உருக்கொண்டவை..

Spread the love

தினம் வந்து கொண்டிருந்த

கனவுப்புலியொன்று

நனவில் வந்தது ஓர் நாளில்.

மூளைக்கனுப்பிய

நியூரான் சமிக்ஞைகள்

தொடர்பில் இல்லையென்று திரும்பி வந்து விட

திகைத்து மூச்சடைத்துத்

தடுமாறி நின்ற எனை நோக்கி

மெல்லக் கொட்டாவி விட்டபடி

திரும்பிப் படுத்துக் கொண்டது,

வாலசைவில்

தன் இருப்பைத் தெரிவித்தபடியே

தன் கட்டுக்குள் பிறரை வைக்க

நன்றாகக் கற்றிருந்த அந்தப்புலி.

எங்கணும் எதிலும் வாலின் நாட்டியத்தரிசனமளித்தும்

அற்ற பொழுதுகளில்

கூர் பல்லால் ஆசீர்வதித்தும்

என் பொழுதுகளை ஆக்கிரமித்திருந்த ஓர் போதில்

பயம் கொன்று திரும்பி

அதன் கண்களைச் சந்தித்தேன்.

பிரபஞ்சப் பேரொளி சுடர் விட்ட அதன் கண்களில்

கருணையின் தரிசனமும் தாண்டவமாட

சுருங்கிய கோடுகள் புள்ளிகளாயின.

உண்மையுரு எதுவென்று மயங்கி நின்ற

என்னிடம்,

‘உன் எண்ணங்கள் கொள்ளும் வடிவம்தானடி சகியே நான்,

திண்ணமாய் எதிர் கொள் மலைக்காமல்,

புலியோ,.. புள்ளிமானோ எதுவுமே நீ வளர்ப்பதுதான்’ என்றுரைத்து,

இளந்துளிர்க் கொம்புகளை

மெல்லக்குலுக்கியபடி

அசை போட ஆரம்பித்தது எண்ணப்புற்களை

Series Navigationராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி