அர்த்தமுண்டு
- குணா (எ) குணசேகரன்
பிறந்தவுடன் புரிந்ததில்லை
புரிவதெது தெளியவில்லை
தெளிந்தவுடன் புரிபட்டவை…
புரிபட்டதாய் தெளிவதில்லை
அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்
யார் பொதித்த அர்த்தங்கள்
நமக்கு பொதிப்பவர் கிளிப்பிள்ளை
நாம் பேசுவதில் பரிபாஷை
உணர தலைப்பட்டவர் நிறுத்துவதில்லை
உணர்ந்து பட்டவர் பேசுவதில்லை
பன்மொழிக் கலப்படங்கள்
பளபளக்கும் உருமாற்றம்
இணை தேடும் காலத்து
பெரிது படா சாத்திரங்கள்
இன்னதுக்காய் உணர்ந்ததில்லை
இன்னதென்று உணர்வதுமில்லை
வாழ்வதற்கு வரையறைகள்
வாழ்ந்து பட்ட தெளிவுரைகள்
அதனுள் உதித்த அர்த்தங்கள்
அர்த்தமுள்ள வாழ்க்கையாக்கும்
அர்த்தமின்றி அமைந்தாலும்
அர்த்தமில்லா வாழ்க்கையாகா
- குணா (எ) குணசேகரன்