அற்புத மலருக்கு ஒரு அஞ்சலி

 

சங்கம் தழைத்த

கூடல் மாநகர் காற்றோடு

கூடவே மலர்ந்தது அங்கே

ஒரு அற்புத மலர்…

அபூர்வமாய் இருந்தது…

தாமரையாகவே தெரிந்தது…

 

அதன் இதழ்கள், தண்டு,

இலை, வேரெங்கிலும்

ஒரு போற்றுதலுக்குரிய ஒரு

புனித ஒளியின்

பிரவாகத்தை காண இயன்றது…

சேறுகளும், சகதிகளும்

அதை ஒன்றும் செய்யவில்லை…

 

மீன்கள், தவளைகள்,

புழுக்கள், பூச்சிகளென

எல்லோரையும் அன்பாய்

அரவணைத்தது அந்த மலர்.

அதன் வேர்கள்

ஒரு பெரிய தணியா தாகத்துடன்

விரிந்து விரிந்து பூமியின்

அகல பாதாளங்களிலெல்லாம்

சென்று தேடித் தேடி

அனைத்தையும்

உணவாக்கிக் கொண்டன…

 

அதன் வேர்கள்

எடுத்தவையெல்லாம்

எழுத்துக்களாய் கொட்டின…

சில நேரங்களில்

அந்த அழகிய மலரின்

இதழ்களெல்லாம்

நெருப்பு இதழ்களாய்

அச்சமூட்டுகிற சிகப்பில்

தகித்தன..

சில நேரங்களில்

காற்றின் அசைவுகளுக்கு

ஆடுகிற தன்மையுடனான

மென்மை மேலோங்க

இசையாய் அசைந்தன

அந்த இதழ்கள்…

 

சிரித்தன அந்த இதழ்கள்..

சிலிர்த்தன..அழுதன..

அரவணைத்தன..

 

ஆயிரம் மாதங்கள் போலாகியும்

வாசம் மாறாதிருந்தது

அந்த வாடாமலர்…

 

நிலக் கோட்டையில்

மலர்ந்து

செங்கோட்டையில்

சிலிர்த்து

பூங் கோட்டைக்குள்

புகுந்து புன்னகைத்துக்

கொண்டிருந்தது அந்த மலர்…

 

ஒரு சரஸ்வதி பூஜை அன்று

கலைமகள் அங்கு வந்தாள்..

அந்த மலரை

அவள் பறித்துக் கொண்டாள்..

அதன் மேல்

அமர்ந்து கொண்டாள்.

அந்த மலரின்

பெயர்

வெங்கட் சாமிநாதன்.

Series Navigationஆதாரம்இளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ. இரவீந்திரன் கவிதைத் தொகுதி பவுர்ணமி இரவின் பேரலை : சுப்ரபாரதிமணியன்