இந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்

astro

பிரகாஷ்

பிறப்பால் நான் ஒரு இந்து. இந்து மதத்தில் பல்வேறு குறைகள் இருப்பினும், அவை என்னை பாதித்த்தில்லை. அதனால் அவை பற்றி நான் அதிகம் சிந்தித்த்தும் இல்லை. ஆனால் என்னை அதிகம் பாதித்தது இந்துக்களிடமிருக்கும் திருமணத்திற்கு ஜோதிடம் பார்க்கும் வழக்கம். ஜோதிட சாஸ்திரம் முதலில் தட்பவெட்ப சூழ்நிலையை முன்கூட்டி அறிய உருவாகிய சாஸ்திரமாகும். தட்பவெட்ப சூழ்நிலைகள் பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை ஒட்டி அமைகின்றது. பூமி சுரியனைச் சுற்றி வருகிறதன்றறியும் முன்னரே நம் முன்னோர்கள் நட்சத்திர மண்டலங்கள் அமைப்பைக் கொண்டு தட்ப வெட்ப சுழ்நிலைகளை கணிக்க பயின்றிருக்கின்றனர் என்பது வியப்பிற்கும் கர்வத்திர்க்கும் உரிய விஷயம்தான். இதுமாதிரியான வான் சாஸ்திரங்கள் பழம்பெரும் நாகரிகங்கள் பலவற்றிலும் தோன்றியுள்ளன. இந்துக்கள் மட்டும் எப்படியோ இந்த சாஸ்திரத்தை திருமணப்பொருத்த்த்திற்காக அதீத அளவில் தத்தெடுத்துக் கொண்டுள்ளனர். மேற்கத்திய கலாச்சாரங்களில் ஜாதக அமைப்பின் மேல் ஒரு வகை நாட்டமிருந்தாலும் இந்துக்களை போன்று பைத்தியக்காரத்தனம் இல்லை. ஏன் இந்த நிலை ? ஜாதகம் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை நிர்ணயிக்க வல்லதா ? இது பற்றிய என் கருத்தை இக்கட்டுரையின் மூலம் முன் வைக்க முனைகிறேன்.

ஜாதகம் எவ்வாறு கணிக்கப்படுகின்றது ? ஒருவர் பிறக்கும் நேரத்தில் கிரகங்கள் எந்தெந்த கோணங்களில் இருக்கின்றதென்பதை முதலில் பதிவு செய்கின்றனர். இக்கோணங்கள் நட்சத்திர மண்டலங்களின் இருப்பை ஒட்டி அறியப்படுகின்றன. 360 கோணத்தை 12 ஆக பிரித்து 12 ராசிகள் எனகூறுகின்றனர். ராசிகளை நட்சத்திர மண்டலங்களின் இருப்பைக் கொண்டு வகுந்து 27 (அல்லது 28) நட்சத்திரமாகப் பிரிக்கின்றனர். 27 நட்சத்திரங்களையும் நட்சத்திரத்திற்கு நான்கு பாடமென 108 பாடங்களாக அடுத்த வகுத்தல் நடக்கின்றது. மொத்த்த்தில் ஒருவர் பிறக்கும் போது நட்சத்திரங்களும் கோள்களும் எந்தெந்த கோணத்தில் அண்ட வெளியில் நிலவுகின்றன என்பதே ஜாதக்க குறிப்பு. இது வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவர் பிறக்கும்போது இருக்கும் கோள்களின் அமைப்பு அவரின் personality யையும், அவருடைய வாழ்நாள் முழுவதும் நிகழப்போகும் இன்ப துன்பங்களையும், அவர் இன்னாருடன் திருமணம் செய்தால் செழித்து வாழ்வார் என்பதையும் நிர்ணயிக்கவல்லதா ? ஒருவருடைய personalityயை நிர்ணயிப்பது எது ? சற்று உயிர் அறிவியலுக்குள் நுழைவோம். ஆண்-பெண் சேர்க்கையினால் கரு உருவாகிறது. ஒவ்வொரு கரு உருவாகும்போதும், தந்தை (ஆண்) மற்றும் தாயின் (பெண்) DNAக்கள் – பொதுவான பாஷையில் ஜீன்கள் ஒரு கலவையில் சேர்கின்றன. இதில் தந்தையின் எந்தெந்தய ஜீன்களும் தாயின் எந்தெந்த ஜீன்களும் சேர்ந்து இந்த கலவை உருவாகிறதோ (permutation and combination of father’s and mother’s genes/DNA) அதை வைத்தே அந்த கருவின் ஜீன்கள் அமைகின்றன. இது முதல் படி. நாம் தலையெழுத்து என்று பேச்சு வாக்கில் சொல்கிறோமே – இந்த கலவை விகிதாச்சாரம்தான் முதல் தலையெழுத்து. இதை உயிரியல் ரீதியான ஜனன ஜாதகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்த கலவை விகிதாச்சாரத்தை பல நூறாயிரம் ஒளி ஆண்டுகள் (light years) அல்லது பல நுறாயிரம் மைல்கள் தள்ளியிருக்கும் கிரகங்களின் விசையானது நிர்ணயிக்கவல்லதா ? அவ்வாறு மிகத்துள்ளியமாக ஒரு பெண்ணின் கருவறைக்குள் நிகழும் DNAக்களின் பகிர்தலை கிரகங்கள் நிர்ணயித்தால் மட்டுமே ஜனன ஜாதகத்தையொட்டி கணக்கிடப்படும் கணக்குகள் யாவும் கணக்குகள் ஆகும். இல்லையேல் முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகும். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மயில்கல் தொலைவில் உள்ள கிரகங்கள் ஜீன்களின் கலவையை (genetic recombination) நிர்ணயிக்க வல்லன என்பதற்கான எவ்வித சான்றுமிருப்பதாக என் அறிவிற்கு எட்டவில்லை. ஜோதிட வல்லுநர்களின் வாதம் இதுவாகவேயிருக்கும்: Absence of Evidence is not Evidence of Absence. அதாவது சான்றுகள் இல்லாததினாலேயே சான்றேயில்லை என்றாகிவிடாது என்று கூறுவர். தர்க்கத்தில் ஒரு கூற்று உண்டு – Thou shall not lay the burden of proof onto him who is questioning the claim – சான்றிருக்கின்றதா என்று கேட்பவரிடமே சான்றேதுமில்லையென்று நிரூபிக்கச் சொல்வது சரியான தர்க்கமில்லை. இதைத்தான் அனைத்து ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புபவர்களும் கையாள்கின்றனர். ஜோதிட வல்லுநர்கள்தான் ஜாதகத்தை வைத்து பலன் சொல்லுபவர்கள். அவர்களே அப்பலன்களின் உண்மை நிலையை நிலைநாட்ட கடமைப்பட்டவர்களாவர். உயிர் அறிவியலைப் பொருத்தவரை ஜீன்களின் கலவைகளை கிரகங்கள் நிர்ணயிக்கும் சாத்தியக்கூறுகள் மிகச் சொற்பத்திலும் சொற்பமாதலால் ஜோதிடக்கலை தீவிர சந்தேகத்த்திற்குரிய ஒரு போலி அறிவியலென்றே (pseudoscience) அறிய வேண்டியிருக்கிறது.

அடுத்து ஒரு மனிதனின் வாழ்நாள் முழுதும் நிகழும் நிகழ்வுகளுக்கு வருவோம். Phenotype = Genotype + Environment. அதாவது ஒரு உயிரனத்தின் வெளித்தோற்றமானது, அவ்வுயிரின் ஜீன்களும் அவ்வுயிர் வாழ்ந்துவரும் சூழ்நிலையையும் சார்ந்தது. உதாரணத்திற்கு, ஒரே கருவிலிருந்து உருவான இரட்டையர்களை (identical twins) எடுத்துக்கொள்வோம். இவர்களுக்கு ஒரே ஜீன் அமைப்பு இருந்தாலும், ஒருவருக்கு மட்டும் சரியான உணவளிக்காமல் வளர்த்தோமாயின் அவர் உடல் நலக் குறைபாட்டுடன்தான் வளர்வார். அதில் ஐயம் ஏதுமில்லை. இப்போது ஜாதகத்திற்கு வருவோம் – கிரக நிலைகள் மேற்கூறியபடி கலவை விகிதாச்சாரத்தை தீர்மானிப்பதுடன் நிற்காமல், ஒருவர் வாழ்நாளில் எவ்விதமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்குமென்றும் நிர்ணயிக்க வேண்டும். அவருடைய சூழ்நிலையை மட்டுமல்லாது அவரைச் சுற்றி இயங்கும் அனைவரது ஜீன்களின் கலவை விகிதம் மற்றும் வளர்ப்புச் சூழல் அனைத்தையும் நிர்ணயிக்க வேண்டும். கிரகங்களின் விசையானது இவ்வளவையும் துள்ளியமாக நிர்ணயிக்க்கூடும் என்கிறீர்கள் ? அவ்வாறு கிரகங்களுக்கு சக்தியிருப்பது நிருபிக்கப்பட்டால் நானும் ஜோதிடம் கேட்க வருகிறேன்!

இவற்றிற்கெல்லாம் அடுத்தபடியாக திருமண பொருத்த்த்திற்கு வருவோம். ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் ஐஸ்வர்ய லாபம் முதல் செக்ஸ் பொருத்தம் வரை ஜனன ஜாதகத்தை வைத்து கணிக்கின்றனர் – எப்பேர்பட்ட அபத்தம் ? இதில் பலவேறுபட்ட கருத்துகள் வேறு. பெண்ணாகப்பட்டவள் மூல நட்சத்திரத்தில் பிறந்திருந்தாள் மாமனார் உயிருக்கு பங்கம், ஆயில்யமென்றால் மாமியாருக்காகாது, விசாகமென்றால் மைத்துனருக்காகாது, கேட்டையென்றால் மூத்தாருக்காகாது. எப்படி ஆகாது ?

செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் – இவற்றையெல்லாம் யார் ஆராய்ச்சி செய்தார்கள் ? நிரூபணங்கள் எங்கே ? தனி மனிதனின் எதிர்காலத்தைப் பற்றி எப்படியாவது தெரிந்துகொண்டாக வேண்டுமென்ற அவாவைத் தணிக்க ஏற்படுத்தப்பட்ட சாமர்த்தியமான ஏமாற்று அறிவியலே ஜாதகம். அதை வைத்துக்கொண்டு சற்று அறிவுடன் செயல்படுபவர்களையும் மூடர்களாக்காதீர்கள். இன்று உயிரறிவியல் வளர்ந்து வரும் வேகத்தில் கருவின் DNAவை ஆராய்ந்து எதிர்காலத்தில் எவ்வித நோய்கள் வர வாய்ப்பிருக்கின்றதென்று அறியும் அளவிற்கு வந்துவிட்டோம். கிட்டத்தட்ட உண்மையான உயிரியல் ரீதியான ஜனன ஜாதகப்பலன்களை அறியும் காலம் நெருங்கிவிட்டது. இன்னும் கோள்களின் நிலைப்பாட்டை வைத்து தனி மனித வாழ்க்கையைக் கணிக்கும் போலிக்கணக்கு தேவையா ?

சாஸ்திரங்கள் உருவாகும்போது அப்போது அறிவுக்குப் புலப்பட்ட விஷயங்களை வைத்து எழுதப்படுகின்றன. எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்ற முயன்ற சாஸ்திரம் – Alchemy . அதுவே பின்னாளில் Chemistry – வேதியல் அல்லது இரசாயன அறிவியலாக மாறியது. நட்சத்திரங்களையும் கோள்களையும் கொண்டு தட்ப வெட்ப சூழலை கணிக்கத் தோன்றிய ஜோதிடம், அறிவியல் பின்னூட்டத்தால் வானவியலாக உருவெடுத்து மனிதன் செயற்கை கோள்களை செலுத்துமளவிற்கு முன்னேறியுள்ளது. ஆனால் எதிலுமே பழையன கழிய விரும்பாத இந்துக்கள் ஜோதிடத்தை அப்படியே பற்றிக்கொண்டு தங்கள் திருமண முறைகளில் ஜாதிகள் இருப்பது போதாதென்று ஜாதகத்தையும் கட்டிக்கொண்டு அழுகின்றனர்.

Series Navigationதொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி