உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்

நீலகண்டன்

எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொரு இருப்பிற்கான வெறுப்பினை வைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது.

வாக்கு,மனம்,காயம்,இவைகளை பெரும்பாலும் இந்துயிசமும்,அதன் அப்பட்டமான உட்கிடக்கையான சாதியும் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராடும் எனக்கும் அல்லது எவருக்கும் ரசூலின் கவிதைகள் மற்றமைகளுக்கான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் இன்னுமொரு புதிய அனுபவத்தை தரத் தயாராய் இருக்கின்றன.

தன்னிலிருந்து மற்றமையாக உயிர்த்தெழும் பெண்களின் சன்னமான,அதிநுட்பமான நினைவொலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கக் கூடியவை ரசூலின் கவிதைகள்.

குமரிமாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ரசூல் தனது கவிதைகளுக்காகவும் கருத்துகளுக்காகவும் தான் சார்ந்த சமய அதிகாரத்தின் ஒடுக்குமுறைக்குள்ளானவர்.அதேசமயம் தமிழ் முஸ்லீம்களிடமும் நவீன கவிதைப் பரப்பிலும் பெருங்கவனத்திற்குள்ளானவர்.

சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட அவரின் மைலாஞ்சி கவிதைதொகுப்பிற்குப் பின் நீண்ட இடைவெளியில் இத்தொகுப்பு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

உயிர் எழுத்து ,தாமரை இதழ்களிலும்,திண்ணை,கீற்று,வார்ப்பு மின்னிதழ்களிலும் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் ரசூல் ஜனகணமன,என் சிறகுகள் வான்வெளியில்,பூட்டிய அறை,உள்ளிட்ட நான்கு கவிதை தொகுதிகளையும் புதுக் கவிதையில் நவீனப்போக்குகள்,இஸ்லாமியப் பெண்ணியம்,அரபுமார்க்சியம்,குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்,பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம் பிரதிகள்,கெண்டைமீன்குஞ்சும் குரான்தேவதையும், தலித்முஸ்லிம் ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

கவிமனங்களுக்குள்ளும்,அரசியல் மனங்களுக்குள்ளும் நீண்ட விவாதங்களை எழுப்பும் ஆற்றல்களை கொண்டுள்ள இக்கவிதைகளை தொகுப்பாய் வெளியிட வாய்ப்பை நல்கிய தோழர் ரசூலுக்கும்,நூலின் உள்கட்டமைப்பை அழகாய் வடிவமைத்த ஜீவமணிக்கும், முகப்பை நேர்த்தியாய் செய்த விஜயனுக்கும்,அமுதா, ஷோபா,மதிவண்ணன்,விஜயானந்த்(பெங்களூரு)தமயந்தி-பானுபாரதி, புனிதபாண்டியன் உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றியினைச் செலுத்துகிறோம்.

தோழமையுடன்

நீலகண்டன்

(பதிப்புரையில்)

நூல் விவரங்கள்:

கவிதை நூல்: உம்மா:கருவண்டாய் பறந்து போகிறாள்

ஆசிரியர்: ஹெச்.ஜி.ரசூல்

பக்கங்கள்:142

விலை: ரூ 90/

வெளியீடு

கருப்புபிரதிகள்

பி55 பப்பு மஸ்தான் தர்கா

லாயிட்ஸ் சாலை

சென்னை – 600005

பேச: 9444272500

மின்னஞ்சல்:karuppupradhigal@gmail.com

Series Navigationஐம்புல‌ன் அட‌க்க‌ம்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 8