என்னுடைய திருக்குறள் புத்தகத்தைப்பற்றிக் கட்டுரை வடிவில் விளம்பரம்

திருக்குறளைப்பற்றி ஒரு புத்தகம் எழுதப்போகிறேன் என்றேன். என்ன திருக்குறளைப் பற்றி எழுதப்போகிறீர்களா? ஏற்கனவே ஏகப்பட்டபேர் எழுதிவிட்டார்கள். சொல்லப்போனால் புத்தகம் எழுதவேண்டும் என நினைப்பவர்களெல்லாம் எழுதுவது திருக்குறளைப்பற்றித்தான். நீங்கள் வேறு எழுதவேண்டுமா? அதிர்ந்து போனேன். நண்பர் தமிழாசிரியர் அவர் கூறுவதில் உன்மையில்லாமல் போகாது. சிறிது நேரம் அமைதி நிலவியது. நண்பர் என்பால் இரக்கப்பட்டு சரி என்னதான் எழுதப்போகிறீர்கள்? ஒரு குறளைக்கூறி அதற்கு என்ன பொருள் கூறப்போகிறீர்கள் எனக்கூறுங்கள் என்றார். நான் சுதாரித்துக்கொண்டு நான் கூறுவதை விடத் தாங்களே கூறுங்கள் என்றேன். சற்று சிந்தித்தார். பிறகு . . .
பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுஉடை நீழ லவர்               1034
 
என்ற குறளுக்கு என்ன பொருள் கூறுவீர்கள் என்றார். திரும்பவும் நான் அமைதியானேன். என்ன தெரியவில்லையா என்பதைப்போல பார்த்தார். இல்லை. . .தாங்கள் என்ன உரை கூறுகிறீர்கள் எனக்கூறினால் பிறகு என்னுடைய உரையைக் கூறுகிறேன் என்றேன். சற்றே எரிச்சலானார். உழவர்கள் ஈர நெஞ்சத்தினர் அவர்கள் பல அரசர்களுடைய கொடைத்தன்மையையும் தன்னகத்தே கொண்டிருப்பராவர் என்றார். அவர் அவ்வாறு கூறும்போது அவருடைய குரல் சற்றே உரக்க ஒலித்தது. தொடர்ந்து ஞாபகம் வந்தவராய் பல குடை அரசர்களையும் தன்னுடைய அரசரின் குடையின் கீழ் கொண்டுவரும் ஆற்றல் உள்ளவரென்றும் கூறலாம் என்றார். இப்போது அவர் முகத்தில் ஒரு அலாதியான அமைதி.
நான் பேசலானேன். உழவு அதிகாரத்தில் இக்குறள் நாண்காவது குறளாக வருகிறது. அதிகாரத்தின் முதல் இரண்டு குறள்கள் உழவுத்தொழிலின் அத்தியாவசியத்தைக் கூறுகின்றன. மூன்றாவது குறளில்  உழவர்களே வாழ்வதற்கு உரிமை உடையவர்கள். மற்றவர்கள்  தாங்கள் சாப்பிடும்போது உழவர்களை நினைந்து நன்றி கூறி சாப்பிடுகிற காரணத்தாலேயே அவர்களுக்கு வாழும் உரிமை கிடைக்கிறது என ஓங்கி உழவர்களை பாராட்டும் திருவள்ளுவர் அவர்களுடைய பேராற்றலைப் பற்றி எழுதி உள்ள நாண்காவது குறள்தான் தாங்கள் கூறி உள்ள குறள் என்றேன். அக்குறளை நான் வித்தியாசமாக பார்க்கிறேன்.
குடை என்றால் கவிந்திருப்பது என்று பொருள் கூறுகிறது அகராதி. செடிகொடிகள் மரங்கள் என பலவகை உயிரிகள் கவிந்து குடைபோல் நிழல் தருகின்ற காடுகளைத் திருத்தி தங்களது நெற்பயிர் வேளாண்மை யென்னும் ஆட்சிக்குள் (நெற்பயிர்க் குடையின் கீழ்) கொண்டு வருபவர் என உழவர்களை திருவள்ளுவர் புகழ்கிறார் எனத் தோன்றுகிறது
சுருங்கக்கூறின் தங்களது வேளாண்மையென்னும் திறனால் நிழல் குடையான பல காடுகளைத் திருத்தி நெற்குடையான களனியாக்குவர் உழவர் என்று கூறுகிறார் என்றேன்.
பேராசிரியர் ஆச்சரியத்தில் உறைந்து போனார். அவசர அவசரமாக அலமாரியிலிருந்து திருக்குறள் புத்தகத்தை எடுத்தார். உழவு அதிகாரப் பக்கத்தைப் பிரித்தார்.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப் படும்
என்ற குறளில் பலமுறை நிலத்தை நல்ல புழுதியாகும் வன்னம் உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இடாது விளையும் எனக்கூறுபவர் அடுத்த குறளில்
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு
என்று உழுவதைப் பின்னால் தள்ளி விடுகிறாரே இந்த முரண்பாட்டினைப் பற்றி என்ன கூறுகிறீர்கள் என்றார்.
இரண்டு குறள்களையும் விளக்குகிறேன். பிறகு கூறுங்கள் முரண்பாடு உள்ளதா என என்று கூறிவிட்டு பேசலானேன்.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப்படும்               1037
விளக்கம்:நிலத்தைப் பலமுறை உழவுசெய்தால் அது மிகவும் புழுதியாவதால் (highly pulverized)  பயிரின் வேர்கள் ஆழமாகவும் பரவலாகவும் ஊடுருவிச் செல்லுமாதலால் பயிருக்கு அதனடியே உள்ள ஊட்டம் மட்டும் அன்றி பிற இடங்களிலும் உள்ள ஊட்டம் கிடைப்பதால் பயிர் செழித்து வளரும் என்பது திருவள்ளுவர் சொல்ல வந்த கருத்தாக இருக்கலாம். மண் கட்டியாக இருப்பதிலிருந்து புழுதியாவது என்ற மாற்றம் திருப்பித் திருப்பி உழுது மண்ணை உலரவிடுவதால் நிகழக்கூடியது.எந்த அளவுக்குப் புழுதியாக வேண்டும்? ஒரு பலம் (தொடி) எடை கொண்ட மண் அதில் நாலில் ஒரு பங்கு எடையாக (கஃசா) குறையும் அளவுக்கு. ஈரம் இழந்தால்  மண் புழுதியாவது இயல்புதானே. பல முறை உழுதால்தானே மண்ணின் ஈரம் முழுவதும் உலர்ந்து புழுதியாகும்? ஆயினும் திருவள்ளுவர் உழுவதை நேரடியாகச் சொல்லவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. மண்ணைத் திருப்பத் திருப்ப உழவேண்டும் என்பதை வலியுறுத்தத்தான் எரு வேண்டிய தில்லை என்று ஒரு போடு போட்டார் போலும். இப்படி ஒன்றை அழுத்தம் திருத்தமாக அவர் சொல்ல நினைக்கும்போது அதை மற்றொன்றை விட உயர்த்திச் சொல்வது அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் உத்திதான்!
உரை: மண் நன்கு புழுதியாகும்படி உழுதால் வேர்கள் ஆழமாகவும் பரந்தும் சென்று ஊன்றி ஊட்டங்களை எடுத்துக் கொண்டு செழித்து வளரும். அப்போது எருவே வேண்டியதில்லை என்னும் அளவுக்கு பயிர் செழித்து வளரும். ஆனால் அப்படி வேர்கள் கிளைத்தும் பரந்தும் செல்ல மண் நன்றாகப் புழுதியாக வேண்டும். எந்த அளவுக்குப் புழுதியாக வேண்டுமெனில் ஈரம் அதிகமாக உள்ள ஒரு பலம் எடையுள்ள மண் கால் பலம் அதாவது கஃசா அளவுக்கு எடை குறையும் அளவுக்கு புழுதியாக வேண்டும். உழுதல் காய விடுதல் மீண்டும் உழுதல் எனப் பலமுறை உழுது காயவிட்டால் மண் நன்றாக புழுதியாகி வேர்கள் கிழைப்பதற்கும் பரவுவதற்கும் எளிதில் வழிவிடும்.
ஏரினும் நன்றால் எரு இடுதல்; கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு     1038
 
விளக்கம்: முந்தைய குறளில் மண் நன்கு புழுதியாக ஆகும் வண்ணம் பல முறை உழவேண்டும் என்று கூறியவர் இப்போது உழவே வேண்டாம் என்று கூறுகிறாரே ஏன்? உழுவதா அல்லது எருவிடுவதா எது சிறந்தது என்ற கேள்வியெழும் போது எருவிடுவது சிறந்தது என்று கூறுகிறார். எருவிட ஏதோ ஒரு காரணத்தினால் முடிய வில்லையெனின் பல முறை உழுது நிலத்தை நன்கு புழுதியாக்குங்கள் என்று மாற்று வழி கூறுகிறார்.
உரை: உழுவதா அல்லது எருவிடுவதா எது முக்கியம் என்று கேட்டால் எருவிடுவதே மேல் என்று கூறும் அவர் களையெடுப்பை விட பயிரின் பாதுகாப்பு அதிமுக்கியம் வாய்ந்தது என்று கூறுகிறார். தனித்தனியே எல்லாமே முக்கியம்தான் என்பதனைத்தான் இவ்வாறு கூறுகிறார்.
திருக்குறளில் முரண்பாடென்பதே கிடையாது. எந்த ஒரு குறளும் எந்த ஒரு குறளுடனும் முரண்படாது. அதிகாரங்களும் அப்படியே என்று கூறி நிறுத்தினேன்.
அவர் அன்பு ஒழுகப்பார்த்தார். ஒரு நல்ல சகோதரனின் வாஞ்சை அவர் பார்வையில் வெளிப்பட்டது. உங்கள் புத்தகத்தை நான் அவசியம் படிக்கவிரும்புகிறேன். அது சரி எல்லா குறட்பாக்களுக்கும் இவ்வாறு வித்தியாசமாகப் பொருள் கூறி உள்ளீர்களா என்றார். இல்லை 584 குறட்பாக்களுக்கும் 33 அதிகாரங்களுக்கும் வித்தியாசமான பொருள், நடைமுறையில் இல்லாத பொருள் கூறி உள்ளேன் என்றேன்.
புத்தகத்தின் பெயர் என்ன? எங்கு எப்போது கிடைக்கும்? என்ன விலை? கேள்விகள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு வெளி வந்தன.
அவருக்குக் கூறியதையே உங்களுக்கும் கூறுகிறேன்:
Ø  பெயர்: திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
Ø  பக்கங்கள்: மேப் லித்தோ சைசில் 574 பக்கங்கள்
Ø  விலை: ரு. 285/-
Ø  கிடைக்குமிடம்: Dr.R.Venkatachalam, A 19, Vaswani Bella vista, Sitrampalya main road, Graphite India Junction, Bangaluru, 5660048 prof_venkat1947@yahoo.co.in  09886406695.
Ø  மனி ஆர்டர் / அட்பார் ட்ராஃப்ட் / காசோலை அனுப்பினால் என்னுடைய செலவில் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.

துக்ளக் இதழில் ஒரு விளம்பரம் தந்து இருந்தேன். பெருத்த ஏமாற்றம் புத்தகம் கேட்பாரே இல்லை. ஆகையினால் உங்கள் கவனத்தைக்கவர மேல்கண்டவாறு எழுதி உள்ளேன். உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. திருக்குறள் பயனுள்ள வகையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய ஆவல். உலகப்புகழ் பெற்ற இலக்கியம் என்கிறோம் ஆனால் தமிழர்கள் அதன முழுப்பயனை அடைந்து உள்ளார்களா என்ற கேள்விக்கு என்ன பதில் என்பதை நான் கூற வேண்டுவதில்லை. திருக்குறளினை நன்கு கற்றால் மனிதன் தன்னுடைய ஆன்மாவில் வாழத் துவங்குவான். தமிழகமெங்கும் தங்களுடைய ஆன்மாவில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தமிழ் சமுதாயம் மெல்ல மெல்ல மேம்பாடு அடையும். ஆன்மாவில் வாழ்பவர்கள் சான்றோர்களாவர்.ஆகவே  சான்றோர்களின் எண்ணிக்கை குறைந்தால் இவ்வுலகம் அதனைத்தாங்காது அழியும் என்பது வள்ளுவம். (சான்றவர் சான்றாண்மை குன்றின் // இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை). நாம் சான்றோராவோம் சான்றோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம். புத்தகத்தை வாங்கி என்னுடைய முயற்சியை ஆதரிக்க வேண்டுகிறேன்.

Series Navigationகயஸ்கானின் காரண காரிய சரித்திரம்திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்