அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி


(சூரியன் தோன்றி ஒளி வீசுவதை பிராசில் காட்டில் வாழும் கமயுரா மக்கள் பழங்கதையாக கூறிவது)
உலகம் உருவான ஆரம்ப காலத்தில், காடு ஒளியில்லாமல் இருண்டு இருந்தது.  சூரியனின் தங்கக் கதிர்கள் மரங்களின் மேல் இருந்த பறவைகளின் ராஜ்யத்தில் சிக்கிக் கொண்டன.  மக்கள் இருளிலேயே எழுந்து இருளிலேயே தூங்கச் சென்றனர்.  தங்களைச் சுற்றி இருப்பவர்களைக் காணவும் முடியாது தவித்தனர். சூரியக் கடவுளை ஒளி தரக் கேட்டு தினம் முறையிட்டனர்.
ஒரு நாள் “இது நல்லதல்ல.. என்னுடைய ஒளியை எல்லோரும் அனுபவிக்க வேண்டும்” என்று சூரியக் கடவுள் குயத், மக்களின் துன்பத்தைக் காணச் சகிக்காமல் கூறினார்.
அப்போது, அவரது சகோதரனான நிலவுக் கடவுள் இயே, “இது கழுகுகளின் அரசனான உருபுட்சனின் வேலை. அவன் மரங்களின் உச்சியையெல்லாம் ஒன்று சேர்த்து தைத்து, காட்டுக்குள் ஒளி வந்து சேர முடியாத படி தடுக்கிறான்” என்று விளக்கினார்.
“அப்படியென்றால், நான் இதை சரி செய்கிறேன். பொறுத்திருந்து பார்..” என்றார் வேகமாக குயத்.
அவர் கீழே பூமியை நோக்கினார்.  மக்கள் இருளில் தடுமாறி விழுந்தனர்.  மரத்தின் மேல் தலையை இடித்துக் கொண்டனர்.  அடர்ந்த வேர்களின் மேல் கால் தவறி விழுந்தனர்.
“நான் உருபுட்சனை கவனிக்க வேண்டும்.  அவனுக்கு இருளில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதைப் புரிய வைக்க வேண்டும்” என்று முடிவு செய்தார் குயத்.
அப்போது நதிக்கரையில், ஒரு இறந்த உடலைக் கண்டார்.  அதன் வெண்ணிறக் கண்கள் மட்டும் இருளில் பளிச்சென தெரிந்தது.  அந்த அழுகிய உடலின் மேல் ஏதோ ஊர்ந்து கொண்டிருந்தது.  அவை பசியுடன் அலையும் முட்டைப் புழுக்கள்.
குயத் ஈக்களின் அரசனை அழைத்தார்.  “உன்னுடைய பிரஜைகளை, இந்த உடலின் மேல் தங்கச் செய். அவற்றை முடிந்த மட்டும் அதிக ஒலியை ஏற்படுத்தச் செய்” என்று ஆணையிட்டார்.
ஈக்களின் இனமே ஒன்று கூடி அந்த உடலின் மேல் வட்டமிட்டன.  தங்கள் சிறியச் சிறகுகளை முடிந்த மட்டும் படபடக்கச் செய்து பேரொலி எழுப்பின.  ஓலி மரத்தின் மேல் அமர்ந்திருந்த கழுகுகளின் அரசன் உருபுட்சனை வந்தடைந்தது.
“இந்த ஈக்களுக்குக் கிடைந்த விருந்துப் பொருள் என்னவாயிருக்கும்?” என்று யோசித்தது.
கீழே பார்த்த போது, இறந்த உடலின் மேல் முட்டைப் புழுக்களும் ஈக்களும் மொய்த்திருப்பதைப் பார்த்தது.  உடனே அதற்கு பசி ஏற்பட்டது. உடனே உருபுட்சன் அந்த இறந்த மனிதனின் நெஞ்சிற்கு மேல் இறங்கியது.  பளிச்சிட்ட கண்களை முதலில் கொத்தி ஒரே மூச்சாக விழுங்கியது.  பிறகு உடல் சதையை உண்ண ஆரம்பித்தது.
“உனக்கு பிடித்திருக்கிறதா?” என்று கேட்டது ஈக்களின் அரசன்.
“ரொம்பவே நல்லாயிருக்கு..” என்று சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டது.
“இது சூரியக் கடவுளான குயத் உமக்குத் தந்த பரிசு. நாளை மற்றொன்றை அனுப்புவார்” என்றது.
“அப்படியென்றால், நான் நாளை மதியம் திரும்பி வருகிறேன்” என்று கூறிவிட்டு மரங்களிடையே பறந்து சென்றது.
ஈக்களின் அரசன் நேரே சூரியக் கடவுளிடம் சென்று நடந்ததைக் கூறியது.  குயத் உடன் மற்றொரு உடலைக் கண்டுபிடிக்கும் படி  பணித்தார்.  அதுவும் நதிக்கரையில் உருபுட்சன் கண்களில் படும்படியான இடத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
அன்றிரவு குயத், மரங்களின் ஊடே தரையில் இறங்கினார். சுற்றிலும் ஈரம் மணத்தது. பார்த்த இடங்களிலெல்லாம் அனைத்தும் அழுகிக் கிடந்தன.  மணம் வீசும் பூக்களும், மனதிற்கு இன்பம் அளிக்கும் வண்ணத்துப் பூச்சிகளும் அங்கு இருக்கவில்லை.  காளான்கள், தவளைகள், தேள்கள் மட்டுமே இரை தேடி அலைந்து கொண்டிருந்தன.  ஈக்களின் அரசன் கண்டு சொன்ன இறந்த சவத்திற்குள் புகுந்து அப்படியே அசைவில்லாமல் இருந்தார்.
சூரியக் கடவுள் இருப்பதை உணர்ந்த முட்டைப் புழுக்கள் பயந்து திரும்பின.  ஆனால் குயத் அவற்றை அன்புடன் அழைத்தார்.  காலை சென்றது. மதிய நேரத்தின் போது, ஈக்கள் அனைத்தும் குயத்தின் ஆணைப்படி உடலை மொய்க்க ஆரம்பித்தன. சத்தம் கேட்டு கழுகரசன் வந்தது.
“உருபுட்சன் வருகிறான்” என்று அறிவித்தது ஈக்களின் அரசன்.  கழுகுகளின் அரசன் நல்ல விருந்து கிடைத்ததை எண்ணி மிக்க மகிழ்ச்சியுடன் உடலின் மேல் வந்து அமர்ந்தான். மறுபடியும் முதலில் கண்களை கொத்தித் விழுங்கியது.  பிறகு சதையை ஒரு பிடி பிடித்தது. விரைவிலேயே வயிறு நிரம்பி, திருப்தியுடன் கிளம்ப எத்தனித்தது.
அப்போது, “ நான் என்னுடைய பிரஜைகளுக்கும் இதைச் சொல்ல வேண்டும்” என்று சற்று உரக்கச் சொன்னது.  பிறகு, தன் இறக்கையை விரித்துது.  அந்தத் தருணத்தில், குயத், தன் கைகளை நீட்டி, கழுகின் காலைப் பிடித்துக் கொண்டார். உருபுட்சன் கத்தியது.
“என்னை விடுங்கள்…” என்று சீறியது.
“முடியாது.. நீ இங்கேயே இருளில் இருந்து, ஈரம் என்னவென்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார் குயத்.
“நான் பறவை.  நான் ஒளியில் வாழப் பிறந்தவன்” என்று வாதித்தது.
“மக்களுமே ஒளியில் இருக்க வேண்டியவர்கள் தான். ஆனால் நீ அவர்களுக்கு ஒளி தராமல் தண்டிக்கிறாய்” என்றார் குயத்.
கழுகுகளின் அரசன் தப்பிக்க இறக்கையை படபடத்தது.
“ஒளி தருவதாக சத்தியம் செய்யாமல், நான் உன்னை விட மாட்டேன்” என்றார் கண்டிப்புடன்.
“நான் ஒரு காலும் சத்தியம் செய்ய மாட்டேன்”.
“அப்படியென்றால் நீயும் இருளிலேயே தங்கி விடு” என்றார் மேலும் திடமாக.
உருபுட்சன் கடைசியாக தப்பிக்க மற்றொரு முறை முயன்றது.  ஆனால் சூரியக் கடவுளின் இறுகிய பிடியிலிருந்து தப்புவது அத்தனை எளிதானதல்லவே.
தப்பிக்க முடியாது தவித்தது.
இறுதியில், “நான் பணிகிறேன்.  என்னை விடுங்கள்.. நான் காட்டிற்கு ஒளி தருகிறேன்” என்று கீச்சிட்டது.
“முடியாது.. முதலில் ஒளியைத் தா.. பிறகு விடுகிறேன்”  என்றார் குயத்.
கழுகு அரசன் தன் தொண்டர் படையை கூட்டி, “காட்டில் ஒளி பரவச் செய்யுங்கள்..” என்று ஆணையிட்டது.
கழுகுகள் அனைத்தும் மரங்களின் உச்சிக்குச் சென்று, தங்கள் நீண்ட அலகுகளால், தைத்திருந்த மரக்கிளைகளை பிரித்து விட்டன.
சூரிய ஒளி காட்டிற்குள் புகுந்தது.  காட்டை ஒளிரச் செய்தது.
முதலில் மக்களின் கண்களை கூசும்படியாக ஒளி இருந்தது.  பலரும் அதிர்ந்து போயினர்.  பிறகு சற்று நேரம் சென்றதும், கண்கள் ஒளிக்கு பழக்கமானதும், தங்கள் முகத்தை சூரியனுக்கு நேரே காட்டி, இதமான சூட்டை அனுபவித்தனர்.
அது முதல், நாள்தோறும், சூரிய ஒளி காட்டை பிரகாசிக்கச் செய்தது.  விதவிதமான மலர்கள் மலர்ந்து நறுமணம் பரப்பின.  பலவிதமான உயிரினங்கள் மகிழ்ச்சியுடன் காட்டை வலம் வந்தன.
Series Navigationவளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்