அப்துல் கலாம்

Spread the love

விலாக்கூட்டை விண்கலமாக்கி
விண்ணைச் சலித்தவரை

நாளைய நாட்டின்
நடுமுதுகுத் தண்டாய்
மாணவரைக் கண்டவரை

அக்னிச் சிறகால்
அகிலம் பறந்தவரை

அமிலமழை அரசியலில்
நனையாமல் நடந்தவரை

அகலநீனம்
அறிபுக்கில்லை அது
தேடத்தேட விரியும்
விரிய விரியத் தேடும் என்றவரை

தேடுதல் இல்லையெனில்
சிக்கிமுக்கிகூட நம் அறிவுக்குச்
சிக்கியிருக்காதென்றவரை

எடுத்துக்காட்டாய் வாழ்வின்
இறுதிவரை வாழ்ந்தவரை

எடுத்துக்கொண்டது மண்

தொழுத அலைகள்
அழுத கண்ணீரில்
கரைகள் நனைகின்றன

‘கனவு காணுங்கள்’ என்றவர்
இன்று என் கனவில்
சொன்ன செய்தி

‘விழுந்திருக்கிறேன்

விதையாக

முளைப்பேன்’

Series Navigationசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரிசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு