அருணா சுப்ரமணியன் –

Spread the love
  1. அருணா சுப்ரமணியன்

  2. மறந்த வரம்

 

இதமாய் வருடுது காற்று

இன்பத் தேனாய்  பாயுது

குருவிகளின் கொஞ்சல்

குதித்து ஓடும் அணிலின்

துள்ளலில் அத்தனை குதூகலம்

பூக்களின் வண்ணங்கள்

கண்களை குளிர்வித்தன

நடைப்பயிற்சியின்

ஒவ்வொரு சுற்றிலும்

என்னை நோக்கி வீசப்பட்ட

குழந்தையின் சிரிப்புகளை

பத்திரமாய்ச் சேகரித்தேன்

கூடவே மறக்காமல் இருக்க

மனதிடம் சொல்லிவைத்தேன்..

மறந்து வைத்த கைபேசியை

நினைவாக நாளையும்

மறந்து வர வேண்டுமென….

  1. எரிதலின் பொருட்டு

எங்கோ காய்த்து வெடித்த

பஞ்சு திரிக்கப்படுகிறது

எவ்விடம் தீபம் ஆவோம்

அறிவதில்லை திரிகள்

விளக்குகளை ஏற்றும் சிலர்

எண்ணெய் நிரப்பியும்

திரிகளை தூண்டியும்

தீபத்தின் ஆயுளை

நீட்டிக்கின்றனர்..

விளக்கு ஏற்றியதையே மறந்தவர்

தீபம் அணைவதையோ

திரிகள் கருகுவதையோ

உணர்வதில்லை…

அனைத்தையும்

அவதானிக்கும்

திரிகள் மட்டும்

தீபங்களாக

எரிதலின் பொருட்டே

வாழ்கின்றன…

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்மொழிவது சுகம் ஜூன் 24 2017