உமா மகேஸ்வரி கவிதைகள்: ‘இறுதிப் பூ’ தொகுப்பு வழியாக…

This entry is part 18 of 18 in the series 14 ஜூலை 2013

 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 

உமா மகேஸ்வரி (1971) மதுரையில் பிறந்தவர். சிறுகதை வடிவத்தைச் செம்மையாகக் கையாண்டு வருபவர். இவருடைய நான்காவது கவிதைத் தொகுப்புதான் ‘இறுதிப் பூ’! வீடு, வீட்டின் உறவுகள், குழந்தைகளின் உலகம் பற்றிய பதிவுகள் கொண்டவை இவரது கவிதைகள். இத்தொகுப்பில் 71 கவிதைகள் உள்ளன. புதிய பார்வை, அம்ருதா, புதிய காற்று, உன்னதம், புதுவிசை, சஞ்சாரம், அமுதசுரபி, காலச்சுவடு, தீராநதி, உயிர் எழுத்து போன்ற இதழ்களில் வெளியாகி உள்ளன.

‘நீரோடு போகும் பூ’ – மிக மெல்லிய கவிதை. நீரில் மிதந்து செல்லும் புவைக் கேட்கிறது ஒரு குழந்தை. மரம் நிறையப் பூத்திருந்தாலும் நீரோடு போகும் பூதான் வேண்டுமாம்.

 

    அடம் தொடரும் குழந்தையிடம்

    வேறென்ன சொல்ல

    ‘நீரோடு போகும் பூ வேண்டுமென்று

     நீயே கேள் நீரிடமே’

என்கிறார். யதார்த்த கவிதையில் விளக்கம் சொல்ல ஒன்றுமில்லை.

 

‘எளிது’ – கவிதையில் கொடுமையான மனிதமனம் ஒன்று பதிவாகியுள்ளது.

 

    அந்த மிருக விழிகளை

    அறிவேன்

எளிது எல்லாமே எளிது

அவற்றிற்கு

 

தலையணையருகே

ரூபாய் நோட்டுகளைப் போட்டு

திருடியாக்குவதும்

குளிர் நடுக்கத்தைக் கூட

கோழைத்தனம் என்பதும்

நானறிந்த ரகசியங்களைப்

பொய்யாக்க வென்று

எனக்குப் பைத்தியமெனச் சொல்வதும்

வாசல் படியிலமர்ந்து

எனக்கு நானே புன்னகைப்பதால்

விபச்சாரியென்பதும்

எளிது. மிக எளிது.

 

மலையுச்சி

தடுமாறும் என் கால்களை

இடறிவிட்டு

அதைத் தற்கொலையென்பதும் கூட

 

மேற்கண்ட கவிதை மாமியார் கொடுமையை விவரிப்பதாகவும் பார்க்க இடமிருக்கிறது.

 

‘இன்மை’ – இருண்மைக் கவிதை. சில கருத்துகள் தொடர்பு படுத்த முடியாமல் தனித்தனியாக நிற்கின்றன. தொடர்பு படுத்திப்பார்த்தால் கவிதைக்கரு பொருள் புரியாமல் போகிறது. கவிதை கோவையாக இல்லை. செம்பு, மோதிரங்கள், ஆடுகள், மரப்பாச்சிகள், நதிக்கரைக் கோயிலின் குங்கும வாசனையும் வீடெங்கு நிறைக்கும் என்று கவிதையின் தொடக்கப் பகுதி அமைந்துள்ளது. மேற்கண்ட வாக்கியத்தில் என்ன ஒழுங்கு இருக்கிறது?

 

    காற்றில் நானனுப்பிய

    பஞ்சுப் பூவின் தூவிகள்

    கசங்கின, உதிர்ந்தன,

கழற்றவே படாத கிரீடங்களின்

    கனத்துக்கடியில்.

 

என்ற முத்தாய்ப்பு ‘சப்’ பென்று இருக்கிறது. வேறு சில கவிதைகளும் இதைப் போல்தான் இருக்கின்றன.

 

‘சித்திர’ – இருண்மையும் தத்துவமும் போட்டி போட்டுக் கொண்டு பின்னுகின்றன. படித்து முடித்ததும் எதுவும் மனத்தில் நிற்பதில்லை.

 

    எல்லாமும் நகர்கின்றன

    விரைந்து

    நிற்பதேயில்லை அவை

    திரும்பியும் பார்ப்பதில்லை

    அவற்றை

மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்

    எந்த சக்தியும்.

    பறந்து மறைகின்றன

    அவை.

 

இதுபோல் தொடரும் இக்கவிதையை ‘சஞ்சாரம்’ என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

 

புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘இறுதிப் பூ’

 

    அனைத்தையும்

    சுருட்டியழிக்கும் சூறாவளியின்

    முதலசைவு

    உறங்கும் குழந்தையின்

    இமை விளிம்பில் இருக்கிறது

    இறுதிப் பூ

    இன்னும் பூக்க வேண்டும்

 

என்ற வரிகளில் என்ன சொல்ல வருகிறார் கவிதைசொல்லி?

 

நிறைவாக, இவர் கவிதைகளைப் படித்த வாசிப்பனுபவம் திருப்தியாக இல்லை. மிக அழகான சிறுகதைகளை எழுதியவர் உமா மகேஸ்வரி! கவிதைக் கரு எதுவெனத் தெளிவாகத் தெரிய வேண்டும். பின் வெளியீட்டு முறையில் சிக்கலில்லாமல் இருந்தால் கவிதை சிறக்கும். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தவருக்குக் கவிதையைப் பற்றி யாரும் சொல்லத் தேவையில்லைதான்! இது பற்றி இவர் சிந்திக்க வேண்டும்.

Series Navigationசாத்தானும் சிறுமியும் _ ‘யூமா வாசுகி’யின் கவிதைத் தொகுப்பு _ வாசக நோக்கில்வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *