இன்னும் எவ்வளவோ

 

  • மனஹரன்

 

மரத்தின் இலைகளில்

காற்று எழுதி செல்லும்

கவிதைகளைச் சேகரிக்க

கருவி ஒன்று

உருவாக்கிவிட வேண்டும்

 

கடலின் கரைகளில்

அலைகள்

மணலுக்குள்

பதுக்கி வைக்கும்

கதைகளை

மொழியாக்கிட வேண்டும்

 

தந்தி கம்பிகளில்

மழைக்குருவிகளின்

நகங்கள்

கிறுக்கிய

எழுத்துகளை

ஆய்வு செய்ய வேண்டும்

 

சல சலவென

ஓடும் நதிகளின்

பாசைகளை

பதிவு செய்து

மொழியாக்க வேண்டும்

 

 

மழைக்காக

தவளை கத்தும்

கதறல்கள்

எந்த இராகத்தில்

இணையும் என

ஆராய வேண்டும்

 

அந்திம வேளையில்

அவசரப்படாமல்

சகவாசமாய்

கீச்சிடும் குருவிகளின்

காதல் பேச்சைக்

காப்பியடிக்க வேண்டும்

 

நேர் எதிராய்

சந்தித்துக்கொள்ளும்

எறும்புகள்

கால் குலுக்கும்

உத்திகளுக்குள்

அடங்கும் அதிசயத்தை

பூதக்கண்ணாடி கொண்டு

புரிந்து கொள்ள வேண்டும்

 

இன்னும்

இன்னும்

இன்னும்

Series Navigationவடகிழக்கு இந்திய பயணமும் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைகளும்ஒட்டடைக்குருவி