இலக்கிய வட்ட உரைகள்: 11 வண்ணநிலவனின் தெரு மு இராமனாதன்

author
0 minutes, 15 seconds Read
This entry is part 1 of 19 in the series 25 ஜனவரி 2015

vannanilavan

மு இராமனாதன்

 

(செப்டம்பர் 1, 2002 அன்று ‘எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் பேசியது)

 

அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்.

 

இன்று வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வுக்குள் சென்று வரப்போகிறோம். அந்தத் தெருவில் வசிக்கும் எளிய மனிதர்களைச் சந்திக்கப் போகிறோம். அதற்கு முன்பாக வண்ணநிலவனோடு கை குலுக்கிக் கொள்வோம்.

வண்ணநிலவனை ஜனரஞ்சக வாசகர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நல்ல படைப்புகளைத் தேடிப் படிக்கிற  வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். இயற்பெயர் ராமச்சந்திரன். துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றினார். ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவர். இவரது எஸ்தர் என்கிற சிறுகதை தமிழின் ஆகச் சிறந்த கதைகளின் பட்டியலில் இடம் பெறக்கூடியது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். இவரது முதல் நாவல் கடல்புரத்தில். 1978ஆம் ஆண்டில் ‘இலக்கியச் சிந்தனை’யின்  சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது. கடல்புரத்தில் வாழுகிற அசலான மனிதர்கள் தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாகப் பிரவேசித்தார்கள். கம்பா நதி என்கிற அடுத்த நாவல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது. நேசம் மறப்பதில்லை நெஞ்சம் அவரது இன்னொரு நாவல். ரெயினீஸ் ஐயர் தெரு 1981இல் வெளியானது.

இந்த ஐயர் என்கிற சொல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பிராமணர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஐயர் என்கிற சொல்லிற்குச்  சிறந்தவன் என்று பொருள். வள்ளுவன், ஐயன் வள்ளுவனானது அப்படித்தான். தமிழகத்தினுடைய தென்கோடி மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டத்திலேயும் , கன்னியாகுமரி மாவட்டத்திலேயும் கிறிஸ்துவப் பாதிரிமார்களைக் குறிப்பதற்காக இந்த ஐயர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். கேரளத்தில் ஃபாதர் தாமஸை, தாமஸ் அச்சன் என்று சொல்வாரகள். ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஃபாதர் தாமஸ் என்றேதான் சொல்கிறார்கள். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஃபாதர் தாமஸ், தாமஸ் ஐயர் ஆகிறார். அப்படியான ஒரு ஐயர்தான் ரெயினீஸ் ஐயர்.

பாளையங்கோட்டையில் ஒரு சின்னஞ்சிறு தெரு ரெயினீஸ் ஐயர் தெரு. எதிரும் புதிருமாக ஆறு வீடுகள். தெருவின் ஆரம்பத்தில் ரெயினீஸ் ஐயரின் கல்லறை இருக்கிறது.

 

முதல் வீட்டில் டாரதி என்கிற சிறுமி இருக்கிறாள். தாயில்லாப் பெண். அப்பா நேவியில் பணியாற்றுகிறார். இது அவளது பெரியம்மா வீடு. டெய்சிப் பெரியம்மா. பெரியப்பா பாதிரியார். எபன் அண்ணன் இருக்கிறான். சிநேகம் மிகுந்த அண்ணன். அவன் மீது டாரதிக்கு அலாதிப் பிரியம்.

 

எதிர் வீட்டில் இருதயம் டீச்சர். அவளது கணவன் சேசய்யா ஒரு சீக்காளி. எந்த நேரமும் இருமிக் கொண்டிருப்பான். குலுங்கிக் குலுங்கி இருமுவான். வீடு இடிந்து விழுவது போலே இருமுவான். என்றாலும் இருதயம் டீச்சருக்கு சேசய்யா மீது அளவற்ற காதல். அவனது நெஞ்சைத் தடவிக் கொடுப்பாள். கைத்தாங்கலாக அவனை நடத்திக் கொண்டுப் போய் படுக்க வைப்பாள். சேசய்யாவின் அம்மா இடிந்தகரையாளும் அவர்களோடுதான் இருக்கிறாள். ஆனால் மகனின் இருமல் அவளுக்குப் பழகிப் போய்விட்டது.

 

அதற்கு அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பெரியவர் ஆசீர்வாதம் பிள்ளையும் அவருடைய மனைவி ரெபேக்காளும். செயலாக இருந்தவர்கள்தான். ஆனால் இப்போது மாதத்தின் முதல் வாரத்தில் வரும் மணியார்டரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மழையிலும் அவர்களது பழைய வீடு சிதிலாமாகிக் கொண்டே வருகிறது. அவர்கள் வீட்டுக்கு யாரும் அதிகமாகப் போவதில்லை.

 

டாரதிக்கு அடுத்த வீட்டில் அன்னமேரி டீச்சரும் அவளது மகன் தியோடரும் இருக்கிறார்கள். தியோடர் நன்றாக இருந்த பையன்தான். மனைவி எலிசெபெத் போனதிலிருந்து ரொம்பவும் குடிக்கிறான். சமயங்களில் தெருவில்  விழுந்து கிடக்கிறான். இப்போது அவனை யாருக்கும் வேண்டாம். ஆனால் இப்படிப்பட்ட தியோடர்தான் ஒரு மழை நாளில் ஆசீர்வாதம் பிள்ளையின் சுவர் இடிந்து போனபோது அவர்களுக்கு உதவியாக இருந்தான், சாமான்களை எல்லாம் மாற்றிக் கொடுத்தான்.

 

மூன்றாவது வீடு ஹென்றி மதுரநாயகம் பிள்ளையுடையது. அவரது மகள் அற்புதமேரியும் அவளது அண்ணன் சாம்ஸனும் அந்த வீட்டில் இருக்கிறார்கள். அற்புதமேரி முதல்  வீட்டு டாரதியைவிடச் சின்னப் பெண்.

 

கடைசி வீடு ஜாஸ்மின் பிள்ளையின் வீடு. இப்போது வீட்டில் யாரும் இல்லை. வாழ்ந்து கெட்ட குடும்பம். அவருடைய மூன்று பெண்களில் இரண்டு பேர் வாழாவெட்டியாக பிறந்த வீட்டிற்குத் திரும்பி வந்தவர்கள். பையன்கள் யாரும் சரியில்லை. ஜாஸ்மின் பிள்ளை குடும்பத்தைச் சமாளிக்க நிறையக் கடன் வாங்கினார். அவர் உயிரோடு இருந்த வரை மரியாதை நிமித்தம் அவரை நெருக்காத கடன்காரர்கள், அவர் இறந்ததும் வீட்டை எடுத்த்துக் கொண்டு விடுகிறார்கள்.

 

இந்த ஆறு வீடுகளில் வாழ்கிற, வாழ்ந்த மனிதர்களைச் சுற்றி ஓடும் இந்த நாவலில் இந்த வீடுகளுக்கு வந்து போகும் மனிதர்களும் இடம் பெறுகிறார்கள். முதல் வீட்டு டாரதியின் வீட்டுக்கு மங்களவல்லிச் சித்தியும், சித்தியின் மகள் ஜீனோவும் கோடை விடுமுறைக்கு வருவார்கள். டாரதியும் ஜீனோவும் போட்டி போட்டுக் கொண்டு அன்பு செலுத்தும் கல்யாணி அண்ணனும் வருகிறான். கல்யாணி எபனின் நண்பன்.  இருதயத்து டீச்சரின் தங்கை பிலோமி, கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கிறாள். வாரக் கடைசிகளில் அக்கா வீட்டிற்கு வருவாள். சீக்காளி அத்தான் சேசய்யாவின் கட்டிலுக்கு முன் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு கல்லூரிக் கதைகளை வாய் ஓயாமல் பேசுவாள்.  அற்புதமேரியின் வீட்டிற்கு அவளது எஸ்தர் சித்தி வருவாள். எல்லையற்றப் பிரியத்தைக் காட்டிவிட்டு போகும்போது அதை எடுத்துக்கொண்டு போய்விடுவாள்.

 

ஆக இந்த ஆறு வீடுகள், அவற்றில் வாழ்கிறவர்கள், இந்த வீடுகளுக்கு வந்து போகும் விருந்தினர்கள், இவர்கள்தான் கதையில் வருகிறார்கள். அச்சில் மொத்தம் 85 பக்கங்கள்தான். சம்பிரதாயமான நாவல்களில் வரும் சம்பவங்களோ, அவற்றின் தொடர்ச்சியோ இந்த நாவலில் இல்லை. பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகள்தான் நாவல் என்கிற வகைமையில் தமிழில் பிரபலமாகி இருக்கின்றன. இந்தத் தொடர்கதை-நாவல்கள் எப்படி இருக்கும்? விறுவிறுப்பாக இருக்கும். சுவாரஸ்யமாக இருக்கும். சிந்திப்பதற்கோ யோசிப்பதற்கோ தேவையிருக்காது.

 

‘டேய், இந்தச் சிலையைப் பாருடா’ என்பான் முதலாமவன். ‘பாஸ், நான் சிலையெல்லாம் பார்க்கமாட்டேன், ரியலாக இருந்தால்தான் பார்ப்பேன்’ என்று இரண்டாமாவன் பதிலளிப்பான். அதற்கு முதலாமாவன் ‘நீ உருப்படவே மாட்ட’ என்பான். இப்படியாகக்  கிச்சு கிச்சு மூட்டுகிற உரையாடல்கள் இருக்கும்.  எல்லாத் தொடர்கதைகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்‌தின் முடிவிலும் ஒரு முடிச்சு, மர்மம் இருக்க வேண்டும். பாண்டியநாட்டு ஒற்றன் செய்த முத்திரையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது சோழ இளவரசன் மட்டுமல்ல, ஒருக்களித்த கதவிற்குப் பின்னால் இதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு ஜோடிக் கண்களும்தான் என்ற இடத்தில் தொடரும் என்று போட்டுவிட்டால் அடுத்த இதழ் வருகிற வரை வாசகனின் மனம் அந்த ஜோடிக் கண்கள் யாருடையவை என்கிற மர்மத்தில் மூழ்கி இருக்கும்.

 

எண்பதுகளின் துவக்கத்தில், தொடர்கதைகள் மட்டுமே நாவல் என்று அறியப்பட்ட காலத்தில், இப்படியான நாவல்களை மட்டும் வாசித்ததுப் பழகியவர்களுக்கு, இதை நாவல் என்று ஒப்புக்கொள்வதில் சிரமம் இருந்திருக்கக்கூடும். இருக்கட்டும். அந்தச் சிரமத்தைக் கடந்து வரவேண்டியதுதான். நாவலைக் குறித்தான பார்வையை அவர்கள்  மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.  சுந்தர ராமசாமி ஒரு முறை சொன்னார் நாவல் என்பது விமர்சனம். வாழ்க்கையைக் குறித்த விமர்சனம். அது ஒரு விமர்சகனின் விமர்சனம் அல்ல; மாறாக ஒரு கலைஞனின் விமர்சனம். வண்ணநிலவன் என்கிற கலைஞன் எளிய வாக்கியங்களில் எளிய மனிதர்களைப் பற்றிச் சொல்கிற இந்த நாவலும் வாழ்க்கையின் மீதான  விமர்சனந்தான். ஆனால் உரத்த குரலில் பிரசங்கமாக அல்ல, மென்மையான குரலில் சொல்லப்படுகிற, எந்த இடத்திலும் குரலை உயர்த்தாத கட்டுப்பாடுள்ள கலைஞனின் விமர்சனம்.

 

இந்த நாவல் ஆசிரியர் கூற்றாகத்தான் சொல்லப்படுகிறது. ஆனாலும் மிகுதியும் அந்தந்தப் பாத்திரங்களின் கோணத்திலேயே சம்பவங்கள் விரிகின்றன. இது கதைக்கு நம்பகத்தன்மையை நல்குகிறது. முதல் வீட்டு டாரதியின் கோணத்தில்தான் அவளது பெரியம்மாவைப்பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார் வண்ணநிலவன். டெய்ஸிப் பெரியம்மா நல்லவளா கெட்டவளா என்று தெரியவில்லை. பெரியம்மாவைப் பற்றிப் பணப் பேய் என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொள்கிறார்கள். ஹாஸ்டல் வார்டன் மெர்ஸி டீச்சரே சொன்னால் அது நிஜமாகத்தான் இருக்கும். ஆனால் பெரியம்மா ஒரு நாள்கூட காலை ஜெபத்தையும் இரவு ஜெபத்தையும் தவறவிட்டவர் இல்லை. தினந்தோறும் பைபிள் வாசிக்காமல் படுக்கமாட்டார். ஒரு கோவில் பாதிரியாருடைய மனைவி இப்படி இருக்க முடியும்தானா?- இந்த வரிகளை வாசித்துக் கொண்டே வந்தால் இது டாரதியினுடைய பார்வையிலிருந்து கொஞ்சம் வெளியே போவது மாதிரிப் படக்கூடும். அப்போதுவண்ணநிலவனின் அடுத்த வரி வருகிறது: அவளுக்கு என்ன தெரியும்? எவ்வளவு சின்னஞ்சிறிய பெண் அவள். ஒரு பாத்திரத்தின் பார்வைக் கோணத்தில் சொல்லிக் கொண்டு வருகிற விஷயத்தை, அந்தப் பாத்திரத்தின் வீச்சுக்குச் சற்று வெளியே போனாலுங்கூட அதை வாசகனுக்கு உறுத்தல் ஏற்படாமல் அநாயாசமாகச் சொல்ல முடிகிறது, வண்ணநிலவனால்.

 

இருதயம் டீச்சர் கோழிகள் வளர்ப்பாள். டாரதி எப்போதும் முன் வாசலில் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்ப்பாள். ஒரு நாள் இரண்டு கோழிக் குஞ்சுகள் தன்னந்தனியே மேய்ந்துகொண்டிருக்கும். சாதாரணக் காட்சிதான். ஆனால் டாரதிக்கு அது துயரம் தருகிறது. தன்னைப் போலவே அவையும் தாயின்றி அநாதரவாகத் திரிவதாக நினைத்துக் கொள்வாள். வாசகனுக்கு இந்தச் சின்னப் பெண்ணின் மென்மையான மனம் புரியும். அவள் அன்புக்கு ஏங்குகிறாள் என்பதும், எபன் அண்ணன் காட்டும் பிரியத்தை அவள் ஏன் இவ்வளவு தூரம் கொண்டாடுகிறாள் என்பதும் வாசகனுக்குச் சொல்லாமலே விளங்கும். ஒரு முறை எபன் எழுதிய ‘ரெயினீஸ் தெருக்காரர்களும் சாணை பிடிப்பவனும்’ என்று ஒரு கவிதை ஒரு பத்திரிக்கையில் வெளிவருகிறது. தெருவில் ஒவ்வொரு வீட்டுக்கும் டாரதி போகிறாள். ஒவ்வொருவரிடமும் அந்தக் கவிதையைப் படித்துக் காட்டுகிறாள். அந்தக் கவிதை பிரசுரமானதில் எபன் அண்ணனைவிட அவளுக்குத்‌தான் பெருமையாக இருக்கிறது.

 

மூன்றாவது வீட்டு அற்புதமேரியும் சின்னப் பெண்தானே! இருதயம் டீச்சர் தன்னிடம் லீவு லெட்டரைக் கொடுத்துப் பள்ளியில் சேர்க்கச் சொல்வது அவளுக்குத்தான் எவ்வளவு பெருமையாக இருக்கிறது. ஆனால் அந்தச் சின்னப் பெண் எஸ்தர் சித்தியையும் சாம்ஸனையும் விசித்திரமான கோலத்தில் பார்த்து விடுகிறாள். ஆனால் அதற்குப் பிற்பாடு அவள் மிகுந்த முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறாள். அவர்கள் இருவரிடமும்கூட அவளால் பிரியத்துடன் இருக்க முடிகிறது.

 

கிட்டத்தட்ட உரையாடல்களே இல்லாத நாவல் இது.பல்வேறு பாத்திரங்கள் வருகிறார்கள். யாரையும் ‘இவன் நல்லவன், இவன் மோசமானவன்’ என்று வண்ணம் தீட்டுகிற வேலையை வண்ணநிலவன் செய்வதில்லை. பெரிய ஜாம்பாவான்கள் எல்லாம் சறுக்குகிற இடம் இது. பல எழுத்தாளர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் கற்பிக்கிற ஆவேசத்தில் அறிந்தோ அறியாமலோ குரலை உயர்த்தி விடுவார்கள். அதைத் தவிர்த்து விடுகிற கட்டுப்பாடு வண்ணநிலவனுக்கு இருக்கிறது.

 

இந்த நாவலில் என்னைப் பிரமிக்க வைத்த இன்னொரு அம்சம் இதில் எந்தப் பாத்திரத்திலும் என்னால் வண்ணநிலவனைப் பார்க்க முடியவில்லை. பல எழுத்தாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்துதான் எழுதுகிறார்கள். அதனால் கதைக்குள் அவர்களை வாசகனால் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியம். சில பேர் மறைத்துக் கொள்ள எத்தனிப்பார்கள். என்றாலும் தெரிந்துவிடும். அப்படி எழுதுவது தவறு என்று நான் சொல்ல வரவில்லை. பொதுவான கதை சொல்லும் வழக்கிலிருந்து வண்ணநிலவன் மாறுபடுகிறார் என்றுதான் சொல்ல வருகிறேன்.

 

இத்தனைக்கும் இந்தக் கதையில் எபன் எழுதியதாக வருகிற, டாரதி வீடு வீடாகச் சென்று காட்டுகிற  ‘ரெயினீஸ் தெருக்காரர்களும் சாணை பிடிப்பவனும்’ என்கிற கவிதை வண்ணநிலவன் எழுதியதுதான்.

 

நாங்கள்

நீண்டநாட்களாய்

சாணைப் பிடிப்பவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

பழைய சோற்றுக்கு

பத்து பைசா நாணயத்துக்கு

அப்பாவின் கிழிந்த சட்டைகளுக்கு

சாணை பிடித்துக் கொடுப்பான்.

 

-என்று தொடங்கும் அந்த அதிஅற்புதமான கவிதையின் வரிகள் நாவலில் இடம் பெறவில்லை.

 

ஆனால் கதையில் வருகிற எபனுக்குள் வண்ணநிலவன் இல்லை. டாரதிக்குள், அற்புதமேரிக்குள், சாம்ஸனுக்குள், தியோடருக்குள், இருதயம் டீச்சருக்குள், சேசய்யாவுக்குள், எஸ்தருக்குள், கல்யாணிக்குள், மதுர நாயகத்துக்குள் யாருக்குள்ளும் இந்தக் கதாசிரியனை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்தப் பாத்திரங்கள் ஜீவனோடு ரெயினீஸ் ஐயர் தெருவுக்குள் உலவுகிறார்கள்.

 

நாவலின் கடைசி வரிகளை வாசித்து என்னுடைய பேச்சை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

 

“எல்லாவற்றையும் உய்விக்கிற மழைதான் ரெய்னீஸ் ஐயர் தெருவை பெருமைப்படுத்துகிறது. டாரதி நினைத்தபடியே அன்று மழை வந்தது. மழையில் ரெய்னீஸ் ஐயர் தெருவைப் பார்க்க அழகாக இருந்தது. தெருவின் அமைதியில் மழை மேலும் பிரகாசம் எய்தியது. மழை தெருவுக்குப் புது மணலைக்  கொண்டு வரும். எதிர்த்த  வீட்டு இருதயத்து டீச்சர் வீட்டுக் கோழிகள் தங்களுடைய எளிய அலகுகளால் மண்ணைக் கிளறுகிற சந்தோஷத்தையும் மழைதான் தருகிறது. மழை எப்பொழுதும் நல்லதே செய்யும் என்பதை ரெய்னீஸ் ஐயர் தெருக்காரர்கள் நம்பினார்கள். இருதயத்து டீச்சர் இந்த மழைக்கு பிறகு சேசய்யா திடீரென ஆச்சரியப்படத்தக்க விதமாய் குணமடைந்து விடுவானென்று நம்பினாள். அன்னமேரி டீச்சர் ஓட்டிலிருந்து இறங்கி வரும் தண்ணீரை பிடிப்பதற்காக வரிசையாக பாத்திரங்களை மழையில் நனைந்துக்கொண்டே வைத்தாள். சாம்ஸனுக்கும் மழையை வேடிக்கை பார்க்க மனம் இருந்தது. டாரதி, தாத்தாவின் கால்மாட்டில் கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டாள், மழையைப் பார்க்க.”

 

“ஆசீர்வாதம் பிள்ளையின் மனைவி ரெபேக்காள் மழைத் தண்ணீர் வீட்டுக்குள் வந்து விடாதபடி பழைய சாக்குத்துண்டுகள் இரண்டை எடுத்து வாசல் நடையில் போட்டாள். மழையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத் தோன்றுவார்கள் மழையின் போது.”

 

-என்று கதை முடிகிறது.

 

ஒரு விடுமுறை நாளின் மாலைப்பொழுதில் 15-20 பேர் வந்திருக்கிறீர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான ஒரு நாவலைப் பற்றி, 4000கி.மீ தூரத்தில் வாழும் ஒரு எழுத்தாளரைப் பற்றி நான் பேசியதை இவ்வளவு நேரமும் கவனமாகக் கேட்டீர்கள். அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.

 

மு இராமனாதனின் இணையதளம்: www.muramanathan.com

 

(செப்டம்பர் 1, 2002 அன்று ‘எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் பேசியது)

 

(ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள், தொகுப்பு: மு.இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)

 

Series Navigationபில்லியன் ஆண்டுக்குப் பிறகு பூமியின் காந்த உட்கரு எப்படி இருக்கும் என்பதற்கு மாதிரி எறிகல் [Meteorites] மறை குறிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *