இயக்குனர் மகேந்திரன்

என்னுடைய இளவயதில் சினிமாவில் சேர்ந்து பெரிய இயக்குனராக வரவேண்டும் என்கிற கனவு இருந்தது. இன்றைக்கும் பல தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அந்தக் கனவு இருக்கிறது என்றாலும் பெரும்பாலோர் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை.

பிறநாட்டுத் திரைப்படங்களைக் காப்பியடித்து எடுப்பதில் இருக்கிற ஆர்வம் சொந்தக் கற்பனையில் இல்லை என்பதுதான் நிதர்சனம். காரணம் புத்தக வாசிப்பும், உலக நடப்பில் ஆர்வமின்மையும், சொந்தக் கலாச்சார மேன்மை குறித்த அறிவும் இல்லாமல் போனதுதான் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.

தமிழக கலாச்சாரத்தை, அதன் இயல்பு வாழ்க்கையை யதார்த்தமாகக் காட்டுகிற ஒரே ஒரு தமிழ் சினிமா கூட இன்றுவரை வரவில்லை. இந்தியாவில் இல்லாத கதைகளா? அந்தக் கதைகளைத் திரைப்படமாக்கினால் ஒரு பத்தாயிரம் படம் எடுக்கலாம்.

ஆனால் எவனுக்கும் ஆர்வமும் இல்லை; அது குறித்தான அறிவும் இல்லை. சத்தியஜித்-ரே உலகமெல்லா அறியப்படுகிறார் என்றால் அவர் தன்னுடைய வங்காளக் கலாச்சாரத்தை, அங்கு நிகழும் கதைகளை சிறிதும் செயற்கைத்தனமில்லாமல் காட்டியதுதான் காரணம்.

அதேதான் அகிரா குரோசோவாவுக்கும். அவர் எடுத்த படங்களெல்லாம் அவரது சொந்த ஜப்பானியக் கலாச்சாரத்தைப் பிரதிபலித்த திரைப்படங்கள்தான். உலகில் அறியப்படுகிற அத்தனை ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, ஸ்பானிய, அமெரிக்கத் திரைப்பட இயக்குனர்கள் அனைவரும் தங்களின் சொந்தக் கலாச்சாரத்தை முன்னிருத்திப் படமெடுத்துதான் புகழடைந்தார்களே தவிர, தமிழர்களைப் போல சொந்தக் கலாச்சாரத்தைத் துறந்து இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி ஒருபோதும் திரைப்படமெடுத்தார்களில்லை.

சொல்லி என்ன ஆகப் போகிறது? காப்பியடிக்கிற அரை வேக்காடுகளுக்கு சொல்லி புரிய வைப்பது கடினம். அதை விடுங்கள்.

எழுபதுகளின் இறுதியில் எம்.ஜி,ஆர்., சிவாஜி கணேசன் போன்றவர்களின் காலம் தேய ஆரம்பித்திருந்தது. அந்த காலகட்டத்தில் புதிதாக பல இளைஞர்கள் தமிழ் சினிமாவிற்குள் வர ஆரம்பித்தார்கள். பாரதிராஜா, பாக்கியராஜ், பாலுமகேந்திரா போன்றவர்களுடன் மகேந்திரனும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அந்த புதிய வரவுகளில் பாலுமகேந்திராவும், மகேந்திரனும் தனித்துவத்துடன் தங்களின் முத்திரையைப் பதித்தார்கள்.

தமிழ் சினிமா இனி பிழைத்துக் கொள்ளும் என நினைத்த நேரத்தில் மீண்டும் மசாலா சினிமாவுக்கு அடிமையாகி அழிந்தது. அன்றிலிருந்து இன்றுவரை துப்பு கெட்ட் சினிமாக்கள் தொடர்ந்து வந்தன. வந்து கொண்டிருக்கின்றன. இனியும் வரும். தமிழனுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

மகேந்திரன் எம்.ஜி.ஆரின் பாசறையிலிருந்து வந்தவர். எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள் அத்தனையும் எம்.ஜி.ஆருக்காகவும், அவரது விசிலடிச்சான் குஞ்சுகளுக்காகவும் மட்டுமே எடுக்கப்பட்டவை. பெரும்பாலும் செயற்கைக் கதைகளும், நடிப்பும் கொண்டவை. ஆனால் அந்தச் சூழ்நிலையிலிருந்த வந்த மகேந்திரன் அதனை முற்றிலும் ஒதுக்கி வைத்து யதார்த்தக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார். அவரது முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, மெட்டி ஒலி போன்ற திரைபடங்கள் அற்புதமான கதைக்களன் கொண்டவை.

ஓரளவிற்குத் தமிழக கலாச்சாரத்தை, அதன் வாழ்க்கை முறையை போலித்தனமில்லாமல் எடுக்க முயன்றவர் மகேந்திரன். “முயன்றவர்” என்பதனை இங்கு அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவரும் நிர்பந்தங்களுக்காக சமரசங்களைச் செய்து கொண்டிருக்கிறார் என்றாலும் அது மிகவும் குறைவானதுதான்.

அவரது படங்களுக்கு அற்புதமாக இசையை வாரி வழங்கிய இளையராஜாவினால் அந்தத் திரைப்படங்கள் இன்றைக்குக் காப்பியங்களாக மாறியிருக்கின்றன என்றால் மிகையில்லை. நல்ல கதையில்லாத மகேந்திரன் படங்கள் எதுவுமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அழுத்தமான கதைகள் கொண்டவை அவரது திரைப்படங்கள்.

பனிரெண்டாவது படிக்கையிலேயே கதைகள், கவிதைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வமிருந்தது. எப்படியாவது மகேந்திரனிடம் உதவியாளராகச் சேர்ந்து இயக்குனராக வேண்டுமென்கிற கனவும் இருந்தது. ஆனால் அவரை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. என்னுடைய நண்பர் ஒருவரிடம் “பிரபலமானவர்களின் முகவரிகள்” என்கிற புத்தகம் இருந்தது. அதிலிருந்த மகேந்திரனின் முகவரியைக் குறித்துக் கொண்டு ஒருநாள் பஸ் ஏறிப் போயிருந்தேன்.

அடையாரில் அவரது வீடு இருந்ததாக நினைவு. மூடியிருந்த கேட் வரைக்கும் போய் அதற்கு மேல் மணியடித்து உள்ளே நுழையத் துணிச்சல் வரவில்லை. அந்த வீட்டின் முன்னாலிருந்த மரத்தில் சாய்ந்து கொண்டு ஏறக்குறைய இரண்டு மணிநேரம் நின்றிருந்தேன். 😊

மகேந்திரனின் வீட்டிலிருந்தவர்கள் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை. யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு மீண்டு பஸ் ஏறி வீட்டுக்கு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு எனக்கு சினிமாவில் சேரவேண்டுமென்கிற ஆசையெல்லாம் போய்விட்டது.

சந்தேகமில்லாமல் இந்தியாவின் சிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன் மறைந்துவிட்டார் எனக் கேள்விப்பட்டேன். வருத்தமாயிருக்கிறது. அவருக்கு எனது அஞ்சலிகள்.

கலைஞர்கள் ஒருபோதும் இறப்பதில்லை. அதிலும் உண்மையான கலைஞர்களுக்கு மரணமேயில்லை. மகேந்திரன் என்றும் நினைவுகூரப்படுவார்.

Series Navigationஅமெரிக்க சீக்கியர்கள்டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா?