இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.

ஒல்லெனத் திரைதரும் புரிவளைப் பௌவம்
முத்தம் இமிழ்தர மூசு வெண்கரை
முத்தம் பெய்தென்று நுண்மணல் சிவப்ப‌
எக்கர் திரள நெடுங்கரை ஞாழல்
அஞ்சினைச் சேக்கை அடையும் குருகு
ஆலும் முளிக்குரல் கூர்த்த நெஞ்சில்
அந்துறைச்சேர்ப்பன் மீள்மணி இரட்டும்.
பொலங்கிளர் பொறிவளை பொதிமணல் படுப்ப‌
இணைசெத்து என‌ பற்றுக்கொள் கீர‌
கொடுங்கை போர்த்தும் அதிர்க்கண் கள்வன்
மருள்தரும் காட்சி மலிதரும் மாலை
ஊன் உகுக்கும் என்பு தேய்க்கும்
கொடுநோய் தீர வரும்கொல் மாதோ.
கொடுவான் துளைபட உழுபடை கொண்டு
படர்வான் கதிரன் சிவப்பாய் உமிழ
தீச்சுரம் மருட்டும் பேழ்வாய்க்கானம்
போழ்தரக் கலிமா கதழ்பரீஇ விரட்டும்.
அவன் கடுந்தோள் அகலம் பாயல் உள்ளி
கண்விடைத்தன்ன நள்ளிருள் நீட்டி
ஆறிடை நோக்கும் அளியேன் யானே.
முன்றில் சிறுபூ எரியிணர் அடுமுன்
வரும்கொல் அறியேன் அன்னை வாழி.
இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.
=================================
பொழிப்புரை
===========
தோழி (இங்கு அன்னை என்றால் தோழி).நீ வாழ்க.நீ கேள் என் நிலையை.
இடைவிடாமல் அலையடிக்கும் புரிகள் உடைய சங்குகள் நிறைந்த கடல் (பௌவம்) வீசித்தரும் (இமிழ்தர)முத்துக்கள் அடர்ந்த வெண்மணற்கரையில்(மூசு வெண்கரை) வீழ்ந்ததால் பட்டுமணல் போன்ற பரப்பு தன் மீது முத்தங்கள் பொழிந்ததாக உணர்ந்து (நாணத்தில்) சிவக்கும்.கடல் அலைகள் எக்கி எக்கி தள்ளுவதால் மணல் திரண்டு திட்டு ஆக‌(எக்கர்)அந்நெடுங்கரையின் “ஞாழல்” எனும் “புலிநகக்கொன்றை”மரத்தின் கிளையில் கூடு அமைத்து அதனுள் படுக்கை(சேக்கை) இட்டு அதனுள் அடையும் கடற்பறவை(குருகு)அரற்றும் குழைவான குரல் (ஆலும் முளிகுரல்) என் நெஞ்சில் கூர்மையாய் பாய எனக்கு பிரிவுத்துன்ப உணர்ச்சி பெருகும்.அது என் நெஞ்சில் அந்த அழகிய என் கடற்கரைத்தலைவன் என்னைச் சந்திக்க மீண்டு வரும் விரைவின் மணிஒலியை கேட்கச்செய்யும்.
பொன்போல  ஒளிவீசும்(பொலங்கிளர்) புள்ளிகள் உடைய கடற்சங்கு(பொறிவளை) மணலுள் புதைந்து கிடக்க(படுப்ப)
அதை நடுங்கும் கண்களை உடைய நண்டு (அதிர்க்கண் கள்வன்)  தன் இணை  ஒத்தது எனக்கருதி மயங்கி(இணை செத்து)தன் கொடுக்கினால் அதை கீறி விடத்தழுவும்(கொடுங்கை போர்த்தும்)
மருட்டும் தன்மையுள்ள காட்சிகள் மலிந்த மாலைப்பொழுது இது.என் ஊன் உருக்கி எலும்புகள் தேய்மாறு செய்யும் இந்த காதல் கொடுநோய் தீர தலைவன் விரைவில் வந்து விடுவானா?(வரும் கொல் மாதோ)இந்த பெரிய வளைந்த வானம் சல்லடையாகுமாறு ஒளிக்கதிர் எனும் உழுபடை கொண்டு கதிரவன் படர்ந்து வருகையில் குருதி போன்று சிவப்பாய்  உமிழும்படி அந்தி வானம் அச்சம் ஊட்டுகிறது.வழியெல்லாம் நெருப்பாய் (தீச்சுரம்) பெருகி அஞ்சும்படி
அந்தக்காடு வாய் பிளந்து காட்சி தரும்.(பேழ்வாய்க் கானம்) அதனுள் புகுந்து(போழ்தர) குதித்து வரும் குதிரையின்(கலிமா)குளம்படிகள் கடுகி விரைந்து (கதழ்பரீஇ)வரும்படி அதை விரைந்து செலுத்தி வருகிறான் தலைவன்.வலிமையான அகலமான அவன் மார்பில் (அகலம்)தோய்ந்து இன்பம் பெற எண்ணி(பாயல் உள்ளி)அந்த நடு இரவில் கண்கள் துருத்தி நீண்ட நேரமாய்(கண்விடைத்தன்ன நள்ளிருள் நீட்டி) அவன் வரும்  வழி (ஆறிடை)நோக்கி விழித்துக்கொண்டிருந்தேன்.அப்போது நான் பெற்ற துன்பம்
மிகப்பெரிது.யாவரும் என் மீது இரக்கம் தான் கொள்ளுவார்கள்.என் வீட்டு முற்றத்தில் உள்ள கொடியில் சிறுபூவின் கொத்து தீயால் ஆன பூக்குவளை போல் (சிறுபூ எரியிணர்) என்னை சுடுகிறது.அது முற்றிலும் என்னை அவித்து விடும்முன்(அடுமுன்) அவன் வந்து விடுவானா?தோழி நீ இன்னுரைகளால் என்னை வருடிய போதும் என் உயிர் மாய்ந்து தான் போகும்.
====================================ருத்ரா
Series Navigationஇதய வலிGrieving and Healing Through Theatre Canadian-Tamil artistes present 16th Festival of Theatre and Dance