இல்லாதிருக்கும் இறந்தவர் தரப்பு

Spread the love

அத்தனை ஆதாரங்களிருந்தாலும்
மொத்தமாய் நூறு சாட்சியங்கள் 
குற்றவாளி என்று கூறினாலும்
வழக்கு பல வருடங்கள் நடந்தாலும்
விசாரணையெல்லாம் முடிந்தாலும்
அபராதி என்றே அறியப்பட்டாலும்
மரணதண்டனை கூடாது, கூடாது, 
கூடவே கூடாது
மனிதநேயம் மறக்கலாகாது.
அதேசமயம் _
அறிவித்தாகவேண்டும் இங்கே இப்பொழுதே 
இவரை_
மிக அபாயகரமான குற்றவாளியாய்.
மரணமடைந்துவிட்டவரை விசாரிக்க
முடியாவிட்டால் என்ன?
அவர் தரப்பு நியாயத்தையும் கேட்கவேண்டுமா?
சிரிப்பு வருகிறது.
அப்படியொன்று இருக்கிறதா என்ன?
அஃதெல்லாம் பொதுநீதிமன்றப் போக்கு
போட்டுத்தாக்கு – 
அதுவே இந்த தனி நீதிமன்றத்தின் நியாயவாக்கு.
இன்றில்லாமல் போய்விட்டவரை 
சங்கிலியிட்டு இழுத்துவந்து
மாறுகால் மாறு கை வாங்கி
பங்கப்படுத்தவேண்டும்
மடேர் மடேர் என்று 
மண்டையில் அடிக்கவேண்டும்;
மளுக்கென்று 
கைவிரல்களை முறிக்கவேண்டும்;
மார்பில் ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்து
அதை பத்துபேர் 
பலம் கொண்ட மட்டும் அழுத்தவேண்டும்.
உயிரோடிந்தபோது பத்தே பத்து வரிகளில் 
அவர் அத்தனை நயமாய் 
பிரபஞ்சத்தை விரித்துக்
காட்டியிருந்தால்தான் என்ன?
ஒற்றை வார்த்தையால் அவருடைய 
முடிக்கற்றைகளைப் பற்றி
சுழற்றியடிக்கவேண்டும் நாற்திசைச் சுவர்களில்.
மொத்தமாய் அந்த வாயைக் 
கிழித்தெறியவேண்டும்.
இறந்தவரை வலியில் வீறிடவைக்க
முடியாதெனில்
அறிவியல் நாசமாய்ப் போகட்டும்
நான்கூட கணிப்பொறியைப் பயன்படுத்துகிறேன் 
என்று சுட்டிகாட்டுகிறாயா?
என்ன நக்கலா?
இரு இரு – வருகிறேன்……
முதலில் சுத்தியால் அந்த செத்த மண்டையை 
இன்னும் இருநூறுமுறை அடித்தபிறகு;
இரு கால்களால் மாறி மாறி எட்டியுதைத்து 
சாக்கடையில் உருட்டித்தள்ளிவிட்ட பிறகு;
அடையாளம் தெரியாத அளவு அவர் எழுதுகோலை 
உடைத்துநொறுக்கிமுடித்த பிறகு

Series Navigationகாற்றின் கன அளவுகள்பறவைப் பார்வை