இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது

ஹெச்.ஜி.ரசூல்
ஒரு புல்லின் நுனி கரும்பாறையை சுமந்திருந்த்து
சொட்டுச் சொட்டாய் உள்ளிறங்க வழியற்று
அதில் விழுந்த மழைத் துளிகள்
பெருநதியாகப் பாய்ந்தோடுகிறது
ஆயுள் பூராவும் சேமித்த சூட்டின் தகிப்பு
தன்னுணர்ச்சியை இழக்க விரும்பவில்லை.
பகலுறக்கம் தீய்ந்து
இரவுதோறும் கரும்பாறை வளர்வதை
கண்ணாப்பா சொல்லியிருக்கிறார்
கருகிவிடாது ஒற்றைப்புல் வேர்பிடித்திருக்க
குறு குறுவென ஊதிப் பெருகிய
கரும்பாறையைப் பார்க்க கூட்டம் அலைமோதியது.
சாயங்காலமொன்றில் மகுடியெடுத்து
பாம்புப் பிடாரன் ஊதிய இசை பட்டு
தடுமாறத்துவங்கியது கரும் பாறை
எத்தனை நாள் உள்ளிருப்பது
பாறையைப் பிளந்து வெளியே சாடியது
சாலிஹ் நபியின் ஒட்டகக் குட்டி

பர்வீன் விரட்டிய பூனை
இன்று அதிகாலை படுக்கையிலிருந்து
பூனைக்கண் சாகிபு
ஒரு கரும்பூனையாய் கண்விழித்தார்.
சாமத்தில் முழித்து
தஹஜ்ஜத் தொழுதபின்
அத்தாளம் குடித்துவிட்டுதான்
படுக்கைக்கு போனாரென்பதை
யாரும் அறிந்திருக்கவில்லை.
கிடந்தபடியே ஒன்றுக்கிருந்தது
பால்யத்தை ஞாபகமூட்டியது.
அரவம் எதுவும் கேட்காது
தனிமை அறையிலிருந்து
கிளம்பிப் போனபோது
பூனை குறுக்கே சாடியதற்கு
கல்லெறிந்து போனான் கடை யூசுபு
தனது பேச்சும் மொழியும்
தானாக மாற்றமடைந்ததை எண்ணி
தவிப்புமட்டுமே மேலிட்டது.
இறைச்சிமுள்ளை கடிக்க
சாடி ஓடியபோதுதான்
தான் நோன்பு என்பதும் நினைவுக்கு வந்தது.
மறுமையில் சொர்க்கம் செல்வதற்காக
நோன்பிருந்தது பூனை
தன் வாப்பா பூனையானது தெரியவில்லை
காலடியில் சுற்றிக் கொண்டிருந்த
அப்பூனையை
கம்பெடுத்து அடித்துவிரட்டினாள் பர்வீன்
நன்றி
காலச்சுவடு
நவம்பர் 2011

Series Navigationகாற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!தான் (EGO)