் காண்பிக்கிறான். இருவரும் உடனே ஓடுகின்றனர்… பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இருவரும், அவர்கள் ஓடுவதைக் கண்டு, வேகமாகப் பின் தொடர்கின்றனர்.)

காட்சி — 3
இடம்: ஒரு அலுவலகம்
காலம்: நடுப்பகல்

(அன்பு அலுவலகத்தில் ஒரு ஓரத்தில் எல்லா ஆசிரியர்களும் பேசிக்கொண்டே நடுப்பகல் உணவருந்துகின்றனர். அதில் சிலர்: கங்காதரன், புளியப்பன், மீசை துடுக்கி, சங்கரன்.)

மீசை துடுக்கி:  கேட்டாயா சங்கரா, நம் ஆனந்தன் செய்தியை?

கம்பு அன்: என்ன துடுக்கீ, என்னிடத்தில் அதைச் சொல்லக்கூடாதா?

சங்கரன்: சரிதான்! என்னிடத்தில் துடுக்கி பேச ஆரம்பித்தால் கம்பன் முந்திக்கொள்கிறாரே!

புளியப்பன்: சரிதாம் சங்கரா! அவரைக் ‘கம்பன்’ என்று சொல்லக்கூடாதென்று எவ்வளவு தடவை எச்சரித்தாகிவிட்டது? மறுபடியும் அப்படிச் சொல்கிறீரே?

சங்: ஓய், புளி! இனி மேல்  ‘கம்புமண்’ என்றே கூப்பிடுகிறேன், சரியா? நீர் சிறிது பேசாதிருமையா! துடுக்கி என்ன சொல்கிறாரென்று கேட்போம்!

மீசைதுடு: என்னையா, கங்காதரரே? நான் செய்தி சொல்வது உமக்குப் பிடிக்குமே!

கங்: ஏமையா, துடுக்கீ! என்னை ஏன் எப்பொழுதும் ஏளனம் செய்கிறீர்?

கம்பு அன்: சரியையா! துடுக்கி, நீர் அந்தச் செய்தியைச் சொல்லுமையா! கொஞ்சம் அது என்னதானென்று கேட்கலாமே!

எல்லோரும்: ஆமாம்… சொல்லுமையா, துடுக்கி!

மீசை துடு: அதை நான் இப்போது சொல்லப் போவதில்லை… எல்லாம் அடுத்த வார இதழில் வெளியிடப் போகிறேன்! அப்போது எல்லோரும் தெரிந்துகொள்ளுங்கள்…

கம்பு: பின் ஏமையா நீரே அதை அப்படி முதலில் ஆரம்பித்தீர்?

மீசைதுடு: இப்போது சொல்லலாம்… ஆனால் நீங்கள் இடையில் எழுப்பும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லமுடியாதே!

புளி: விடை சொல்லமுடியாதென்றால் ஏமையா அதை இப்போது எங்களிடம் ஆரம்பிக்க வேண்டும்?

கம்பு: அப்படிக் கேளுங்கள் எல்லோரும்! துடுக்கி பதில் சொல்லட்டும்! இல்லாவிட்டால் எதிர் வாதம் புரியட்டும்…

கங்: ஏமையா, இப்போதே அப்படிக் குடைகிறீர்? அந்த மர்மத்தை அவர் சொல்ல ஆரம்பித்து விட்டால்…

சங்: சரி, சரி! எதற்கு அவசரம், நாளைக்குத் தானே அடுத்த இதழ்? அதில் எல்லால் இருக்குமே?

எல்லோ: சங்கரன் சொல்வது சரி! ஒரு நாள் தானே…

(எல்லோரும் எழுந்து கலைகின்றனர்.)

காட்சி — 4
இடம்: சங்கரனின் தனியறை
காலம்: நள்ளிரவு

(சங்கரன் ஏதோ சிந்தனையில் இருக்கிறான். அவன் முன்னால் அன்றைய அன்பு இதழ் விரிந்துகிடக்கிறது. விரிந்த பக்கத்தில், பெரிய கொட்டை எழுத்துக்களில் ‘அந்திக்கொலை’ என்ற தலைப்பு போடப்பட்டு, அதன் கீழ் சில குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தன. இதழை எடுத்து அதைச் சங்கரன் பத்தாவது முறை மீண்டும் வாசிக்கிறான்.)

குரல்
முன்னுரை: அன்பு பத்திரிகையிலும், மற்றதாக நடமாடும் சில பத்திரிகைகளிலும் இதுவரை எழுதிவந்த ‘அந்தி’ மறைந்துவிட்டார்! சமூகக்கதைகளையும், சமுதாயப் பழக்கங்களைப் பற்றிய சீரிய செய்திகளையும், பொழுதுபோக்குக் கதைகளையும், பல துப்பறியும் நாவல்களையும்  இதுவரைப் பெரிதும் புகழத்தக்க வகையில் எழுதிவந்த அந்தி மறைந்துவிட்டார்! அதற்காக இவ்விதழ் தன் துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் துடுக்கி எனும் எம் அலுகலத்தவர் தாம் அறிந்த சில குறிப்புக்களைக் கீழே வெளியிட்டிருக்கிறார். அதைப் படித்து மேலும் மற்றோர் புலன் அறியலாம். அவ்வாறு இந்த சம்பவத்தைப் பற்றிய புலன் தெரிவிப்பவர்க்கு ஏற்ற அன்பளிப்பு அளிக்கப்படும்.

இங்ஙனம்,
ஆசிரியர், அன்பு

முதல் புலன் — துடுக்கி

எனது நண்பன் அந்தி இறந்தது பற்றிய செய்திகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சில நாட்களாக இறங்கியுள்ளேன். அந்த உண்மையை அறியும் வாய்ப்பு அண்மையில் தான் எனக்கு ஏற்பட்டது. நான் அறிந்த சிலவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன். என்னால் அறியாத செய்திகளை இதைப் படிக்கும் துப்பறியும் சிங்கங்கள் ஆய்ந்து வெளியிடும்படி வேண்டப்படுகிறார்கள்.

குறிப்பு 1

“நான் திங்கட்கிழமை மாலையில் என் அலுவலகத்திலிருந்து வீதிவழியே வரும்போது என் நண்பன் முத்து சந்தித்துச் சில செய்திகளைச் சொன்னான். பின் முத்துவின் நண்பன் அழகிரி வந்து சேர்ந்தான். அவனும் என்னிடம் ஏதோ சொல்ல விரும்பினான். அதே நேரத்தில் ஒரு வேலைக்காரன் வந்து முத்துவை அவன் தாய் கூட்டிவரச் சொன்னதாகச் சொல்லி அழைத்துச் சென்றான். பின் அழகிரி தான் சொல்ல விரும்பிய செய்திகளடங்கிய ஒரு கட்டு தாள்களைக் கொடுத்துவிட்டுப் போனான். அதைப் பெற்றுக்கொண்டு நான் வீடு திரும்பினேன்.

வீடடைந்த சிறிது நேரத்தில் என் பால்யத்தோழன் மிண்டன் வந்தான். அவனுடன் பேசியிருந்துவிட்டு நான் மடத்திற்குப் புறப்பட்டேன். வழியில் நண்பன் பிண்டம் என்னுடன் இணைந்தான். எங்கள் முன்னால் இரண்டு உருவங்கள் போய்க்கொண்டிருந்தன. நாங்களும் அவர்களைப் பின் பற்றினோம்.”

மேற்கண்ட செய்தியை அந்தி தன் குறிப்பேட்டில் எழுதிவைத்திருந்தார். இதை அவர் கொலையுண்ட செய்தி கேட்ட அன்று நான் வீடு சென்றபோது அந்தியின் மேசைமேலிருந்த தாளில் குறிபிடப்பட்டிருந்தது. இந்தக் குறிப்பைக் கொண்டு அந்த அறையில் மேலும் தேடிப் பார்த்ததில் வேறொரு சிறு தாளும் கிடைத்தது.

குறிப்பு 2

“மற்றும் நடந்த பலவற்றையும் அழகிரி கொடுத்த தாள்களிலேயே அவன் வேண்டுகோளின்படி நான் குறித்துவைத்தேன்…” இது அழுத்தந்திருத்தமாக எழுதப்பட்டு, இதற்குப்பின் அத்தாள் கிழிக்கப்பட்டிருந்தது. அதை அறை முழுவதிலும் தேடியும் கிடைக்கவில்லை.

இவ்வளவே என்னால் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகள். எல்லாம் சொல்லிவிட்டேன். துப்பறிபவர் அந்தத் தாள்களைக் கண்டுபிடித்தால் மற்ற விவரங்கள் கிடைக்கலாம்.

எழுத்தாளர் அந்தி நாட்டுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிவந்தவர்களுள் ஒருவர். சீர்திருத்தக் கொள்கைகள் மிக்கவர். அத்தகையவரின் கொலை பயங்கரமாகவே இருக்கும். துப்பறிவு செய்வோர் கொலையின் மர்மங்களைக் கண்டுபிடிக்க ஆவண செய்ய வேண்டுகிறேன்.

குறிப்பு: எவர் இப்பணியை ஏற்றுக் கொள்கிறாரோ அவர் “துடுக்கி, 2/10 கதவு எண், அன்பு நிலையம்” என்று முகவரியிட்டு, என்னிடம் தங்களைப்பற்றிய செய்திகளையும் தெரிவித்தால், நான் சில ரகசியமான செய்திகளை அவருக்கு அனுப்பக் கடமைப்பட்டுள்ளேன்.

(சங்கரன் முழுவதும் படித்து முடிக்கிறான். தானே அப்பணியை ஏற்றுக் கொள்ளலாமா அல்லது தன் நண்பன் துரையை எடுத்துக் கொள்ளச் சொல்லலாமா என்று யோசிக்கிறான். முடிவில் ஏதோ முடங்கல் எழுதி அஞ்சல்பெட்டியில் போடுகிறான்.)

காட்சி — 5
இடம்: சங்கரனின் அறை
காலம்: மாலை 5 மணி

(சில நாட்களுக்குப் பிறகு)

(சங்கரனுடன் துரை பேசிக்கொண்டிருக்கிறான். துரையின் முன் சில கட்டுத்தாள்களை எடுத்து  சங்கரன் வைக்கிறான்.)

துரை: ஏது சங்கரா, துப்பறிவதில் என்னைவிட முன்னேறிவிட்டாய் போலிருக்கிறதே! இப்படிப்பட்ட தோழன் தான் வேண்டுமென்றிருந்தேன்!

சங்: அது சரி, துரை! இது கிடைத்தது எப்படியென்று முதலில் சொல் பார்க்கலாம்!

து: ஏய், நீதானே இந்த விவகாரத்தில் பங்கெடுத்துக் கொண்டவன்! என்னைக் கேட்கிறாயே! என்னிடமிருந்து பிரிந்ததிலிருந்து எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்… கேட்கலாம் முதலில்…

சங்: (ஒரு கனைப்பு கனைத்துவிட்டு) உன்னைப் பிரிந்தேனல்லவா, அன்றே இந்த ஊருக்கு வந்தேன். ஆமாம், இந்த ஊருக்கே எப்படி வந்தேன் என்று கேட்பாய்! என் அத்தையும் அவள் மகளும் இங்கே இருக்கிறார்களென்று துடுக்கி முடங்கல் போட்டிருந்தார். ஆனால் மேற்படி துடுக்கிக்கு நான் செய்யும் வேலைகள்பற்றி ஒன்றும் தெரியாது. நானும் இங்கே வந்தேன். என்னை வரவேற்க அத்தையும் அவர் மகளும் வந்தபோது கூட துடுக்கியும் வந்திருந்தார். வீடு திரும்பும்போது துடுக்கி அடிக்கடி என் அத்தை மகள் வேணியைப் பார்த்தார். அப்போது வேணியின் பார்வையில் கோபத்தையும் கவனித்தேன். வேணி என்னையே பார்த்தாள்! துடுக்கி என்னை முறைத்துப் பார்த்தார்! அத்தை ஒன்றும் பேசாமல் வந்துகொண்டிருந்தார்…

து: ஊகூம்… அத்தை உங்களையெல்லாம் கவனிக்கவில்லையா!

சங்: ஆம், அத்தையின் போக்கு என்னுள் கொஞ்சம் சந்தேகம் ஏற்படுத்தியது. அத்தையின் மனதில் ஏதோ கவலை தாண்டவமாடுவதாகத் தெரிந்தது. எப்படியோ வீடு வந்து சேர்ந்தோம். துடுக்கி என்னிடம் விடைபெற்றுச் சென்றார்…. பின் பல நாட்களுக்குப் பிறகு துடுக்கி என்னை அவர் தொழிலில் ஈடுபடுத்தினார்… ஒரு நாள் அத்தையிடம் அவள் கவலை என்னவென்று விசாரித்தேன்…  அந்தச் சண்டாளன்…

காட்சி — 6
(பழைய சம்பவம்)
இடம்: அத்தை வீடு
காலம்: பின்பகல் 2 மணி

(அத்தை சிவகாமியும் வேணியும் நெருங்கி அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்கின்றனர். சங்கரன் உள்ளே நுழைகிறான். வேணி தாயையைவிட்டு சிறிது நகர்ந்து சங்கரனுக்கு இடமளிக்கிறாள்.)

சங்: அத்தை! நான் ஒன்று கேட்கிறேன், பதில் சொல்லமாட்டாயா?

சிவ: சொல் சங்கரா! உன் சந்தேகத்தை விளக்காமல் நான் எப்போதும் இருந்ததுண்டா? கேள், சொல்கிறேன்!

சங்: அத்தை! எனக்கு என்னவோ நீ நாளுக்கு நாள் இளைத்து வருவதாகத் தோன்றுகிறது! உனக்கு என்ன கவலை?

சிவ: எல்லாம் நம் வேணியினால்தானப்பா…

(சிவகாமியும் வேணியும் அழுகின்றனர்.)

சங்: என்ன, என்ன அத்தை? அப்படியென்ன வேணி செய்துவிட்டாள்?

வேணி: (கண்ணீர் சிந்தியவாறு) ஆம் அத்தான்! அம்மாவுக்கு என்னால்தான் இவ்வளவு தொல்லையும்…

சங்: என்ன தொல்லை? சொல் வேணி! நான் தீர்த்துவைக்கிறேன்…

வேணி: நீங்கள் தீர்த்துவைப்பீரா, அத்தான்?

சங்: ஏன் வேணி, என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா? உறுதி மொழி தரவா?

வேணி: அத்தான், என் அண்ணன் காணாமல் போனது என்னால்தான்!

சங்: அண்ணனா? என்ன சொல்கிறாய்? உனக்கு ஒரு அண்ணனிருந்தது எனக்கு இதுவரை தெரியாதே!

வேணி: ஆம் அத்தான், உங்களுக்குத் தெரிய வழியில்லை! நீங்கள் என்று காணாமல் போனீரோ அப்போது எனக்கு வயது பன்னிரண்டு. அண்ணனுக்கு அப்போது பதினான்கு முடிந்துவிட்டது. நீங்கள் சென்ற அடுத்த மாதமே எனக்குத் திருமணம் செய்துவிட்டனர்! என் அண்ணன் விரும்பாத ஆடவனுக்கு! ஏன், நானும் விரும்பாதவன் தான் அவன்! அவனுக்கு நான் அடிமையானேன்… கடலிலே எப்படியோ அமைதியாகப் போய்க்கொண்டிருந்த எங்கள் தோணியைக் கவிழ்க்க ஒரு கடற்கொள்ளைக்காரன் வந்தான்! அவன்… அவன்… அவனேதான்…!

சங்: யார்? யார் வேணி அவன்?

வேணி: ஆம் அத்தான்! அந்தக் குருந்திழைவாள்… அவன்… அவன் தான்…

சங்: என்ன வேணி, குருந்திழைவாளா? யாரவன்? கொஞ்சம் புரியும்படிச் சொல்… அவன் இன்னும் இருக்கிறானா?

வேணி: அவன் இல்லாமல் எங்கே போவான்? என் அண்ணனை விரட்டிவிட்டு… எந்த அன்பும் காட்டாத கணவனையும்… கொலைசெய்து…

சங்: ஆ! கொலை செய்தானா? வேணி, யார் அவன்?

வேணி: கேள் அத்தான்! என்னையும் அவன் அப்பொது கொலை செய்ய முயன்றான்! இன்னும் என்னை வட்டமிட்டுக்கொண்டு இருக்கிறான்!

சங்: வேணி! அந்த அக்கிரமன் யார்? யார் அவன்… எங்கே இருக்கிறான், சொல்!

வேணி: அவன் பெயர் துடுக்கி! எல்லாரையும் மடக்கி முயல்கிறானே… அவனேதான் அவன் அத்தான்!

சிவ: (தலையைச் சிறிது தூக்கி) ஆம், சங்கரா! இதுதான் என் துக்கத்தின் வித்து! உன்னால் இதைப் போக்கமுடியுமா?

வேணி: அத்தான்! நீங்கள் அவனை அழிப்பீரா, அத்தான்?

சங்: ஆ! அவனையா… நானா? கட்டாயம் ஒருகை பார்க்கத்தான் போகிறேன்! நாளையே அதில் ஈடுபடப் போகிறேன்!  அதுமட்டுமல்ல… உன் அண்ணனையும் கண்டுபிடிக்கப் போகிறேன்! கவலைப்படாதே!

(துடுக்கி இந்தச் சமயத்தில் தடியுடன் நுழைகிறான். வேணியின் தலையில் ஒரு பெரும் அடி விழுகிறது.)

காட்சி — 7
இடம்: சங்கரன் அறை
காலம்: அதிகாலை 2:10

(சங்கரன் துரையிடம் கதையைத் தொடர்கிறான்)

சங்: ஆமாம், துரை! அந்தச் சண்டாளன் துடுக்கி… எங்கள் பேச்சிற்கிடையே அப்படி வந்து… புண்ணிலே ஊசியைக் குத்தினான்!

துரை: நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? வேடிக்கை பார்த்தாயா?

சங்: நானா? அந்த அபலையின் வாழ்வுக்கு… ஆதரவற்ற வஞ்சிக்கொடிக்கு… சமுதாயத்தின் கரத்தால் கட்டப்பட்டு… விதவையென்ற முகமறைப்பான் அளித்து… அல்லல்படுத்தும் சமுதாயத்திலிருந்து காப்பாற்ற நான் முயலாமல் இருப்பேனா? அவனை அடிக்க நான் கைப்பற்றிய ஒரு உலோகப் பாத்திரத்தை அவன் இரும்புக்கரம் தட்டிவிட்டது! என் ரிவால்வரை எடுத்துக் குறிவைக்கும்போது துடுக்கி கருப்பு மசியை என் முகத்தில் கொட்டிவிட்டு ஓடிவிட்டான்! … வேணியை ஒரு கைதேர்ந்த நர்சுவின் பாதுகாப்பில் ஒப்படைத்தேன்… என் அத்தையும் விரைவில் நோய் வாய்ப்பட்டாள்! என் பாடு திண்டாட்டமாகிவிட்டது…

சங்: (சிறிது இடைவெளிக்குப்பின்) அத்தை படுக்கையில்… வேணி மருத்துவமணையில்… நான் அங்குமிங்கும் அலைந்துகொண்டு… ஒரு நாள் அத்தைக்கு மருந்து கொடுத்துவிட்டு, வேணியைப் பார்க்க விரைந்தேன். என்னைப் பார்த்ததும் வேணி எழுந்தாள்… அந்நிலையில் அவள்…

காட்சி — 8
(சென்றகாலச் சம்பவம்)
இடம்: மருத்துவ விடுதி
காலம்: காலை 10 மணி

(சங்கரன் வேணியின் அறைக்குள் நுழைகிறான். வேணி கட்டிலிலிருந்து எழ முயற்சிக்கிறாள்)

சங்: ஏன் வேணி எழுகிறாய்? அப்புடியே படுத்துக்கொள்! உடம்பை அலட்டிக்கொள்ளாதே!
அம்மாவுக்கு இப்போதுதான் மருந்து கொடுத்திருக்கிறேன்…

வேணி: எனக்கு உடல் தேறிவிட்டது, அத்தான்! … அத்தான்… அத்…தா…

சங்: என்ன வேணி? என்ன வேண்டும், சொல்?

வேணி: ஒன்றும் வேண்டாம், அத்தான்!  அத்தா… அத்தான்… ஒரு…

சங்: ஒரு ஆரஞ்சுப் பழம்தானே! இரு… இதோ போய் வாங்கிவருகிறேன்…

வேணி: (நாணிக்கொண்டு) அதொன்றும் வேண்டாம், அத்தான்! வந்து… வந்து.. ஒரு…

சங்: என்ன வேணி, நீ சின்ன வயதில் சீண்டுகிறமாதிரி…. என்ன விளையாட்டு இது?

வேணி: (தைரியமாக) ஊம்… அப்படியில்லை அத்தான்! இங்கே வா… வந்து எனக்கு ஒரு… முத்தம்…

சங்: (ஒரு அடி பின்வாங்கி நின்று) ஏய், வேணி! உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன? இப்படியெல்லாம் பேசிக்கொண்டு… அதுவும் மருத்துவ விடுதியில்…

வேணி: (படுக்கையிலிருந்து எழுந்து முகத்தைச் சங்கரன் அருகில் கொண்டுபோனவள் மறுபடியும் முன்போல் படுத்துக்கொண்டு) அப்படியென்றால் உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையா, அத்தான்? பெண்களின் இன்ப வாழ்வை இடித்துத் தள்ளும் சமூகம் என்னும் அரக்கனின் கரமா உங்களுக்கும், அத்தான்? என்னைப் போன்ற விதவை…

(இந்தச் சமயத்தில் வேணியின் நர்ஸும் இன்னொரு பெண்ணும் உள்ளே வரச் சங்கரன் வெளியேறுகிறான்.)

காட்சி — 9
இடம்: சங்கரன் அறை
காலம்: அதிகாலை 3:20

(சங்கரன் பணியாளிடம் நாயர் கடையிலிருந்து தேநீரும் வடையும் வாங்கிவர அனுப்புகிறான்.)

துரை: நீ வேணியை அந்த நிலையிலா விட்டுவிட்டு வந்தாய்? என்ன கல் நெஞ்சமடா சங்கரா உனக்கு?

சங்: முழுக்கதையையும் கேளப்பா, துரை… என்னை வேணியும் காதலிப்பாளென்று நான் நினைக்கவே இல்லை!

துரை: ஆக, நீ அவளை முதலிலேயே காதலித்தாயென்று சொல்! நல்ல காதல் ஜோடி…

(தேநீரும் வடையும் வருகிறது. தேநீரைப் பருகிக்கொண்டு நண்பர்களின் உரையாடல் தொடர்கிறது)

சங்: என்னவோ! அதை நான் உனக்கு முதலில் சொல்லியிருக்கவெண்டும்… அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் வேணியின் இடத்திற்கு அதிகமாகப் போகத்தொடங்கினேன்… இந்த நிலையில் ஒரு நாள்…

காட்சி — 10
(முன் நடந்தது)
இடம்: தெருவின் முனை
காலம்: இரவு 10 மணி

(சங்கரன் வேணியின் வீட்டிலிருந்து தன் இடத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான். தெருவின் முனைக்குச் சென்றதும் அங்கே துடுக்கி நின்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறான்.)

துடு: யார், சங்கரனா? அந்தி என்றல்லவா நினைத்தேன்! சரி, உன்னிடமும் ஒன்று சொல்லவேண்டும்…

சங்: அந்தியா? அது யார்? என்னிடமென்ன சொல்ல….

துடு: அந்தி எங்கள் அலுவலகத்தில் ஒரு நல்ல கதாசிரியர்… நீ அலுவலகம் வராமல் நின்ற மறுவாரமே அவர் வந்து சேர்ந்தார். நான் உனக்கு சொல்லவேண்டியது இதில் இருக்கிறது (ஒரு  மடித்த தாளை சங்கரன் கையில் கொடுத்துவிட்டு) … படித்துப்பார்! முடிந்தால் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்…

சங்: ஓ! அன்று என்னைத் தாக்கியதைப் பற்றியா? விட்டுத் தள்… அதை எப்போதோ மறந்துவிட்டேன்!

துடு: உண்மையாக என்னை மன்னித்துவிட்டாயா? அப்படி நான்…

சங்: சரி, சரி! நான் மறுபடியும் நாளைக்கு உங்கள் அலுவலகம் வருகிறேன்!

துடு: மிக்க மகிழ்ச்சி!  வெகு நாட்களாக எதிர்பார்த்தேனே…

காட்சி — 11
இடம்: சங்கரன் அறை
காலம்: அதிகாலை 3:30

(சங்கரன் துரையிடம் கதையைத் தொடர்கிறான்)

சங்: மறுபடியும் துடுக்கி என்னுடன் முன்போல் பழக ஆரம்பித்தான். நான் மீண்டும் வேலையில் சேர்ந்தது அந்தியைப்பற்றித் தெரிந்துகொள்ளத்தான்! அந்தி என்பது புனைப்பெயர் என்று விரைவில் அறிந்தேன். அவரும் நண்பராகி என்னுடன் வீடுவரத் தொடங்கினார். அதற்குமுன் வேணியும் குணமடைந்து வீடுவந்து சேர்ந்தாள். அத்தையும் ஒருவாறு குணமடைந்து வந்தாள். துடுக்கி அந்திக்கும் எனக்கும் நட்புண்டாக்கிவிட்டு என்னுடன் அலுவலகத்தில் பேசுவதுடன் நின்றுவிட்டான். எனக்கும் அந்திக்கும் நட்பு வளர்ந்தது. இருவரும் சேர்ந்தே வேணியின் வீட்டுக்கு வருவோம். அந்தி அங்கே ஒரு தனி அறையிலிருந்தார். நானும் அத்தையின் வீட்டில்தானே இருந்தேன்! காலம் உருண்டது… சில சமயம் நாங்கள் ஒன்றாக வீடு வராதபோது, அந்தி வேணியிடம் பேச ஆரம்பித்தார்… ஒரு நாள்… நான்

காட்சி — 12
இடம்: வேணியின் தனியறை
காலம்: நள்ளிரவு

(சங்கரன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது வேறொரு காரியமாக மற்றொருவரைப் பார்த்துவிட்டுச் சற்றுத் தாமதமாகத் தனியே வீடு வருகிறான். வேணியின் அறையைத் தாண்டி அவன் அறைக்குள் செல்வதற்குமுன், அங்கே இருகுரல் கேட்க, சன்னலின் வழியாக வேணியின்  அறைக்குள் எட்டிப் பார்க்கிறான். வேணியும் அந்தியும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.)

வேணி: நீங்கள் போய்விடுங்கள்! என் அத்தான் கண்டால் கோபப்படுவார்!

அந்: வேணி, உன் உண்மைக் காதல் கைகூட முயற்சிசெய்!

வேணி: முதலில் உங்களுக்கு என்னைப் பார்த்ததும் எப்படி என்மேல் காதல் வந்ததென்று சொல்லுங்க….

அந்: (நெருங்கிக்கொண்டு) அப்படி வா, உண்மையான காதல் நிலவுக்கு…அழகு மங்கையே! எல்லாம் சொல்கிறேன், கேள்! என் நண்பர்கள் முத்தும் அழகிரியும் உனக்குத் தெரியுமல்லவா?

வேணி: (தள்ளிச் சென்று) நெருங்காதீர்! எனக்கெதற்கையா அவர்களைத் தெரிய வேண்டும்?

அந்: இருந்தால் போகிறது… அழகிரி ஒரு நாள் என்னிடம் சில தாள்கள் கொடுத்தான்! அவற்றை என் அறைக்குள் வைத்திருக்கிறேன்…

வேணி: என்னையா பேசுகிறீர்? நான் கேட்டது நம்மைப்பற்றி… எந்தத் தாள் எங்கிருந்தால் எனக்கென்ன?

அந்: உனக்குப் புரியவில்லை? அந்தத் தாள்கள்தானே நம் காதலுக்கு முதற்படி…

வேணி: ஐயா, போதும் உமது பிதற்றல்! காதலாம்… காதலைப்பற்றி உமக்கு என்னையா தெரியும்? தாள் கீளென்று… நேரமாகிறது… இங்கிருந்து போய்விடும்!

அந்: (சாந்தமாக) வேணி! அப்படி அவசரப்படாதே! முதலில் நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்… அந்தத் தாள்களில் இருப்பது…

வேணி: காதல் நாடகமாடுகிறீரா? போதும் போதும்! என் அத்தான் இதைப் பார்த்தால் என்ன நினைப்பார்? என் அறையைவிட்டு உடனே வெளியேறும்!

அந்: ஆ! என்ன அநியாயம்? உன்னை ஒருகை பார்த்துவிடுகிறேன், பார்!

வேணி: (அந்தி வேகமாகக் கதவைத் திறக்கப் போகிறான்) போய்யா, பெரிய புலியாக்கும்…

காட்சி — 13
இடம்: சங்கரன் அறை
காலம்: காலை 4 மணி

(சங்கரன், துரை.)

சங்: துரை! என்னால் நம்பமுடியவில்லை! அந்தி பழகியதிலிருந்து அவன் எனது ஆருயிர் நண்பன் என்று நினைத்திருந்தேன்! இப்படி ஆலகால நஞ்சாக மாறுவானென்று கனவிலும் நினைக்கவில்லை… அவன் கதவை இடித்துத் தள்ளுவதுபோல் மூடிவிட்டு நடந்த வேகத்தைப் பார்க்கவேண்டுமே! ஏதோ வாயில் திட்டிக்கொண்டு போனான்….  நான் மறைந்திருந்து அவன் போனபின் வேணியின் அறைக்குள் போனேன். வேணி அழுதுகொண்டிருந்தாள்.

துரை: அட நீ எதற்கு அப்படி உடனே அங்கே நுழைந்தாய்? பொல்லாத பயலாயிருக்கிறாயே!

சங்: நல்ல காரணமில்லாமல் போவேனா? அந்தி அந்தத் தாள்களைப் பற்றிச் சொன்னானில்லையா? அதில் எனக்குத் தேவையான சில உண்மைகளிருக்கலாம் என்று தோனறியது. வேணியின் வழி அவற்றை அடைய…

துரை: ஓகோ! நீ பொல்லாத பயல்தான்! வேணி வாங்கி வந்தாளா?

சங்: அந்தக் கதையும் கேள்…

காட்சி – 14க்
(பழைய நிகழ்ச்சி)
,இடம்: வேணியின் அறை
காலம்: நள்ளிரவு தாண்டி

(அந்தி வெளியேறியதும் சங்கரன் அறைக்குள் சென்று வேணியின் அருகில் அமர்கிறான்.)

சங்: (வேணியின் முதுகைத் தடவிக்கொண்டு) ஏன் வேணி? என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்? எனக்கு வேறு வேலையிருந்தது…வரக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது…

(வேணி சங்கரன் மடியில் முகத்தைப் புதைதுக்கொண்டு, விக்கி விக்கி அழுகிறாள்.)

சங்: என்ன இது, குழந்தை மாதிரி! வேணியெழில்! நடந்ததைச் சொல்லேன்!

வேணி: (சிறிது தலை நிமிர்ந்து) அத்…தான்… அவன்…

சங்: பயப்படாமல் சொல், வேணி! நான் இருக்கிறேனல்லவா?

வேணி: (சிணுங்கிக்கொண்டு) அந்தக் கயவன்…

சங்: யார், அந்தியா? நீயேன் அவர்மேல் கோபமாயிருக்கிறாய்?

வேணி: அத்தான், நீங்களா இப்படிப் பேசுவது? ஊர் பேர் தெரியாத எவனோ…புத்தியற்றவன்… என்னோடு காதல் கூத்தாடுகிறான்! எதையோ செய்துவிடுவேனென்று சவாலிட்டுப் போயிருக்கிறான், அத்தான்!

சங்: வேணியெழில்! அப்படி அவசரப்படாதே… இந்தச் சமுதாயத்தில் ஒரு மாசில்லா விதவைக்குக் கரம் கொடுக்கவந்த உத்தம மனிதனையா உதறுகிறாய்?

வேணி: (பதறி) அத்தான! என்ன சொல்கிறீர்கள்? என்மேல் நம்பிக்கையில்லையா? என்னைக் கேலியா செய்கிறீர்கள்?

சங்: (நகைத்து, வேணியின் தலையைக் கோதிக்கொண்டு) பயப்படாதே, வேணி! சும்மா சொன்னேன்… எனக்கெல்லாம் தெரியும்! ஆனால் நாம் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும்… நம் காரியம் முடிக்கும்வரை…

வேணி: உங்களுக்கு எப்போதும் என்னைக் கோபப்படுத்துவான்… ஆமாம், என்ன காரியம் அது? அதற்கும் அந்த அந்தி மந்திக்கும் என்ன சம்பந்தம், அத்தான்? விளங்கும்படிச் சொல்…

சங்: வேணி, அப்படிப் பேச வேண்டியதில்லை! அந்தி உன்னிடம் சில தாள்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தானல்லவா… அதில் நான் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் வேலைக்கு அவசியமான சில ரகசியங்கள் உள்ளன! உன் வேலை, நீ அவனை விரும்புவதாக நடித்து அந்தத் தாள்களை என்னிடம் கொண்டுவந்து சேர்ப்பது…அப்புறம்….

வேணி: (துள்ளியெழுந்து, சங்கரனைக் கட்டிப்பிடித்து) அப்புறம், அப்புறம்… நம்… கல்… நீங்கள் பலேகெட்டிக்காரர், அத்தான்! நீங்கள் கொடுத்த வேலை ஒரு பொருட்டே அல்ல… இதோ இப்போதே செய்து காட்டுகிறேன்…

சங்: அவசரப்படாதே! நீ மிகுந்த எச்சரிக்கையுடன் அந்தியிடம் நடந்துகொள்ளவேண்டும், புரிந்ததா?

வேணி: ஆமாம், அத்தான்! அவனுக்குக் கோபம் வரும்படிச் செய்துவிட்டேன்! இப்போது என்ன செய்வது?

சங்: அதனால்தான் சொல்கிறேன், நீ கவனமாக நடந்துகொள்ளவேண்டும்! முதலில் அவனிடம் பாசாங்காக நடித்து மன்னிப்பு கேள்… பிறகு, இருக்கவே இருக்கிறது உன் மாயஜாலக் கயல்விழிகள்…

வேணி: இதோ புறப்படுகிறேன்! அரை மணிக்குள் தாள்களோடு திரும்புகிறேன்!

சங்: அஞ்சாதே! நான் காத்திருப்பேன்… ஜாக்கிரதை!

(திருப்புக் காட்சி)

(வேணி அந்தியின் அறையை நோக்கிப் போகிறாள். அந்தி அமர்ந்துகொண்டு ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான். அவன் முன்னர் அழகிரி தந்த தாள்கள் உள்ளன. மெல்ல அடி வைத்து வேணி நுழைகிறாள. அந்தி திரும்பிப் பார்க்கிறான்.)

வேணி: (கண் கலங்கியபடி) தங்களுடன் சற்றுமுன் சிறிது தவறாக நடந்து கொண்டேன்! என்னை மன்னிப்பீர்களா? வாழ்விழந்த விதவைக்கு மறு வாழ்வு தர வந்த உங்களைத் தவறாகப் புரிந்துவிட்டேனே. தாங்கள் சென்றவுடன் எவ்வளவு கண்ணீர் விடுத்தேன், தெரியுமா?

அந்: ஆ! இங்கே வா! காதலனிடம் மன்னிப்புக் கேட்கும் காதலியை… என்ன இது? காதலியை மன்னிக்காத காதலனும் இருப்பானோ? இப்போதாவது என்னைப் புரிந்து கொண்டாயல்லவா?
அருகில் வா…

வேணி: (அணுகிக் கொண்டு) இப்படிப்பட்ட உங்களையா வெறுத்தேன்…

அந்: வெறுத்தால் பரவாயில்லை, வேணி! இப்போது என்னை விரும்புகிறாயல்லவா? அதுவே போதும்! என் பேறு! சரி, இதைப் படித்துக் கொண்டிரு… வந்துவிடுகிறேன்…

(அந்தி அவளிடம் அழகிரியின் தாள்களைச் சுட்டிக் காட்டிவிட்டு வேறு அறைக்குள் செல்கிறான். வேணி தாள்களை வேகமாக எடுத்துத் தன் சேலைக்குள் மறைத்து வைத்துக் கொள்கிறாள். அங்கே அதேபோல் அவள் கொண்டுவந்திருந்த தாள்களை வைக்கிறாள்! பின் மேசைமேலிருந்த குறிப்பேட்டிலிருந்து ஒரு தாளைக் கவனமாகக் கிழிக்கிறாள்… அந்தி நுழைகிறான்… வேணி கையிலிருந்த தாளைப் படித்துக் கொண்டிருப்பதாகப் பாசாங்கு செய்கிறாள்…)

அந்: என்ன, வேணி? படித்துவிட்டாயா? எவ்வளவு உருக்கமாக எழுதியிருக்கிறான் பார்த்தாயா?

வேணி: (குரலைக் கொஞ்சம் ஏற்றி) ஆமாம், ஆமாம்! மிகப் போற்ற வேண்டும்…. மிகப்….

(திடீரென்று மின்சாரம் போகிறது. விளக்கு அணைகிறது…. அந்தி என்னசெய்வதென்று தவிக்கிறான். வேணி, “நான் பின்னர் வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள்.)

காட்சி — 15
இடம்: சங்கரன் அறை
காலம்: காலை 5:20

(சங்கரன் துரையுடன் தன் கதையைத் தொடர்கிறான்.)

சங்: அன்று வேணி அப்படி என் உதவிற்கி வராமல் இருந்தால் இப்போது உனக்கு நான் இந்தக் கதையையே சொல்ல முடியாது, துரை!

துரை: அது சரி! வேணி எப்படி அந்தத் தாள்களை உன்னிடம் கொண்டுவந்து கொடுத்தாள்? அதைச் சொல்லப்பா!

சங்: உனக்குப் புரியவில்லையா! வேணி அந்தியின் அறைக்குள் போனதும் அங்கே நடந்ததை எல்லாம் மறைந்திருந்து கவனித்துக்  கொண்டிருந்தேன்… வேணிக்கு நான் அங்கிருந்ததை அந்தி அறைக்குள் போனதும் சைகைசெய்து காண்பித்துவிட்டேன்! மின்சாரக் கம்பியை நான் எடுத்துக் கொண்டுபோன கத்தியால் துண்டித்தேன்!

துரை: திட்டமிட்டுத்தான் வேலையில் இறங்கியிருக்கிறாய்! சரி, சரி… சங்கரா! இப்போது நேரம் என்னவென்று கவனித்தாயா? இரவு முழுவதும் … நாயர்கடை வடையும் தேநீருமாக… போதும், பசியாகிறது! கதையைச் சுருக்கமாகச் சொல்லிமுடி…

சங்: கொஞ்சம் பொறு, துரை! கும்பகோணம் ஐயங்கார் காபி கடை விரைவில் திறந்துவிடும்! நெய் தோசையும் பொங்கலும் பிரமாதமாக இருக்கும்… காபியைப்பற்றித் தான் நாடே தெரியுமே! கதை எப்படியெல்லாம் வளையுதென்று இப்போது கேள்…

தாள்களில் முத்து வேணியைக் காதலிப்பதாகவும், அதை அழகிரி கண்டித்ததாகவும், அழகிரியால் முத்துவை அடக்கமுடியாமல் அவன் அந்தியிடம் சொன்னதாகவும் எழுதப்பட்டிருந்தது. அழகிரி அந்தியை முத்துவைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறான். அந்தியும் சரியென்று சம்மதித்திருக்கிறான். அவன் அந்தியை மேலும் அறிந்துகொள்ள முயலுகிறானென்று நான் அறிந்தேன். அதற்குமுன் தான் துடுக்கி என் நட்பணானான். அவன் எனக்கு அந்தியைப் பற்றிச் சொன்னான். அந்தியின் போக்கை அறியவே மறுபடியும் அலுவலகம் சேர்ந்தேன். அந்தியும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. இங்கே துடுக்கியின் போக்கையும் சிறிது கவனிக்கவேண்டும். துடுக்கிதான் முத்துவின் காதலுக்கு அடிகோலியவனென்று என்னிடம் வேணி கூறினாள். வேணி துடுக்கியை மறுக்கவே அவன் அவள் வாழ்க்கையை நாசமாக்க இப்படி முயன்றிருக்கிறான். முத்துவின் மோகம் வேணியின்மேல் திரும்பச் செய்திருக்கிறான். முத்துவும் அவளை ஒரு விதவையென்று பார்க்காமல் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். துடுக்கி முத்துவை வேணி மறுப்பதை மறைந்து கவனித்தும் வந்திருக்கிறான்…

இந்நிலையில் அந்தி அன்பு அலுவலகத்தில் சேர்ந்திருக்கிறான். துடுக்கி அந்தியின் நட்பை நாடியிருக்கிறான். பின் அந்தியும் முத்துவும் நண்பர்களென்று அறிந்து, இப்போது அந்திக்கு வேணியிடம் மோகம் ஏற்படுத்த விழைந்திருக்கிறான். அதற்காக துடுக்கி அழகிரியின் உதவி வேண்டியிருக்கிறான். மேலும் முத்து, வேணி இவர்களின் காதல் நாடகத்தை அவனே எழுதி அழகிரியின் வாயிலாக அந்தியிடம் கொடுக்க முயன்றிருக்கிறான்… அத்தருணம் அந்தியுடன் முத்துவும் இருந்ததைக் கண்டு, ஒரு பணியாளானாக வந்து துடுக்கி முத்துவை அழைத்துச் செல்கிறான்! அழகிரி அந்தியை வீட்டிற்கு அழைத்துச்சென்று, விருந்தளித்து துடுக்கி அவனிடம் கொடுத்ததை அந்தியிடம் சேர்க்கிறான்.

துரை: சஙகரா, இதெல்லாம் நீ கண்டுபிடித்ததா?

சங்: ஆம்! இதைக் கேள்! அப்படி வேடமிட்டு அழைத்துப் போன துடுக்கி முத்துவைக் கொல்ல முயற்சியும் செய்கிறான்! அப்போது அழகிரியும் அங்குவர… என்ன துணிச்சல் பார், துரை! ஒரே கல்லில் இரண்டு மாங்காயென்று அந்த இரண்டு பேரையும் ஒரே அடியில் வீழ்த்தியிருக்கிறான்! உடனே அவன் பங்காளிகளில் ஒருவனை முத்துவின் ஆடைகளை அணியவைத்து, முகமூடிபோட்ட இன்னொருவனிடம் அழகிரியின் பிணத்தையும் கொடுத்து இருவரையும் மடத்தின் வழியாக ஓடச்செய்திருக்கிறான்! ஆமாம்… இந்தா, இதைப் படி…

(சங்கரன் துரையிடம் ‘அந்திக்கொலை’ என்ற தலைப்பிட்டுத் துடுக்கி எழுதியிருந்த அன்பு இதழைக் கொடுக்கிறான்…. துரை அதை முழுதும் படித்துமுடிக்கிறான்.)

துரை: பிண்டன்… மிண்டன்! இவர்களெல்லாம் யார்? ஒன்றும் புரியவில்லையே…

சங்: அதைச் சொல்லத்தான் உன்னைப் படிக்கச் சொன்னேன். அந்தப் பயல்களெல்லாம் இந்தத் துடுக்கிப் பயலின் புனைபெயர்கள்தாம்!

துரை: சங்கரா, அவன் பலே துடுக்கிதான்!

சங்: அலுவலகத்தில் அவன் பெயர் மீசை துடுக்கி! பயல் வெகு சாமர்த்தியமாக… ஆச்சர்யப் படும்வகையில் தான் தொழிலில் ஈடுபட்டிருக்கிறான்!

துரை: ஆம்.  என்னவோ தன் குறிப்பில் தொடர்புகொள்பவர்ளுக்கு அனுப்புவதாக அவன் எழுதியிருக்கிறானே… உனக்கு அது வந்ததா, சங்கரா?

சங்: (முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு) அதா? அதிலும் … சூழ்ச்சியிருந்தது! அதை நான் அவனிடம் பெற்றபிறகுதான் உணர்ந்தேன்!

துரை: எப்படித்தான் அவன் அதைத் தந்தான் உனக்கு? கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லப்பா…

சங்: ஆமாம்! இல்லாவிட்டால் இந்தக் கதையின் சிக்கல் இதுவரை கேட்டவர்க்குத் தலைவலிதான் கொடுத்துக்கொண்டே இருக்கும்! துரை, நிச்சயமாக உனக்கு நான் தலைவலி தரமாட்டேன்!

அந்தத் தாள்கள் கிடைத்ததும் முதலில் எல்லாவற்றையும் வீட்டிலிருந்தே பல முறை படித்துப் பார்த்தேன். அடுத்த நாள்தான் அலுவலகம் சென்றேன். வேணி தாள்களைக் கவர்ந்துவந்த அந்த இரவே அந்தியின் கொலையும் நடந்திருக்கிறது! அதைப்பற்றிப் பின்னர் சொல்கிறேன்…

நான் அலுவலகம் சென்றதும், என் கூட எப்போதும்போல் அந்தியும் வராததால், எல்லோரும், “சங்கரா, உன் இரட்டைப்பிறப்பு எங்கே?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்கள்! ஏன், துடுக்கியும் அதில் பங்கெடுத்துக் கொண்டான். சில நாட்களாக நான் அந்தியைப் பார்க்கவில்லை, அவனை அலுவலகத்தில் சந்திப்பதோடு சரியென்று சொல்லிச் சமாளித்தேன்….

கொலை நடந்த நாளிலிருந்து துடுக்கி அஞ்சியஞ்சி, பதுங்கியிருப்பதை நான் கவனித்துக் கொண்டுவந்தேன். ஒரு நாள் எல்லோரும் அலுவலகத்தில் மதிய உணவு எடுத்துக் கொண்டிருந்தோம். துடுக்கி அந்தியைப் பற்றி என்னிடம் ஆரம்பித்தான். ஆனால், மற்றவர்கள் தொடுத்த வினாக்களுக்கு விடையளித்தால் தன் குற்றவுணர்வு வெளிப்படுமென்று புரிந்து எல்லாம் அவன் அன்பு இதழில் எழுதியிருப்பதாகச் சொல்லித் தப்பித்துக் கொண்டான். அந்த இதழில் என்ன சூழ்ச்சிசெய்திருக்கிறான் என்று காண அன்பு வெளியானவுடனே அவன் எழுதியிருந்ததைப் படித்தேன்… அன்பின் ஆசிரியரும் அவர் துடுக்கியின்பால் வைத்திருந்த பாசத்தால் ஒரு முன்னுரையும் எழுதி உதவியிருந்தார். அதனால், படித்தபிறகு, வேறொரு பெயரில் துடுக்கிக்கு எழுதி அந்த ரகசியங்களைப் பெற முயன்றேன். அந்தக் குறிப்பு, ரகசியங்கள் அவன் தருவதாக வெளியிட்டிருந்தது, அதுவும் அவன் சூழ்ச்சிதான்! துப்பறியும் நிபுணர்களையே கொலை செய்யத் துணிந்த  அந்தச் சூழ்ச்சிக் காரனா ரகசியங்களைக் கொடுப்பான்? பிறகு தாள்களை ஆய்ந்தபின் தான் எனக்குத் தெரிந்தது, அவன் அன்பு இதழில் எழுதியிருந்த ‘குறிப்புக்கள்’ துடுக்கியே உண்டாக்கியதுதானென்று! அவையெதுவும் அந்தியின் குறிப்பேட்டில் இல்லை! துரை, துடுக்கி யாரென்று சொன்னேனா….

துரை: அடே! இல்லையே… அதென்னப்பா புதிதாய்! நீயும் துருவித்துருவிப் பார்த்திருக்கிறாய்… உம், அந்தப் பயல் உண்மையில் யார்?

சங்: சொல்கிறேன்! துரை, நாம் நம் துப்பறிவு நிலையத்தில் ஒன்றாக வேலை செய்தது நினைவிருக்கிறதா? நான் அங்கே சேர்ந்து இரண்டு ஆண்டுகளான பிறகு, ஒரு நாள் கொலை வழக்கொன்றை ஆராய மதனபுரி போனேன். சில மர்மவிவரங்களைச் சேகரித்தபின் அங்கே இருந்த கடற்கரையில்,  நான்மட்டும்…

காட்சி — 16
(பழைய நிகழ்ச்சி)
இடம்: கடற்கரை பள்ளத்தாக்கு
காலம்: நடுநிசி கடந்து

(சங்கரன் கடற்கரையில் எந்த மனித நடமாட்டமும் இல்லாத நேரத்தில், தன்னந்தனியாக உலவிக் கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கை அடைகிறான். அங்கே ஏதோ பாழடைந்த கட்டிடம் தென்படவும் அதை அணுகுகிறான். அங்கே அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கக் கீழே உள்ளிருந்து குரல் வரக் கூர்ந்து கேட்கிறான்.)

ஒரு குரல்: டேய், துர்க்காபதி! மகனே! இங்கே வாடா!

இரண்டாம் குரல்: அப்பா! இருப்பா… இதோ வார்றேன்…

(உரையாடல் ஒரு தந்தைக்கும் மகனுக்கும்  நடக்கிறதென்று சங்கரனுக்குப் புலப்படுகிறது)

தந்தை: அட துர்க்கா! சீக்கிரம் வாடா…. உசிர் இழுக்குதடா… ஒரு ரகசியம் சொல்லனும்… வாடா…

மகன்: இதோ… வந்துட்டேன்பா… என்ன வேணும்?

தந்: இந்நேரம் என்னடா செய்றே… உசிர் இழுக்குது…

மக: நீங்க கொடுத்த அந்தக் காகிதங்களை அடுக்கிட்டு…

தந்: அது தாண்டா உஞ்சொத்து!  உனக்கு ஒரு ரகசியம் தெரியனும்…

மக: என்னப்பா, ரகசியமா! இதா… எங்காதோடு மெதுவாச் சொல்…

தந்: என்னடா இதுவரைக்கும் இங்கே யாருடா வந்து ஒட்டுக்கேட்டாக… இன்னிக்கு மட்டும் வரப்போராங்களாக்கும்! கவனமாக் கேள் நான் இப்போ சொல்றதை…

மக: சரிப்பா, என்ன சொல்லனும்?

தந்: எங்க ஊர்லே சிவகாமின்னு ஒரு பொண்ணிருந்தா! அவளை நான் ரொம்ப நேசிச்சே! அவளையே கட்டிக்கவேணும்னி அவளை அப்படிச் சுத்திச்சுத்தி வந்தெ… அவளும் ஆசெ காட்னா! நான் அவளுக்கு என்னென்ன செய்திருப்பெ… எவ்வளவு கொடுத்தெ… எத்தனெ நகைக போட்டெ! அம்மம்மா…. ஆன கடைசியிலெ என்னை ஒரு தடியன்னு தள்ளிட்டு வேரெ ஒருவனைக் கட்டிட்டா! அப்பத்தா நான் திருடனா மாறினே! ரெண்டு வருசத்துக்குப் பிறகு மாயாண்டியின் மக… உன் அம்மாவெக் கட்டிக்கிட்டெ… அவ நோயிலே கொஞ்ச காலத்திலெ போயிட்டாடா! உன்னெ படிக்கவெச்சு ஒரு நாகரிகத் திருடானக்கினெ… இப்ப இந்த உசிர்  இழுக்கறப்ப…

மக: சரிப்பா! எல்லாம் நீ முதல்லெ சொல்லியிருக்கெ! இப்ப எதுக்கு மறுபடியுஞ்சொல்றெ?

தந்: எனக்கு ஒரு ஆசெ இருக்குடா! அந்தச் சிவகாமில்லெ?

மக: ஆமா, அவளுக்கென்ன இப்ப?

தந்: அவளுக்கென்ன? அவ இப்ப பெரிய பணக்காரி! அவளுக்கு ஒரு பொண்ணும் ஒரு பையனும் இருக்காங்க… (சங்கரன் இப்போது அங்கு கேட்டுக்கொண்டிருப்பது தன் அத்தையைப் பற்றியென்று உறுதியாக, மேலும் மிக உன்னிப்பாகக் கேட்கிறான்) அவ மகளுக்கு பதினெட்டு வயசிருக்கும். சிறு வயசிலே கல்யாணமாகித் தாலி அறுத்தவ! சிவகாமி புருசனும் பத்து வருசத்திலெ போயிட்டான்! அவ மக அவளைவிடப் பெரிய அழகிடா! நீ போய் அவளெக்கட்டிட்டு சுகபோகம் அனுபவிக்க வேணும்டா! அதா எங்கடைசி  ஆசைடா!  அதுக்குத் தாண்டா உன்னிடம் கொடுத்த அந்தக் காகிதங்களெல்லாம் அப்படிக் கஷ்டப்பட்டு இந்தக் கிழட்டு வயசிலெ திருடிட்டு வந்திருக்கெ!

மக: அந்தக் காகிதத்திலெ என்னமோ கதையிருக்கே?

தந்: வெவரமாக் கேட்டுக்கோ!  சிவகாமியிருக்கிற ஊர்லேயிருந்து நம்ம பொறிக்கி பிச்சாண்டிதான் இதயெல்லாம் தில்லுமுல்லு செய்து எடுத்து வந்திருக்கான்… எல்லாம் உன் நன்மைக்காகத்தா… அவன் உந்தாய் மாமனல்லவா? அந்த ஊர்லே ஒரு பத்திரிகையிலே கொலைக்கதை எல்லாம் வருதாம்… நீதான் அதெல்லாம் படிப்பியே… நீயும் அந்த மாதிரி கதை எழுதி சின்ன வயசில் எனக்குப் படிச்சிக் காட்டுவியெ!  அந்த ஆபிஸில் நீ சேந்து கதை எழுதிக்கிட்டு… அந்தப் புள்ளய வசப்படுத்திக்கொ! அவ்வளவுதான்… என்னோடு நம்ம குடும்பத்துக்கு இந்தத்  திருட்டுத் தொழில் ஒழியட்டும்! புரிஞ்சததாடா,  துர்க்கா? என் ஆசையை நிறைவேத்துவியா, மகனே?

மக: சரி, செய்றேன்பா! இதென்னப்பா இதிலே துடுக்கி கிடுக்கின்னு என்னென்னமோ இருக்கெ?

தந்: அதெப்பத்தி கவலைப்படதெ இப்பொ… அங்கெ போய்ச்சேர் முதல்லெ. அப்புறம் உந்திறமையிலே துடுக்கி கிடுக்கி எல்லாக் கொம்பனயும் நீ மடக்கிச் சமாளிச்சிடுவெ! தைரியமாப் போடா!

காட்சி — 17
இடம்: சங்கரன் அறை
காலம்: கலை 6:15

(சங்கரன் கதையைத் தொடர்கிறான்)

சங்: அந்தத் திருட்டுப் பயல்தான் துடுக்கியாகப் பிறவியெடுத்து, அந்தியின் கொலையும் செய்திருக்கிறான், துரை!

துரை: எல்லாம் வியப்பாயிருக்கிறது, சங்கரா! ஆமாம், ‘அந்தி’ யார்? இந்தத் துடுக்கி வேறொருவருடைய கதையைக் காப்பியடித்தவனாயிற்றே! அவன் எப்படி ‘அந்திக்கொலை’ எழுதமுடியும்?

சங்: காப்பியடித்துக் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த திருடன் எப்படி அப்படிக் கற்பனை செய்தானென்று கேட்கிறாயா? துரை, அவன் ஒரு சாதாரணத் திருடனல்ல.  அவன் தந்தை அவனை ஓரளவிற்கு மிக நன்றாகவே படிக்க வைத்திருக்கிறார். அவனுக்கு உள்ளே
ஏராளமான திறமை இருந்திருக்கிறது. விரைவில் அலுவலகத்தில் எல்லோருக்கும் நெருங்கிய நண்பனாகி வேகமாக அன்பு பத்திரிகையின் பல தொழல்களையும் கற்றிருக்கிறான்!

துரை: அட சங்கரா! இன்னும் அந்தி மர்மத்தைச் சொல்லாமல் போய்க்கொண்டிருக்கிறாயே?
அதென்ன உன் கற்பனையா என்ன? ஏன் இழுத்துக்கட்டுகிறாய்!

சங்: அந்தியின்… உண்மைப்பெயர்… அது உனக்கும் தெரியும், துரை! எங்கே கண்டுபிடி, பார்க்கலாம்…

துரை: இதென்னப்பா, இப்படியொரு புது விடுகதை அவிழ்க்கிறாய் என்னிடமே!

சங்: உம்… உனக்குத் ஏற்கெனவே தெரிந்ததையும்…. (தன் கடிகாரத்தைப் பார்த்தவாறு) ஏ, துரை! இப்போது என்ன நேரமென்று பார்த்தாயா? ஐயங்கார் கடை திறந்துவிட்டது…. எப்போதோ பசியென்றாய்…புறப்படு! பேசிக்கொண்டே போவோம்…

காட்சி — 18
(பழைய சம்பவம்)
இடம்: நகரப்பள்ளி
காலம்: காலை 8:50

(சில இறுதி ஆண்டு மாணவர்கள் வகுப்பு தொடங்குவதற்குமுன் பேசிக்கொண்டிருக்கின்றனர்)

சங்: என்னடா, ஆனந்தா? இன்னும் நான்கு மாதங்கள்தாம்! அடுத்த ஆண்டு என்ன செய்யப்போகிறாய்?

துரை: நான் கல்லூரிதான்! அப்பா முடிவு செய்துவிட்டார்? நீயும் அப்படித்தானே?

சங்: அதிகப்பிரசங்கி! உன்னையா கேட்டேன்?

சிவா: ஆனந்தன் இப்போதே கதை கட்டுரை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பவனாச்சே! அவன் அப்படி ஏதோ செய்யக் கிளம்பிடுவான், சங்கரா!

குரு: டேய், ஆனந்தா! அப்படியா நீ இந்தச் சிறையிலிருந்து தப்பிக்கப் போகிறாய்?

மணி: அட நீங்கள்  ஏண்டா குறுக்கே அவனுக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு… அவனைப் பேசவிடுங்கடா கொஞ்சம்!

கோவிந்: டேய், மணி!  நீ என்னடா இங்கே நியாயம் பேச நுழைகிறாயா?

சங்: ஆமா, மணி! நீ என்ன மேலும் படிப்பா இல்லை உங்கள் மளிகைக்கடை மேனேஜ்மண்ட்டா?

சிவா: சங்கர்! உன் திட்டம் என்னவோ?

துரை: உங்கள் அரட்டையை நிறுத்துங்கடா! ஆனந்தன் சொல்லட்டும்…

குரு: அவனே ஒரு சங்கோசப் பேர்வழி!

மணி: ஊம், சங்கோசி!  ஆனந்தன்!  அவ்வளவுதான் உங்கள் எல்லோருக்கும் அவனைப்பற்றித் தெரியும்… நான் சொல்கிறேன், அவன் உடனே ஒரு சொகுசுக்காரியைச் சுருட்டிக்கொண்டு உலகம் சுற்றப்போகிறான்! நம்மைப்போல…

சிவா: நீ என்ன செய்யப்போகிறாயாம், கடையில் உட்கார்ந்துகொண்டு வரும் சுந்தரிகளை எல்லாம்  சைட் அடித்துக்கொண்டு… எல்லாம் எனக்குத் தெரியும்டா, மணி!

கோவிந்: இன்னும் அந்த முத்துப்பயலும் அழகிரியும் காணோமே!

சிவா: கொழுத்த செல்வந்தர்களாச்சே! இன்று புரட்சி நடிகரின் புதுப்படம் ரிலீஷ் அல்லவா? அந்த சினிமாப்பைத்தியங்கள் பஸ்ட் ஸோவுக்கு டிக்கெட் புக் செய்யக் காத்திருப்பான்கள், வேறென்ன?

சங்: சிவா, கொஞ்சம் உன் நெற்றிக் கண்ணை மூடேன்! இப்போதாவது ஆனந்தன் பேசட்டும்…

சிவா: சரி, நான் வாயை மூடிட்டேன்! இப்போது நீ போய் உன் காதலியைப் பேசவை, பார்க்கலாம்!

சங்: (நகர்ந்து ஆனந்தன் அருகில்சென்று அமர்ந்து, அவன் முகத்தைத் தன் கையில் தாங்கியவாறு) … ம்… அந்தக் காவாலிப்பய சிவன் கிடக்கட்டும்! ஆனந்தா, கண்ணே! கொஞ்சம் பேசமாட்டாயா? ஆருயிரே… என் அன்பே… இப்படிப் பார்…

(வெளியே வந்துகொண்டிருந்த தலைமை ஆசிரியர் சாம்பசிவம், அறையை எட்டிப்பார்த்து, சங்கரன, ஆனந்தன் காட்சியைக் கண்டு உள்ளே செல்கிறார்)

தலை: (கையைத் தட்டிக்கொண்டு) பிரமாதம்! வொண்டர்புல் ஆக்ட்! மாணவர்களே! நேற்று ஆசிரியர் சமரசம் என்னிடம் இந்த ஆண்டு விழாவிற்கு அவர் எழுதிய ‘காதலிக்க நல்ல நேரம்’ என்ற புதிய நாடகத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் நடிக்க உங்கள் இருவரையும் நான் சமரசத்திற்கு இன்றே சிபார்சு செய்யப்போகிறேன்! அதுவும் அதில் ஆனந்தனுக்குக்  காதலி வேசம் போட்டால் அப்படி அற்புதமாய் இருக்கும்! ஆகா…

(அறையில் எல்லோரும் கொல்லென்று சிரித்து, கூச்சலிட்டு ஆரவாரம் செய்கின்றனர்!)

காட்சி — 19
(சில ஆண்டுகளுக்குப் பிறகு)
இடம்: ரயில் நிலையம்
காலம்: பின் பகல்

சங்கரன்: (ரயிலில் சன்னல் பக்கம் உட்கார்ந்து கொண்டு, படித்துக் கொண்டிருந்த தினத் தாளிலிருந்து தலையைத் தூக்கி வெளியே பார்க்கிறான். அங்கே ஆனந்தன் வந்துகொண்டிருக்கிறான்) அடடே, யார் அது? ஆனந்தனா! டேய், ஆனந்தா!

ஆனந்தன்: (குரல் கேட்டபக்கம் அணுகி) யார்… சங்கரா! நீயாடா இது! அடையாளமே தெரியவில்லை…. இப்படி நரைத்த மீசையோடு! இன்னும் மதனபுரிதானே, இல்லை…

சங்: ஆமாம், ஆமாம்! அங்கேதான்! ஆனால், உனக்குத்தான் தெரியுமே என் தொழில் எப்படிப் பட்டதென்று… நீ இங்கென்ன செய்கிறாய், இந்த நேரத்தில்?

ஆன: சந்துருக்குப் பள்ளி விடுமுறை…. பாட்டி ஊருக்குப் போகவேண்டுமென்று அடம் பிடித்தான்! நான் அவனையும் வேணியையும் அனுப்பவந்தேன்…

சங்: அப்படியா! ஆமாம், நீ இப்போது  நாவல் ஒன்றும் எழுதவதில்லையா? (ஸ்டேசன் மாஸ்டர் ரயில் புறப்பட விசிலடித்து, கொடி அசைக்கிறார். ரயில் நகர்கிறது. சங்கரன் ஆனந்தன் கையைக் குலுக்கிவிட்டு) மறுபடியும் பார்ப்போம், ஆனந்தா… (பிளேட்பாரத்தில் ஒரு சிறு பையனின் கையிலிருந்த பொட்டத்திலிருந்து கீழே  சிதறிக்கிடந்த பட்டாணிக் கடலையைச் சுற்றி இரண்டு காகங்கள பயணிகளின் நடமாட்டத்தைத் தவிர்த்துத் தவிர்த்து வட்டமிடுகின்றன. ரயில் குபுகுபுவென்று கரும் புகை உமிழ்ந்துவிட்டுப் போகிறது.)

(திரை)
***

Series Navigationமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்நம்பிக்கை !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *