அப்பா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

மீனா தேவராஜன்
ராஜேஷ்க்கு அன்று பள்ளியில் ஆசிரியர் பெற்றோர் தினச் சந்திப்பு. அவன் அப்பா அவனுடைய ஆசிரியரைச் சந்திக்க விரும்புவதாக முன்பே சொல்லியிருந்தார். அவனுடைய மனதில் அவரை நம் ஆசிரியரைச் சந்திக்க விடக் கூடாது என்ற எண்ணம் வலுத்திருந்தது.  ராஜேஷ் உயர்நிலை பள்ளி ஐந்தாம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவன்.
அவன் நண்பர்கள் அவனிடம் கேட்பாங்க, ‘ ஏன்டா ராஜேஷ் உங்க அப்பா மட்டும் பள்ளிக்கே வரமாட்கிறாரே, அத ஏன்டா? எங்க  அப்பாவெல்லாம் ஒரு முறை முடியாதுன்னா இன்னொரு முறையிலே வராங்கா, உனக்கு மட்டும் அம்மா மட்டுந்தானே வரங்கா. அப்படின்னு அடிக்கடி கேட்பாங்கா. அதற்கெல்லாம் ராஜேஷ் ஏதாவது பதில் சொல்லி மழுப்பிடுவான்.
ஒரு முறை ஆண்டுத் தொடக்கத்தில் அவனுடைய அம்மா அவன்கூட வந்து அந்த ஆண்டுக்குரிய புத்தங்களையும் சீருடைகளையும் வாங்க வந்தாங்க. அப்போ அவன் வகுப்பில் படிக்கும் ஹசாலி இது யாரு? என்று கேட்டான். அப்போ ராஜேஷ் இது என் அம்மா என்றான். ஹசாலி ,’ அவனிடம் உங்க அம்மா அழகா இருக்காங்க என்றான். அவன் அப்படிச் சொன்னதும் ராஜேஷின் முகத்தில் மின்னல் போல் ஒரு புன்சிரிப்பு ஓடி மறைந்தது ஆனால் உள்ளத்தில் அவன் அப்பாவைப் பற்றிய சிந்தனை மேலோங்கியது.
தனியாக இருக்கும் போதெல்லாம் , ஏன் அம்மா இப்படி ஒரு அப்பாவைக் கலியாணம் செய்து கொண்டாங்க? என் நண்பர்களின் அப்பாவெல்லாம் எப்படியிருங்கா? எனக்கு மட்டும் ஏன் வயதான அப்பா?
தனராஜோட அப்பா எவ்வளவு அழகா நடிகர் சூரியா போல் சிரிச்சுக்கிட்டு வரார். ஏன் அந்த கருப்பு குண்டு சிவாவோட அப்பா ஜம் என்று மோட்டர் பைக்கில் அவனை காலையில் பள்ளிக்குக் கொண்டு வந்து விடுகிறார். இப்படி எல்லாருடைய அப்பாவும் இப்படி இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் இப்படி? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அப்பா? திரும்ப திரும்ப தன்னையே விவரம் தெரிந்த நாளில் இருந்து அவன் கேட்டுக்கொண்ட கேள்வி இது.
இது மட்டுமா அவன் உள்ளத்தில் ஓடுது? எனக்கு அப்பாவோட அம்மா அப்பா யாருன்னு தெரியல்லே அம்மா அது பற்றிக் கேட்டா,’ அவங்கள் இந்தியாவில் இருக்காங்க.’ என்று சொல்லிட்டாங்க.
அப்பாவை நினைச்சாவே மனதிற்குள் வெறுப்புத்தான் தோன்றுகிறது. அவர் வேலைக்கும் போறதில்லை. வீட்டிலே இருப்பார். காலையில் பக்கத்திலே இருக்கும் சாப்பாட்டுக் கடைக்குச் சென்று பசியாற ஏதாவது வாங்கிட்டு வருவார். பிறகு மதிய உணவையும் கடையில் போய் வாங்கிட்டு வந்து சாப்பிடுவார். இரவு உணவை சில நேரம் வாங்கிட்டு வருவார். சிலநேரங்களில் அம்மா வேலைக்குப் போயிட்டு வந்து நேரமிருந்தால் சமைப்பாங்க, அம்மா ஒரு அலுவலகத்திலே வேலை செய்றாங்க. அவனுக்கு அப்பாவை நினைச்சாவே கோபந்தான் வரும். ஆனால் அம்மாவை நினைத்தால் பாவமா இருக்கும். அவன் அப்பாவோடு பேசுவதே இல்லை..
ஒரு நாள் அவன் இதுபற்றி அம்மாவிடம் சொன்னான். அவர், உடனே, அதுக்கு என்ன ராஜேஷ் வேணுமென்றால் உனக்கு ஒரு நாய் குட்டி வாங்கித் தந்து விடுகிறேன். ‘’ என்றார். இப்படியாக நாய் குட்டியும் அவன் வீட்டிற்கு வந்து விட்டது. அவன் அதனுடன் பொழுதைப் போக்கினான், என்றாலும் சிற்சில சமயங்களில் அவனுள் ஓர் ஏக்கம் பிறக்கும். எனக்கு தம்பி தங்கைககள் இல்லையே என்பதுதான் அது. இது பற்றி அம்மாவிடம் ஒரு நாள் கேட்டான், அவன். அதற்கு அவர் உன்னைக் கவனிக்கவே எனக்கு நேரமே இல்லை. இன்னொரு பிள்ளை என்றால் எப்படி? என்று சொல்லிவிட்டார். இப்படி வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் ஒரு நிகழ்வு ஏற்பட்டது
வழக்கம் போல் ராஜேஷ் விடியற் காலையில் பள்ளி செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் அம்மாவும் வேலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். வீட்டை விட்டுக் கிளம்பும் முன்னர் கணவரிடம் சொல்வதற்கு அவரை, ‘ என்னங்க, நான் வேலைக்குப் போறேன்.’ என்று சற்று சத்தம் போட்டுக் கூறினார். மறுபடியும் ,’என்னங்க’ என்று கூறியும் அவரிடமிருந்து பதில் வரமால் போகவே அறைக்குச் சென்று பார்த்தார்.  படுக்கையிலிருந்த அவரை எழுப்பிப் பார்த்தார். பதில் வரவில்லை. அவர் அசையவும் இல்லை. பரிமளாவுக்குத் திக்கென்றது. ’என்னங்க’ பலக்க பல முறை கத்தினாள். பலனொன்றுமில்லை. ஆம், பரிமளாவின் கணவர் இறந்து விட்டார். இறுதிக் கடன்களும் முடிந்து விட்டன. ஆனால் பரிமளா அவரை நினைத்து, நினைத்து உருகிக் கொண்டிருந்தாள். அழுது அழுது அவள் முகமும் கண்களும் வீங்கிப் போயிருந்தன. தன் தாயைப் பார்க்க ராஜேஷ்க்கு இரக்கமாக இருந்தது.
நாள்கள் செல்ல, செல்ல அவனுக்கு மிக வெறுப்பாக அது மாறியது. ‘ இந்த வயதான ஆள் இறந்ததற்கு அம்மா ஏன் இவ்வளவு அழவேண்டும்? அவரால் உன்ன பிரயோஜனம்? சும்மா வீட்டிலே உட்கார்ந்துகொண்டுதானே இருந்தார். அவருக்கா அழுது அம்மா உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால் என்ன செய்வது? இன்று அம்மாவிடம் இது பற்றி கட்டாயம் பேசிவிட வேண்டும்.’ என்று அவன் முடிவு செய்தான்.
அன்றிரவு இரவு உணவை முடித்த பின்னர் பரிமளா சமையல் அறையில் இருக்கும் போது மெதுவாக ராஜேஷ் அங்கு சென்று அம்மா, என்று அழைத்தான்.
பரிமளா திரும்பிப் பார்த்து, ‘என்ன, ராஜேஷ் நாளைக்குப் பள்ளிக்கு எதாவது வேண்டுமா? பணமா? இல்லை எதாவது விண்ணப்பத்தில் கையெழுத்திட வேணுமா?, என்று அவன் அருகில் வந்தார்.
ராஜேஷ் எதோ சொல்லவேண்டும் என்ற பீடிக்கையுடன் வந்திருக்கிறான், என்பதை அவன் முகக்குறிப்பிலிருந்து அறிந்து கொண்ட பரிமளம், ‘ என்ன சொல்.’ என்று அவனைப் பார்த்துச் சொன்னாள்.
சற்று நேரம் அங்கு மெளனம் நிலவியது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பிறகு அவன் தொண்டையைச் செருமிக் கொண்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தான். ‘ அம்மா, உங்களை ஒன்று கேட்பேன். கோவித்துக் கொள்ளக்கூடாது. ‘ என்றான்.
சொன்னால்தானே தெரியும் .கோவித்துக் கொள்ளலாமா? இல்லையா என்று என்றார், பரிமளம்.
ஏன் அம்மா இப்படி அழுது அழுது உடம்பைக் கெடுத்துக் கொள்கிறீர்கள் என்றான், ராஜேஷ்.
‘ ஓ அப்பாவுக்காக நான் அழுவதைத் தானே சொல்லுகிறாய்.
ஆம், அதைதானே சொல்கிறேன்.
ஒரு நிமிடம் மெளனமாக இருந்தார், பரிமளா.
அவரைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. அவர் இல்லையினா  நாம இல்லையடா.
என்ன அம்மா சொல்லீறிங்க.
ஆமாம். நான் சொல்லுவதை நிதானமாக, சற்று கேள். உனக்கு இதைக் கேட்க வயது போதுமா என்று  என்னவோ எனக்கு இப்போ புரியல்லை. ஆனால் எல்லாத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். என்றார்.
சரி. சொல்லுங்க.என்றான்,ராஜேஷ்.
பரிமளா சொல்லத் தொடங்கினார்.
அப்போ எனக்கு 21 வயது. நான் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது யாரோ என்னைக் கூப்பிடற மாதிரி இருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். என் கூடவேலை செய்கிற மாதவன்தான் அழைத்தான். அவன் என் பக்கத்தில் வந்து விட்டான். அவன் முகம் எப்படியோ இருந்தது. பேச்சும் குழறுபடியாக இருந்தது. நான் பயந்தபடி நகர்ந்தேன். அவன் என் கிட்டே வந்துட்டான். ‘ என்ற் கூறிய பரிமளம் சற்று நிறுத்தி விட்டு மகனைப் பார்த்தாள்.
அவள் மனதில் மகனிடம் இந்த அவலத்தைச் சொல்ல வேண்டுமா? என்ற வினா மனதில் மின்னலென பளிச்சிட்டது. பரவாயில்லை அவனும் உயர்நிலை பள்ளிக்கு வந்து விட்டான். என்றாவது ஒருநாள் நம் நிலைமை தெரிந்துதானே ஆகவேண்டும். அது இன்றே தெரியட்டும்.’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவர் யோசிப்பதை ராஜேஷ் பார்த்தான். பிறகு என்னம்மா நடந்தது? என்றான். அவலத்தைச் சொல்லத்தான் வேண்டும். வேறு வழியில்லை என்பதை உணர்ந்த அவள் மீண்டும் சொல்லத்தொடங்கினாள்.
மாதவன் குடிச்சு இருந்தான் என்று நன்றாகவே தெரிந்தது. அவனைவிடமிருந்து தப்பிக்க ஓட நினைச்சு ஓடினேன். கொஞ்ச தூரம் பக்கத்திலிருந்த பூங்காவிற்குள் ஓடினேன். சட்டென்று என் காலிலிருந்த ஹில்ஸூ புரட்டிவிட நான் கீழே விழுந்தேன். அது அவனுக்குச் சாதகமாகப் போய்விட்டது.  அவன் என்னை நல்லா ருசி பார்த்து விட்டான். அவன் போய்விட்டான். ‘நான் பூங்காவில் ஓடியிருக்கக்கூடாது  சாலையில் ஓடியுந்தால் இப்படியாகியிருக்காதோ? அந்த நேரத்தில் ஒன்றும் ஓடவில்லை.’ என்று பலவாறு நினைத்துக் கொண்டு  நான் எழுந்தேன் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. களைப்பாக இருந்தது. மயக்கமாக இருந்தது. அதை விட நடந்ததை யாராவது பார்த்து விட்டாங்களா என்று என் கண்களை சுழலவிட்டேன். யாருமில்லை. சுதாரித்துக் கொண்டு நான் மீண்டும் ஆபீஸ்க்கே போனேன்.
என் நிலை பார்த்த அங்கிருந்த பாதுகாப்பாளர் , என்னைப் பார்த்து என்னம்மா என்ன நடந்தது என்று கேட்டார். அவர் காட்டிய பரிவு என் மனதைத் தொட்டது. அடிபட்ட நாயைத் தடவி கொடுத்த எப்படி ஆறுதலாய் அதற்கு இருக்குமோ அப்படி எனக்கு இருந்தது. நான் செய்வதறியாது குலுங்கி அழத் தொடங்கினேன்.
அவர் அங்கிருந்த வெண்டிங் மெஸினிலிருந்து ஒரு குளிர்பானத்தை எடுத்து என்னிடம் தந்தார். என் சோர்வு என்னைக் குடிக்க வைத்தது. சற்று நேரம் அப்படியே அங்கிருந்தேன். பிறகு  தள்ளாடியபடி எழுந்து தடக்கத் தொடங்கினேன்.
அவர்,’ மெதுவா, மெதுவா என்று சொன்னார். பின்,’ நீ இப்படியே வீட்டுக்குப் போக முடியாது வாடகை உந்து வண்டியிலே போ.’ என்று கூறி வாடகை வண்டியிலே ஏற்றிவிட்டார். அதற்குப் பிறகுக் கிட்டத்தட்ட ஒரு வாரம் வேலைக்கே போகலை. சின்ன வயதிலே அப்பா, அம்மா இறந்த பிறகு பாட்டியின் ஆதரவில் போன வருடம் வரை வாழ்ந்த எனக்கு இனி எப்படி வாழப் போகிறேன் என்பது பெரிதாய் இருந்தது. ஆபீஸ் வாசலில் இருந்த அவரைப் பார்த்ததும் இனம் புரியாத தவிப்பு என்னுள் அலை பாய்ந்தது. அவர் அப்போது ஒன்றும் பேசவில்லை. நான் அலுவலகத்திற்குள் சென்று விட்டேன். மாலை திரும்பி வீட்டுக்குப் போகும் முன் அவர் என்னிடம் பேச வந்தார். அவர் என்னை விட வயதில் பெரியவர். அவர் கண்களில் பாசம் இருப்பதை உணர்ந்தேன்.
எப்படி அம்மா இருக்கிறாய்? என்று மெதுவாகக் கேட்டார்.
நான் பதில் ஒன்றும் சொல்லாமல் நின்றிருந்தேன்.
மீண்டும் அவர் என்ன அம்மா? என்றார்.
என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததே தவிர வாய் திறந்து நான் ஒன்றும் சொல்லவில்லை.
சரி அம்மா நீ இப்போது ஒன்றும் சொல்லவேண்டாம், வீட்டுக்குப் போ பிறகு பார்த்த்துக் கொள்ளலாம்.என்றார். நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அடுத்த வாரம் முழுவதும் வழக்கமாக அலுவலகத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தேன்.
அந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று அவர் என்னிடம் வந்து பேசினார். பரிமளா, நீ சின்னபெண். நான் உன்னிடம் ஒன்று கூறவிரும்புகிறேன். என்னைத் தவறாக நினைக்கமாட்டாயே? என்று பலத்த பீடிக்கையுடன் ஆரம்பித்தார். நான் எவ்வித சலனமின்றி அவரைப் பார்த்தேன்.
அவர், நீ இப்படி தனியாக இருப்பது ஆபத்து உனக்கு ஏற்ற துணையாகப் பார்த்து திருமணம் செய்து கொள். ‘ என்றார். எனக்குத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. கொஞ்ச நாள் போகட்டும் என்று பதில் கூறி விட்டு வந்துவிட்டேன்.
கிட்டத்தட்ட இருமாதங்கள் ஓடிவிட்டன. எனக்கு அடிக்கடி உடல் நலமில்லாது போயிற்று. தலை சுற்றல், வாந்தி என அடிக்கடி ஏற்பட்டது. ஒருநாள் காலை எழுந்திரிக்கவே முடியவில்லை. வாந்தி மயக்கமுமாக இருந்தது. நான் மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவர் என்னைச் சோதித்துப் பார்த்துவிட்டு நான் கர்ப்பமுற்று இருப்பதாகக் கூறினார். உடல் பலவீனமாக இருப்பதாகவும் கூறிவிட்டார். மறுநாள் அலுவலகத்திற்குச் சென்றேன்.
என்னைப் பார்த்தவுடன் அவர் என் அருகில் வந்தார். என்னைப் பார்த்து விட்டு என் மிகவும் சோர்வாக இருக்கிறாய்? உடல் நலமில்லையா? என்று அவர் அன்புடன் கேட்டார். தண்ணியில் விழுந்த எறும்புக்கு  உயிர் பிழைக்க புறா போட்ட துரும்பு எவ்வளவு உதவியாக இருந்ததோ அதுபோல அவர் சொல் எனக்குப் பெரும் ஆதரவாக இருந்தது.
நான் வாய் விட்டு அழுதேன். சிறிது நேரம் என்னை அழவிட்டு விட்டார். பிறகு வா, காப்பி கடையில் உட்கார்ந்து பேசலாம். என்றார். அவர் கூறிய வார்த்தைகளுக்குச் சாவி கொடுத்த பொம்மை போல நான் அவர், பின்னால் கண்களைத் துடைத்தபடி சென்றேன்.
அருகிலிருந்த காப்பிக்கடைக்குச் சென்றதும் காப்பிக்கு ஆர்டர் கொடுத்தார். காப்பி வந்தது. நான் அமைதியாய் இருந்தேன். அவர் காப்பியை எடுத்துக் குடி என்றார். நான் மெதுவாகக் குடிக்க ஆரம்பித்தேன். அவரும் காப்பியை மெதுவாகக் குடித்தபடி , ஏன் அழுதாய்? என்று அவர் கேட்டார்.
நான் மெதுவாக மருத்துவமனைக்குச் சென்றதையும் மருத்துவர் கூறியதையும் அவரிடம் கூறினேன்.
அவர் பதில் ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்தார்.
நான் மெல்லிய குரலில்,” சாவதைத் தவிர வேறுவழியில்லை. இனிமேல் எனக்கு என்ன இருக்கிறது?” என்று சொல்லித் தலையைக் கவிழ்த்துக் கொண்டு அழத் தொடங்கினேன்.
‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது’ யோசித்து முடிவெடுக்க வேண்டும். என்றார்.
சிலையாய் இருந்தேன். ‘நான் எப்படி தனியாய் வாழுவது இனி என்னை யார் ஏற்றுக் கொள்வாங்க? பயமாக இருக்கிறது. என்று புலம்பினேன்.
இனி தனி ஆள் இல்லை . உனக்குள் ஒரு குழந்தை வளர்கிறது. மேலும் சாவது எளியதில்லை. தற்கொலை செய்யும் போது முடியாமல் போன என்ன செய்வாய்? பிறகு போலீஸ் கேஸ் அப்படின்னு பல சிரமங்கள் ஏற்படும் அப்படின்னு என்னென்னமோ சொன்னார். எனக்குள் இருந்த பயம் அதிகமாய் விட்டது. நிலைகுலைந்து போய்விட்டேன்.
ஓரிரு நாள்கள் கொடு .யோசித்து முடிவெடுப்போம். ஆனால் அதற்குள் மடத்தனமாய் எந்த முடிவுக்கும் போய்விடாதே! நான் உனக்கு என்னால் ஆனதைச் செய்கிறேன் என்று ஆதரவாய்ச் சொன்னார்.
‘சரி’ என்று கூறிவிட்டு அப்போது நான் வீட்டிற்குச் சென்று விட்டேன்.
மறுநாள் நான்அவரிடம் ’நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.’ என்று சொன்னேன். அவர் விழிகளை உயர்த்தி என்ன? என்பது போல் பார்த்தார்.
நான்,  நீங்களும் என்னுடன்  என் வீட்டிற்கு வந்து என்னுடனே தங்கி விடுங்கள்.” என்று கேட்டேன்.
இதைக் கேட்ட அவர் சற்றும் எதிர்பாராதவராய் அனலை மிதித்ததைப் போல் ஒரு அடி காலை எடுத்து பின்னால் வைத்தார். நானா நானா, நீ என்ன சொல்கிறாய்? என்று குழறினார்.
‘ஒன்றுமில்லை. நான் மிகத் தெளிவான முடிவுடன் தான் வந்திருக்கிறேன். இனிமேல் நீங்கள் தான், என் பாதுகாவலர்.’ என்று கூறி ஒரு வெற்றுச்சிரிப்பை உதிர்த்தேன்.
‘நானா’ என்று உணர்ச்சி வசப்பட்டு கத்தினார். ‘முடியாது ஊர் உலகம் என்ன சொல்லும் உன் சொத்துக்காக நான் வலைவீசிப்பிடித்தாகச் சொல்லும்’. என்றார். என்னால் முடிநாது என்று அழுத்தாமாய்க் கூறிவிட்டார்.
யார் வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள்தான் என்னுடன் வாழவேண்டும் எனக்குப் பக்கத் துணையாக என்றேன்.
அவர் ஒன்றும் புரியாது விழித்தார். பிறகு நாங்கள் இருவரும் ஆறவமர அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அதாவது இருவரும் ஒரே வீட்டில் வாசிப்பது. அவர் எனக்கு கணவராக அல்ல நான் அவருக்கு மனைவியாகவும் அல்ல என்று முடிவு எடுத்தோம். அதன்படி எனக்கு அவர் தாயாகவும் தந்தையாகவும் பாதுகாப்பாளராகவும் வாழ்ந்தார். நான் சொன்ன கட்டுப்பாடுகளை அவர் ஒரு போதும் மீறவில்லை. அவர் இரவு வேலைக்கும் நான் பகல் வேலைக்கும் மாறி மாறி போனோம். இதற்கு இடையில் நீயும் வளர்ந்தாய். அவர் எப்போதும் உன்னை தன் குழந்தையாகத் தான் பார்த்தார். ஊருக்கு அவர் என் கணவர். ஆனால் அவர் என்னை ஒரு மகளாகத்தான் எப்போதும் பார்த்தார். மேலும் அவரைச் சிறு வயதில் அம்மை நோய்தாக்கியதால் தன் ஆண்மையை இழந்தவராகி விட்டார். இவையெல்லாம் எங்களுக்கு உன்னை வளர்ப்பதற்கு சாதகமாகி விட்டன. உன்னால்தான் நான் இன்றும் உயிருடன் இருக்கிறேன். மகனே என்று கூறி குலுங்கிக் குலுங்கி வாய் விட்டு தன் அன்னை கதறி அழுவதைப் பார்த்த ரஜேஷ்க்கு ஒன்றும் சொல்லமுடியாமல் சிலையாய் நின்றான்.
அப்போ அவர் என் அப்பா இல்லையா என்று முணங்கினான்.
********************************************************************************************************************

Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *