எண்களால் ஆன உலகு

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

சு.மு.அகமது

ஆம்பூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவின் ஏ.டி.எம்.மில் தொங்கிக் கொண்டிருந்தது நீண்ட மனிதச்சங்கிலி.படிகளில் வழிந்து ஆர்.சி.சி தளத்தின் கீழ் சுருண்டு பின்பு நீண்டு நேதாஜி ரோடின் வழி நீண்டு கன்கார்டியா மேனிலைப் பள்ளியை தொட்டிருந்தது. விதவிதமான மனித வளையங்கள் கோர்க்கப்பட்டு அதனதன் வடிவத்தில் கால்சராய், கைச்சட்டை, சுடிதார், புடவை, பைஜாமா குர்த்தா, நீண்ட தாடி, தலையில் குல்லா, மொட்டைத்தலை, ஒற்றை பின்னல், இரட்டை ஜடை, பாப் எனவும் நைந்து போன ஜீன்ஸ், நாற்றமடிக்கும் டீ சர்ட் இப்படி ஏகத்துக்கும் கலக்கப்பட்டு கோர்வையாய் நீண்டிருந்தது சங்கிலி.
’இவன்’ என்ற ஒரு வளையம் கண்ணாடிக் கதவுக்கு வெளியே நின்றபடி உள்ளே சென்றிருந்த ’அவள்’ என்ற வளையத்தை பார்த்தபடி இன்னும் சற்றைக் கெல்லாம் மனிதச்சங்கிலியிலிருந்து விடுபடும் அறுபடும் வலிக்காய் காத்திருக்க, கண்ணாடிக் கதவு திறந்து அவள் வெளியேறினாள்.அறைக்குள்ளிருந்து ஏ.சி.யின் சில்லும் அவள் தெளித்திருந்த நறுமணமும் லேசாக இவனை சூழ ரம்மியமான உணர்வோடு அறைக்குள் பிரவேசித்தான்.ஏ.சி.யில் 18’C என்று ரேடியக்கலரில் சீதோஷணத்தின் தன்மை பளீரிட்டது.இதற்கே நடுக்கம் கண்டது உடல்.ஜீரோவில் எப்படியிருப்பார்கள் மனிதர்கள்.நொடியில் தோன்றி நொடியிலேயே பதிலின்றி மறைந்த கேள்வி.இன்னும் சற்று தாமதித்தால் வெளியிலிருக்கும் சங்கிலியில் சலசலப்பேற்பட்டு விடும்.கார்டை அதற்குரிய பொந்தில் நுழைத்து இழுத்தான். மானிட்டர் அன்போடு இந்த சங்கிலி வளையத்தின் பெயரை குறிப்பிட்டு வரவேற்றது.அன்பாதவன்.ரொம்பவும் கஷ்டப்பட்டிருப்பார்கள் போல.PATHA –வா BADHA- வா என்று குழம்பியது தெரிகிறது.கேரக்டரில் அடங்காது வெளிச்சென்றதால் குழப்பமோ.சரியாய் தான் குறிப்பிட்டிருந்தான் பெயரை இவன்.
PIN – அய் கேட்டது கணிணி.பதித்தான்.அடுத்த சேவைக்காய் காத்திருந்தது.பணம் எடுக்க வேண்டும்.சேமிப்புக்கணக்கு.தேவைப்படும் பணத்தின் அளவு.அனைத்தும் முடிக்க இருபது வினாடிகள் தேவைப்பட்டது.அவனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பணத்தாள்களை வெளித்துப்பியது காசு எந்திரம்.சில்லிட்டிருந்த தாள்களை எடுத்து எண்ணி சட்டைப்பையில் திணித்துக்கொண்டான்.கணக்குச்சிட்டை எட்டிப்பார்த்தது.உருவிக்கொண்டான்.பதினெட்டு ரூபாய் தான் பாக்கியென்றது. ஏ.டி.எம்.மின் ஒரு வசதி பாக்கியே இல்லாது கணக்கை வைத்துக்கொள்ளலாம்.அல்ப சந்தோஷம்.கண்ணாடிக்கதவை திறந்து வெளியே வந்தான்.பரந்து விரிந்த வெளியுலகின் வெம்மையில் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டான்.முப்பது நொடி குளிர்ச்சி நொடியில் கரைந்து போனது.சட்டைப் பையிலிருந்த புது பணத்தாள்களில் மிச்சமிருந்த குளிர்ச்சி சட்டையை கடந்து மார்புக்கூட்டிற்குள் பரவிக் கொண்டிருந்தது. சாலையோர சங்கிலியில் வியர்வையின் வழியல்.தலை மீது கைக்குட்டையை கவிந்தும் சேலையில் முக்காடிடப்பட்டவாறும் பெண் சங்கிலிகள்.
மாதம் முழுக்க ஏதோவொன்றை செய்து வரும் சம்பளத்தில் மாதத்தை எப்படியாவது ஓட்ட பணத்தாள்கள் வேண்டும்.இவனுக்கு வாய்த்தது மாதம் மூவாயிரம். சட்டைப் பையிலிருந்த தாள்களில் குளிர்ச்சி குறைந்திருந்தது. மனச்சூட்டில் அதுவும் லயித்திருக்கலாம்.
நண்பனொருவன் இரு சக்கர வாகனத்தில் வேகமாக கடந்தான் சங்கிலிக்கும் அவனுக்கும் தொடர்பில்லாதது போல.இவனும் விடுபட்டு தனித்திருந்ததால் அவன் கண்ணில் பட ’கிறீச்’சென்று சப்தமிட்டபடி வாகனத்தை நிறுத்தி அரை வட்டமடித்து இவனை நெருங்கினான்.தமிழ்ப்பித்தன்.வாகனத்திலும் தமிழ்.”தோழா எங்கே” என்றான்.பின்னால் நின்றிருந்த சங்கிலி திரும்பிப்பார்த்தது. ’நண்பா’என்றிருந்தால் ஞனி சிறந்திருக்கும்.”பஜாருக்குத்தான்”.”ஒக்காரு”.பறந்தார்கள். இவன் பின்னாடி திரும்பிப்பார்த்தான்.வளையங்களால் ஆன சங்கிலி ஊர்ந்து முன்னேறுவதாய் கண்களுக்கு பட்டது.நீண்டு மெல்லிய ஊசியாய் கண்களிலிருந்து பார்வை தப்பி மறைந்தது.
மாதத்தை ஓட்ட வேண்டும்.என்னென்ன தேவைகள் காத்திருக்கிறதோ வீட்டில்.மூவாயிரம் சூடாகிப் போயிருந்தது.கண்ணுக்கு தெரியாத இருள் சூழ்ந்த வெளிச்சப்பெருக்கை உமிழும் பெரு உலகில் இவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.முன்னாலிருந்து சில்லென்ற காற்று கடந்து செல்கிறது.அடுத்த மாதமும் இப்படியே தான் இருக்கும்.வரும்.நிற்கும்.கடக்கும்.
”ஏ.டி.எம்.மில் பெயரெல்லாம் வராதாமே.அடுத்த முறை வெறும் எண்கள் மட்டுமே உனக்கு அடையாளமாய் போகலாம்”என்றான் நண்பன் அமைதியை கலைத்து.அப்படித்தான் ஆகியிருந்தது அடுத்த முறை இவன் சென்றபோது.உங்களது பெயர்களெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.உங்களது அடையாள எண்ணை மட்டும் பதிவியுங்கள்.தேவைக்கானதை பெறுங்கள் என்றது மானிட்டர்.
தேவை மாதச்சம்பளம் மூவாயிரம்.எண்ணிக்கையில் மூவாயிரம்.வெளியே வந்தான்.வியர்த்திருந்தது.வியர்த்தும் நனைந்த மனிதச்சங்கிலி இன்னும் துருப் பிடிக்காது நின்றிருந்தது அதிசயம் போல்.அடுத்து ஏ.டி.எம் அறைக்குள் நுழைந்த அந்த ‘பெண் எண்ணை’ பார்த்தான்.பரிச்சயப்பட்ட எண்ணாய் தெரிந்தது.மனிதச்சங்கிலி கோர்க்கப்பட்ட எண்களால் நீண்டு அலையலையாய் மாறி மனித வாசமிழந்துக் கொண்டிருப்பதாய் பட்டது.சாலையில் நண்பனை எதிர்பார்த்தான்.இல்லை.மெதுவாக சாலையின் பக்கவாட்டாய் பஜார் நோக்கி பயணித்தான்.நாயொன்று இவனைப் பார்த்து குரைத்தது.எந்த எண்ணை எதிர்பார்த்ததோ?அது அவனில்லை என்பதால் குரைப்பு அதிகமாய் இருந்தது.இவனோ இதயத்துக்கு மேல் இன்னும் குளுமை மிச்சமிருந்ததை உணர ஆரம்பித்தான்.

• சு.மு.அகமது

Series Navigation
author

சு.மு.அகமது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *