எக்ஸ் ஆக்ஸிஸ் 1990

 

 

தாரமங்கலம் வளவன்

-கல்கி,ஆகஸ்டு 2021 இதழில் வெளி வந்தது.

ருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகம் அது.

மும்பையின் பாந்தரா மேற்கு கடற்கரையில் கடலுக்கு மேல் கான்கீரிட் தூண்கள் தாங்கிப் பிடிக்க, கட்டப் பட்டிருந்தது.

கட்டிடத்திற்கு கீழே ஆர்ப்பரிக்கும் கடல்.

பெரிய, பெரிய பாறைகள்.

ஆய்வகத்தைச் சுற்றிலும் கண்ணாடி ஜன்னல்கள்.

கடலின் ரம்மியமான காட்சிகளைப் பார்த்துக் கொண்டே விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்கு வசதியாக கட்டப் பட்டு இருந்தது.

ஆய்வகத்தின் இயக்குநர் ரமேஷ் குல்கர்னி தன்னுடைய அறையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு அறிவியல் கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டு இருந்தார்.

ஜன்னலைத் திறந்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் என்று நினைத்து கண்ணாடி ஜன்னலைத் திறந்து விட்டார்.

ஓ வென்ற இரைச்சலுடன் கடல் அலைகள் பாறைகளில் மோதிக் கொண்டிருந்தது.

வழக்கத்தை விட அதிக வேகத்தில் கடல் காற்று வீசியது.   மேஜையின் மீது, அவர் எழுதிக் கொண்டிருந்த அந்த ஆராய்ச்சி கட்டுரையின் தாள்கள் காற்றில் பறக்க ஆரம்பித்தன.

பதறிப் போனவர், ஜன்னலை வேகமாக மூடினார்.

திரும்பி வந்து தனது இருக்கையில் அமர்ந்தார்.

பியூன் கதவைத் தட்டினான்.

“ சார்.. அந்த ரிடையர்ட் சயிண்டிஸ்ட் பரமேஸ்வரன் உங்களப் பார்க்க வந்திருக்காரு..”

“ கொஞ்சம் உட்காரச் சொல்லு.. கூப்பிடறேன்.”

கன்சல்ட்ண்ட் வேலை கேட்டு வந்து போய்க் கொண்டு இருக்கிறார் பரமேஸ்வரன். அவர் ரிடையர்ட் ஆகி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி இருக்கும். இத்தோடு மூன்றாவது முறையாக வந்துவிட்டார்.

ரிடையர்ட் ஆனதற்கு பிறகும் வேலை செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆசை.

தனது சர்வீசின் பெரும் பாலான வருடங்களை டில்லியில் கழித்தவர் அவர். ரிடையர்ட் ஆகும் சமயத்தில், மும்பைக்கு மாறுதல் ஆகி வந்தவர்.

ரிடையர் ஆகும் முன், குல்கர்னியைப் போலவே, பரமேஸ்வரனும்  இதே ஆய்வகத்தில் பருவநிலை மாற்றம் குறித்து பல ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தவர். சில ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி கொடுத்து இருந்தார்.

தான் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி பற்றி பரமேஸ்வரன் சொல்வது,  எதுவும் குல்கர்னிக்கு புரிவது இல்லை.

தனக்கு கன்சல்ட்டண்ட் வேலை கொடுத்தால், தனது அந்த ஆராய்ச்சியை தொடர்ந்து செய்வதாக கூறுகிறார் பரமேஸ்வரன்.

ரெகுலர் ஊழியராக, வேலை செய்த போதே அவர் செய்த ஆராய்ச்சிகள் எதுவும் உபயோகமாக இல்லாத போது, ரிடையர்ட் ஆன பிறகு,  இந்த பரமேஸ்வரன் என்ன உபயோகமாக செய்து விடப் போகிறார்.

நம்பிக்கைஇல்லைகுல்கர்னிக்கு.

குல்கர்னிக்கும் ரிடையர் மெண்ட் தேதி நெருங்கி விட்டது.

தான் பார்த்து, பார்த்து உருவாக்கிய இந்த ஆய்வகத்தை விட்டுப் போயாக வேண்டும்.

அதில் அவருக்கு கவலை இருந்தது.

இப்போது அந்த கவலை கொஞ்சம் குறைந்து இருக்கிறது.

அவரது மகள் வைஜயந்தி, இதே ஆய்வகத்தில் ஒரு இளம் விஞ்ஞானியாக போன வாரம் சேர்ந்து இருக்கிறாள்.

தான் ரிடையர்ட் ஆன பிறகும்,  இந்த ரம்மியமான ஆய்வகத்தில் தொடர்ந்து தனது மகள் வேலை செய்வாள் என்பது குல்கர்னிக்கு சற்று ஆறுதலைக் கொடுத்தது.

பரமேஸ்வரன் காத்திருப்பது ஞாபகம் வர, பியூனைக் கூப்பிட்டு,

“ அந்த பரமேஸ்வரனை வரச் சொல்லுப்பா..” என்றார்.

பரமேஸ்வரன் வந்து உட்கார்ந்தவுடன்,

“ சொல்லுங்க பரமேஸ்வரன்.. எந்த விதத்தில நீங்க உபயோகமா இருப்பீங்க..”

தான் அதிகமாக பேச விரும்ப வில்லை என்பதையும், நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை என்பதையும் குல்கர்னி, பரமேஸ்வரனுக்கு உணர்த்தினார்.

“ சார். அந்த ஜப்பான் மாநாட்டு தீர்மானம் என்னா சொல்லுது..”பரமேஸ்வரன் கேட்டார்.

தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல், தன்னிடம் திருப்பிக் கேள்வி கேட்டது, குல்கர்னிக்கு சற்று எரிச்சலை ஊட்டியது.

“ நீங்களே சொல்லுங்க..”

“ நம்ம நாட்ல எமிஷனை 1990 இல் இருந்த அளவு குறைக்க வேண்டும்னு சொல்லுது.”

“ அது சரி.. அதுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க.”

“ அது ரொம்ப ஈஸிசார்.. நான் ஒரு பார்முலாவை கண்டுபிடிச்சி இருக்கேன்.. அந்த பார்முலாபடி ஒரு மெஷின் ரெடி செஞ்சி இருக்கேன். ஐன்ஸ்ன்டீனோட தியரிபடி, அந்த மெஷின்ல, அந்த ஒரு பாராமீட்டரை மட்டும் செட் செஞ்சி..”

“ எந்த பாரா மீட்டரை..”

“ அது தான் சார்.. நம்ம நாட்டோட எமிஷன் லெவலை. அதை மட்டும் நம்ம முப்பது வருஷத்துக்கு முன்னாடி இருந்த லெவலுக்கு கொண்டு போயிடலாம்..”

“ எனக்கு புரியல..”

“ ஒரு உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்கோங்க.. எக்ஸ் ஆக்ஸிஸ்ல நான் இருக்கிறதாகவும், வொய் ஆக்ஸிஸ்ல மும்பை நகரம் இருப்பதாகவும், இசட் ஆக்ஸிஸ்ல நமது நாடு இருக்கிறதாகவும் செட் செஞ்சிடறேன்..”

“ எனக்கும் ஒன்னும் புரியல.. நீங்க சொல்றதில எனக்கு எந்த நம்பிக்கையும் வரல..”

“ உங்களுக்கு நம்பிக்கையை வரவழைக்க, முதல்ல நான் 1990 ஆண்டுக்கு போயிடறேன்.. அதாவது முப்பது வருஷத்துக்கு முன்னாடி.. அப்ப எனக்கு முப்பது வயசு குறைஞ்சுடும்..”

“ என்ன சொல்றீங்க.. நம்பற மாதரி ஏதாவது பேசுங்க..”

“ உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா சொல்லுங்க.. நாளைக்கே முப்பது வயசு குறைஞ்ச பரமேஸ்வரனா, உங்க முன்னாடி வந்து நின்னு காண்பிக்கிறேன்..”

“ மிஸ்டர் பரமேஸ்வரன்.. உங்களுக்கு ஏதோ ஆயிடிச்சின்னு நெனக்கிறேன்.. ஒரு டாக்டரைப் பாருங்க..” என்று சொல்லி விட்டு கோபமாய் எழுந்தார் குல்கர்னி.

ந்த வாக்கு வாதம் நடந்து, ஒரு வாரம் ஆகி இருக்கும்..

காலையில் ஆய்வகம் திறந்தவுடன், பியூன் ரகுராம் சொன்னான்.

“ சார்.. ஜுகு பீச்ல நேத்து ராத்திரி, உங்க மகள் வைஜயந்தியை பார்த்தேன்..”

“ அதுக்கு என்ன..”

“ அதுக்கு இல்ல சார்.. கூட ஒரு பையன்..”

“ பையனா…”

“ ஆமாம் சார்.. அந்த பையனோட முக ஜாடையைப் பார்த்தா நம்ம பரமேஸ்வரன் மாதரியே இருக்கு..”

“ யாரை சொல்ற..”

“ போன வாரம் கூட உங்கள பார்க்க வந்தாரே..”

“ ஓ.. அந்த ரிடையர்ட் சயிண்டிஸ்ட் பரமேஸ்வரனா..”

“ ஆனா வயசு கொறஞ்சு, காலேஜ் பையன் மாதரிஇ ருந்தாரு..”

“ என்னாது.. வயசு கொறஞ்ச மாதரி இருந்தாரா..”

“ ஆமாங்க சார்.. ஒரு வேளை அவரோட மகனா இருக்குமோ..”

“ பரமேஸ்வரனோட மகனா… சரி.. நான் பாத்துக்கறேன்… இந்த விஷயத்தை அப்படியே நீ மறந்துடு..”

அவன் மறக்கவா போகிறான். எத்தனை பேரிடம் சொல்லப் போகிறானோ.

குல்கர்னி யோசித்தார்.

கவலையாகி விட்டது அவருக்கு.

தனக்கு மகன் இருப்பதாக பரமேஸ்வரன் சொல்லவே இல்லையே..

எந்த வேலையிலும் மனம் ஒன்ற வில்லை அவருக்கு.

போன வாரம் வேலை கேட்டு பரமேஸ்வரன் வந்த போது, அவர் சொன்னது ஞாபகம் வந்தது.

ஒரு வேளை, பரமேஸ்வரனின் அந்த கண்டு பிடிப்பு உண்மையா..

தனது கண்டு பிடிப்பின் படி அவர் தன்னை முப்பது வயது குறைந்த மனிதனாக, ஒரு இளைஞனாக மாற்றிக்  கொண்டாரா..

அது முடியுமா..

நம்ப முடிய வில்லையே..

இல்லை.. உண்மையிலேயே பரமேஸ்வரனுக்கு மகன் உண்டா..

அவருடைய கண்ணாடி அறையில் இருந்து பார்க்கும் போது,  தன்னுடைய இருக்கையில் அமர்ந்து, வைஜயந்தி அமைதியாக தனது பணியை செய்து கொண்டிருப்பது குல்கர்னிக்கு தெரிந்தது.

வைஜயந்தியைக் கூப்பிட்டுக் கேட்கலாமா..

எப்படி பேச்சை ஆரம்பிப்பது அவளிடம்..

பரமேஸ்வரனுடன் நீ ஜுகு பீச்சுக்கு போனாயா என்று எப்படிக் கேட்பது..

சந்தேகப்பட்டு, உடனே இது பற்றி அவளிடம் விசாரிக்கக் கூடாது.

அது இருக்கட்டும்..

நேற்று மாலை எத்தனை மணிக்கு வைஜயந்தி வீடு திரும்பினாள்.

ஞாபகப்படுத்திப் பார்த்தார்.

ஆமாம்.. லேட்டாகத்தான் வந்தாள்.

அந்தேரியில் இருக்கும் அவளுடைய தோழியைப் பார்த்து விட்டு வந்ததாகச் சொல்லி இருந்தாள்.

அந்த தோழியிடம் போன் போட்டு விசாரிக்கலாமா.. நேற்று அவளுடைய வீட்டுக்கு வைஜயந்தி வந்தாளா என்று.

அப்படி விசாரித்தால், தான் விசாரித்ததை அந்த பெண், வைஜயந்தியிடம் கண்டிப்பாகச் சொல்வாள்.

அப்புறம் வைஜயந்தி, தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்.

ஒரு வேளை இப்படி இருக்குமா..

வைஜயந்தி இப்போது செய்து கொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சியை, பரமேஸ்வரன் ரிடையர்ட் ஆகும் முன் செய்து கொண்டிருந்தார். இன்னும் சொல்லப் போனால், இந்த ஆய்வகத்தில் எல்லோரும் அதே ஆராய்ச்சியைத் தான் செய்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது, இந்த ஆய்வகம் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி சம்மந்தமாக டிஸ்கஷன் செய்வதற்காக, ஜுகு பீச்சுக்கு இருவரும் போய் இருப்பார்களா..

பீச் காற்று வாங்கிக் கொண்டு, இரு விஞ்ஞானிகள் தங்களின் அறிவியல் ஆராய்ச்சி பற்றி விவாதிப்பது ஒன்றும் தவறான காரியம் இல்லையே..

மேலும் பரமேஸ்வரன் அறுபது வயதை தாண்டியவர். வைஜயந்திக்கு அப்பா போன்றவர்.

பரமேஸ்வரனுடன் வைஜயந்தி பீச்சுக்கு போனதில் டென்ஷன் ஆக என்ன இருக்கிறது.

பரமேஸ்வரனின் மகனாக இருக்கலாம் என்று ரகுராம் சொல்கிறானே..

வைஜயந்தி போன வாரம் தான் இந்த வேலையில் சேர்ந்தாள்.

பரமேஸ்வரன் ஒரு வருடத்திற்கு முன்பே ரிடையர்ட் ஆகி விட்டார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இருக்க வாய்ப்பே இல்லை. 

ஆராய்ச்சி சம்மந்தமாக இருவரும் பேசுவதற்கு எப்படி வாய்ப்பு உருவாகி இருக்க முடியும்.

அவன் பரமேஸ்வரனின் மகனாக இருந்தால்..

அவன் என்ன படித்திருப்பான்..

என்ன வேலையில் இருப்பான்.. ஒழுக்கமானவனா..

ஒருக்கால் அவனை வைஜயந்தி காதலிப்பதாக இருந்தால், அவளின் முடிவு சரியா..

வைஜயந்திக்கு பொருத்தமானவனா..

மாலை அலுவலகத்தை விட்டு புறப்படும் வரை பதட்டமாகவே இருந்தது அவருக்கு. 

இரவு பூராவும் யோசித்ததில், வேறு ஒரு ஐடியா கிடைத்தது.

பரமேஸ்வரனின் பர்சனல் பைலை தேடிப் பார்த்தால்..

அந்த பைலில், அவரது குடும்பத்தினர் பற்றிய தகவல் இருந்தாக வேண்டுமே.. டிபண்டெண்ட் லிஸ்ட் இருக்க வேண்டுமே.. அதில் குடும்ப உறுப்பினர்களின் தகவல்கள் இருந்தாக வேண்டுமே..

மனைவி, குழந்தைகளின் பெயர், அவர்களின் வயது, ஆணா பெண்ணா என்ற விஷயங்கள் இருக்குமே..

அதை வைத்து, பரமேஸ்வரனுக்கு மகன் இருக்கிறானா என்று கண்டு பிடித்து விடலாமே.

எச் ஆர் செக்சனில் வேலை செய்யும் ஒருவரை முதலில் கூப்பிடலாம்.

ரகுராமை கூட்டி வர ச்சொல்லலாமா..

வேண்டாம்.. வேண்டாம்.

ரகுராமிற்கு தெரியாமல் இதைச் செய்ய வேண்டும்..

இண்டர்காம் லிஸ்டில் எச் ஆர் செக்சனில் ஒரு நெம்பரை தேர்வு செய்தார்.

போன் செய்து, குல்கர்னி டைரக்டர் பேசுவதாகக் கூறினார்.

டைரக்டரிடம் இருந்து போன் என்றவுடன், சற்று தடுமாறிய அந்த சிப்பந்தி,

“ சொல்லுங்க சார்..” என்றார் பணிவுடன்.

“ அந்த ரிடையர்ட் சயிண்டிஸ்ட் பரமேஸ்வரனோட பர்சனல் பைலை நான் பார்க்கணும்.. கொண்டு வரமுடியுமா.” என்றார்.

“ சார்.. அவரு ரிடையர்ட் ஆயிட்டதனாலே, அவரோட பைலை டில்லிக்கு அனுப்பிட்டோம்.”

மேலும் பரமேஸ்வரனைப் பற்றி தகவல்          கேட்பது, சரியாக இருக்காது என்று நினைத்து அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டார்.

இரண்டு நாட்கள் ஓடியது.

சனி, ஞாயிறு விடுமுறை வந்தது.

அப்படி ஏதாவது காதல் விஷயம் என்றால், சனி, ஞாயிறில் எங்காவது அவர்கள் செல்வார்களா..

சினிமா.. ஷாப்பிங் மால்.. கடற்கரை என்று..

அதை எப்படிக் கண்டு பிடிப்பது..

வைஜயந்தியின் செல் போனை சோதனை செய்து பார்த்தால் என்ன.

சனிக்கிழமை இரவு வைஜயந்தியின் செல் போனை அவர் சோதித்து பார்த்த போது, ஹில் ரோடு குளோபஸ் தியேட்டரில் ஞாயிற்றுக் கிழமை ஈவினிங் எட்டு மணி ஷோவிற்கு இரண்டு டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு இருந்தன.

எதற்கு இரண்டு டிக்கெட்டுகள்.

வைஜயந்தியின் உடன் செல்லப் போவது யார்..

அந்தேரியில் இருக்கும் வைஜயந்தியின் அந்த தோழியா..

ஹில்ரோடும், அந்தேரியும் பக்கம் பக்கம் தான்.

ஒரு வேளை தன் தோழியை அங்கே வரச் சொல்லி விட்டு, வைஜயந்தி போகப் போகிறாளா..

இல்லை வேறு எங்காவது இருவரும் சந்தித்து, அங்கிருந்து குளோபஸ் தியேட்டருக்கு போகப் போகிறார்களா.

அப்படி ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து விட்டு, தியேட்டருக்கு போவதாக இருந்தால், அது சம்மந்தமாக அவர்கள் இருவரும் தகவல் பரிமாற்றம் செல் போனில் செய்து கொள்வார்களே..

அதைப் பார்த்து விட்டு, அந்த இடத்திற்கு நான் முன்பாகவே போய் விட்டால்..

அப்போது கண்டு பிடித்து விடலாமே…

வைஜயந்தியோடு யார் போகிறார்கள் என்று.

ஞாயிறு காலை..

வைஜயந்தி குளிக்க சென்றவுடன், அவளின் செல் போனை அவசர அவசரமாக தேடிப் பார்த்தார்.

பெயரிடப்படாத ஒரு எண்ணில் இருந்து, ஒரு செய்தி வந்திருந்தது.

மெஹ்பூப் ஸ்டுடியோ வாசலில் காத்திருப்பதாகவும், அங்கிருந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு சினிமா பார்க்க போகலாம் என்றும் எழுதி இருந்தது.

பெயரிடப் படாத எண் என்றால் அது அந்த அந்தேரி தோழியாக இருக்க முடியாது.

அப்படியானால் அது யார்.

குல்கர்னிக்கு சொட்டை தலை. அதை மறைக்க ஒரு தொப்பி வாங்கி இருந்தார்.

ஆனால் வாங்கியதில் இருந்து அதை போட்டதே இல்லை.

அந்த தொப்பியை கையில் எடுத்துக் கொண்டார்.

அந்த மெஹ்பூப் ஸ்டுடியோவின் எதிரில் ஒரு பஸ் ஸ்டாப் இருக்கிறது.

அந்த பஸ் ஸ்டாப்பில் இருக்கைகள் இருக்கிறது.

தொப்பியை அணிந்து கொண்டு அந்த பஸ் ஸ்டாப்பில் போய் உட்கார்ந்து கொண்டால், அங்கு வரும் வைஜயந்தியால் என்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியாது.

அங்கிருந்து, மெஹ்பூப் ஸ்டுடியோ வாசலையே கவனித்துக் கொண்டு இருந்தால், வைஜயந்தியோடு யார் சினிமாவுக்கு போகப் போகிறார்கள் என்பதைக் கண்டு பிடித்து விடலாம்.

முடிவு செய்த படி, அந்த இடம் செல்ல ஒரு டாக்சியை வைத்துக் கொண்டார்.

லீலாவதி ஆஸ்பிட்டல் முன் டிராபிக் ஜாமில் டாக்சி மாட்டிக் கொண்டது. நிறைய வண்டிகள் முன்னால் நின்று கொண்டிருந்தது.

மணியைப் பார்த்தார். ஏழு என்று காண்பித்தது.

இருட்டிக் கொண்டு வந்தது.

அப்போது கவனித்தார். முன்னால் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்ட டாக்சிகளில் இருந்து சிலர் இறங்கி நடந்து செல்வதை.

நடந்து செல்பவர்களில் ஒரு பெண் வைஜயந்தி போல் இருக்கிறாளே..

அவளுடன் நிறைய பேர் நடந்து போகிறார்களே.. அதில் இளைஞர்களும் இருக்கிறார்கள். இளம் பெண்களும் இருக்கிறார்களே.

குறுக்கு தெருவில் நுழைந்து, வேகமாய் நடக்கிறாளே..

அவசர அவசரமாக டாக்சிக்காரனின் மீட்டர் பில்லை செட்டில் செய்து விட்டு, வைஜயந்தியை பின் தொடர்ந்து நடக்க முற்பட்டார்.

ஆனால் வயது ஆனதினால் வேகமாக நடக்க முடியவில்லை.

மூச்சு வாங்கியது. 

வைஜயந்தி கண் பார்வையில் மறைந்து போய் விட்டாள்.

இரவு வீடு திரும்பிய வைஜயந்தியிடம் இது குறித்து பேச நினைத்தார். ஆனால், முடியவில்லை.

திங்கட் கிழமை காலை வழக்கம் போல் ஆய்வகம் திறந்தவுடன், அந்த எச் ஆர் செக்சன் மனிதர் அவரின் அறையில் நுழைந்து,

“ சார்.  அன்னிக்கி பரமேஸ்வரனோட பர்சனல் பைல் கேட்டீங்களே… டில்லி ஆபீஸ்ல இருந்து ஒரு நகல் கேட்டு வாங்கி இருக்கேன். இந்தாங்க சார்..” என்றார்.

அந்த பர்சனல் பைலை அவசர அவசரமாக விரித்து, படித்தார் குல்கர்னி.

அந்த லிஸ்டில் பரமேஸ்வரனுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான் என்று போட்டு இருந்தது.

அப்படி என்றால் அவன் யார்..

தனது ஆராய்ச்சியின் படி தனது வயதை குறைத்துக் கொண்ட பரமேஸ்வரனா..

உண்மையில் அது சாத்தியமா..

பரமேஸ்வரன் சொன்ன அவரது எக்ஸ் ஆக்ஸிஸ் பார்முலா உண்மையாக இருக்குமோ..

ஒரே குழப்பமாய் இருந்தது.

பரமேஸ்வரனுக்கு போன் செய்த குல்கர்னி,

“ மிஸ்டர் பரமேஸ்வரன்.. கன்சல்ட்டெண்ட் வேலை கேட்டீங்களே.. நாளைக்கு இங்கே வாங்க.. வந்து, உங்க ஆராய்ச்சியை விளக்கி சொல்லுங்க.. இன்னொரு முக்கியமான விஷயம், நீங்க செஞ்சி இருக்கிற அந்த மெஷினையும் எடுத்துக் கிட்டு வாங்க..”என்றார்.

அடுத்த நாள் பரமேஸ்வரன் அந்த மெஷினை எடுத்துக் கொண்டு வந்தார்.

“ நீங்களே கொஞ்சம் விவரிச்சி  சொல்லிடுங்க..”

பரமேஸ்வரன் விவரிக்க ஆரம்பித்தார்.

அவர் விவரித்துக் கொண்டு இருக்கும் போதே, ஜன்னலுக்கு அருகில் சென்ற குல்கர்னி, ஜன்னலைத் திறந்து விட்டார்.

பிறகு, பரமேஸ்வரனைப் பார்த்து

“ உங்க மெஷினை எடுத்துக் கிட்டு இங்க வாங்க.” என்றார்.

பரமேஸ்வரன் தன்னுடைய மெஷினை எடுத்துக் கொண்டு ஜன்னலருகே போனார்.

அந்த மெஷினை வாங்கிய குல்கர்னி, அதை திருப்பித் திருப்பி பார்த்தார்.

திடீரென்று திறந்திருந்த ஜன்னலின் வழியாக பரமேஸ்வரனின் மெஷினை தூக்கி கடலில் வீசினார்.

அந்த மெஷின் ஆர்ப்பரிக்கும் கடல் நடுவே, அந்த பெரிய பெரிய பாறைகளின் மேல் மோதி, சுக்கு நூறாக உடைந்தது.

      —————————————————-

 

 

Series Navigationமகாத்மா காந்தியின் மரணம்கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )