அம்மா

பிச்சினிக்காடு இளங்கோ

எல்லார்க்கும் போலத்தான்
எனக்கும் அம்மா
ஆனால்
என் அம்மா
என் அம்மாதான்

தைரியத்தின் படிமம்
பன்முகச்சிந்தனையின் வடிவம்
இரக்கத்தின் குறியீடு

உலகத்திற்காகவும்
உலகமாயும் சிந்தித்தவள்
சிந்திக்கச்சொல்பவள்

சகோதரப்பாசம், பற்று
உறவினர்மீது பரிவு ,அக்கறை
உதிரத்தில் கலந்தவள்
செயலில் காட்டியவள்

கொடுத்துதவுவதில்
அப்பாவுக்குப்போட்டி

சொல்லில் செயலில்
நேர்மையற்றவரை
நேர்நின்று பேசாதவள்

வாழ்க்கை இலக்கணம்
வகுத்தவள்
வாழ்ந்துகாட்டியவள்

லட்சுமி மவனா
என்றுதான் என்னை
பெண்சமூகம் விளித்தது
ஆறுமவத்தண்ணன் மவனா
என
ஆண்சமூகம் அழைத்தது

குழந்தைகளில்
பேதம்பார்க்காத தெய்வம்
வயிற்றுக்குச்சோறிடல்வேண்டும்
என்ற
பாரதி எண்ணத்தின்
நிஜம் அம்மா

தலைமைப்பண்பு
மிக்க தாய்
கூர்த்த
சிந்தனைக்குச்சொந்தம்

தொலைநோக்கு
மிக்கவர்

அம்மா இலக்குமியின்
மகன் என்பதே
என் முகவரி

(20.3.2014 எழுதியது. அம்மா
25.10 2016 மரணமெய்திய நாள்)

Series Navigationஅம்மா