எக்ஸ்ட்ராக்களின் கதை

” ஸ்ரீ: ”

நாயகிகள் வரும் முன்னே
நாங்கள் வந்து காத்திருக்க வேண்டும்
நாற்பது பேருக்கும் மொத்தமாய்  மேக்கப்
தொடை தெரிய வேண்டுமெனில்
நாற்பது ஜோடித்தொடையும்
ஒரே நேரத்தில் தெரிய வேண்டும்
வேறு எந்த அங்கமாயினும் அப்படியே….
டைரக்டர், உதவி டைரக்டர்,
டான்ஸ் மாஸ்டர், காமிராமேன்
எல்லோர் பார்வையிலும் ஓர் இளக்காரம் தெரியும்
வழிகின்ற ஜொள்ளை மீறி….
எக்ஸ்ட்ராக்களுக்கான ஏஜெண்டு
எல்லோருக்கும் அண்ணன் முறை,
இடுப்பில் கை வைத்து இளித்தாலும்….
காதல் ஜோடியின் பின்புறமாக
வெள்ளை தேவதைகளாய் முந்தானை விரித்து
முழு உடம்பைக் குலுக்கிப்
பொது உடைமைப் பூங்காவாக
ஓடி வர வேண்டும்….
நாயக நாயகியர்க்கு
நட்சத்திர ஓட்டல் விருந்து வர,
மதிய உணவு தயிர்சாதப் பொட்டலத்தை
மனதார ரசிக்கக் கற்க வேண்டும்.
‘பேக்கப்’ சொல்லியும் காசு கிடைக்கப்
பெருந்தவம் இருக்க வேண்டும்….
கிடைத்ததில் கமிஷன் போக பாதிகாசு
பாழாய்ப் போன கணவனின்    ‘பாட்டிலுக்கு….
வாடகை, மளிகை பாக்கி, வாரிசுகளின் ஸ்கூல் ஃபீஸ்
வரிசையாய் நினைவில் வர –
“அடுத்த ஷூட்டிங் எப்பண்ணே….?” என்று
அனிச்சையாய்க் கேட்டு வைப்போம்.
**** **** **** ****
மின்னஞ்சல் : sriduraiwriter@gmail.com

Series Navigationசாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்குஅதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1வாக்குமூலம்