அனைவருக்குமான அசோகமித்திரன்!


 


-லதா ராமகிருஷ்ணன்

அசோகமித்திரனுடைய எழுத்துகள் அடிமனதைத் தொடாத வாசகர் எவரேனும் இருக்க முடியுமா? உலகளாவிய அளவில் தரமான எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெறத்தக்கவர் அவர் என்பதை நிரூபிக்கும் அவருடைய படைப்புகளைப் பட்டியலிட்டால் அதன் நீளம் அதிகமாகவே இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கையில் எளிய நடையில் எழுதப்பட்டதாய்,  தினசரி வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டுவதாய், சாதாரண மனிதர்களே கதாபாத்திரங்களாய் அமைந்துள்ளதாய் காணப்பெறும் அவருடைய படைப்புகள் உண்மையில் வாழ்க்கை குறித்த நம் பார்வையை விசாலப் படுத்துவதாய், வாழ்க்கையின் பல பரிமாணங்களை, நுட்பங்களை மிகை யுணர்ச்சி அறவேயற்ற ஒரு தொனியில், அறவுரைக்காத தோரணையில் எடுத்துக்காட்டுபவை. அவருக்கு 82வது வயது நடக்கும் இத்தருணத்தில் அவருடைய எழுத்து வழி நாம் பெற்ற மனத் தெளிவுகளுக்கும், திறப்புகளுக்கும் நன்றிதெரிவிக்கும் ஒரு நல்வாய்ப்பாய் நவீன விருட்சம் சிற்றிதழ் 22.09. 2012 அன்று சென்னை, திருவல்லிக்கேணியிலுள்ள பாரதியார் இல்லத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

 

நநல்ல இலக்கியத்த்ன்பால் ஆர்வம் உள்ள வாசகர்களும், எழுத்தாளர்களுமாய் அரங்கம் நிறைந்திருந்தது. முதலில் அசோகமித்திரன் குறித்த ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து எழுத்தாளர் கி.ஆ.சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, ம.வே.சிவகுமார், ரவி சுப்ரமணியன், ஞானக்கூத்தன், திலீப்குமார், அம்ஷன்குமார், பழ.அதியமான், பத்மா, கிழக்கு பதிப்பகம் பத்ரி, உயிர்மை மனுஷ்யபுத்திரன், கல்கி, வெங்கடேஷ், காலச்சுவடு தேவிபாரதி விருட்சம் அழகியசிங்கர் எனப் பலர் அசோகமித்திரனுடைய படைப்புகல் குறித்தும், அசோகமித்திரன் என்ற மனிதரின் ஆளுமை குறித்தும் செறிவாகக் கருத்துரைத்தனர். பேசிய எல்லோருமே மற்றப் பேச்சாளர்களின் நேரத்தை அபகரித்துக்கொள்ளாமல் சுருக்கமாக, தரப்பட்ட நேரத்திற்குள் பேசிமுடித்தது பாராட்டிற்குரியது. இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நவீன விருட்சம் ஆசிரியர், எழுத்தாளர் அழகியசிங்கருடைய முன்முயற்சியை அனைவரும் மனதாரப் பாராட்டினார்கள்

என் பயணம் என்ற நூலில் இடம்பெற்றுள்ள அசோகமித்திரனுடைய நேர்காணல்களிலிருந்து சில அரிய வரிகள்:

  • மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்துகொள்ளும் வகையில் புரிந்துகொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் என்றுதான் நான் எழுதுகிறேன். மனித மனநிலை ஓயாமல் ஊசலாடிக்கொண்டிருப்பது என்பது என் அனுபவம். அதனால் இரு அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள் கூட அந்த ஊசலாட்டத்தைப் பிரதிபலித்தால்தான் எழுத்து உண்மையானது என்று நினைப்பேன்.

 

  • எந்த கலைப்படைப்பும் சமுதாய நிலையை ஓரளவுக்காவது பிரதிபலித்துத்தான் ஆகவேண்டும். எவ்வளவு ‘ஸப்ஜெட்டிவ்’ ஆக ஓர் எழுத்தாளர் எழுதினாலும் அவர் அதில் தனக்கும் புற உலகுக்கும் உள்ள உறவைத்தான் கூறுகிறார்.

 

  • [பிரயாணம் கதை குறித்து] என் கதை மூலம் நான் என்ன சொல்ல முயற்சி செய்திருக்கிறேன் என்று அன்று விளங்கவில்லை. இன்று புரிகிறது: எவ்வளவு உயரிய குரு கிடைத்தாலும், சீடன் எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் வாழ்க்கை சில தருணங்களில் அவனுக்கு முழுப்பயனை அளிக்க மறுத்துவிடுகிறது.

 

  • உத்தி மட்டுமே இலக்கியமாகிவிடும் என்று நான் எண்ணவில்லை. ஓர் உத்தி கையாளப்பட்டிருக்கிறது என்ற நினைப்பே எழச்செய்யாத உத்திதான் மிகச் சிறந்ததாக நினைக்கிறேன். சொல்லவேண்டிய பொருள் மனிதனுக்கு வெளியே இருப்பது. இதனால் ஒரு பொருளைப் பற்றி இருவர், அல்லது பலர் எழுதக்கூடும். ஆனால் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு பொருளைக் காரணமாகக் கொண்டு அவனுக்கென்ற தனிப்பட்ட வகையில் மனவெழுச்சி அல்லது நெகிழ்ச்சியடைகிறான். இதன் தீவிரம்தான் எழுச்சிக்குத் தரமளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். என் வரையில் என் அனுபவம் எனக்கே சொந்தம். ஆதலால் நான் எழுத நினைத்திருக்கும் கதைகளை வேறு யாராவது எழுதிவிடுவார்களோ என்ற பயம் இல்லை.

 

  • எழுதும்போது ஏராளமான அவகாசம் எடுத்துக்கொண்டு, பலமுறை படித்து மாற்றங்கள் செய்தாலும் ஒருமுறை எழுதிமுடித்தாகிவிட்டது என்று கீழே வைத்த பிறகு உறவே துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இதன் காரணமாகத்தான் கண்டன விமர்சனங்கள் அதிகம் சோர்வு தருவதில்லை. ஆனால் நான் அடுத்து எழுதும்போது அந்த விமர்சனங்களை மனதில் வைத்து அது என் எழுத்திற்கு எவ்வளவு பொருந்துகிறது என்று பரிசீலனை செய்யத் தவறுவதில்லை.

 

  • அநேகமாக எல்லாக் கதைகளுக்குமே அவை எழுதப்பட்டபோது மனத்தில் மேலொங்கியிருந்த காரணங்கள் நிஜமான காரணங்கள் அல்லவோ என்று தோன்றுகிறது. இதில் எதிலும் பரம ரகசியம் என்று எதுவுமே இல்லை. ஆனால், மேலோட்டமாக ஒரு காரணமும், மனத்தடியில் இன்னொரு காரணமுமாக அநேகமாக எல்லாக் கதைகளுக்குமே இருந்திருக்கிறது.

 

  • மனிதனை தனியாக விமர்சித்து அவன் அயோக்கியன் எனலாம். அவன் படைப்பை எடுத்துக்கொண்டு அது மோசமான படைப்பு எனலாம். ஆனால் படைப்பை விமர்சிக்க எடுத்துக்கொண்டு[?] அவனை ‘குடிப்பவனே‘ வாத நடைக்காரனே’ என்று வசைபாடுவது பண்பும் இல்லை, பக்குவமும் இல்லை.

0

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி