உள்ளம் படர்ந்த நெறி- யில் கோவை எழிலன்

This entry is part 1 of 18 in the series 11 ஜூலை 2021

எஸ்ஸார்சி

 

இலக்கிய விஷயங்களை ரசனையோடு சொல்வது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. கோவை எழிலனுக்கு அது இயல்பாக வருகிறது.சொல்லவேண்டிய இலக்கிய த்தகவல்களை கேட்டார் பிணிக்கும் தகையவாய் சொல்லுதல் இங்கே சாத்தியமாகிறது.

. ஒரு மென்பொருள் பொறியாளர் மரபுக்கவிதையில் காலூன்றி நிற்பதுவும் இலக்கியப்பொக்கிஷங்களை ஆய்ந்து கருத்துச்சொல்வதும் அரிதினும் அரிதுதான்.  எழுத்தாளர் கடலூர் மன்றவாணன்  இலக்கிய விரும்பி எழிலனை ச்சரியாக வரையரை செய்கிறார். பொறியாளருக்குள் விஞ்சி நிற்கும் புலவர் என எழிலனைச்சுட்டி ப்பெருமை சேர்க்கிறார்.

சுவாரசியமான தகவல்கள் எழிலனால் சர்வ சாதாரணமாக உள்ளம் படர்ந்த நெறியில் எடுத்துவைக்கப்படுகின்றன. நாத்திகம் கேட்கவந்த தெய்வங்கள் என்னும் தலைப்பில் அண்ணாவின் நாத்திறம் பற்றி  கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளை மெற்கோள் காட்டி எழுதுகிறார்.

‘ஆயதோர் காலையில்

ஆலய வீதியில்

நாயகனே உன்

நாத்திகம் கேட்கத்

தெய்வங்களெல்லாம்

தேர்களில் வந்தன

பொய்தாம் தாமென

புலம்பிப்போயின.

கடவுளரையே  தாம் பொய் என்று கூற வைக்கும் அளவுக்கு நாவன்மை படைத்தவர்  அறிஞர் அண்ணா. என்கிறார் வைரமுத்து.

எழிலன் ’‘ங ப்போல் வளை’ என்னும் ஆத்திச்சூடியை எடுத்துக்கொள்கிறார்.’ங’என்ற எழுத்து எத்தனை வளைவு  நெளிவு இருந்தும்  அதனை ஏற்று வாழக்கற்றுக்கொண்டதோ அப்படி  நாமும் வாழ்க்கையில் அத்தனை துயரங்களையும் ஏற்றுக்கொண்டு  வெற்றி நடைபோடவேண்டும். நாம் எல்லோரும் இப்படிப் பொருள் சொல்லுவோம்.

எழிலன் இப்படிச்சொல்கிறார். ‘ங என்கிற எழுத்து ஒன்றுக்கும் உதவாத தன் இன எழுத்துக்களை தனியா நின்று எப்படிக் காக்கிறதோ அது போல் நாமும் நம்மை ச்சர்ந்தவர்களை பயன் கருதாது காக்கவேண்டும். நன்றாகத்தான் இருக்கிறது எழிலனின் விளக்கம். பாராட்டுவோம்.

மென்பொறியாளர் அம்மானைப்பாடல் ஒன்றும் எழுதுகிறார். அது அற்புதமாக வந்திருக்கிரது எழிலனுக்கு.

‘ சூரன் தனையழித்த

சண்முகனுக்கிந்திரன்தான்

தாரமெனத்தன்மகளைத்

தந்திட்டான் அம்மானை.

 

தாரமென வந்தவளைத்

தானணைத்து வாழாமல்

வீரன் வனத்திற்கே

வந்ததுமேன் அம்மானை

 

சீர்கொண்ட வள்ளியைச்

சேர்த்தணைக்க அம்மானை.

கொங்கு நாட்டார் பண்பாட்டுச்சிறப்பு பற்றி கவிஞர் கண்ணதாசன் அழகாகக்குறிப்பிடுவார். இது விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. கோவைப்பகுதிக்காரர்கள் மரியாதையுடன் பிறரை நடத்துவதைப்பார்த்து  தமிழ் நாட்டின் பிற பகுதிக்காரர்கள் நெகிழ்ந்துதான் போகவேண்டும். செட்டி நாட்டாரும் விருந்தோம்பலுக்குப்பெயர்போனவர்கள்தாம்.  அந்த நகரத்தார் இனத்து கண்ணதாசனே கோவை விருந்தோம்பலைப்பற்றி எத்தனைப்பெருமையாகக்குறிப்பிடுகிறார். அதனை எழிலன் வாசகர்களுக்கு கொண்டு தருகிறார்

வாழ்கின்றார் கோவையிலே

நல்ல மக்கள் !

சூழ்கின்ற பண்பெல்லாம்

கோவையில்தான் !

என்று தொடங்கிய கண்ணதாசன் அடுக்கிக்கொண்டே போகிறார்.

அப்பப்பா ! கோவையிலே

விருந்து வந்தால்

ஆறு நாள் பசி வேண்டும் !

வயிறும் வேண்டும்

தப்பப்பா ! கோவைக்கு

வரக்கூடாது !

சாப்பாட்டினாலே

சாகடிப்பார் !

விருந்தோம்பலுக்குப்பெயர்போன செட்டி நாட்டு. நகரத்தோர் திருமண நிகழ்வுக்குச்சென்று திரும்பியவர்கள் அதனை அனுபவித்தே திரும்பியிருப்பர். நகரத்தார் கண்ணதாசன் இப்படி கோவை மக்களின் விருந்தோம்பலை வாயாரப்புகழ்வது அப்பகுதிக்குப் பெருமை சேர்க்கிறது..

எழிலனோ தன்னை கோவை எழிலன் என்கிறார்.  பணி நிமித்தம் சில காலம் கோவையில் தங்கியுள்ளவர் அவர்.  மும்பையில் முன்பு  அவர் வசித்தபோது  அவர் இல்லத்துக்கு  நான் விருந்தினனாய் என் குடும்பத்தோடு சென்றிருக்கிறேன். அவர் குடும்பத்து விருந்தோம்பும் பண்பை அனுபவித்தவன்.

கோவை எழிலன்  எழுத்தாளர் வளவதுரையனின் மூத்த மகன். வளவ துரையனின்  இல்லத்து க்காபியை ப்புகழாத எழுத்தாளர்களும் உண்டா என்ன ! !

சந்தியா பதிப்பகம் கொணர்ந்துள்ள  இந்நூல் சிறப்பாக வந்திருப்பது பாராட்டுக்குறியது. எழிலனுக்கு இது நல்ல தொடக்கம்.  எழிலனின் இலக்கியப்பயணம் வெல்லட்டும்.


(உள்ளம் படர்ந்த நெறி – கோவை எழிலன்,
சந்தியா பதிப்பகம்
53வது தெரு,
9வது அவென்யு,
அசோக் நகர்,
சென்னை -600083.
விலை. ரூ.200)

 

 

 

 

Series Navigationஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி இந்தியாவில் 44,444 ஆம் காற்றாடி சுழற்தட்டைத் [Wind Turbine] தயாரித்துள்ளது
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *