ரமணி கவிதைகள்

அன்பின் வலி
          

இறுகப்பிடித்திருந்த
அம்மாவின் சுட்டுவிரல்
வழி வழியும் அன்பின் அதீதம்
தாங்காது போயிருக்கிறது
பல நேரங்களில்...

பள்ளிக்கூட வாசலில்
அழுதுவிடுவேனோ எனத்
தயங்கி நின்றவளைக்
கையசைத்துப் போகச்
சொன்னதும் உண்டு.

மொழி தொ¢யாத ஊ¡¢ல்
வேலை கிடைத்துப் போகும் நாளின்
முன் இரவில்
மடி சாய்த்துத் தலை கோதி
வார்த்தையற்று இருந்தவளை
விலக்கி நகர்ந்த போதும்

மண நாளில்
யாருக்கோ என்னைத் 
தாரை வார்த்ததாய்த்
தனியளாய் நின்று
யாருமறியாமல் மருகிய போதும்

அன்பின் இரு எல்லைகளை
உனர்ந்ததும் உண்டு.

ஒவ்வொரு முறையும்
ரயிலடியில் அவள்
கண்ணீர் முகம் காணச் சகிக்காது
பச்சை விளக்கசைவிற்கு
விழைவது போலவே

இன்று
தென் வடலாய்க் கிடத்தித்
தலைமாட்டில் விளக்கேற்றி
குளிர் உணராது
பெட்டியில் கிடப்பவளை
வெகு நேரம் பார்க்கவியலாது
சீக்கிரம் நெருப்பிற்குக்
கொடுத்துவிட்டு வந்தால்போதும்
என்பதை எப்படிச் சொல்வது?

வேறு வேறு நிஜங்கள்

ஊமை நிலவே!

இரவின் தனிமையில்
நீ மீட்டும்
உன் அந்தரங்கத்தின்
அலாதி ராகங்களை
மலை உள்வாங்கிக் கொள்கிறது
என்றா நினைக்கிறாய்?

இல்லை இல்லை!

உன் ஸ்வரங்களுடன்
நீயே சல்லாபித்துக்கொண்டு
களித்துத் திளைத்ததில்
மலையின் மனம் என்ன
குளிர்ந்தா போய்விடும்?

ஒற்றைப் பறவை
திசையற்றுப் பறந்துகொண்டிருந்த
சாயங்கால அடையாளங்கள்
நினைவுகளில் நீந்த
நீ அகற்ற முயன்றும்
உன் ஒளியால் விலகாத
இருட்டுப் போர்வைக்குள்
மலையும் என்னவோ
பதுங்கிக் கிடக்குது
ஊமை வலியோடு!

Series Navigationபேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…