உணவு நச்சூட்டம்

 

                                                     டாக்டர் ஜி. ஜான்சன்
          உணவு நச்சூட்டம் ( Food Poisoning ) இன்று பரவலாக ஏற்படும் மருத்துவப் பிரச்னை எனலாம். .
          சிறு பிள்ளைகள் முதல் பெரியவர் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் நாம் இப்போதெல்லாம் அதிகமாக உணவகங்களில் சாப்பிடுவதே.

பெரும்பாலான உணவகங்களில் பணிபுரிவோருக்கு சுகாதாரம் பற்றி ஏதும் தெரியாது. அவர்களின் கைகள் சுத்தமாக இருப்பதில்லை. மேசையையும் துடைப்பார்கள். மூக்கையும் சிந்துவார்கள்.கைகளை சவுக்காராம் போட்டு கழுவாமல் உணவையும் குறிப்பாக பரோட்டா, சப்பாத்தி தயாரிப்பார்கள்! அதையே நாம் சுவையாக எண்ணி உண்கிறோம்.

           உணவக உரிமையாளர்களுக்கும் சுகாதாரம் பற்றி அதிகம் தெரிவதில்லை. சுகாதார அமைச்சும் நாட்டிலுள்ள அத்தனை உணவகங்களையும் பராமரிப்பது இயலாத காரியமாகும். அதனால் இந்த ஆபத்துடன்தான் நாம் அன்றாடம் உணவருந்துகிறோம்!

வைரஸ் , பேக்டீரியா , வேதியியல் நஞ்சு , உணவில் கலப்பதின் மூலமாக உண்டாகும் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படுவதையே உணவு நச்சூட்டம் என்கிறோம்.

           வயிற்றுப் போக்கு பொதுவாக சில மணி நேரங்கள் முதல் ஓரிரு நாட்கள் தொடரலாம். ஆனால் ஒருசில நச்சூட் டம் மோசமாகி உயிருக்கு ஆபத்தையும் உண்டாக்கலாம்.

நச்சூட்டம்  உண்டாகும் காரணங்கள்

* உணவு தயாரிப்பவர்களுக்கு நோய்த் தோற்று இருப்பின், அவர்கள் மூலமாக ஸ்ட்டெபல்லோகாக்கஸ் ( Staphylococcus ) என்ற பேக்டீரியா உணவு மூலம் நம்மைத் தாக்கலாம்.

* உணவிலும் நீரிலும் ஈ கோலை ( E. Coli ) என்ற பேக்டீரியா கலந்திருந்தால் பிரயாணிகள் வயிற்றுப் போக்கு ( Travellers’ Diarrhoea ) உண்டாகலாம்.

          * கோழி இறைச்சி, முட்டை, இதர மாமிசம் போன்றவற்றில் சேல்மோனேலா ( Salmonella ) பேக்டீரியா எளிதில் கலந்து வயிற்றுப் போக்கு உண்டாக்கலாம்.

* கொடிய தன்மைமிக்க பேக்டீரியாக்கள் சமைத்த அல்லது சமைக்காத இறைச்சி, மீன் போன்றவற்றில் தொற்றலாம் .

          * சமைத்த உணவை நீண்ட நேரம் வெளியில் வைத்திருந்தாலும் நோய்க் கிருமிகள் தொற்றும் வாய்ப்பு உள்ளது.

* உணவில் மையோனேஸ் பயன்படுத்தி சமைத்தால் நோய்க் கிருமிகளின் தோற்றும் அதிகம் இருக்கும்.

* வீடுகளில் தயார் செய்யும் டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளில் ஒரு வகையான நோய்க் கிருமி தோற்றலாம். இந்த கிருமி பெருக பிராண வாயு தேவை இல்லை. இவற்றை சமைத்தாலும் அழிக்க முடியாது! இந்த கிருமி போட்டுலிசம் ( Botulism ) என்ற கொடிய வியாதியை உண்டு பண்ணுகிறது.

          * குழந்தைகளுக்கு தேன் தந்தால் அதிலுள்ள இயற்கையில் அமைந்த கிருமிகளை அழிக்க முடியாமல் போட்டுலிசம் நோய் வரலாம்.

* சரிவர சமைக்காத கடல்  மட்டி வகைகளை ( shell – fish ) உட்கொண்டால் வைரஸ் தொற்று உண்டாகலாம்.

          * சில காளான்கள் ( Mushroom ) , பெரி ( Berries ) இன்னும் சில செடி வகைகளில் நச்சுத் தன்மை கொண்டவை.

* சரியாகப் பாதுகாக்கப் படாத பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள் போன்றவற்றில் பூஞ்சணம் பூக்கலாம். இவற்றை உட்கொள்ளுதல் ஆபத்து.

           * உணவில் பூச்சிக் கொல்லிகள், கிருமி நாசனிகள் கலந்தால் இரசாயன நஞ்சால் மிகவும் ஆபத்து உண்டாகும்.

* உணவை சுத்தம் இல்லாத இடங்களில் தயாரிப்பதும், வைத்திருப்பதும், பரிமாறுவதும்கூட கிருமித் தொற்றை உண்டுபண்ணும்.

                                  உணவு நச்சூட்ட அறிகுறிகள்

* பேக்டீரியா தொற்று – கடும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை உணவை உட்கொண்ட ஒரு மணி நேரத்தில் தொடங்கி நான்கு நாட்கள் வரை நீடிக்கலாம்.

          * வைரஸ் தொற்று – வாந்தி , வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, தலை வலி, குளிர் காய்ச்சல், போன்றவை உணவை உட்கொண்ட12 நேரத்தில் உண்டாகலாம்.

* இரசாயன கலப்பு – வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை, தலை சுற்றுதல், கண்களில் நீர் வழிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல், குழப்பம், வயிற்று வலி போன்றவை உணவை உட்கொண்ட 30 நிமிடங்களில் ஏற்படலாம்.

          * போட்டுலிசம் – பார்வை, பேச்சு இழத்தல், தலையில் இருந்து கால் வரை தசைகள் செயல் இழத்தல் ( PARALYSIS ) வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும்.

இவற்றில் எந்த வகையான நச்சூட்டம் உண்டானது என்பதை மலம், இரத்தம், வாந்தி பரிசோதனைகளின் வழியாகக் கண்டறியலாம்.

                                    உணவு நச்சூட்டத்திற்கான சிகிச்சை

உண்மையில் வாந்தியும் வயிற்றுப் போக்கும் வயிற்றிலும் கூடலிலும் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றும் முயற்சியாகும். இது உடலின் தற்காப்பு நடவடிக்கையாகும்.

          ஆதலால் உடனே வாந்தியையும் வயிற்றுப் போக்கையும் நிறுத்திவிட மருந்து உட்கொள்வது தவறுதான். ஆனால் நாம் இதைப் பின்பற்றுவதில்லை. உடன் மருந்து உட்கொண்டு நிவாரணம் பெறவே முயல்கிறோம்.

ஆகவே 24 மணி நேரம் அவற்றை தடுக்காமல் நச்சை வெளியேற்றுவதே நல்லது. நீர் ஆகாரத்தை 12 மணி நேரம் பருகலாம். அதன்பின்பு கஞ்சி, சூப்பு போன்றவற்றை ஒரு நாள் பருகலாம்.

             வாந்தியும் வயிற்றுப் போக்கும் பெரும் அளவில் உடலின் நீரை இழக்கச் செய்வதால் உடலில் நீர்க் குறைவு ( Dehydration ) உண்டாகி குறிப்பாக குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ணலாம். அது போன்ற நிலையில் உடன் இரத்தக் குழாய் வழியாக ( INTRAVENOUS DRIP ) சொட்டு சொட்டாக குளுகோஸ் சேலைன் ஏற்றப்படும்.

உணவு நச்சூட்டம் தடுப்பு முறைகள்

* உணவு தயாரிக்கு முன் கைகளை எப்போதும் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

* இறைச்சி, மீன் வகைகளை சமைத்த பாத்திரத்தை சுடுநீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

          * குளிர் சாதனப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்த சில்லிட்ட இறைச்சியை ( Frozen meat ) வெளியில் வைத்து குளிர் போக்காமல், மைக்ரோ வேவ் அவன் ( Micro wave oven ) பயன்படுத்தி, அதன் குளிர் போக்கி உடன் சமைத்துவிட வேண்டும்.
          * இறைச்சி, மீன், முட்டை அனைத்தும் நன்றாக வேக வைத்து சமைக்க வேண்டும்.

* பார்வைக்கு கெட்டுப்போனதாகவும், நாற்றம் அடிப்பதாகவும் இருந்தால் அதை உண்ண வேண்டாம்’

* டின்களில் அடைக்கப்பட்டுள்ள உணவு வகைகளை உட்கொள்ளுமுன், அந்த டின் உப்பியிருந்தால் ( bulging cans ) அதை உட்கொள்ள வேண்டாம்.

          * குளிர் சாதனப் பெட்டியின் வெப்ப அளவை 37 டிகிரி ஃபேரன்ஹைட் அளவில் வைக்கவும். அதிலிருந்து எடுக்கப்பட்ட சமைத்த உணவை 2 மணி நேரத்துக்கு அதிகமாக வெளியில் வைத்திருந்து உண்ண வேண்டாம்.

* சுகாதாரமற்ற உணவகங்களிலும் அங்காடிகளிலும் ஈக்கள் மொய்த்த உணவுகளை உண்ண வேண்டாம்.

( முடிந்தது )

Series Navigationஎதிரி காஷ்மீர் சிறுகதைநட்பு