உரஷிமா தாரோ (ஜப்பான்)

உரஷிமா தாரோ (ஜப்பான்)
சித்ரா சிவகுமார்
ஹாங்காங்
நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு, ஒரு கோடை மாலையில், உரஷிமா தாரோ என்ற வாலிபனொருவன், அலைவீசும் கடற்கரையில் அமைதியாக நடந்து கொண்டிருந்தான்.  அன்று அவன் மீன் பிடித்து, சந்தையில் விற்று, பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.  அன்றைய தொழில் மிகவும் திருப்திகரமாக இருந்ததால், சற்றே மகிழ்ச்சியுடன் நடை பயின்று கொண்டிருந்தான்.
அவன் நடந்து கொண்டிருந்த வழியில், அவன் கண்களில், திடீரென்று ஒரு ஆமை தென்பட்டது.  ஆமை.. பாவம்.. கேட்பாரற்று தன்னுடைய கால்களை அடித்துக் கொண்டு குப்புற விழுந்திருந்தது.
அதைக் கண்டதும், மனம் பொறாத தாரோ, உடனே ஓடிச் சென்று, அதை அன்புடன் கைகளில் எடுத்துக் கொண்டு, உள்ளங்கையில் இட்டு, அதைத் தடவிக் கொடுத்தான்.
“பாவம்.. யார் உன்னை இந்த வெயிலில் இப்படி திருப்பி விட்டுச் சென்றது?  எதையும் உருப்படியாகச் செய்யத் தெரியாத விளையாட்டுப் பிள்ளைகள் தான் இப்படிச் செய்திருப்பார்கள்.. சரி தானே?” என்று தானே வினாவை எழுப்பி விடையையும் கூறிக் கொண்டான்.  ஆமையின் ஓட்டை கைகளால் தடவிக் கொடுத்து, ஆறுதல் வார்த்தைகள் கூறினான்.
பின்னர், தான் வீடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்து, ஆமையை தன் கைகளில் இட்டு, கடற்பரப்பைக் கடந்து, கடலில் அவனால் எவ்வளவு தூரத்திற்குச் செல்ல முடியுமோ, அவ்வளவு உள்ளே சென்று, ஆமையைக் கடல் நீரில் விட்டான்.  அந்த ஆமை சந்தோஷமாக நீந்த ஆரம்பித்ததும் “சென்று வா.. ஆமையே.. நீ நீண்ட காலம் வாழ்வாயாக!” என்று வாழ்த்தி அனுப்பினான்.
அடுத்த நாள் காலை, வழக்கம் போல, கடலில், மீன் பிடி வலைகளை விரித்துக் கொண்டு, படகில் துடிப்பிட்டுக் கொண்டு இருந்தான். அன்றைய பொழுது இனிமையாக இருந்ததால், எதையும் கண்டு கொள்ளாமல், அசராமல் துடுப்பிட்டான்.  மற்ற படகுகளையெல்லாம் தாண்டி வெகு தொலைவு வந்த பின்னரே தான் தனித்து விடப்பட்டதை உணர்ந்தான். சோர்வு மிகக் கொண்டு, சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள எண்ணி, படகின் துடிப்பைப் போடாமல், படகை அதன் போக்கிற்கு விட்டு விட்டு, சற்று படகில் சாய்ந்தான்.  படகு மிகவும் மென்மையான ஆட்டத்துடன் மிதந்தது.
சற்றே கண்ணயறும் தருணத்தில், மிகவும் மெல்லிய குரலில் யாரோ “உரஷிமா தாரோ.. உரஷிமா தாரோ..” என்று அழைப்பதாக உணர்ந்தான்.
விழித்துப் பார்த்த போது, தான் கண்டது கனவோ என்று எண்ணி, மறுபடியும் சாய எத்தனித்தான்.  அந்தத் தருணத்தில் மறுபடியும் “உரஷிமா தாரோ.. உரஷிமா தாரோ..” என்ற குரல் கேட்டது.  நாலாபுறமும் திரும்பி உற்றுப் பார்த்தான்.  யாருமே அவன் கண்களில் தென்படவில்லை.  கண்ணுக்குத் தெரியாத உருவமோ என்று பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த போது, மறுபடியும் “உரஷிமா தாரோ.. உரஷிமா தாரோ..” என்று கூப்பிடுவதைக் கேட்டான்.
குரல் மிகவும் அருகிருந்து வருவதை அப்போது உணர்ந்தான். படகிற்கு பக்கத்தில் எட்டிப் பார்த்தான். கீழே கடலில், படகுக்கு மிக அருகில், ஆமை நீந்துவதைக் கண்டான்.
“ஆமையே.. நீயா இப்போது என்னை அழைத்தாய்?”  என்றான் ஆச்சரியத்துடன்.
“ஆமாம்.. மதிப்பிற்குரிய மீனவரே.. நான் தான் அழைத்தது..” என்று பதிலளித்த ஆமை, உரஷிமா தாரோவைப் பார்த்து, “நேற்று நீங்கள் காப்பாற்றிய ஆமை தான் நான்.. இன்று அதற்காக நன்றி சொல்லவே வந்தேன்..  உங்களை கடலுக்கடியில் வாழும் டிராகன் அரசன் ரின் ஷின்னை, என் தந்தையைக் காண அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.. வருகிறீர்களா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டது.
உரஷிமா தாரோவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  நடப்பதை நம்பவே முடியவில்லை.  “உன் தந்தை தான் கடலுக்குள் வசிக்கும் டிராகன் அரசனா?” என்றான் ஆவலுடன்.
நம்ப முடியாமல், அவனே தனக்குள், “இருக்கவே முடியாது” என்று மறுதலித்துக் கொண்டான்.
“உண்மை.. முற்றிலும் உண்மை.. நான் அவருடைய மகள்.  நீங்கள் என் முதுகில் ஏறிக் கொண்டால், நான் உங்களை அவரிடம் அழைத்துச் செல்கிறேன்” என்று ஆமை பதிலளித்தது.
கடல் ராஜ்யத்தைக் காணும் ஆவலில், அவன் படகிலிருந்து இறங்கி, ஆமையின் மேல் ஏறிக் கொண்டான்.
உடனே, இருவரும் கடலுக்குள் சரக்கென நுழைந்து, வேகமாக சர்ரெனக் கிளம்பினர்.  அதற்கு மேல் வேகமாகச் செல்லமுடியாது என்ற நிலை ஏற்பட்ட சமயம், ஆமை அப்படியே அந்தர் பல்டி அடித்து, கடலில் ஆழமாகச் செல்ல ஆரம்பித்தது.  நீண்ட நேரம் நீருக்குள் நேர் கீழே நீந்திச் சென்றனர்.
சுறாக்களையும் திமிங்கிலங்களையும் விளையாட்டு டால்பின்களையும் கற்றை கற்றையாகச் செல்லும் வெள்ளி மீன்களையும் கடந்துச் சென்றனர்.
நீந்திச் சென்ற போது தூரத்தில் ஒரு அழகிய பவளத்தால் ஆன மாளிகையின் கதவுகள் முத்துக்களாலும் மினுக்கும் கற்களாலும் ஆகியிருப்பதைக் கண்டான். அதற்குப் பின்னால் சாய்வான மதில்கள் கொண்ட கோபுர மாடங்களுடன் பவள மாளிகை நின்றது.
“என் தந்தையின் மாளிகையின் வாயிலை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம்” என்று ஆமை சொல்லிக் கொண்டு வரும்போதே, வாயிலுக்கு வந்துவிட்டு இருந்தனர்.  “இப்போது, இங்கிருந்து நீங்கள் நடந்து வர வேண்டும்” என்றது ஆமை.
மாளிகையின் வாயிலில் கத்தி மீன் காவல் காத்துக் கொண்டிருந்தது.  வாயிலை அடைந்த ஆமை, காவலாளியிடம், “இவர் ஜப்பானிலிருந்து வந்திருக்கும் மதிப்புமிக்க விருந்தாளி.  அவருக்கு அரண்மனைக்குச் செல்லும் வழியைக் காட்டுங்கள்..” என்று கூறிவிட்டு, அங்கிருந்து நீந்திச் சென்றது.
கத்தி மீன் கதவைத் திறந்து விட்டு உரஷிமாவை உள்ளே அழைத்துச் சென்று, அங்கிருந்த நீட்ட பாதையில் கூட்டிச் சென்றது.  பாதையின் முடிவில் வெட்ட வெளிப்பகுதி இருந்தது.  அங்கு வரிசை வரிசையாக ஆக்டோபஸ், கணவாய், கிளாத்தி, கானாங்கெளுத்தி என்று பல வகை மீன்கள் அனைத்தும் அவனுக்கு தலை வணங்கி நின்றன.
“டிராகன் அரசன் ரின் ஜின்னின் கடல் ராஜ்யத்திற்கு நல்வரவு” என்று ஒரு சேர வரவேற்றன.
பிறகு அத்தனை மீன்களும் பின்னால் வர, அவன் உள்வெளி அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.  அது பவள அரண்மனை வாயிலுக்கு இட்டுச் சென்றது.  அவன் கதவருகே வந்ததுமே, பலத்தப் பெரிய கதவு திறந்தது.  கதவிற்கு பின்னால் அழகிய இளவரசி நின்று கொண்டு இருந்தாள்.
அவள் மிகுந்த அழகிய சிவப்பு பச்சை ஆடை அணிந்து, நீண்ட கருங்கூந்தலுடன் எழிலுடன் காணப்பட்டாள்.
“என் தந்தையின் ராஜ்யத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.  என்றும் இளமையுடன் வாழும் மாறாத கோடை காலம் கொண்ட கவலைகளற்ற இடமான இங்கு சிறிது காலம் தங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றாள்.
உரஷிமா அவளது அழகிய முகத்தைப் பார்த்துக் கொண்டே, அவள் கூறியதைக் கேட்டதும், அவன் உள்ளத்தில் மகிழ்ச்சிப் பிரவாகம் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது.
“உன்னுடன் இந்த நிலத்தில் வாழ்வதே என்னுடைய ஒரே ஆசை” என்றான் மயக்கத்துடன்.
“அப்படியென்றால் நான் உங்களை மணந்து கொள்கிறேன்.  ஆனால் முதலில் என்னுடைய தந்தையின் அனுமதியைப் பெற வேண்டும்” என்றாள்.
அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு, தந்தை அமர்ந்திருக்கும் பெரிய சபைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.  தங்கமும் முத்தும் பதித்த பெரிய அரியணையில் அமர்ந்திருந்தார்.  அவர்கள் இருவரும் டிராகன் அரசனைக் கண்டதும், அவர் முன்னால் மண்டியிட்டு, வணங்கினர்.
“மாண்புமிகு தந்தையே.. இந்த இளைஞன் தான் மனிதர்கள் வாழும் நிலத்தில் என்னைக் காப்பாற்றினார்.  நீங்கள் விரும்பினால், நான் இவரைக் கணவராக ஏற்றுக் கொள்ள விரும்புகின்றேன்” என்றாள் மிகவும் பணிவுடன்.
“உன் உயிரைக் காத்த மனிதர் என்ற காரணத்தால், எனக்குச் சம்மதம். ஆனால் மீனவச் சிறுவன் என்ன சொல்கிறான்? அவன் ஒத்துக் கொள்ள வேண்டாமா?” என்று கேட்டார் டிராகன் அரசர்.
அவர் கேள்வியைக் கேட்டு முடிக்கும் முன்னரே, “ஓ.. எனக்குச் சம்மதம்..” என்றான் உரஷிமா மகிழ்ச்சியுடன்.
உடனே திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடுகள் தடபுடலாகச் செய்யப்பட்டன. மீன்களின் நடனத்துடன் விருந்து களை கட்டியது.  இரவு நெடுநேரக் கொண்டாட்டத்திற்குப் பின்னர், உரஷிமா ஓய்வெடுக்க அழைத்துச் செல்லப்பட்டான்.
மறுநாள், கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர், இளவரசி தந்தையின் பவள அரண்மனையையும் ராஜ்யத்தையும், அங்குள்ள அதிசயங்களையும், சிறந்த நான்கு கால தோட்டத்தையும் சுற்றிக் காட்டினாள்.
அந்தக் கடல் ராஜ்யத்தில் காண வேண்டிய விஷயங்கள் பல இருந்தன.  உரஷிமா தன்னுடைய சொந்த வீட்டையும் பழைய வாழ்க்கையையும் மறந்துவிட்டிருந்தான்.
ஆனால் அவனுக்கு இரண்டே நாளில் தன் பெற்றோரைப் பற்றிய நினைவு வந்தது.
மூன்றாம் நாள், உரஷிமா, “என்னுடைய தாயும் தந்தையும் நான் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணியிருப்பார்கள்.  அவர்களை விட்டு இப்போது மூன்று நாட்கள் ஆகிவிட்டன.  நான் உடனே அவர்களிடம் சென்று நடந்ததைச் சொல்ல வேண்டும்” என்றான் அவசரமாக.
“பொறுங்கள். இன்னும் சிறிது காலம் பொறுங்கள்.  மேலும் ஒரு நாள் என்னுடன் தங்கிச் செல்லுங்கள்..” என்றாள்.
“பெற்றோரைக் காண்பது என் கடமை. அவர்கள் நான் இறந்துவிட்டதாக எண்ணி கலலை கொண்டிருப்பார்கள். அவர்களைப் கவலைப்பட வேண்டாம் என்று நடந்ததைச் சொல்லிவிட்டு நான் திரும்பவும் இங்கேயே வந்துவிடுகிறேன்..” என்று சொன்னான்.
“அப்படியென்றால் நான் மறுபடியும் ஆமையாக மாறி, உங்களை அலைகள் நிறைந்திருக்கும் நிலத்தில் கொண்டு விட வேண்டும்” என்றாள்.
“சீக்கிரம்.. என்னை அழைத்துச் சென்று விடு..” என்று அவசரப்படுத்தினான்.
“நீங்கள் இங்கேயே தங்கினால் நன்றாக இருக்கும்.  ஆனால் நீங்கள் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பதால், நீங்கள் செல்லும் முன்னர், என்னுடைய இந்தப் பரிசை ஏற்றுக் கொள்ள வேண்டும்..” என்று சொல்லி, அவனுக்கு மூன்று அடுக்குகள் கொண்ட வேலைப்பாடு கொண்ட சிவந்த மரத்தாலான ஒரு பெட்டியைக் கொடுத்தாள்.  அடுக்குகள் ஒரு சிவப்பு பட்டுக்கயிறால் கட்டப்பட்டிருந்தது.
“இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.  என்ன நடந்தாலும் அதைத் திறக்கக் கூடாது” என்று கூறினாள்.
உரஷிமா அதைத் திறக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான்.
அவனது சத்தியத்தை பெற்றதும், மறுபடியும் இளவரசி ஆமையாக மாறி, உரஷிமாவைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு, நிலத்தை நோக்கிப் பயணமானாள். வெகு தூரம் கடலில் பயணித்த பின்னர் கடைசியில் கடலுக்கு வெளியே வந்தனர்.  கடலுக்கு மேலே பல மணி நேரங்கள் பயணித்த பின்னர், உரஷிமா அறிந்த கடற்கரையை வந்தடைந்தனர். உரஷிமாவிற்கு தன்னுடைய நிலத்தைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.  அவனறிந்த மலையும் கரையும் இருந்தன.  ஆனால் சற்றே மாற்றம் அடைந்திருப்பதாக எண்ணினான். கடற்கரைக்கு இருவரும் வந்தனர்.  அவன் கரையில் கால் பதித்தான்.  அவனால் ஏதோ மாற்றத்தை உணர முடிந்தது.
“ஞாபகம் இருக்கட்டும்.. பெட்டியை மட்டும் திறந்துவிடாதீர்கள்..” என்று அவனிடம் மறுபடியும் சொல்லியது ஆமை.
“நிச்சயமாக திறக்க மாட்டேன்” என்றான் உரஷிமா.
ஆமை விடைபெற்றுக் கொண்டு கடலை நோக்கிச் சென்றது.  அவன் மணற்பரப்பைக் கடந்து, வீட்டிற்குச் செல்லும் பாதையில் நடந்தான்.  கால் நடந்ததேயொழிய அவன் மனதில் விந்தையான பயம் வந்து தொற்றிக் கொண்டது.  மரங்கள் வித்தியாசமாக இருந்தன.  வீடுகளும் மாறியிருந்தன. அங்கு யாரையும் அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.  அவன் தன் சொந்த வீட்டை அடைந்த போது, அதுவும் மாறுபட்டு இருந்தது.  தோட்டத்தில் இருந்த சிறிய ஓடையும், சில கற்கள் மட்டுமே முன் போல் இருந்தன.
வீட்டருகே சென்றதும், “அம்மா.. அப்பா..” என்று அழைத்தான். அவன் முன்பின் பார்த்தேயிராத ஒரு முதியவர் கதவைத் திறந்தார்.
அவரைக் கண்டதும், ஆச்சியத்துடன், உரஷிமா, “யார் நீங்கள்?  என் தந்தையும் தாயும் எங்கே? எங்கள் வீட்டிற்கு என்ன ஆயிற்று? எல்லாமே மாறி இருக்கிறதே?  மூன்று நாட்கள் தானே நான் உரஷிமா தாரோ இங்கே வராமல் இருந்தேன்..” என்று கேட்டான்.
“இது என்னுடைய வீடு” என்று சொன்ன முதியவர், “இது என் கொள்ளுப்பாட்டனாரின் வீடு.  நான் உரஷிமா தாரோ என்று ஒருவர் இருந்ததாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்று வீடு திரும்பவில்லை. அவருடைய பெற்றோர் சில நாட்களிலேயே பிரிவுத் துயர் தாங்காமல் இறந்து விட்டதாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் அது முன்னூறு வருடங்களுக்கு முன்பு என்று சொன்னதாக ஞாபகம்” என்று சொல்லி நிறுத்தினார்.
உரஷிமா முதியவரின் சொற்களை கேட்டதும் நம்ப முடியாமல் தலையை ஆட்டினான்.  அவனுடைய தாய் தந்தை, நண்பர்கள் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்கள் என்பதைக் கேட்டது நம்பக் கூடியதாகவேயில்லை.  முதியவருக்கு நன்றி சொல்லிவிட்டு கடற்கரையில் நடந்து சென்று மணற்பரப்பில் யோசனையுடன் அமர்ந்தான்.
கவலையுற்றான்.  முன்னூறு வருடங்கள்.  கடலுக்குள் மூன்று நாள்கள் நிலத்தில் முன்னூறு வருடங்கள் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.
அப்படியே அவன் நடந்ததையெல்லாம் எண்ணிக் கொண்டு இருந்த சமயம், இளவரசி தந்த மரத்தாலான பெட்டி அவன் கைகளில் பத்திரமாக இருந்தது.  அவனை அறியாமலேயே, அவனுடைய விரல்கள் அதைத் தடவிக் கொண்டிருந்தது.  பெட்டியைக் கட்டியிருந்த சிவப்புக் கயிற்றையும் தடவியது.  பலமான யோசனையின் காரணமாக அவன் கைகள் கட்டியிருந்த கயிற்றைப் பிரிந்தது.  பெட்டி சற்று சரிந்து முதல் அடுக்கு சற்றே வெளியே வந்தது.
தான் என்ன செய்கிறோம் என்று யோசிக்காமலேயே, அந்தப் பெட்டியின் முதல் அறையை முழுவதுமாகத் திறந்துப் பார்த்தான்.  அதிலிருந்து, சுவாசக் காற்றைப் போன்று சிறு புகை மூட்டம் மூன்று முறை வெளிக் கிளம்பியது. அவனைச் சுற்றி வந்துது.  அவனது வாலிப உருவம் மாறியது.  முதிய தோற்றம் ஏற்பட்டது. தன்னுடைய உடல் சுருங்குவதை உணர்ந்து, பயந்து இரண்டாவது அடுக்கை வேகமாகத் திறந்தான். அதில் ஒரு கண்ணாடி இருந்தது.  அதில் அவன் தன் உருவத்தைக் கண்டான்.  தலை நரைத்து, முகத்தில் சுருக்கங்கள் விழுந்து, முதிய தோற்றத்துடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்.
அப்போது தான் இளவரசி சொன்னது நினைவிற்கு வந்தது.  தான் தவறு செய்ததை உணர்ந்தான்.  நடந்தது நடந்து விட்டது, இன்னும் மூன்றாம் அடுக்கில் என்ன அதிசயம் இருக்கிறது என்று பார்க்கத் துடித்தான். அதையும் திறந்துப் பார்த்தான். அதிலிருந்து ஒரு கொக்கின் சிறகு மெதுவாக வெளியே வந்து மிதந்தது.  அது அவனது முகத்தருகே வந்து வருடிவிட்டு தலையில் சென்று அமர்ந்தது.  முதியவன் அப்படியே அழகிய கொக்காக மாறிப் போனான்.
கொக்கு மேலே பறந்து, கடலைப் பார்த்தது.  கொக்கின் கண்களுக்கு அலைகளின் நடுவே கரையோரமாக ஆமை மிதந்து கொண்டு இருப்பது தெரிந்தது. ஆமையும் மேலே பறந்த கொக்கைப் பார்த்தது.  உண்மை புரிந்தது, உரஷிமா திரும்பி வந்ததும், தன்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று காத்திருந்த ஆமைக்கு, தன் கணவன் உரஷிமா தாரோ, இனிமேல் தன் தந்தையின் கடலடி ராஜ்யத்திற்கு வரவே முடியாது என்பது தெர்ந்தது.  ஆமை வருந்தி கடலுக்குள் நீந்திச் சென்றது.  கொக்கு தன் தவற்றை உணர்ந்து திக்குத் தெரியாது பறக்க ஆரம்பித்தது.
Series Navigationமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -41ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!