ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-18

இடம்: ஒய்.எம்.சி.ஏ. கட்டிடம்.

நேரம்: மாலை மணி ஐந்தரை.

உறுப்பினர்: ஜான்ஸன், ரங்கையர், மோனிகா மில்லர், குழந்தை யோகி.

(சூழ்நிலை: ஜான்ஸனும் ரங்கையரும் உட்கார்ந்திருக்கிறார்கள். மோனிகா மில்லர், கைக் குழந்தையுடன் அந்த அறைக்குள் பிரவேசிக்கிறாள்)

ஜான்ஸன்: இதோ மிஸ்டர் ரங்கையர், இவள்தான் ஒங்கள் டாட்டர்-இன்-லா, மிஸஸ் மோனிகா மில்லர். திஸ் ஈஸ் யுவர் ஃபாதர் இன்-லா.

மோனிகா மில்லர்: நமஸ்கார் மாமா (தரையில் குழந்தையை அவர் காலடியில் வைத்துவிட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுகிறாள்)

ரங்கையர்: (ஒன்றும் பேசாமல் விம்முகிறார்) நீ எழுந்திரும்மா எழுந்திரு.

ஜான்ஸன்: யு ப்ளீஸ் கெட் அப்

(மோனிகா எழுந்திருக்கிறாள். குழந்தை யோகி திடீரென்று வீறிட்டு அழுகிறான்)

ரங்கையர்: (குனிந்து பார்த்தவர் பாசத்தோடு அவனைத் தூக்கிக் கொள்கிறார்) ராகவா, ராகவா, அப்படியே அச்சு அசலா ஒன் மாதிரியே இருக்கானேடா கொழந்தே

(விம்முகிறார்)

ஜான்ஸன்: மிஸ்டர் ரங்கையர், ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் ஸெல்ஃப்! அவளைப் பாருங்கோ நீங்க அள்தா அவளும் அளுவா! ப்ளீஸ் கண்ட்ரோல்.

ரங்கையர்: ஹே ராமா! ராமா… நேக்கு ஏண்டா இப்படி ஒரு சோதனை

(குழந்தையின் அழுகை ஓய்கிறது)

மோனிகா: கேன் ஹி அக்ஸெப்ட் அஸ் மிஸ்டர் ஜான்ஸன்?

ரங்கையர்: என்ன கேழ்க்கறா?

ஜான்ஸன்: நீங்க அவளையும் கொளந்தயயும் ஏத்துவீங்களாண்ணு கேக்கறா!

ரங்கையர்: இதென்ன கேள்வி? நீ என் மருமகள் தாம்மா! லோகம் என்ன சொன்னாலும், ஜாதியும் ஆசாரமும் என்ன சொன்னாலும் ராகவனின் விதவையா வாழணும்னு தேடிட்டு வந்திருக்கியே நீ என் மருமகள்தான். இந்தக் குழந்தை யோகி என் பேரன்தான். இந்த ரங்கனோட வம்ச வித்து தாம்மா இவன்.

மோனிகா: (மீண்டும் அவர் காலில் விழப் போகிறாள்) மாமா.

ரங்கையர்: (அவளைத் தடுத்து) ஒரு தரம் விழுந்துட்டே… போறும்! மாமனாருக்குச் செய்ய வேண்டிய மரியாதை அவ்வளவுதான்! வா, நம்ம ஆத்துக்குப் போவோம்.

(மோனிகா புரிந்து கொள்ள முடியாமல் ஜான்ஸனைப் பார்க்கிறாள்)

மோனிகா: வாட் டஸ் ஹி ஸே?

ஜான்ஸன்: ஹி ஆஸ்க்ஸ் யு டு கம் டு ஹிஸ்… ஸாரி யுவர் ஹவுஸ். வெய்ட் எ வைல். ரங்கையர், நான் ஒரு ஆடோ கூப்டிக்கிணு வரச் சொல்றேன். ப்ளீஸ் வெய்ட்!

(குழந்தை மீண்டும் அழுகிறது)

ரங்கையர்: இந்தாம்மா குழந்தைக்குப் பசிக்கறது போலே இருக்கு

(குழந்தையை நீட்ட, அவள் வாங்கிக் கொள்கிறாள்)

(திரை)

[தொடரும்]

Series Navigationவரிசைதிருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி – தமிழாய்வுத்துறை 2015 பிப்.5,6 நாள்களில் நிகழ்த்தும் துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம்