இயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]

This entry is part 5 of 12 in the series 11 செப்டம்பர் 2016

வளவ. துரையன்

[தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]

பேராசிரியர் திருமிகு ம.இலெ. தங்கப்பா அவர்களின் படைப்புகளின் அடிப்படைகள் அன்பு, அறம் மற்றும் இயற்கை என உறுதியாகக் கூறலாம். நான் இத்தனை உறுதியாகக் கூறக் கரணியம் யாதெனில் அப்பெருமகனாரை நான் பல்லாண்டாக அறிவேன். அவரை நெட்டப்பாக்கம் பள்ளியில் பணியாற்றும் காலந்தொட்டே வளவனூர் அர. இராசாராமன் அவர்களுடன் சென்று சந்தித்திருக்கிறேன். குறிப்பாக முதலில் நான் சென்றபோது அவர் தென்மொழியிலிருந்து விலகியிருந்த நேரம். தென்மொழியாசிரியர் எழுதிய “ஐயை” எனும் பாவிய நூலினை வெளியிட ஒப்புதல் கேட்க இராசாராமன் போனபோது என்னையும் அழைத்துச் சென்றார். தங்கப்பா ஒப்புக்கொண்டு புதுச்சேரியில் மன்னர்மன்னன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதனை வெளியிட்டார்.
கடலூர் வந்தபின்னர் இங்கு கூத்தப்பாக்கம் “இலக்கியச்சோலை” தங்கப்பா படைப்புலகம் எனும் நிகழ்வு ஒன்றை நடத்தித் தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது. தனித்தமிழை உறுதியாகப் பின்பற்றும் கொள்கைச் சான்றோர் அவர். அவர் வாழும் காலத்தில் அவருடன் தொடர்பு கொண்டு நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை.
அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட “காரும் கூதிரும்” எனும் சிறுநூலை அனுப்பி வைத்திருந்தார். “கார் நாற்பது” எனும் தலைப்பில் நாற்பது பாக்களும், “கூதிர் நாற்பது” எனும் தலைப்பில் நாற்பது பாக்களும், “எது பாட்டு” எனும் தலைப்பில் பத்துப் பாக்களும் இதில் அடங்கி உள்ளன. எல்லாமே வெண்பாக்கள். இவையன்றித் தனி வெண்பாக்களாக எட்டு உள்ளன.
கார் நாற்பது முழுக்க முழுக்கக் கார்கால இயற்கைச் சூழலைக் காட்டுகிறது. மிக இனிமையான இயற்கைக் காட்சிகளை இயல்பாக வெண்பா யாப்பில் அடக்கிப் பாடலாக யாத்துள்ளார்.
கார்காலத்தில் யாவருக்குமே குளிர் அதிகமாகத் தோன்றும். அதுவும் இரவுப் பொழுதில்தான் குளிரின் வாதை மிகையாக இருக்கும். வெளியில் வர முடியாமல் இல்லினுள்ளேயே ஒடுங்கிக் கிடக்க நேரும். சிறுவரும் சிறுமியரும் ஏதேதோ கதைகள் பேசிக் காலத்தைக்கழிப்பர். பேசவும் முடியாமல் பற்களெல்லாம் கிடுகிடுக்கும். மழையின் குளிர் உடலைத் தாக்காமல் இருக்க காதுகளைத் தம் விரலால் அடைத்துக் கொள்வர். இந்த எளிமையான காட்சியைக் காட்டும் வெண்பா இது.
”பிள்ளைச், சிறுவரும் பேதைச் சிறுமியரும்
கள்ளமிலா நெஞ்சால் கதைபேசி—நள்ளிரவின்
ஊதைக்[கு] உடல்ஒடுங்கி. உட்பல் கிடுகிடுக்கக்
காதில் விரலடைக்கும் கார்”
தங்கப்பா கார்காலத்தை ஒரு புலியாக உவமிக்கிறார். அந்தப்புலியின் பாய்ச்சல் பாய்ந்து வரும் மழைவெள்ளம்போலிருக்கிறது. காந்தள் பூக்கள் அதன் நகங்கள்; வேங்கைமரம் அதன் உடல். குளத்தில் பூக்கின்ற செங்குமுத மலர்களே அதன் கண்கள்; கார்காலத்தின் இடி உழக்கமே அப்புலியின் முழக்கமாம். சிங்கம்தான் முழங்கும்; புலியும் முழங்குமா?
”காந்தள் விரிநகமாய்க் கள்வேங்கை பொன்னுடலாய்
ஏந்தும் இடியே முழக்காய்ப்—பூந்தண்
தடங்குமுதம் செங்கண்ணாய்த் தாவுபுனல் பாய்த்தாய்க்
கடும்புலியை ஒத்த்தே கார்”
கார் காலத்தில் மழை மிகையாகப் பொழிவதால் கிணறுகள் எல்லாம் நிரம்பிவிடும். புதுக்கோட்டையில் எங்கள் இல்லக்கிணற்றில் அப்படியே தண்ணீரைப் பாத்திரத்தில் முகந்து கொள்ளலாம். கயிற்றில் கட்டி நீர் எடுக்கத் தேவையில்லை. “கயிறின்றித்/ தோண்டியால் நீர்முகந்து தோகையர் முன்னடக்கக்/ காண்டகு மாலையிளங் கார்” எனும் பாடல் அடிகள் எனக்கு அதைத்தான் நினைவூட்டின.
தங்கப்பா எந்த அளவிற்கு இயற்கையை உற்று நோக்குகின்றர் என்பதற்கு ஒரு பாடலில் அவர் காட்டும் தைலான் குருவியைப் பற்றி அறியும்போது உணரமுடிகிறது. இது இலைகளைத் தைத்துக் கூடு கட்டும் பழக்கம் உடையது. மழைக்காலத்தில் கூட்டக் கூட்டமாகப் பறக்கும். விரைவாகப் பறந்து அங்குமிங்கும் திரியும் இயல்புடையது. கூட்டமாக நீரின் உள்ளே விரைவாக நீந்திச் செல்கின்ற ஐரை மீன்களை இதற்கு உவமிக்கிறார். “ஐரை இனம்புனலுள் ஆடித் திரிதல் போல்/ தைலான் கண்ந்திரியும் தாழ்விசும்பில்” என்னும் அடியால் இதை அறியலாம்.
ஒரு வீடு; அதன் கூரையானது தகரத்தால் வேயப்பட்டுள்ளது. மழைக்காலம் வந்து விட்டது. உள்ளே இரவில் கணவனும் மனைவியும் இருக்கின்றனர். காற்றடிக்கிறது. அதனால் கூரைத் தகரம் அலைந்து ஒலி எழுப்புகிறது. கேட்ட கணவன் “யாரங்கே” என்று அதட்டல் ஒலி எழுப்புகிறான். ஆனால் அவன் மார்பில் ஒடுங்கி உள்ள அவன் மனைவி தகர ஒலி என்றறிந்து நகைக்கிறாள். நிலைமை உணர்ந்த கணவன் அவளிடம் ஊடல் கொள்கிறான். சங்க காலத்தில் தலைவனும் தலைவிக்கும் இல்லறத்தில் நிகழும் ஊடலை இக்காலக் கண் கொண்டு இன்றைக்கும் நிகழுமெனப் படைத்தளித்துக்காட்டுகிறார்.
”கூரைத் தகரம் குறும்பு வளிஅலைப்ப
ஆரென்று அதட்டும் அருங்கணவன்—மார்பில்
ஒடுங்கிய பெண்நல்லாள் உணர்ந்து நகைகொட்டக்
கடுங்கணவற்கு ஊடல்தருங் கார்”
கூதிர்காலத்தில் பனி மிக அதிகமாய் இருக்கும்; மேகங்களெல்லாம் வெண்மை நிறம் பூசிக்கொண்டிருக்கும். அந்த மேகங்களுக்கிடையில் மறைந்து தெரிந்தும் தெரியாமலும் மதியம் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும். அதாவது மெல்லிய ஆடை பூண்ட கணிகை போலிருக்கும் என்று உவமை கூறியிருக்கிறார் தங்கப்பா. இதோ கூதிர் நாற்பதில் உள்ள வெண்பா.
”வெண்முகிலே மென்துகில்போல் மேற்போர்த்தும் மெய்மறையாது
ஒண்மைபுறந் தோன்றும் ஒளிர்மதியம்—திண்மையிலா
மெல்லாடை பூண்ட திரைக்கணிகை போற்பகட்டும்
பொல்லாத கூதிர்ப் பொழுது”
இன்றைக்கு நாம் பனிக்காலத்தில் பார்க்கும் காட்சிகளையெல்லாம் கூதிர் நாற்பது காட்டுகிறது. கோழைகள் இரை கூடக் கொள்ளாமல் தம் குஞ்சுகளை சிறகால் ஒடுக்கிக் கொண்டிருக்கும். மின்மினிப் பூச்சிகள் மரத்தின் கொம்புகளில் மொய்த்துக் கொண்டிருக்கும். காலைப்பொழுதில் பச்சைப்புற்களின் மேல் இருக்கும் புழுக்களை பறவைகள் மேய்ந்துகொண்டிருக்கும்போது மழைத் துளிகள் பெய்யத் தொடங்க உடனே அப்பறவைகள் உடனே மரக்கிளைகளில் போய் ஒடுங்கும். இதேபோன்று மரக்கிளைகளிலும், மின்சாரக் கம்பங்களிலும் பறவைகள் போய் ஒடுங்கும். இக்காட்சிகள் எல்லாம் வெண்பா யாப்பில் அடங்கி உள்ளன.
ஒரு வெண்பா ஒரு சிறுகதையைக் காட்டுகிறது என்று சொல்லலாம். ஒரு கிராமத்தில் வணிகர் ஆடுகள் வாங்க வருகின்றனர். ஆடுகளைப் பார்த்து விலை பேசுகின்றனர். ஆடுகளுக்கு உரிமையானவர்கள் மிகையான விலையைக் கூறுகின்றனர். பிறகு கூதிர்ப்பொழுது வருகின்றது. பனியும், மழைத்துளிகளும், வாடைக் காற்றும் கொடுமை செய்ய ஆடுகளெல்லாம் நோயின் வாய்ப்படுகின்றன. இப்போது அதே வணிகரிடத்தில் குறைந்த விலைக்கு அதே ஆடுகள் பேசப்படுகின்றன. பாவம் அந்த ஆட்டைப் பேணிக் காத்து வருபவர்கள். எல்லாம் காலத்தின் கொடுமைதானே! இதோ வெண்பா:

”பெய்யும் குளிர்மழைக்கும், பீழிக்கும் வாடைக்கும்
நொய்மையுறும் ஆடுகளின் நோய்மிகலால்—வைதிடையர்
பொன்விலைமுன் சொல்லிப் புலம்பிப்பின் ஆடுகளைப்
புன்விலை சொல்கூதிர்ப் பொழுது”
அடுத்த வெண்பாவும் இக்கதையை வளர்க்கிறது. அதாவது ஆடுகளைக் குறைந்த விலைக்கு வாங்கியவர் ஆடுகளைக் காப்பாற்ற அவற்றை எரியும் அடுப்பின் ஓரம் நிறுத்திக் குளிர்காயச் செய்கின்றனராம்.
எங்கும் ஈரமாய் இருப்பதால் ஊரெங்கும் கழிச்சல் நோய் பெருகுவதை “ஈரமாம் தேர் ஏறி இன்னாக்கழிச்சல் நோய் ஊரைச் செகுக்க உலா வருமே” என்று உவமை கூறும் வெண்பா அந்நோயைப் போக்கக் கிராமத்து மக்கள் செய்யும் சடங்கையும் சொல்கிறது. அதாவது இந்நோயைப் போக்கக் கோயில்தொறும் சென்று அங்கே இறைக்கு இளநீர் வெட்டியும், மஞ்சள் வைத்துப் படைத்தும் நோய் போக்க இறைஞ்சுவார்களாம். “ஊர்மக்கள் கோயில்தொறும் மஞ்சள், குளிர்இளநீர் வெட்டியிட்டுப் போயிறைஞ்சும் கூதிர்ப்பொழுது” எனும் அடி இதை காட்டுகிறது.
தேங்கியிருக்கும் மழைநீரில் இருசக்கர வாகனங்கள் செல்லும்போது அந்நீரானது திவலைகளாய்த் தெளிப்பதைப் பார்த்திருக்கிறோம். சாணைக்கல்லில் கூரிரும்பைத் தீட்டும்போது வரும் பொறிக்கு அதை உவமையாக்குகிறது ஒரு வெண்பா.
”இவர்ந்தமிதி வண்டி எதிர்உருளை பாய்ந்து
சிவந்த மழைநீர்மேல் செல்கால் சிதர்ந்து
தெறிக்கும் திவலை திகழ்சாணைக் கல்மேல்
பொறிக்குநிகர் கூதிர்ப் பொழுது”
ஓரிடத்தில் “மகிழ்பிடியோ டியானை” எனும் குற்றியலிகரத்தைப் பார்க்கும்போது இக்கால மரபுப்பாவலர்கள் இதையெல்லாம் பின்பற்றுவதில்லையே எனும் வருத்தமும் ஏற்படுகிறது. கார் நாற்பதில் ஒன்று [29]; கூதிர் நாற்பதில் பத்து [1]; [22]; [24] [25]; [27]; [31]; [32]; [37]; [38]; [39] என இன்னிசை வெண்பாக்களும் உள்ளன. அவற்றை இறுதியில் கொடுத்திருக்கலாம். கூதிர் நாற்பது 18-ஆம் வெண்பாவில் தனிச்சொல்லுக்காக சொல்லுடைப்பு ஏற்பட்டிருப்பதைத் தவிர்க்கலாம்.
பாட்டெழுதப் பயிலும் பாவலர்கள் எல்லாரும் அறிய வேண்டிய செய்திகள் நிறைந்துள்ளதுதாம் “எது பாட்டு” எனும் பொருளில் அமைந்துள்ள பத்து வெண்பாக்களும் ஆகும். அதே போல பல உவமைகள் வழி இனிமையான இயற்கைக் காட்சிகளைக் காட்டுபவைதாம் இறுதியில் உள்ள தனி வெண்பாக்கள்.
மொத்தத்தில் மரபில் தோய்ந்த [நான் சொல்வது இலக்கணத்தில் மட்டும் அன்று; பண்பாட்டிலும்] ஓர் இயற்கை விரும்பியின் உள்ள எழுச்சிகள்தாம் இனிய வெண்பாக்களாக வெளிப்பட்டுள்ளன.
[காரும் கூதிரும்—தங்கப்பா; வெளியீடு : வானகப் பதிப்பகம்—7, 11-ஆம் குறுக்குத் தெரு, புதுச் சேரி—605 008; பேசி : 0413 2252843 ; கைப்பேசி : 84892447005]

Series Navigationமூன்று கல்லறைகள்.பரலோக பரோட்டா !
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    சுப.சோமசுந்தரம் says:

    மிகச் சிறப்பான சுருக்கமான நூல் மதிப்புரை. லெனின் தங்கப்பாவின் பாத்திறத்தை அனைவர்க்கும் கொண்டு செல்வது. ‘காரும் கூதிரும்’ பால் ஆவலைத் தூண்டியமை நூல் மற்றும் மதிப்புரையின் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *