இரை

Spread the love

மாதவன் ஸ்ரீரங்கம்
———-
மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது.

இப்போது இவன் அப்படித்தான் கிடக்கிறான். ஆனால் இவனைப்பார்த்தால் அந்த பரவசம் தோன்றவில்லை எனக்கு. சவரம் செய்யப்படாத தாடிமீசைகள் கடந்தும் அவன் கண்களில் நங்கூரமிட்டிருக்கும் அச்சத்தை உணரமுடிகிறது என்னால். இவனுடன் பிடிபட்ட நான்குபேர்கள் தனது கண்ணுக்கு முன்பாகவே ரத்தம்சிதற இறந்துபோனதை இவன் இறுதிமூச்சுவரை மறந்துவிடமுடியாது. மலங்க மலங்க விழித்தபடி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கிறான்.

என் பார்வையை புரிந்துகொண்ட சோல்ஜர் அலமாரியிலிருந்து மதுப்புட்டியும் ஒரு கோப்பையும் எடுத்துவந்தான். நான் அவனிடம் இன்னொரு கோப்பை கேட்க ஒரு ரோபோவைப்போல திரும்பிச்சென்று மற்றொரு கோப்பை எடுத்துவந்து என் மேஜையில் வைத்துவிட்டு மரியாதையான தூரத்தில் நின்றுகொண்டான்.

நான் கீழே கலவரத்துடன் அமர்ந்திருந்தவனை அருகில் அழைத்தேன். அவன் அதீத பயமும் பணிவுமாக மேஜையருகே வந்து நின்றுகொண்டான். நான் இரண்டுகோப்பையிலும் மதுவை நிரப்பி அவனிடம் ஒரு கோப்பையை நீட்டினேன். அவன் தயங்கினான். எனக்குத்தெரியும். நிச்சயம் அவன் மதுவருந்தும் மனநிலையில் இருக்கமுடியாது. மரணத்தின் சமீபத்திய நொடியில் யாருக்குத்தான் கொண்டாட்டம் பிறக்கும் ?

என் மனதின் சஞ்சலம் அவனுக்கு பிடிபட்டுவிடாதபடிக்கு இன்னும் சில அங்குலங்கள் கோப்பையை நீட்டினேன். இதற்குமேலும் மறுத்தால் எங்கே சுட்டுவிடுவார்களோ என்னும் அச்சுறுத்தலுடன் அவன் அதை பெற்றுக்கொண்டான். அருந்தும்படி ஜாடையாக நான் தலையசைத்தேன். இதுதான். என்னால் இப்போதைக்கு அவனுக்கு செய்யக்கூடியது இதுமட்டும்தான்.

நான் ஒரு மிடறு விழுங்கிவிட்டு சோல்ஜருக்கு சமிக்ஞை செய்தேன். அவன் அருகில் வந்து நின்றான்.

“உனக்குத் தமிழ் தெரியுமா”? என்று கேட்டேன்.

அவன் மறுப்பாக தலையசைத்துவிட்டு, தமிழறிந்த ஒரு சோல்ஜரின் பெயரைக் கூறினான். நான் அவனை அழைத்துவரச்சொன்னேன். சோல்ஜர் நகர அவன் தன் கையிலிருந்த கோப்பையையே கண்கொட்டாமல் பார்த்தபடியிருந்தான். ஒருதுளிகூட அருந்தவில்லை அவன். எனக்கு அவன் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது.

உடன் வந்தவர்கள்போல இவன் முட்டாளில்லை. அவர்கள்தான் தப்பித்தோட முயன்று தோட்டாக்களால் மூளைசிதறிச்செத்தார்கள். இவன் மெல்ல மூச்சிறைத்தபடி படபடப்புடன் மண்டியிட்டுக்கிடந்தான். இந்த கேம்பிற்கு வந்தபுதிதில் இதெல்லாம் மிகமோசமான மனஉளைச்சலைத் தந்தது. தினசரிக் கனவுகளில் ரத்தமும்சதையுமாக பிண்டங்களாக வந்து மிரட்டியிருக்கிறது. மன உளைச்சல்களின் அதீத துரத்தல்களால் அலறியடித்து எழுந்திருக்கிறேன் பல இரவுகளில். இப்போது எல்லாமே ஒருமாதிரி பழகிவிட்டிருந்தது. மூக்குச்சளியை சிந்துவதுபோல சாதாரண செயலாகிவிட்டது. அதற்கு இந்த மதுதான் மிகப்பெரிய துணையாக இருக்கிறது.

உள்ளே வந்த புதிய சோல்ஜர் வைத்த சல்யூட்டை கண்டுகொள்ளாமல் தமிழ் தெரியுமா என்று என் மொழியில் கேட்டேன். அவன் தலையசைக்க அவனிடம் விசாரித்துவிட்டுச் சொன்னான்.

அவன் பெயர் சிலுவைராசன். ஒரு மனைவியும் இரண்டு சிறுகுழந்தைகளும் இருக்கிறதாம். அவனுடன் பிடிபட்டு இறந்தவர்களில் இருவர் உறவினராம். சித்தப்பாவோ என்னவோ சொன்னான். ஊர் பெயர் என்று ஏதோ கூறினான். நான் கேட்கக்கேட்க அவனது பதில்களை ஒவ்வொன்றாய் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தான் சோல்ஜர்.

பிடிபடாமல் இருந்திருந்தால் இன்னேரம் இவன் வீடிருக்கும் கரைக்கு சென்றிருக்கலாம். அல்லது ஏதேனும் பேரலையிலோ சுறாவிடமோகூட சிக்கியிருந்தாலும் சொல்வதற்கில்லை யாருக்குத்தெரியும் ? இவன் மனைவி இப்போது பதறத்தொடங்கியிருப்பாள். பிள்ளைகள் என்ன செய்துகொண்டிருக்கும் ?

நான் ஒருகாலத்தில் அப்பாவிற்காக காத்திருந்ததுபோல காத்திருக்கலாம். அப்பா ஒரு கண்டிப்பான வாத்தியார். பள்ளியில் மட்டுமல்லாமல் வாழ்க்கை முழுவதுமே வாத்தியாராகத்தான் இருந்திருக்கிறார். ரிட்டயர்ட் ஆனபின்னும்கூட.

“எல்லைகளை தான்டினால் சிறைப்படுவோம் என்று தெரியாதா உனக்கு”?

கடலில் எல்லைகளை கவனிப்பது மிகுந்த சிரமமான ஒன்றுதான் என்று எனக்கே நன்றாகத்தெரியும். அதிலும் கேம்பஸ்கள் ஏதுமற்ற கட்டுமரக்காரர்களுக்கு அது இன்னும் சிரமமானதென்றும் எனக்குத்தெரியும். இருந்தும் எதோ கேட்கவேண்டுமே என்று அபத்தமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். வேறுவழியில்லை. இவ்விதமாக எதையேனும் கேட்டுத்தான் ஆகவேண்டும். அவன் பதில்களில் ஏதேனும் குற்றம்கண்டுபிடித்தால்தான் அவனைக்கொல்வதற்கு சுலபமாக இருக்கும். சிறு முரணிருந்தால்கூட போதுமானதே. பட்டென்று சுட்டுவிட கட்டளை இட்டுவிடலாம்.

நான் காறியுமிழ்ந்தேன். அவன் துளியும் சலனமின்றி என்னையே பார்த்துக்கொண்டிருந்தது எனக்குக் கோபமூட்டியது. சாத்தான் பயல். எனக்கென்று வந்து வாய்த்திருக்கிறான். இருப்பதிலேயே இவன்மாதிரி ஆட்களைக் கொல்வதுதான் சிரமம். எத்தனைபேர் கள்ளத்தனமாக எதையேனும் கடத்திவந்து பிடிபடுகிறார்கள். அவ்விதமான ஆட்களைச் சுடுவதில் பிரச்சனைகளில்லை. குற்றவுணர்வுகளில்லை.

குறைந்தபட்சம் இவனும் தப்பிக்கமுனைந்திருந்தால்கூட சந்தோஷமாக சுட்டுக்கொன்றிருக்கலாம் இன்னேரம். வீணாகப்போனவன் மீன்பிடிக்கவந்து பிடிபட்டிருக்கிறான். சட்டென்று எப்படிச்சுடுவது ? இன்றைய இரவுறக்கத்தை நினைத்து பீதியானது எனக்கு. மேலிடத்திலிருந்து சிக்னல்கள் வந்துவிட்டது. இவனைக்கொன்றால் வரக்கூடிய பிரச்சனைகள் யாவும் என மனம் சார்ந்தது மட்டுமே.

மொழிபெயர்ப்பின்வழி எனக்குச்சொல்லப்பட்ட அவன் பதில்களை சுவாரஸ்யமின்றி கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்குள் ரெஜினா வந்துபோனாள். இறுதிச்சந்திப்பில் அவள் கூறிவிட்டுச்சென்ற வார்த்தைகள் மயிர்க்கால்களெங்கும் குத்திக்கொண்டிருக்கின்றன. “உன் குருதிக்கறைபடிந்த விரல்களால் என்னைத்தொடாதே” என்றாள். நான் தடுக்கவில்லை. தடுத்திருந்தாலும் அவள் நின்றிருக்கமாட்டாள். பிடிவாதக்காரி.

கடைசியாக அவள் ரெட்கிராஸில் சேர்ந்து எங்கெங்கோ தேசங்களெல்லாம் அலைந்து சேவை செய்துகொண்டிருப்பதாக செய்திகள் வந்தன. அம்மா தான் வேண்டுமானால் பேசிப்பார்க்கட்டுமா என்று பலமுறை கேட்டாள். நான்தான் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை அவளை திருமணம் செய்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கப்போகிறது ? இங்கிருக்கும் சோல்ஜர்கள் பெரும்பாலோர் திருமணமானவர்கள்தான். ஆனால் நான் ஏன் அவளை தடுக்கவில்லை ? தடுத்திருக்கவேண்டுமோ ? கொல்லும் தொழில் வேண்டாமென்று கூறிய அவள் வார்த்தையை கேட்டிருக்கவேண்டுமோ ?

சோல்ஜரை அனுப்பிவிட்டு நான் கேம்பிலிருந்து வெளியில் வந்தேன். அவனும் என்னை பின்தொடர்ந்து வந்தான். தூரத்தில் கரையை உடைக்க முயன்றுகொண்டிருந்தன கடலலைகள். காற்று பலமாக வீசியது. வட்டமிட்டுச் சுற்றிக்கொண்டிருந்தன கழுகுகள். சட்டென்று வெகுவேகமாக தண்ணீரைக்கொத்தி ஒரு மீனை கவ்வியபடி பறந்தது ஒரு கழுகு. எனக்கு கர்னல் ரணில்சிங்கே கூறியது நினைவுக்கு வந்தது.

“உங்கள் முன்பு நிற்பது மனிதனல்ல. இரை. அது ஒரு இரை மாத்திரமே. இரையை நீங்கள் அழிக்கத்தவறினால் இரை உங்களை அழித்துவிடும்” என்று பயிற்சிக்காலத்தில் அவர் கூறியது இன்னும் மறக்கவில்லை எனக்கு. பக்கத்து கூடாரத்தில் வரிசையாக படுக்க வைக்கப்பட்டிருக்கின்றன இவனுடன் வந்தவர்களின் உடல்கள். இவனை பேசாமல் தப்பிக்கவிட்டால் என்ன என்று நடக்காத காரியமொன்றை யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

எனக்கும் ஒரு நாள் இதுபோல நிகழக்கூடிய சாத்தியங்கள் பற்றிய நினைவு அடிவயிற்றைப் பிசைந்தது. எல்லாம் காலம்கடந்த சிந்தனைகள். தேசத்திற்கான சேவை என்று வந்து சம்பந்தமில்லாமல் யார்யாரையோ கொன்றுகொண்டிருக்கிறேன். அழுக்குக் கைலியும் பரட்டைத்தலையுமாக இரைதேடிவந்து பிடிபட்டு நிற்கும் இவனால் என்ன அபாயம் வந்துவிடும் என் தேசத்திற்கு ?

நில்லாமல் அசைந்தபடியிருக்கும் கடலில் எல்லைக்கோடுகள் எங்கிருக்கின்றன ? எல்லாம் தேசங்களின் அரசாங்கங்களின் விளையாட்டுகள்.

சற்றுதூரத்தில் சோல்ஜர்கள் பயிற்சியிலிருந்தார்கள். எல்லோரும் என் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள். நான் பயிற்சிபெற்றபோது விரும்பியதெல்லாம் இந்த அதிகாரத்தைத்தான். அது இருக்கிறது இப்போது. ஒரு ரோபோவைப்போல சல்யூட் செய்கிறார்கள் எனக்கு. ஆமாம் ரோபோதான். இவர்கள், நான், எனக்கு மேலுள்ளவர்கள், அவர்களுக்கு மேலுள்ளவர்கள் எல்லோருமே ரோபோதான். சுயமாக இயங்கமுடியாமைதான் ரோபோவிற்கான இலக்கணமென்றால், சந்தேகமின்றி நாங்கள் ரோபோதான். நான் கேட்டதுதான் கிடைத்திருக்கிறது எனக்கு. அதனூடான நிம்மதியை தவிர. வாழ்விற்கான அர்த்தங்கள் என்னவென்றே பிடிபடவில்லை இன்னும். இனி அதற்கு சாத்தியப்படுமென்ற நம்பிக்கைகூட இல்லை இப்போதெல்லாம்.

இப்போதெல்லாம் இப்படித்தான் மனம் கணக்குவழக்கில்லாமல் கிறுக்குத்தனமாக யோசிக்கின்றது. கண்களில் மெலிதான எரிச்சல் படர்ந்து அவன் சற்று தூரத்தில் மங்கலாகத் தெரிந்தான். இவனுக்கும் எனக்கும் எந்தப்பகையுமில்லை. இவனை இதற்குமுன்பாக பார்த்ததுகூட கிடையாது. ஆனாலும் இவனைக் கொன்றுதான் ஆகவேண்டும். அவனை விடுவிப்பதற்கு எனக்கு அதிகாரமில்லை. ஆமாம். கொல்வதற்கு அதிகாரமுண்டு. உயிர் கொடுப்பதற்கு இல்லை. என்ன ஒரு நகைமுரண் ! ஆனால் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

மேல் பாக்கெட்டிலிருந்து ஒரு சுருட்டை எடுத்தபோது கவனித்தேன். என் தோள் பகுதியில் சிறிதும் பெரிதுமாய் நிறைய பதக்கங்கள். எத்தனை உயிர்களை பறிக்கிறோமோ அத்தனைபதக்கங்கள் வந்து உடையில் சொருகிக்கொள்ளும். ஒவ்வொரு பதக்கத்தின் பின்பக்கத்திலும் பல உயிர்களின் வாழ்க்கை வரலாறு ஒளிந்திருக்கிறது. எவர் கண்ணுக்கும் தெரியாமல்.

சிறுவயதில் வாசித்த பெயர் மறந்துவிட்ட நாவலொன்றில் வருவதுபோல இது எல்லாமே கனவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. புத்தகப்பையுடன் பள்ளிக்கோ பள்ளியிலிருந்து வீட்டிற்கோ சென்றால் நிம்மதியாக இருக்கும்.

சட்டென எல்லாவற்றையும் உதறிவிட்டு தூரத்து கிராமத்திற்குச் சென்றுவிட்டால் என்னவென்று ஒரு வெறித்தனமான உந்துதல் பிறந்தது. ஊரில் அம்மா இருக்கிறாள். பாட்டியிருக்கிறாள். அப்பா இருக்கிறார். பெரிய புத்தர்சிலை இருக்கிறது. ஆறு இருக்கிறது. மரங்கள் நிறைந்த தோட்டத்துடன் பெரிய வீடு இருக்கிறது.

இப்போது அம்மா என்ன செய்துகொண்டிருப்பாள் ? அப்பாவுக்குப்பிடித்தமான எதையேனும் சமைத்துக்கொண்டிருப்பாள். வீட்டில் அசைவம் கிடையாது. புத்தரின் கொல்லாமையை உணவில் மட்டும்தான் ஓரளவு கடைபிடிக்க முடிகிறது வாழ்வில். அப்பாவிற்கு நான் ராணுவத்தில் சேர்ந்ததில் துளியும் விருப்பமில்லை. ஊருக்குச்செல்லும்போதெல்லாம் ஏதேதோ சாக்குவைத்து வெளியூரிலிருக்கும் தங்கைவீட்டிற்கு சென்றுவிடுவார்.

இந்தமுறையும் விடுப்பு கிடைக்கவில்லை எனக்கு. ரைபிளையெடுத்து கண்மூடித்தனமாக வெற்றுவெளியில் ஒரு ரவுண்டு சுடவேண்டுமென்று ஆசையாக இருந்தது. தலையைக்குலுக்கிக்கொண்டேன். மது என் உடலெங்கும் மிதந்துகொண்டிருந்தது. நரம்புகளில் ஒருவித சுகம் கூடியிருந்தது. சோல்ஜர் என் கட்டளைக்காக காத்திருக்கிறான்.

சிறியதொரு சமிக்ஞை செய்தால் ஒற்றைத்தோட்டாவினால் இரையை ரத்தக்குவியலாக்கிவிடுவான். எனக்கு இன்னும் மனம் சம்மதமாகவில்லை. காரணமேயின்றி இவனைக் கொல்வதற்கு மனம் ஒப்பவில்லை எனக்கு. மிகச்சிறியதொரு நெருடலோ வெறுப்போ கோபமோ கிடைத்தால் அனுமதிகொடுக்க வசதியாக இருக்கும். அவன் உடல் நடுங்கியபடி என்னையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருக்கிறான்.

கசங்கிய அவன் சட்டையின் மேற்புற பட்டன்கள் இரண்டு போடாமலிருந்தது. கழுத்தில் அணிந்திருந்த சிலுவையில் ஏசுகிறிஸ்து பாவமாக தொங்கிக்கொண்டிருந்தார். இடுங்கிய அவனது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. இங்கே பிடிபடுபவர்களில் முக்கால்வாசிப்பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஒடுங்கிய உடலும் பரட்டைத்தலையுமாக அங்குல இடைவெளியின்றி ஏழ்மை பூசப்பட்ட மனிதர்கள்.

வண்டியில் உணவுவர சோல்ஜர்களில் ஒரு குழு கூடாரத்திற்குள் சென்றது. நான் ஒருவனை அழைத்து உத்தரவிட உள்ளே சென்று ஒரு தட்டில் உணவெடுத்துவந்து அவனிடம் நீட்டினான். என்னை ஒருகண்ணால் பார்த்தபடியே வாங்கிக்கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்துகொண்டு சாப்பிடத்துவங்கினான். அவன் உள்ளுணர்வில் ஏதோ விஷயம் தெரிந்திருக்கவேண்டும்.

அளவற்ற பரிவு சுரந்தது எனக்கு. ஒருவேளை எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறதுபோல. வேகமாக உள்ளே சென்று அவசரமாக மறுபடி இரண்டுகோப்பை மதுவருந்தினேன். கொஞ்சம் மனம் நிதானம் கொண்டதுபோலிருந்தது. தலைவலித்து பாரமாக இருந்தது. தூக்கம் வந்தது. போன் ஒலித்தது. எடுத்துப்பேசினேன். மாலைக்குள் உடல்களை ஒப்படைக்கவேண்டும் ஆயிற்றா என்று கேட்டார்கள். ஓட்டலில் ஆர்டர் செய்த உணவு தயாராகிவிட்டதா என்று கேட்பதுபோலிருந்தது.

தனிப்பட்டு என்னை யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. நாளைய இவன் ஊர் தினசரி செய்தித்தாளில் என் பெயர் வெளிவரப்போவதில்லை. எல்லையை கடந்ததால் என் தேசத்தின் ராணுவம் பாதுகாப்பு காரணங்களுக்காக தண்டித்துவிட்டது என்றுதான் செய்திவரும். அப்படித்தான் எழுதுவார்கள். எழுத முடியும்.

போனை வைத்துவிட்டு ஒரு கெட்டவார்த்தையை உதிர்த்தேன். ஒட்டுமொத்த உலகின்மீதும் கோபம்வந்தது. ஒரு சோல்ஜரை அழைத்து கட்டளையிட்டேன். அவன் சாப்பிட்டு முடித்து வாசலில் நின்றுகொண்டிருந்தான். நான் அவனைக்கடந்தபோது பத்தடித்தொலைவில் மண்டியிட்டுப் பார்வையாலேயே கெஞ்சினான். அவன் மொழிதான் எனக்குப் புரியவில்லையே தவிர உயிர்ப்பிச்சை கேட்கிறான் என்பது நன்றாகவே தெரிகிறது. நடுத்தெருவில் யாரோ என்னை அம்மணமாக்கிவிட்டதுபோல் உணர்ந்தேன்.

என் பார்வையை மெல்லக் கீழிறக்கி வாகனம் நோக்கி நடக்கத்தொடங்கினேன். பின்னால் அவனது அடித்தொன்டையிலிருந்து கிளம்பிய அழுகையின் கதறல் அம்பென துளைத்தது என் முதுகை.

டிரைவர் வண்டியை நகர்த்தி சில அடிகள் சென்றபின்பு என் முதுகுக்குப்பின்னால் துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டது. நான் மற்றொரு சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டேன்.

Series Navigationவைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)