இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு

Spread the love

சமகால இஸ்லாமிய அரசியல் குறித்த விவாதத்தில் கீழ்கண்டவாறு ஒரு குறிப்பை ந.முத்துமோகன் எழுதிச் செல்கிறார்.

“”பல நபிகளை, பல சமூகங்களை, பல கலாச்சாரங்களை, பல வேதங்களை இஸ்லாம் கோட்பாட்டு ரீதியாக ஒத்துக் கொள்கிறது. ஆனால் வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதம் ஏகத்துவத்தை வைத்தே தன்னை கட்டமைக்கிறது. இக்கூற்றில் இடம் பெறும் உண்மைகளையும் விடுபட்ட உண்மைகளையும் நாம் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

உலக அளவில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம் நாடுகள் மீதும், அதன் பெட்ரோல் வளங்கள் மீதும் மேலாதிக்கம் செய்யும் நோக்குடன் செயல்படும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய உலக ஏகாதிபத்திய, கிறிஸ்தவ, ஜியோனிச அரசின் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் ஒரு களமாகவே வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்தை மதிப்பிடுவோரும் உண்டு.

ஆனால் கோட்பாட்டு ரீதியான இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது வேறுவிதமானது. ஆதம் நபி துவங்கி மூசா நபி வழியாக ஈசா நபி எனப்படும் ஏசு கிறிஸ்துவையும் ஒரு சில விலக்குகளுடன் நபியாக ஏற்றுக் கொண்டதின் காலச்சூழல் ஏழாம் நூற்றாண்டில் பிற இனக்குழு மக்களையும், யூத கிறிஸ்தவர்களையும் இஸ்லாத்தின் பால் ஈர்க்க வேண்டிய அவசியத்தால் நிகழ்ந்ததாகவுமே நாம் புரிந்து கொள்ளலாம்.

இன்றைய நிலையில் முன்வைக்கப்படும் இஸ்லாம் என்பது ஒற்றைப்படுத்தப்பட்ட அரபு வகைப்பட்ட வகாபிச இஸ்லாம் ஆகும். அரபுலகம் தவிர்த்த பிற மண் சார்ந்த நிலவியல், பண்பாட்டு தாக்கம் சார்ந்து உருவான பிரதேசத் தன்மை கொண்ட இஸ்லாமிய அடையாளங்களை அழித்தொழிப்பது வகாபிசத்தின் முக்கிய நோக்கமாகும்.

இது மேலும் மேலும் கற்பிதங்களுக்குள் ஒருவகை அதிகார இஸ்லாத்தை கட்டமைக்கிறது. இதற்கு மாற்றான அடித்தள மக்களின் விடுதலை சார்ந்த இஸ்லாத்தை தாராள தன்மையும் ஜனநாயகத் தன்மையும் கொண்ட சூபிய கருத்தாடல்களின் மூலமே உருவாக்க சாத்தியம் உள்ளது. இதற்கு ந. முத்துமோகனின் இஸ்லாம் குறித்த கருத்தாடல்களை ஒரு ஆவண வரைவாக முன்வைக்க முடியும்.

ஏழாம் நூற்றாண்டில் உருவாகி வளர்ந்த இஸ்லாம் மத்திய காலத்தில் அதன் உச்சகட்ட பரவலையும் கல்வி, விஞ்ஞானம், மருத்துவத் துறைகளிலும் செயலாக்கம் நிறைந்த தாக்கங்களையும் உருவாக்கியது. இஸ்லாமியப் பேரரசு என்கிற ஆட்சியதிகாரம் சார்ந்த அரசியலுக்கு மாற்றான தளங்களிலும் இச்சிந்தனை விரிவடைந்தது. கிரேக்க தத்துவம், பாரசீக மறைஞானம், இந்தியர்களின் கணிதம் வானவியல் அறிவு என்பதான நெருக்கங்களைக் கொண்டிருந்தது. பிளேட்டோ, அரிஸ்டாட்டில், புதுப் பிளேட்டானியர்களின் நூல்கள் அரபுமொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. ஐரோப்பாவில் ஆளுகையிலிருந்த கிறிஸ்தவ சமயம் கிரேக்க தத்துவங்களை தடை செய்திருந்தன. இந்நிலையில் இஸ்லாமிய நாகரீக வளர்ச்சியின் மூலவர்களாக அறிஞர்கள் உருவாகினர்.

கி.பி. 864 925 ல் ஈரானின் மருத்துவக் கலைக்களஞ்சிய அறிஞர் அபுபக்கர் அல் ராஸி, 870 950 களில் துருக்கி தத்துவச் சிந்தனையாளர் அபுநாசர் பராபி, 980 1037களில் மத்திய ஆசிய புகாரவைச் சேர்ந்த விஞ்ஞானத் துறை அறிஞர் அபுஅலி இபின் சினா (அபிசினா) சூபிய மறை ஞானத்தை பேசிய தத்துவஞானி அல் கஸ்ஸாலி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். குரானுக்கு 30 தொகுதிகளில் 40 ஆண்டுகள் செலவழித்து உரை எழுதியஅறிஞர் அல்தஃப்ரியும் இந்த வரிசையில் முக்கியமானவர்.

துருக்கியிலும், இந்தியாவிலும் நீண்டகால கிலாபத் எனும் இஸ்லாமிய அரசியலின் நிலைப்பாடுகளை பேசவந்த ந.முத்துமோகன் அக்பர் எஸ் அகமதுவின் வழியாக இதனை குறிப்பிடுகிறார். மேற்கு அட்லாண்டிக் கடற்கரை முதல் கிழக்கில் இந்தோநேஷியாவரை நிலைபெற்றிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் 1618ம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனிய படை எடுப்புகளால் நெருக்கடிக்கு உள்ளானது. ஐரோப்பிய தொழில்மய கலாச்சாரமும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஸ்பெயினிலிருந்து சாமர்கண்டுவரை பிரமாண்ட நகரங்கள், வணிகப்பாதைகள் ஐரோப்பிய நகரமயமாகி உள்ளாகியது. ஐரோப்பிய மூலதன கொடும் எழுச்சியும், காலனி ஆதிக்கமும் முஸ்லிம் தன்னம்பிக்கையை சிதைத்தன. ஐரோப்பிய மூலதனத்தோடு இனவெறி சமயசார்பு, உயர்வு மனப்பான்மை, காலனிக்கு ஆட்பட்ட மக்கள் பற்றிய இழிவான கண்ணோட்டம், அரபுமேட்டுக்குடிகள், பிரபுக்களின் காலனிய ஆதரவு நிலைபாடு போன்றவை முஸ்லிம் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகின.ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திற்கு எதிரான அரபு விடுதலை இயக்கங்கள் இருபதாம் நூற்றாண்டில் எழுச்சியாக உருவெடுத்தது. அரபு தேசியவிடுதலை, இஸ்லாமிய நாடுகளின் விடுதலை என்பதான நிலையிலிருந்து அரபு சோசலிசம், இஸ்லாமிய சோசலிசம்வரை தனது சிந்தனைப்போக்கை நீட்டித்து பார்த்தது.

சமகாலத்தில் எகிப்து சிரியாலிபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் நிகழ்வுற்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் எழுச்சியை கண்கூடாக காண்கிறோம். அரபு நாடுகளில் செயல்படும் ஆட்சி முறைபற்றிய விவாதத்தை இது நம்மிடம் முன்வைக்கிறது. இப்பிரச்சினைகளை அரசியல் ரீதியாக புரிந்து கொள்வதற்கு ஒரு அடிப்படையான அணுகுமுறையை ந.முத்துமோகன் முன்வைக்கும் மூன்றுவித அரபு தேசியம் குறித்த விவாதம் எழுப்புகிறது.

இதில் ஒன்று அரசகுடும்ப தேசியவாதமாகும். மரபு வழி அரேபிய அரச குடும்பங்கள் இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி நடத்துகின்றன. மேற்கு நாடுகளுக்கு ஆதரவை கொடுக்கும்நேரத்தில் மேற்கு அரசுகள் தலையிடாத ஆட்சியை விரும்புகிறது. ஆனால் ராணுவ ரீதியான வல்லமையை விரும்புகிறது. இது பிரபுத்துவ நலன்களுக்கு எதிராக இஸ்லாம் செயல்பட்டுவிடக் கூடாது என்கிற நடைமுறைத் தந்திரத்தையும் கூறுகிறது.

இரண்டாவதாக அறிவுத்துறை தேசியவாதம் இடம் பெறுகிறது. அரபுதேசிய அடையாளம் என்பதோடு மேற்கின் விஞ்ஞான, தொழில் நுட்பங்களை உமர் வாங்க வேண்டும் என்கிற கருத்தியலை பேசுகிறது. முதலாளியம் தனிமனிதமையமாகிறது. கம்யூனிசம் சமூக முழுமையைச் சொல்கிறது. தனிமனித முனைப்புகளை அழித்துவிடுவதால் இவ்விரண்டிற்கும் இடையிலான தனிமனித சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்தும் சமூக நீதியைப் பேசுகிறது. அரசியல், பொருளாதாரம், சமயம் ஆகியவற்றில் இணைக்கும் அரசின் பாத்திரம், இஸ்லாமிய அரசியல் கருத்துருவாக்கம் குறித்தும் கலந்துரையாடல் செய்கிறது.

மூன்றாவதாக முன்வைக்கப்படும் இஸ்லாமிய மக்கள் தேசியம் மேற்கு நாடுகளின் சந்தர்ப்பவாத கூட்டிற்கு எதிராகவும், அரசு எந்திரத்தின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், அரபுநாடுகளின் உள் முரண்பாடுகளை சந்திக்கும் திட்டமாகவும், இஸ்லாத்தை பழமைவாதமாக மாற்றிய அரசியலுக்கு எதிராக மக்கள் விடுதலை சமூக மாற்றத்திற்கு, ஆதரவாக இஸ்லாமை மறுவாசிப்பு செய்வதாகக் கோருகிறது.

உலக அளவில் இஸ்லாமியக் கலாச்சாரத்தின் பன்முக ஆற்றலை, ஆன்மிக மற்றும் உலகியல் ஆற்றல்களை மறுதிரட்சி செய்யாமல் இன்றைய நெருக்கடியை நாம் கடந்து செல்லமுடியாதென மதிப்பீடு செய்யும் முத்துமோகன் இந்திய தமிழகச் சூழலில்களில் இஸ்லாத்தை மார்க்ஸிய, பெரியாரிய தளத்திலிருந்து அணுக வேண்டும் என்கிறார். மதங்களைப் புறக்கணிப்பு செய்கிற நிலையிலிருந்து விலகி, அதனுள் புகுந்து அதன் உள்ளடக்கத்தை வெளிக்கொண்டு வருதல் அவசியம் என்கிறார்.

ந.முத்துமோகனின் இப்பார்வையை நாம் இன்னும் விரிவு செய்து பார்க்கலாம். இஸ்லாத்தின் மீதான விமர்சனம் எதிர் விமர்சனம் என்ற எல்லைகளை ஒத்துக்கொண்டு அணுகுவோம் என்றால் அம்பேத்கரிலிருந்து துவங்கலாம். முஸ்லிம் சமூகங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதீய படிநிலைக்கு எதிரான கதையாடல்கள் குறித்தும் தலித்திய அணுகுமுறை, ஆணாதிகாரம் சார்ந்த மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்கும் பெண்ணிய வாசிப்பு சார்ந்தும் இந்த விரிவாக்கத்தை நாம் தொடரலாம்.

Series Navigationசமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்“தா க ம்”