அருள்மிகு  தெப்பக்குளம்…

This entry is part 3 of 22 in the series 18 ஜூலை 2021

 

 

    ச. சிவபிரகாஷ்                                                                  

(  மயிலாப்பூர்   அருள்மிகு கபாலீஸ்வரர்  திருக்கோயில்  குளத்தை மாணவ   பருவத்தில்  கண்ணுற்ற   போது)

 

 

பள்ளி  செல்ல  பை  தூக்கி,

பரிட்சைக்கு  நேரமாச்சே!

அவசர  அவசியமாய்,

திருக்கோயில்  படி  தொட்டு,

கன்னம்  தட்டி,

தலை  வணங்கி  – நான்  புரிந்தேன்  பாசாங்கு.

 

பாதி  பேர்  அப்படியே,

மீதி  பேர்  எப்படியோ ?

பள்ளி  செல்ல  பை தூக்கி,

க(ந) டக்கும்    தூரம்  மிச்சமென,

கோயில்   பாச்சைபடி  குளமிறங்கி,

மண்  மிதித்து,

எதிர்புறம்  படி  ஏறி,

எதிர்ப்பட்ட  சாலை  கடந்தும்,

எழுச்சிமிகு  பள்ளியை  அடைந்து,

விடுமுறைக்கு  இன்னும்,

எத்தனை  நாள்  என  நினைத்து.

 

பரிட்சை  பாக்கி  இரண்டு,

இன்று  கணக்கு – என  கணக்கிட்டு  எழுதி,

கணக்காய் ,

எல்லாமுமாய்   முடித்(ந்)து,

விருந்திற்கு  காத்திருக்கும்,

காக்கையை   போல்,

என்னோடு  தோழர்களும்…

 

இம்முறை,

மட்டையோடு  பந்தும்,

மற்றவரோடு  நானும் …

 

… மைதானத்தில்!…

 

“வெய்யில்ல   எங்கடா  போற  நீ ?”-இது

அம்மாவின்   கூக்குரல்,

 

‘எங்கேயும்   இல்லேம்மா,

நம்ம  குளத்தில்  தான் ‘-இது  நான்.

 

மைதானமா ?…

குளமா ?…

 

ஒரு  திங்கள்,

ஏதோ  நாளில் –  இந்த  “குளத்தில்”

வழுக்கும்  படியிலும்,

வரிசையாய்  நின்றிருந்த  பெருங்கூட்டம்.

 

வண்ண  மின்  விளக்கு  அலங்கரிப்பில்,

வலம்  வந்தார்  எம்  பெருமான்.

… “தெப்போற்சவம்”…

மாட வீதி   எங்கும்  விழா  கோலம்,

பாசி  மணி,

பச்சை  ரிப்பன்,

பஞ்சு  மிட்டாய்,

பறக்கும்  பலூன்கள், – என்று

அங்கங்கே  இருந்தவற்றை  வாங்க,

சிறு கூட்டம்.

மூன்று  நாளும்  இப்படி தான்.,

 

உற்சாகமாய்  உலா  வந்த  உற்சவரின்

      “தெப்பத்தில்”…

காக்கி  சட்டைகளும்,

கரை  வேஷ்டிகளும்,

வேண்டியவர்களும், ஆக்கிரமிப்பதில்,

எனக்கும்,

தெப்பமேற  ஆசை.

 

அப்பாவிடம்  சொன்ன  போது,

ஏனோ…

அடுத்த முறை  பார்க்கலாமென்றார்,

அடுத்த  முறையும்  வந்தது,

ஆனால்,

தண்ணீரும்   குளத்திலில்லை,

தெப்பமும்   ஓடவில்லை.

 

  

                    

 

                                                                                                               ச. சிவபிரகாஷ்

 

 

 

 

 

 

 

 

Series Navigationஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின்  குருவிக்கூடுஒளிப்படங்களும் நாமும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *