உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி

அழகர்சாமி சக்திவேல்

திரைப்பட விமர்சனம் –

1988-இல் வெளிவந்த இந்த ஆஸ்திரேலியப் படம், வர்த்தக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. அத்தோடு, இந்த ஆஸ்திரேலியப்படம் எந்த விருதுகளையும் வாங்கவில்லை. இருப்பினும், ஆங்கிலத்திரைப்பட உலகத்துக்குள்ளும், ஓரினச் சேர்க்கை உலகத்துக்குள்ளும் ஒரு பெரிய எதிர்மறை அதிர்வலையை  ஏற்படுத்திய படம் என்பதால், இந்தப்படம் எனது விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. உலகத்தின் மிகப் பழமையான தொழில் எதுவென்று கேட்டால் உடனே நாம் அனைவரும் ‘விபச்சாரம்’ என்று சொல்லிவிடுவோம். விபச்சாரம் என்ற வார்த்தை, மனித உரிமைகளின் அடிப்படையில், இப்போது தவறான சொல் என அடையாளம் செய்யப்பட்டு உள்ளது. எனவே விபச்சாரிகள், இப்போது செக்ஸ் தொழிலாளர்கள் என்று மரியாதையுடன் அடையாளம் செய்யப்படுகின்றனர். செக்ஸ் என்பது தொழில் என்பதை நானும் முற்றிலும் ஆதரிப்பதால், இனி விபச்சாரிகளை செக்ஸ் தொழிலாளர்கள் என்றே நானும் அழைக்க விரும்புகிறேன். எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி(Ever Lasting Secret Family) என்ற இந்த ஆஸ்திரேலியப்படம், பெண் செக்ஸ் தொழிலாளர்கள் குறித்துப் பேசுவதாய் நினைக்கவேண்டாம்.. மாறாய், கண்ணுக்கு புலப்படாத, திரைமறைவில் பணம் சம்பாதிக்கும் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள் குறித்து இந்தப்படம் பேசுகிறது என்பதே இந்தப் படத்தின் ஒரு சிறப்பு. உலகின் ஆண் செக்ஸ் தொழிலாளர்களை மூன்று வகைப்படுத்தலாம். ஒன்று பெண்ணிடம் தனது உடம்பை விற்று பணம் சம்பாதிக்கும் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள்.. இரண்டு, பெண்ணிடமும் ஆணிடமும் உடம்பை விற்று பணம் சம்பாதிக்கும் ஆண்கள். மூன்றாவது, ஆணிடம் மட்டும் உடம்பை விற்று பணம் சம்பாதிக்கும் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள். மேல் சொன்ன முதல் மற்றும் இரண்டாம் வகை ஆண் செக்ஸ் தொழிலாளர்கள், இந்த உலகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள். ஆனால் மூன்றாம் வகையான ஆணிடம் மட்டும் உடம்பை விற்கும் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள், உலகம் முழுவதும், பல இடங்களில், பல விதங்களில் பரவிக்கிடக்கிறார்கள்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், குற்றாலம்.  ஒகேனக்கல், கொடைக்கானல் ஊட்டி என எல்லா சுற்றுலாத்தலங்களிலும், சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களிலும், இந்த ஆண் செக்ஸ் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. தவிர, முகநூலிலும் தமிழ் ஆண்களின் செக்ஸ் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழக ஆண் செக்ஸ் தொழிலாளர்கள், முகநூலில் தினம் தங்கள் புகைப்படங்களை பதிவிடுகிறார்கள். மாமா, மச்சான் எனக் கொஞ்சிக் கொள்ளும் இவர்களின் கொஞ்சல்களின் கூடவே செக்ஸ் தொழிலும் சூடு பறக்கிறது. கல்யாணம் ஆகாத ஆண் செக்ஸ் தொழிலாளர்கள், தங்களது, பற்பல நிர்வாண புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டு, தொழில் நடத்துகிறார்கள். கல்யாணம் ஆன தமிழ் ஆண் செக்ஸ் தொழிலாளர்களோ, தங்கள் குழந்தைகளைக் கொஞ்சும் சாக்கில், பற்பல கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிட்டு தங்கள் செக்ஸ் தொழிலை அதனுள் மறைத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தின் கிராமங்களில் இருந்து, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கும், மலேசியா போன்ற நாடுகளுக்கும் விமானத்தில் பறக்கும் ஆண் செக்ஸ் தொழிலாளர்களை, நாம் முகநூலில் காணமுடிகிறது. சிலர் வியாபாரமாய்ச் செய்யாவிட்டாலும், குழுக்களாக  சேர்ந்துகொண்டு முகநூல் நண்பர்கள் சந்திப்பு என்ற பெயரில் சந்தித்து, நட்பின் மூலம் இன்ன பிற காரியங்களை சாதித்துக் கொள்ளுகிறார்கள். நான் குறிப்பிடும் இந்த ஆஸ்திரேலியப்படமும், இது போன்ற ஒரு ரகசிய ஆண் செக்ஸ் வர்த்தகம் பற்றியே பேசுகிறது. ஆஸ்திரேலிய அரசியலில் செனட்டராக இருக்கும் ஒருவர் தலைமை ஏற்று நடத்தும் ஓரினச்சேர்க்கை ரகசிய குடும்பம் குறித்து, இந்தப்படம் பேசுவதால், உலக அரசியலில், ஆண் செக்ஸ் தொழிலாளர்களின் வரலாறு குறித்து இங்கே கொஞ்சம் அலசுவோம்.

அரசியலிலும் ஓரினச்சேர்க்கை என்பது காலகாலமாய் இருக்கக்கூடியதுதான். தலைமைப்பதவியில் இருக்கும் பல இந்திய அரசியல்வாதிகள், தாங்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று வெளியே வந்து சொல்லிக்கொள்வதில்லை. பெண்ணோடு பெண் சேர்வதாகட்டும், அல்லது ஆணோடு ஆண் சேர்வதாகட்டும,. தமிழகமும், இது போன்ற ஆதாரங்கள் தர முடியாத, அரசியல்வாதிகளின் ஓரினச்சேர்க்கை குறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தின் ஒரு முன்னாள் அமைச்சர், இது போன்ற செக்ஸ் தொழில் விசயங்களில் அகப்பட்டு, அது பத்திரிக்கையிலும் செய்தியாக வந்து மறைந்து போனது. அன்றைய கால, இந்திய முகாலய மன்னர்களின் அந்தரங்க அறைகளை, ஆண் செக்ஸ் தொழிலாளர்களும் அலங்கரித்து இருக்கிறார்கள். இந்தியாவின் பல இடங்களை போரில் வென்று கைப்பற்றி, கி.பி 1311-இல் மதுரையையும் கைப்பற்றிய மாலிக்காபூர் என்ற இந்துவோடு ஓரினச்சேர்க்கை நடத்திய முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி, தனது அந்தரங்க அறைகளை, ஆண் செக்ஸ் தொழிலாளர்களைக் கொண்டு நிறைத்து வைத்து இருந்தார் என்பது வரலாற்று வல்லுனர்களின் கணிப்பு. பாப்ரி நாமா எழுதிய முகலாய மன்னர் பாபர், பாப்ரி என்ற ஆணோடு, தான் கொண்ட ஓரினக்காதல் குறித்துப் கவிதை எழுதி இருக்கிறார் என்பதோடு, சர்ச்சைக்குரிய அயோத்தியின் பாப்ரி மசூதி, அந்த பாப்ரி என்ற ஓரினச்சேர்க்கை காதலனின் நினைவாக நிறுவப்பட்டதுதான் என்று இன்னொரு வரலாற்றுச் செய்தி சொல்கிறது. பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள் குறித்து எழுதப்பட்டு இருக்கிறது. பல்வேறு கிரேக்கப்போர்களில் தோற்றுப்போன நாட்டின் ஆண்கள், செக்ஸ் அடிமைகளாக மாற்றப்பட்டனர் என்பது இன்னொரு வரலாறு. அப்படி ஆண் செக்ஸ் தொழில் செய்ய வற்புறுத்தப்பட்ட எலிஸ் என்ற கிரேக்க வீரன், இன்னொரு கிரேக்கப் போர் வீரனும், தத்துவ ஞானியுமாய் இருந்த, சாக்ரட்டிஸின் சீடனாய் இருந்தான் என வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. தவிர, சாக்ரடிசும் ஒரு ஓரினச்சேர்க்கை அரசியல்வாதிதான் என்றும், அவரைச்சுற்றி, இந்த ஆஸ்திரேலியப் படத்தில் சொல்வதுபோல ஒரு ஓரினச்சேர்க்கை நண்பர்குழு இருந்தது என்றும் சாக்ரடிசின் சீடனான பிளாட்டோ எழுதிய சிம்போசியம் என்ற நூல் உரைக்கிறது. கிரேக்கம், ரோமானியப் பேரரசு போன்ற இடங்களில், ஆண் செக்ஸ் நண்பர்களை, தனது அந்தரங்க அறைகளில் வைத்துக் கொள்வது பெருமையாக கருதபட்ட காலக்கட்டத்தில் பிறந்த மாவீரன் அலெக்சாண்டரும், ஜூலியஸ் சீசரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஜப்பானின் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள் கஜீமா என்றும், ஆப்கானிஸ்தானின் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள் பச்சா என்றும் அழைக்கப்படுகிறார்கள். தாய்லாந்திலும் ஆண் செக்ஸ் தொழில் இன்றுவரை கொடிகட்டிப் பறக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

படத்தின் கதை குறித்து இனி அடுத்து பார்ப்போம்

சிறுகதைகள் எழுதுவதற்காக, ஆஸ்திரேலியாவின் தேசிய விருது பெற்ற பிரான்க் மூர் ஹவுஸ் என்பவரது சிறுகதையை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதே எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி என்ற இந்தத் திரைப்படம். படம் ஆகும். படத்தின் கதை என்னவோ மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால் கதை சொல்லப்பட்டிருக்கும் விதம், ஒரு த்ரில்லர் படம் பார்க்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கிறது என்று நிச்சயம் சொல்லலாம். இந்தப்படம் ஓரினச்சேர்க்கையை ஆதரித்தும் பேசவில்லை. எதிர்த்தும் பேசவில்லை. மாறாய், சமூகத்தில் நடக்கும் சில அவல விசயங்களை, ஒரு கற்பனை கலந்த வடிவத்தில் சொல்ல முயன்று இருக்கிறது. படம் கொஞ்சம் வக்கிரம் கலந்து இருந்தாலும், பணக்கார வர்க்கத்தில் நடக்கும் பல உண்மை விசயங்களை, தனது கற்பனைக்குள் புகுத்தி இருக்கும் கதை ஆசிரியருக்கு ஒரு பாராட்டு.  நாம் இப்போது கதைக்குள் செல்வோம்.

ஓரினச்சேர்க்கை செய்யும் பணக்கார வர்க்கம் ஒன்று கூடி, ஒரு ரகசிய குடும்பம் ஒன்றை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த ரகசிய குடும்பத்துக்கென ஒரு ஓரின வாழ்க்கைக் கொள்கை, ஓரினக் குடும்பத்துக்கென ஒரு தேவாலயம் அதற்கென ஒரு போதகர் என்ற ஒரு தீவிரமான கட்டமைப்புக்குள் செயல்படுகிறது அந்த ஓரினச்சேர்க்கை குடும்பம். இதன் தலைவராக இருக்கிறார் ஆஸ்திரேலிய அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் செனட்டர். ஒரு புறம் அமைச்சர் பதவி, இன்னொரு புறம் ஓரினச்சேர்க்கை என்று இரட்டை வாழ்க்கை வாழும் செனட்டர், கலவிக்கூடங்களில் இருக்கும் ஓரினச்சேர்க்கை மாணவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை தங்கள் ரகசிய குடும்பத்துக்குள் சேர்த்துக் கொள்ளும் வேலையைக் கனக்கச்சிதமாக செய்து கொண்டு இருக்கிறார். அப்படி ஒரு பள்ளியில் படிக்கும் பையன்தான் நமது ஓரினச்சேர்க்கை கதாநாயகன். செனட்டரின் மூலம் ரகசிய குடும்பத்தில் சேரும் கதாநாயகனுக்கு, ரகசியக்குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களை செக்ஸ் திருப்திப் படுத்தும் உடல் உறவு வேலை கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த வேலைக்கு ஒத்துப்போகும் கதாநாயகன், செனட்டரின் அதிகாரம், அவருக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதை, பணம் ஆகியவற்றை பார்த்து பிரமித்துப் போகிறான். தானும் செனட்டர் போல், ரகசியக் குடும்பத்தின் தலைவனாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான். “உன் சீனியாரிட்டி படி, இப்போதைக்கு மற்ற ஓரினச்சேர்க்கையாளர்களை திருப்திப்படுத்துவதே உனது வேலை. அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்காதே” என்று கண்டிக்கும் செனட்டரோடு வாக்குவாதம் செய்கிறான். ‘என் இளமைதான் இந்த செனட்டர் போன்றோருக்கு பிடித்து இருக்கிறது. என் இளமை இருக்கும் வரை எதையும் சாதித்துக் கொள்ளலாம்” என்று நினைக்கிறான் கதாநாயகன். ஒரு ஓரினச்சேர்க்கை நீதிபதி வீட்டிற்க்கு செக்ஸ் இன்பம் கொடுக்கச் செல்லும் கதாநாயகன், எப்போதும் இளமையாய் வைத்துக் கொள்ள சிகிச்சை தரும் ஒரு டாக்டர் குறித்து, நீதிபதி மூலம் அறிந்துகொள்கிறான். அந்த டாக்டரிடம் சென்று, மருந்தும் சாப்பிட்டு தனது இளமையை பாதுகாத்துக் கொள்கிறான் கதாநாயகன். இதற்கிடையில், செனட்டர் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறார். வெகுண்டு எழும் கதாநாயகனை சமாதானப்படுத்தும் செனட்டர், தனது மனைவியிடம் சொல்லி, தனது சொந்த வீட்டிலேயே தனது குழந்தையை கவனித்துக் கொள்ளும் தாதி வேலை வாங்கிக் கொடுக்கிறார். வேலையில் சேரும் கதாநாயகன், செனட்டரை வஞ்சம் தீர்த்துக்கொள்ள முடிவு எடுக்கிறான். காலம் ஓடுகிறது. பதினைந்து வருடம் ஆன பின்பும், மருந்து சாப்பிடுவதால் அதே இளமையுடன் இருக்கும் கதாநாயகன், தான் வளர்க்கும் செனட்டரின் பிள்ளையையும் ஓரினச்சேர்க்கையாளனாய் ஆக்கி விடுகிறான். (அறிவியலின் படி இது சாத்தியமில்லை). தந்தை, மகன் என்ற இரண்டு பேருக்கும் செக்ஸ் இன்பம் தரும் கதாநாயகனின் இரட்டை வாழ்க்கை செனட்டருக்குத் தெரியவர நிலைகுலைந்து போகிறார் செனட்டர். ஒருநாள் ரகசிய குடும்பத்தில் ஒருவனாய் செனட்டரின் பிள்ளை சேர்வதோடு படமும் முடிந்து போகிறது.

இந்தப்படத்தில், அந்த ஜப்பானியக் கதாபாத்திரம் தவிர மற்ற யாருக்கும் பெயர் சொல்லப்படாதது, இப்படத்தின் ஒரு சிறப்பு என்று சொல்லலாம். படத்தின் கேமராமேன், தனது வேலையை நன்றாக செய்து இருக்கிறார். படம் பல வக்கிரக்காட்சிகளைக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஓரினச்சேர்க்கை ஆசையில், சட்டம் படித்த நீதிபதி, பெண் ஆடை தரித்துக்கொண்டு வந்து, கதாநாயகனின் செருப்பை நக்குகிறார். இன்னொரு கட்டத்தில், செனட்டரின் நெருங்கிய நண்பரான ஜப்பானியப் பணக்காரர், உயிரோடு இருக்கும் பெரிய நண்டை, தனது பின்புறத்தில் ஓடவிட்டு, இன்பத்தில் அலறிக்கொண்டே கதாநாயகனோடு உடல்உறவு கொள்கிறார் ஆனாலும், ஆண் பெண்ணோடு கொள்ளும் உடல்உறவில் இருக்கும் செக்ஸ் வக்கிரங்கள் போலவே, ஓரினச்சேர்க்கையிலும் பல வக்கிரங்கள் இருக்கிறது என்று சொல்லும் இயக்குனரின் யதார்த்தம் பாராட்டுக்குரியது. இன்றைய காலங்களில், ஓரினச்சேர்க்கை மாணவர்களின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. பல பணக்காரர்களுக்கு ஆசைநாயகியாய் இருக்கும் ஆண் மாணவர்களின் அவலநிலையை தோலுரித்துக் காட்ட நினைத்து அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் இயக்குனர்.

ஓரினச்சேர்க்கை என்பது இயற்கையான உணர்வுதான். அதற்காக, ரகசியமாய், கும்பல் கும்பலாய் சேர்ந்துகொண்டு பல பேரோடு உடல் உறவு கொள்ளும் ஓரினச்சேர்க்கை உலகத்தின் மீது எனக்கு வெறுப்பு வருகிறது. நான் AIDS நோய் பரவாமல் தடுக்கும் சமூகசேவையில் ஈடுபடுபவன். AIDS நோயால் பாதிக்கப்படும் ஓரினச்சேர்க்கை நோயாளிகளில் பலர், இது போல ரகசிய குடும்பங்களுக்குள் இருப்பவர்களே. இப்படிப்பட்டவர்களால், அமைதியான, ஒழுக்கமான வாழ்க்கை வாழும் மற்ற நல்ல ஓரினச்சேர்க்கை மாணவர்கள் குறித்த நல்ல எண்ணமும் பாழாய்ப் போகிறது என்பதை ஓரினச்சேர்க்கை சமூகம் கருத்தில் கொண்டு ஆவன செய்யவேண்டும் என்பதே என் விருப்பம். “ஒருவனுக்கு ஒருத்தி” என்பது தற்போதைய சமூகத்தின் கோட்பாடு. ஓரினச்சேர்க்கை சமூகமும், மேற்சொன்ன சமூகக் கோட்பாட்டை விஸ்தரித்து “ஒருவனுக்கு ஒருவன்” அல்லது “ஒருத்திக்கு ஒருத்தி” என்று வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அழகர்சாமி சக்திவேல்

 

Series Navigationகேரளாவிலே பேய்மழைபுலர்ந்தும் புலராத சுதந்திரம்