அம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘

Spread the love

சிறகு இரவிச்சந்திரன்

முகநூலில் ஒரு தகவல் அனுப்பியிருந்தார் தமிழ் ஸ்டூடியோ அருண். வழக்கமாக அவர் நடத்தும் நிகழ்வுகளுக்கு இப்போதெல்லாம் என்னால் போக முடிவதில்லை. ஒன்று எழும்பூரில் நடத்துவார். இல்லை பெரியார் திடலில் நடத்துவார். இருசக்கர வாகனத்தை, அதிக தூரம் ஓட்டும் வயதை, நான் கடந்து விட்டதால், இப்போதெல்லாம் பேருந்துதான். ஆனால், அதில் பயணப்படும் போது கிடைக்கும் அனுபவ அவஸ்தை, என் போன்ற மூத்த ‘குடி’மகன்களுக்கு சொல்லி மாளாது. இம்முறையும் அசிரத்தையாகத்தான், அருணின் தகவலை ஆராய்ந்தேன். அட! மீண்டும் அருகாமைக்கு, கலைஞர் நகருக்கு பெயர்ந்து விட்டார். துண்டிக்கப்பட்ட தொடர்பை புதுப்பிக்க, தியேட்டர் லேப் எனும் முனுசாமி சாலை கூடத்திற்குப் போனேன்.
அம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘ குறும்படம். இதை குறும்படம் என்று சொல்வதற்கில்லை. மூன்று மணி நேரம் ஓடும் திரைப்படங்கள் வந்த காலத்தில் இவைகளைக் குறும்படம் என்று சொன்னார்கள். இப்போதெல்லாம் 120 நிமிடங்களில் படம் எடுத்து விடுகிறார்கள். அதனால் 83 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை முக்கால் படம் என்றே சொல்ல வேண்டும்.
எல். வைத்தியநாதன் இசையில் பாடல்களுடன் ஒரு அருமையான கிராமியப் படத்தை தந்திருக்கிறார் அம்ஷன் குமார். அடிப்படை கி.ராஜநாராயணனின் “கிடை” நாவல். அதிக சினிமாத்தனம் இல்லாமல், ஒரு பழைய பாரதிராஜா படம் போல இயக்கியிருக்கும் அம்ஷன் நிசமாகவே அம்ச குமார்தான்.

செவனி ( பூர்வஜா ) எனும் பெண்ணைப் பற்றிய கதை. ஆடு மேய்க்கும் கீழ் சாதி பெண் அவள். அவ்வூரில் சாதி வேற்றுமை கிடையாது. எல்லா சாதியினர் ஆடுகளும் ஒரே கிடையில்.. கிடையின் பொறுப்பாளர் கீதாரி. ( பாரதிமணி – ஆசாமியை அடையாளமே தெரியவில்லை. ஒட்டு மீசையும், ஒட்டி வைத்த செயற்கை முடியும் கண்ணை மறைக்கின்றன.. ஆனால் காதில் விழும் குரல் காட்டிக் கொடுத்து விடுகிறது) செவனி பெயரைப் போலவே செவத்த பெண்.. அவளுக்கு மேல்சாதி எல்லப்பன் ( கணேஷ்குமார் ) மீது காதல்.. பஞ்சு செடிகளை மிதித்த ஆட்டுக்கூட்டத்தை கண்டுபிடிக்க வரும் சுப்பையா ( பாலாசிங்), இவர்கள் காதலை கண்டுவிடுகிறார். அதனால், இந்தக் காதல் ஊராருக்கு தெரிந்து விடுகிறது. ஊரைவிட்டு பஞ்சம் பிழைக்க வந்த கூட்டத்தின் இப்போதைய தலைமுறையின் வாரிசு எல்லப்பன். ஆனால் அவனோ மேல் சாதி.
“ ஒங்க சாதியிலே என்னை கட்டிக்க ஒத்துக்குவாங்களா? “
“ எங்க சாதியிலேதான் ரெண்டு பொண்டாட்டி கட்ட முடியுமே! எங்க சாதியில ஒண்ணைக் கட்டிக்கிறேன்.. அப்புறம் ரெண்டாவதா ஒன்னையும் கட்டிக்கிறேன்”
எல்லப்பனின் வார்த்தைகளை நம்பி தன்னைக் கொடுக்கிறாள் செவனி. ஆனால் ஊர் பஞ்சாயத்து எல்லப்பனை வீட்டோடு முடக்குகிறது. அவனுக்கு திருமணமும் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறது. எங்கே செவனியை ரெண்டாம் தாரமாக கல்யாணம் செய்து கொண்டு விடுவானோ என்கிற பயத்தில் அவனுடைய அம்மா (ஸ்ரீபாலா) தன் அண்ணன் மகள்கள் இருவரையும் பேசி முடித்து விடுகிறாள்.
அடாவடியாக அரசு நிலங்களுக்கு வரி வசூலிக்கும் ஜமீந்தார், அதை அரசுக்கு கட்டவேயில்லை. வராத வரியை வசூல் பண்ண வரும் வெள்ளைக்கார வரி அதிகாரி ஜான் வில்லியம்ஸ், செவனியின் வெள்ளந்தி குணத்தையும், அவளுடைய அறிவையும் கண்டு வியந்து போகிறான். ஜமீந்தாரின் பித்தலாட்ட நடவடிக்கைகளை ஊரார் மூலம் அறியும் துரை, உழவர்களுக்கே நிலம் சொந்தம் எனும் உத்தரவை பெற்றுத் தருகிறார். நியாயமான வரி நேரிடையாக அரசுக்கே போய் சேரும்படி செய்கிறார்.
தனக்கு நியாயம் வேண்டும் என்று கிடையை மறிக்கிறாள் செவனி. கிதாரி முன்னிலையில் சுப்பையாவும் மற்ற பெரியவர்களும் ஒரு முடிவு சொல்கிறார்கள். ஊருக்கு துரை மூலம் நல்லது செய்த செவனி, எல்லப்பனை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் அந்த ஊரில் வாழ முடியாது. சாதி கவுரவம் அதற்கு இடம் கொடுக்காது.
காதலுக்காக, நேசித்த மண்ணை விட மறுக்கிறாள் செவனி. காதலை உதறி,மீண்டும் ஆட்டுக்கூட்டத்தோடு இணைகிறாள். எல்லப்பன் திருமணமும் நடக்கிறது. மீண்டும் ஆடு மேய்க்க வரும் எல்லப்பனை புறந்தள்ளுகிறாள் செவனி. ஆட்டுக் கூட்டதினிடையே ஒற்றை பெண்ணாக நிற்கும் செவனிக்கு, காற்றில் பறந்து வரும் இறகு கிடைக்கிறது. அது அவளுக்கு விருப்பமான வெள்ளைக்கார துரையின் இறகு பேனா.
செவனியைக் கண் முன்னே கொண்டு வருகிறார் பூர்வஜா. சரியான வாய்ப்பு கிடைக்காததால், இப்போது மெகா சீரியல்களில் முகாமிட்டிருக்கிறார். நஷ்டம் திரை உலகிற்குத்தான்.
அம்ஷன் குமார் பிடிவாதமாக குறும்படங்களே எடுப்பேன் என்று சபதம் செய்து ஒதுங்கி இருக்கிறார். இது கூட, ஒரே ஒரு காட்சி சத்யம் திரையரங்கில் ஓடியதாக தகவல். இன்னொரு பாரதிராஜாவை இழந்து விட்டது தமிழ் திரையுலகம்.

Series Navigationதாயின் அரவணைப்புபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)