ஆற்றங்கரைப் பிள்ளையார்

தி.ந.இளங்கோவன்

பருவப் பெண்ணின்

செருக்கோடு வளைந்து

நெளிந்து பாய்கிறது நதி.

கரையோரம் பொறுக்க

யாருமின்றி உதிர்ந்து

கிடக்கின்றன நாவற்பழங்கள்.

அப்பா தூக்கியெறிந்த

உணவுத்தட்டு ஆடி

அடங்குகிறது முற்றத்தில்

சோற்றுப்பருக்கைகளின் மீது.

செத்த எலியொன்றை

சிதைத்துப் புசிக்கின்றன

பசி கொண்ட காகங்கள்.

சருகு மெத்தையில்

சுருண்டு கிடக்குதொரு நாகம்.

காய்களின் கனம் தாங்காமல்

தரை தொடுகிறது மாமரக்கிளை.

தனது கடைசி உணவுக்காய்

காய்க்கிறது தினமென்று

உணராப் பெண்ணொருத்தி

அம்மரத்தின் பூப்பறித்து

தினந்தினம் தொழுகின்றாள்,

எல்லாம் அறிந்தும்

 

எதுவும் அறியாதது போலிருக்கும்

அரளி மலர் சூடிய

ஆற்றங்கரைப் பிள்ளையாரை !

 

Series Navigationகருப்பு விலைமகளொருத்திகவிமுகில் – தாராபாரதி விருது வழங்கும் விழா