இதயம் துடிக்கும்

 

நூறு ரூபாயில்
தெரியும் புன்னகை
சொல்லும் நம்மின்
சுதந்திர மாளிகை.
நான்கு வர்ணம்
தகுமோ என்றான்
தாழ் ஜனம் எல்லாம்
ஹரிஜனம் என்றான்.
வெள்ளையன்
தந்ததை
மூவர்ணம்
ஆக்கினோம்.
அடுத்தவர் மதமும்
நம்மவர் மதம் தான்
மானுடமே உயர்
மதமெனச் சொன்னான்.
ரகுபதி ராகவன்
ஈஸ்வரன் அல்லா
எப்பெயருள்ளும்
ஒலிப்பது அன்பே.
ஒவ்வொரு தோளிலும்
சிலுவைகள் உண்டு.
ஒவ்வொரு கையிலும்
தொழுகைகள் உண்டு.
ஆழ்ந்த தியானம்
உளந்தனை நூற்கும்
குவிந்த சிந்தனை
இமயங்கள் நகர்த்தும்.
கோடிக் கோடி
கைகள் உண்டு.
கிராமத்தொழிலே
நம் செல்வம்.
துப்பாக்கி காட்டி
விலங்குகள் பூட்டியும்
வதைபல செய்தான்
கும்பினியாளன்.
ஒருகுரல் எடுத்து
ஓங்கிச்சொன்னோம்
வந்தேமாதரம்
வந்தேமாதரம்
அணுப்போர் பூதம்
அகிலம் எல்லாம்.
அப்போது எழுப்பியது
புகை மண்டலம்.
அண்ணல் எழுப்பிய‌
அறப்போர் கண்டு
மேலையர் எல்லாம்
கீழோர் ஆனார்.
உப்பை வைத்தொரு
சத்தியாகிரகம்.
குப்பை ஆனது
வெள்ளையன் சட்டம்.
தண்டி யாத்திரை
தர்மத்தின் யாத்திரை.
கடலே அஞ்சிய‌
காவிய சுநாமி.
தேவகுமாரன்
காட்டச்சொன்ன‌
இன்னொரு கன்னம்
இருந்தது இங்கே.
வெள்ளையன் வெட்கிட‌
இந்தியன் வென்றிட‌
புதிதாய் சரித்திரப்
பக்கம் புரட்டினோம்.
“வெளியேறு” என்றொரு
வேள்வி துவக்கினான்
அன்பின் முனிவன்
அண்ணல் காந்தி.
மக்கள் வெள்ளம்
மக்கள் வெள்ளம்
வெள்ளைச் சேனை
வெல வெலத்ததுவே.
பீரங்கிகள் தீனியாய்
பிய்ந்து விழும்போதும்
நம் சுதந்திர தாகமே
தீப்புயல் ஆனது.
வெற்றி என்ற
மூன்றெழுத்தின்
நடுவெழுத்து
நகர்ந்து கொண்டது.
வெறி ஒன்று நம்மிடை
வேடம் போட்டது.
சத்தியன் மார்பு
சல்லடை ஆனது.
இன்றும் கேட்கிறோம்
ரத்தவாடையின்
சத்தம் கேட்கிறோம்.
சத்தம் கேட்கிறோம்.
சரிந்திட மாட்டோம்.
உதிர்ந்திட மாட்டோம்.
மகாத்மா எனும்
மாபெரும் ஆயுதம்
நம்மிடை உண்டு
சாய்ந்திட மாட்டோம்.
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
எல்லா மொழியும்
இதிலே ஒலிக்கும்
மொழிபெயர்த்துக்
கேட்டாலும்
இந்தியா என்றே
இதயம் துடிக்கும்.

========================

Series Navigationமயிலிறகு…!கவிதைகள்